Saturday, August 30, 2008

ஜே.கே வின் Fearless Love

சென்ற வாரத்தில் ஒரு நாள் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் ஆந்திராவில் உள்ள சித்தூருக்கு சென்று வந்தார்கள். காரணம் . . .

ஜே.கே என்று அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
மனிதன், புனிதன் என்று எந்த வார்த்தைகளுக்கும் சிக்காமல் தனது எண்ணங்களை தத்துவங்களாக வெளிப்படுத்திய ஞானி.

கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் நடத்திவரும், Rishi Valley Schoolஐ சுற்றி பார்ப்பதுதான் அவர்களுடைய விஜயத்தின் நோக்கம். அங்கு செயல்படுத்தப்படும் கல்வி முறை பற்றி தெரிந்து கொள்வதற்க்காகவே அண்ணனும் தங்கையுமாக அங்கே சென்றார்கள் என்று தகவல்.
'Fearless Love' ஜே.கே-வின் தத்துவம் சொல்வது இதைத்தான். நமக்கு உயரம் பயம், பரிட்சை பயம், வியாபார பயம், வேலை பயம், எதிர்காலம் பயம், பேய் பிசாசு பயம் என்று பலவித பயங்களைத் தெரியும்.

ஆனால் ஜே.கே பயம் என்று சொல்வது எதை தெரியுமா?
"நான் உன் மேல் அன்பு செலுத்துகிறேன். பதிலுக்கு நீ என் மேல் அன்பு செலுத்தாமல் போய்விட்டால்?" இப்படி நினைப்பதை பயம் (Fear) என்கிறார். எதையும் எதிர் பாராமல் எதனிடமும் அன்பு செய். இதுதான் அவர் சொன்ன Fearless Love.

டிவி என்கிற மாயை இல்லாத 80கள். நான் சிறுவனாக இருந்தபோது, நல்ல புத்தகங்களும், படித்த பெரியவர்களும் எனக்கு ஜே.கே வை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

ஒரு நாள் சென்னையில் அவருடைய உரையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பறவைகளின் குரல்களுக்கிடையில் அவருடைய குரல் இன்னும் மெலிதாகக் கேட்டது. கேட்கவே இல்லை என்றும் சொல்லலாம்.  ஆனால் எனக்குள் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்தது. Fearless Love!

அவருடைய அந்த உரைதான் கடைசி உரை என்பது எனக்கு அப்போது தெரியாது. ஆனால் அதன் தாக்கம் எனக்கு இன்னமும் இருக்கிறது.

சென்னையில் ஒரு கடைசி உரைக்குப் பின் - தனது தந்தை ராஜீவ்காந்தியை வன்முறைக்கு தின்னக் கொடுத்தவர்கள் பிரியங்காவும், ராகுலும். அவர்கள் எதைத் தேடி வந்திருப்பார்கள்?
Fearless Love? 
வாருங்கள் அன்பு செய்வோம்!

'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு . . .

சில மாதங்களுக்கு முன்னால் 'டயல் ஜெயா டிவி' என்கிற நேரலை நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிற வாய்ப்பு கிடைத்தது. நவீன கல்வி முறையான 'செயல் வழிக் கல்வி(Activity Based Learning) பற்றி தொகுப்பாளருடன் ஒரு உரையாடல், இடையிடையே நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கு பதில். இதுதான் நிகழ்ச்சி.

தொலை பேசியில் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலோர், இளம் இல்லத்தரசிகள் தான்.
'என் பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான்',
'என் பொண்ணு மேத்ஸ்ல வீக்கா இருக்கா',
'பசங்களோட கையெழுத்தை எப்படி இம்ப்ரூவ் பண்றது?'
இப்படி ஒரு வகை புலம்பல்

