Wednesday, March 21, 2012

கூடங்குளத்தை போர்க்களமாக்கும் ஜெ. போலீசுக்கு ஒரு கடிதம்!

வான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளுடன் கூடங்குளத்தில் போய் இறங்கி, ஒரு போருக்கு ஆயுத்தமாகியிருக்கும் தமிழக போலீசாருக்கு ஒரு தகவல்.

கூடங்குளம் என்பது அயல் நாடு அல்ல. அங்கிருப்பவர்களும் நம் மக்களே...
அவர்கள் உங்களை போருக்கு அழைக்கவில்லை!

அவர்கள் தங்கள் அச்சத்தையும், உரிமையையும் முன்னிறுத்தி அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

அணு உலை எதிர்ப்பு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சனை அல்ல. இன்றைய சிறிய தேவைக்காக, நாளைய சமுதாயத்தை அழிக்கின்ற அரசுகள் உருவாக்குகின்ற பிரச்சனை.

கூடங்குளத்தில் உங்கள் குடும்பத்தினர் எவராது இருந்தால், இந்தப் போராட்டம் அவர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது.

எனவே அவர்களை பயமுறுத்தி, கலவரம் உண்டாக்கி உங்கள் படைபலத்தை சோதிக்காமல், அமைதிகாக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இடிந்த கரை மக்களுக்கு மின்சாரம், உணவு, தண்ணீர் இவை மூன்றையும் தடை செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பெண்களும், குழந்தைகளும் உட்பட மக்கள் அவதிப்படுகிறார்களாம்.

அருகில் உள்ள இலங்கையில் சர்வாதிகாரி ராஜபக்ஷே இதே அடக்குமுறையைத்தான் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்துவிட்டார். 
தமிழகத்தின் ராஜபக்ஷேவாக தன் கோரப்பற்களை காட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு மண்டியிட்டு,  நீங்களும் அதை கொடுமையை உங்கள் சொந்த சகோதர சகோதரிகளுக்குச் செய்கிறீர்கள். மனம் நிறைய கோபத்துடனும், அதைவிட அன்புடனும் உங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து ஒரு வேண்டுகோள்!

அதிகாரத்தின் பெயரால், துப்பாக்கி முனையில் மக்களை துன்புறுத்தும் உங்கள் ஈனச் செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

மின் சேகரிப்பு திட்டம் - தமிழகஅரசுக்கு ஒரு யோசனை

ஜெயலலிதா செய்ததிலேயே உருப்படியானது மழை நீர் சேகரிப்பு திட்டம்தான்.  இன்று வரையில் இந்த திட்டம் மக்களும், அரசும் சேர்ந்து வெற்றிகரமாக மழை நீரை சேகரிக்க, உதவுகிறது. இதே பாணியில் மின்சாரத்தையும் சேகரிக்கலாம்.

ஆறரை கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில், குறைந்தபட்சம் ஒரு கோடி குண்டு பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சி.எஃப்.எல் குழல் பல்புகளை பயன்படுத்தினால், உடனடியாக 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.


இதை நான் சொல்லவில்லை. பதவிக்கு வந்தவுடன், ஜெயலலிதா அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பிலேயே இது இருக்கிறது.  இதை நிறைவேற்றினாலே, 500 மெகாவாட் மிச்சமாகிவிடும். இந்த தகவலும் அதே கொள்கைக் குறிப்பிலேயே இருக்கிறது. மிச்சப்படுத்துவதே உற்பத்திக்கு சமம், எனவே அணு உலைக்குப் பதிலாக இதை பரிசீலிக்கலாம்.


