எம்.எஸ்.வி இரசிகர்களுக்கு இளையராஜாவை பிடிப்பதில்லை. நன்றாகக் கவனிக்கவும் இளையராஜாவைத்தான் பிடிப்பதில்லை, ஆனால் இளையராஜாவின் பாடல்களைப் பிடிக்கும். அதே போல இளையராஜா இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானைப் பிடிப்பதில்லை, ஆனால் ஏ.ஆர்.இரகுமான் பாடல்களைப் பிடிக்கும்.
ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
அதே போல கருணாநிதியின் உடன் பிறப்புகளுக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. ஆனால் 'மழை நீர் சேகரிப்பு' போன்ற திட்டங்கள் பிடிக்கும். அதுபோல ஜெயலலிதாவின் இரத்தத்தின் இரத்தங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது. ஆனால் 'இலவச டிவி மற்றும் ஒரு ரூபாய் அரிசி பிடிக்கும்"
ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
உளவியல் ரீதியாக இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்பதால், இளையராஜாவையே பிடித்துப்போய்விடுவதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் இளையராஜாவை விட சினிமா மார்க்கெட்டில் ஏ.ஆர்.இரகுமான் அதிகம் எடுபடுகிறார் என்றதும் ஏன் எனக்கு ஏ.ஆர்.இரகுமானையே பிடிக்காமல் போய்விடுகிறது? முன்பு எம்.எஸ்.வியின் இரசிகர்கள் இளையராஜாவின் மேல் இப்படி ஒரு வெறுப்பு கொண்டிருந்தார்கள். இன்று இளையராஜாவின் இரசிகர்கள் ஏ.ஆர்.இரகுமான் மேல் அதே போல ஒரு வெறுப்பு வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் சரோஜா பட ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர்.இரகுமான்தான் சிறப்பு விருந்தினர். ஆனால் அதை ஒரு பெரிய அதிசயம் போல பரபரப்பாக்கினார்கள். காரணம் ஏ.ஆர்.இரகுமான் மற்றும் இளையராஜா இரசிகர்கள். யுவனை, ஒரு இசை அமைப்பாளராக மட்டும் பார்க்காமல், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமானுக்கு இளையராஜாவின் சார்பில் ஒரு போட்டியாக சில இரசிகர்கள் வரித்திருக்கிறார்கள். அதுதான் அந்த பரபரப்பிற்கு காரணம். முன்பு ஒரு முறை ஏ.ஆர்.இரகுமானும், இளையராஜாவும் ஒரே மேடையில் முதன் முதலாக சந்தித்தபோதும், இதே பரபரப்பு நேர்ந்தது. அந்த மேடைக் காரணம் எனக்கு நினைவில்லை, ஆனால் குமுதம் போன்ற பத்திரிகைகள் அந்த மேடையில் ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவிற்கு பரிசளித்த மோதிரத்திற்கு ஏதேதோ காரணம் கற்பிக்க முயன்ற அபத்தங்கள் ஞாபகம் இருக்கிறது. 80களில் 'ஓரம் போ ருக்குமணி வண்டி வருது' பாட்டிற்கு இளையராஜா அழைத்து, எம்.எஸ்.வி பாட மறுத்த போதும் இதே போல சலசலப்புகள் ஏற்பட்டன. மூச்சு விடக் கூட நேரமின்றி இளையராஜா பிஸியாக இருந்த கால கட்டத்தில், ஏதோ ஒரு படத்திற்கு எம்.எஸ்.வி அவருக்கு உதவி செய்ய நேர்ந்ததாக, இன்று வரை ஒரு உறுதி செய்யப்படாத ஒரு தகவலைக் கேள்விப்பட்டு, எம்.எஸ்.வியின் இரசிகர் ஒருவர் தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவமும் நடந்தது.
தற்போது விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பிடிக்காதவர்களில் கணிசமான பேர், ரஜினி இரசிகர்கள்தான். காரணம், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவை முந்தியது போல, ரஜினியை விஜயகாந்த் முந்திவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி தனக்குப் பிடித்தவர்களை வேறொருவர் முந்திவிட்டதாக நினைக்கும் போது, அவர் மேல் தன்னையே அறியாமல் ஒரு வெறுப்பு வந்து அப்பிக் கொள்கிறது.
ஏ.ஆர்.இரகுமானை விடுங்கள், வணிக ரீதியாக இளையராஜாவை விட அவருடைய இளைய மகன் யுவனுக்கு டிமாண்ட் அதிகம். ஆனால் அவர் மேல் இளையராஜா இரசிகர்களுக்கு கோபமில்லை. ஏனென்றால் இளையராஜாவின் மேலிருக்கும் அசாத்திய இரசிப்பத் தன்மை காரணமாக, யுவனை சங்கர் ராஜாவையே இன்னொரு இளையராஜாவின் ஹிட் பாடலாகத்தான் பார்க்கிறார்கள். அதாவது ஏ.ஆர்.இரகுமானுக்கு இணையாக மார்க்கெட்டில் போட்டி போடக் கூடிய இன்னொரு பாடலாகப் பார்க்கிறார்கள்.
அதே போல ஏ.ஆர்.இரகுமான் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தபோது, அவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் அணைத்து ஏற்றுக் கொண்டவர்கள் எம்.எஸ்.வியின் இரசிகர்கள்தான். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, வணிக ரீதியாக எம்.எஸ்.வியை முந்திய இளையராஜாவை, வெல்ல வந்தவர் ஏ.ஆர்.இரகுமான்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜனி-கமல் இரசிகர்கள் அனைவரும் இது போல இரசிப்புத் தன்மையைத் தாண்டிய விருப்பு வெறுப்புகளை உடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதே போல எம்.எஸ்.வி - இளையராஜா - ஏ.ஆர். இரகுமான் இரசிகர்களும் இருக்கிறார்கள்.
சொல்லப் போனால் நானும் அந்த இரசிகர்களில் ஒருவன்.