'என் தங்கையோட பொண்ணை விட என் பையன் மோசமா இருக்கான்'
'முதல் பையன் அளவுக்கு இரண்டாது பையன் சாப்பிட மாட்டேங்கிறான்'
'ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும். ஏதாவது டியூஷன் இருக்கா?'
'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு எல்லாத்துக்கும் ஃபீஸ் கட்டி அனுப்பறேன். இதைத் தவிர டெய்லி டியூஷன் இருக்கு. ஆனா எதுலயுமே பிரில்லியண்டா இல்ல. என்ன பண்ணலாம்?'
இது இன்னொரு வகையான புலம்பல்

யாருமே தன் குழந்தையைப் பற்றி சந்தோஷப் படவில்லை. கிட்டத்தட்ட அனைவருமே குற்றப்பத்திரிகை வாசித்தார்கள். கணக்குல 100 எடுத்தா பத்தாது, இங்கிலீஷ்ல 95தான் வருது என்று வருத்தப்பட்டார்கள். எல்லா பெற்றோருமே பக்கத்துவீட்டு குழந்தையை விட தன் குழந்தை மக்கு என்று வருத்தப்பட்டார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பின் ஒரு பெண்மணி என் அலுவகத்திற்கு ஃபோன் செய்தார்.
"சார் என் பையனுக்கு மெமரி பத்தல சார். எதிர் வீட்டுப் பொண்ணு டான் டான்னு எதைக் கேட்டாலும் பதில் சொல்றா? என் பையன் முழிக்கிறான். எதிர் வீட்டுப் பொண்ணு ரெட், க்ரீன், ப்ளுன்னு எல்லா கலரையும் அழகா ஐடன்டிஃபை பண்றா. ஆனா என் பையன் எல்லாத்தையும் தப்புத்தப்பா சொல்றான். நம்பர்ஸ் எதுவுமே சொல்ல வரல. ஏபிசிடி கூட யோசிச்சு யோசிச்சுதான் சொல்றான். ரைம்ஸ் எல்லாம் தப்பு"

"அப்படியா? வயசு என்னம்மா ஆச்சு?"
"29 சார்"
"உங்க வயசை கேட்கலம்மா. உங்க பையன் வயசு என்ன?"
"இப்ப தான் ஒன்னரை வயசாகுது டாக்டர்"

நான் அதிர்ச்சியில் ஃபோனை வைத்துவிட்டேன்.

Friday, August 29, 2008

பசுபதியை ஓரம் கட்டிய ரஜினியும் - பாமரனை ஓரம் கட்டிய ஞாநியும்

ஞாநி வாசகர் கடிதம் போட்டால் கூட குமுதம் பிரசுரிக்காத ஒரு நிலை இருந்தது. ஆனால் ஞாநி ஆனந்தவிகடனுடன் முட்டிக் கொண்டு வந்தவுடன், ஆனந்த விகடனை கடுப்பேற்ற அடுத்த வாரமே குமுதம் ஞாநிக்கு 'ஓ' போட்டது.

அதுவரைக்கும் குமுதத்தில் 'ஓ'ஹோவென படித்ததும்-கிழித்ததுமாக இருந்த பாமரன், ஞாநி வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். 4-5 பக்கங்கள் எழுதிக் கொண்டிருந்த பாமரன், ஞாநியின் வருகைக்குப் பின், 2-3 பக்கங்களுக்கு குறைக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் படிச்சதும்-கிழிச்சதும் போதும், என்று துரத்தப்பட்டார். பாவம் பாமரன், ஏதோ குமுதம் புண்ணியத்தில் வாரா வாரம் டீ, காபி குடித்துக் கொண்டிருந்தார். இப்போது ஞாநி கல்லா கட்டுகிறார், பாமரன் கஞ்சிக்கு வழியில்லாமல் காணாமல் போய்விட்டார்.

குமுதம் வாரா வாரம் ஞாநியின் 'ஓ'விற்கு போஸ்டர் அடிக்கிறது, அட்டைப் படத்தில் முன்னிறுத்துகிறது. ஆனால் 'படித்ததும்-கிழித்ததும்' பாமரனை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? ஞாநியும் பாமரனின் இந்த நிலை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை, அட்லீஸ்ட் நண்பர்கள் வட்டாரத்தில் கூட இது பற்றி வருத்தம் தெரிவிக்கவில்லை.