ஆனால் ஜெயலலிதாவோ போலீஸ் மிரட்டல்களை வைத்துக் கொண்டே ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இருக்கட்டும் அது அவர் ஸ்டைல். சங்கரன் கோவிலில் கால்கடுக்க நின்று அலுத்துவிட்டது போலிருக்கிறது. தற்போது கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்ட தமிழக போலீசார் கூலிங்கிளாஸை மாட்டிக் கொண்டு, சந்துக்கு சந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 


இப்படி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அணு உலையை உடனே இயக்கினாலும் மின்சார உற்பத்தியாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என்கிறார்கள். கூடங்குளத்தின் உச்சபட்ச  உற்பத்தி 1000 மெகாவாட். ஆனால் தற்போது 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யுமாம். அதில் கிட்டத்தட்ட 50 மெகாவாட்டை கூடங்குளமே செலவிழித்துவிடுமாம். மீதி இருப்பது 350 மெகாவாட்தான். அதை கூடங்குளத்தில் இருந்து மாநிலத்தின் மற்றபகுதிகளுக்கு எடுத்து வரும்போது, வழியிலேயே 70 மெகாவாட் லீக் ஆகிவிடுமாம். மீதி உள்ள 280 மெகாவாட்டில் பாதியை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். எனவே இத்தனை அமர்க்களத்திற்கும் பிறகு தமிழகத்துக்கு கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான்.

எனவே அணு உலைக்கு பதிலாக, ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச சி.எஃப்.எல் பல்புகளை வழங்கலாம். வீட்டுக்கு வீடு குண்டு பல்புகளை தூக்கி எறிந்துவிட்டு, சி.எஃப்.எல் பல்புகளை பயன்படுத்தச் சொல்லலாம். இதனால் நமக்கு 500 மெகாவாட் மிச்சமாகிவிடும்.இந்த தகவல்கள் அனைத்தையும் தனது ஓ பக்கங்களில் ஞாநி அழகாக எழுதியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அர்த்தமுள்ளவை. ஜெயலலிதா பதில் சொல்லப்போவதில்லை என்றாலும், நீங்கள் அக் கேள்விகளை தெரிந்து கொள்வதில் தவறில்லை. இங்கே சொடுக்குங்கள்!Monday, March 19, 2012

ஹோம்ஒர்க் முத்தம்வீட்டுப்பாடம் 
எழுதி எழுதி கைவலிக்கிறது
எனக்காக எழுதுவாயா
எனக் கொஞ்சினாள்.
எழுதினேன் விடிய..விடிய..
அவள் இதழ்களில்
என் இதழ்களால்!

மருத்துவ முத்தம்மருத்துவம் படிக்கிறாள் என்பதால்தைரியமாக அவள் இதழ்களில் என் இதழ்களால் காயம் செய்தேன்! 

இதழ் அகல் முத்தம்தீபங்களின் ஒளியில்
அவள் பார்வைகள் சொன்னதை
அவள் இதழ் அகல் விளக்கில்
முத்தங்களாக ஒளிர வைத்தேன்!

சங்கரன் கோவிலும் அடுத்த பிரதமரும்

சங்கரன் கோவில்!
மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு சாதாரண இடைத்தேர்தல். ஆனால் இது இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய சில அம்சங்களை உள்ளடக்கியது.

முதலில் தேர்தல் நடைபெறும் சூழலைப் பார்ப்போம். விலைவாசி, மின்சாரப் பற்றாக்குறை என மக்களின் கடும் அதிருப்தியுடன் அதிமுக தேர்தலை சந்திக்கிறது. எனவே ஏற்கனவே இத் தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் அதிமுக, இந்த தேர்தலை அது வென்றே ஆக வேண்டும். இல்லையென்றால் இந்த ரிசல்ட் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். இதை வென்றால் மட்டுமே கூட்டணிக் கட்சிகள் அதிமுகவின் சொல்பேச்சை கேட்கும்.

பிரதான எதிர்கட்சிகள் எல்லாமே இம்முறை தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. ஆளும்கட்சியை அதிகார பலம், பண பலத்தை மீறி இவர்களால் வெல்ல முடியாது. சிதறிக்கிடப்பதால் அதிமுகவுக்குதான் லாபம். ஆனால் தங்கள் சுய பலம் என்ன என்பதை ஓரளவுக்கு அறியவும், எதிர்காலத்தில் தங்களுக்குள்ளோ அதிமுகவுடனோ கூட்டணி அமைத்தால் கடுமையாக பேரம் பேசவும் இவர்களுக்கு உதவும்.


பாராளுமன்றத்துக்குள் குறைந்தபட்சம் 30 எம்பிக்களுடன் நுழைவதற்கான முன்னோட்டமாக அதிமுக இதைப் பார்க்கிறது. அகில இந்திய அளவில் தேர்தல் நடக்கும்போது, காங்கிரஸ் தோற்று பிஜேபி ஆட்சியை பிடிக்கக்கூடிய நிலை வந்தால், யார் பிரதமர் என்ற மோதல் அங்கே அதிகரிக்கும். அகில இந்திய அளவில் நரேந்திர மோடிதான் இப்போதைக்கு பிரபலம். ஆனால் அத்வானி கோஷ்டி மோடியை குஜராத்துக்குள்ளேயே முடக்க முயற்சிக்கும். ஏனென்றால் அத்வானிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. ஆனால் அவருக்கு கட்சியில் அவ்வளவாக ஆதரவு இல்லை.

இந்த சமயத்தில் 30 எம்பிக்களுடன் ஜெயலலிதா தனது ஆதரவைத் தந்து, தன்னை பிரதமாராக முன்னிறுத்தினால் பிஜேபி ஆதரிக்குமாம். இது பத்திரிகையாளர் சோவின் கணக்கு. எனவே தேவகவுடா பிரதமர் ஆனது போல ஜெயலலிதாவும் பிரதமராவார் என்று சோ தலைமையில் ஒரு அரசியல் சாணக்ய குழு ஒன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.  இந்தப் பிரச்சாரம் ஜெயிக்க வேண்டுமென்றால் சங்கரன் கோவிலில் அதிமுக ஜெயித்தே ஆக வேண்டும்.

இனி திமுகவுக்கு வருவோம். இலங்கையில் மனித உரிமைப் பிரச்சனை நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டிருக்கிறது. ஐ.நா சபையில், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் உட்பட சொல்ல ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்திய அரசு இன்னும் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை. ஒரு வேளை அதிமுக தோற்றால், திமுக உடனே தனது வாபஸ் ஆயுதத்தை கையிலெடுக்கும். வழக்கம்போல பூச்சாண்டி காட்டுவதாக அல்லாமல் உண்மையிலேயே வாபஸ் வாங்கும். காங்கிரஸ் ஆட்சி கவிழும்.

உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் மூன்றாவது அணி என்ற ஒரு திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார். திமுக அதற்கு எண்ணெய் ஊற்றி அதே தேவகவுடா ஃபார்முலாவில், முலயாம்சிங்கை பிரதமராக முன்னிறுத்தி, மாநில அளவில் வலிமையான கட்சிகளை இழுத்து,  3வது அணிக்கு முயற்சிக்கும்.

(பதிவை எழுதியபின் இரண்டாவது அப்டேட்...  திமுகவின் பயமுறுத்தல் இந்த முறை வேலை செய்துவிட்டது. உடனடி தேர்தல், 3வது அணி, இலங்கை விவகாரத்தில் தமிழக கட்சிகளின் அழுத்தம், இவற்றின் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.)

இதனால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடுமா என்று கேட்காதீர்கள். அதைப்பற்றி யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை. அதே போலத்தான் கூடங்குளம் பிரச்சனையும். அதிமுக ஓட்டு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே  வழவழா கொழ கொழவாக தேவையா இல்லையா எனச் சொல்லாமல் இது வரை அரசு மழுப்பிக் கொண்டிருக்கிறது.

(இது முதல் அப்டேட்... இந்தப் பதிவை எழுதியபின் வந்த செய்தி.தமிழக அமைச்சரவை கூடங்குளத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்தபின் இந்த அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கவும்)

ஜெயித்தால் போராட்டக்காரர்களை இந்த அரசு சிறையில் தள்ளும். ஆனால் இன்றே பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுமானால், போராட்டக்காரர்களுடன் வெட்கமே இன்றி மீண்டும் சாதாரணமாகப் பேசும்.

எனவே சங்கரன் கோவில் சாதாரண கோவிலல்ல... அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விகளை துவக்கி வைத்திருக்கும் அரசியல் கோவில்.