விளம்பரங்களில் எல்லாம் தொடரந்து ஞாநியின் பெயரையே குமுதம் புரமோட் செய்ததில் கடுப்பாகி பாமரனே மனம் நொந்து விலகி ஓடி விட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

பின்குறிப்பு -
"படத்தின் இசை வெளியீட்டின் போது பசுபதி முன்னிறுத்தப்படவில்லை"

இவை இந்த வார குமுதத்தில் ஞாநி எழுதியிருக்கும் வரிகள். ஞாநிக்கு வேறு வேலையே இல்லையா?

'குசேலன்' பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏன் பசுபதி பங்கேற்கவில்லை? "எனக்கு வேறொரு ஷீட்டிங் இருந்ததால் பங்கேற்கவில்லை", என பசுபதியே விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனாலும், ரஜினிதான் அவரை வரவிடாமல் செய்துவிட்டார், பசுபதியை வேண்டும் என்றே முன்னிலைப் படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது போல ஓ பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

ரஜினியை பற்றி எப்படி வேண்டுமானாலும் கற்பனை கலந்தாவது காழ்ப்புணர்ச்சியுடன் எழுதலாம் என ஞாநி முனைந்திருக்கிறார்.

எனவே வேண்டும் என்றே, அவரைப்போலவே நானும் கற்பனை கலந்து 'பாமரன் கதையை' எழுதியிருக்கிறேன்.

மன்னியுங்கள்! மிஸ்டர் பாமரன்.

Thursday, August 28, 2008

ஓ பக்கங்களை எழுதுவது ஞாநியா?

இந்த வாரம் மொத்தம் 5 பக்கங்களில் ஓ பக்கங்கள் - துவக்க பக்கத்தில் மட்டும் ஞாநியின் பெயர் இருந்தது, ஆனால் அடுத்த நான்கு பக்கங்களிலும் ஞாநியின் பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது அவற்றை எழுதியது ஞாநிதான் என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?

இப்படி ஒருவன் விவாதம் செய்தால், அதன் பெயர் அபத்தம். ஞாநி இப்படித்தான் ரஜினி விஷயத்தில் அபத்தக் களஞ்சியமாகிக் கொண்டிருக்கிறார். குசேலன் படத்தின் ஆரம்பத்தில் பூஜையின் போது "இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான்" என்று ரஜினி சொன்னாராம். (ஆமாம். சொன்னார்) ஆனால் பாடல் வெளியீட்டின் போது சொல்லவில்லையாம் (ஏன்யா சொல்லவேண்டும்? அவர் என்ன நடுவில் மாற்றிச் சொன்னாரா? விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)

பேராசைக்காரர்களும், பேராத்திரக்காரர்களும் ஒன்று சேர்ந்து தோற்றுவிட்டு இப்போது நஷ்டக் கணக்கு கும்மியடிக்கிறார்கள். ஞாநி இதற்க்காக வாராவாரம் பக்கவாத்தியம் அடிக்கிறார். குமுதம் ஒத்து வாசிக்கிறது.

மர்மயோகி ரிலீசான பின் ஓ பக்கங்களில் ஞாநி என்ன எழுதுவார்?

சுப்பிரமணியபுரம் படத்தில் ஷேவிங் செலவு கூட இல்லாமல் எல்லோரையும் தாடி வளர்க்க வைத்து, முடிவெட்டாமல் ஹிப்பித் தலையைக் காட்டி தயாரிப்பாளர் சம்பாதித்துவிட்டார். இதை விடக் கூடாது.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் சுவிட்சர்லாந்தில் போய் ஜில்லென்று டூயட் ஆடிவிட்டு வந்து, வியர்க்காமல் ரப்பர் மேக்கப் போடாமல் ஜெயம் ரவியையும், ஜெனிலாவையும் காட்டி படத்தை ஓட்டி லாபம் பார்த்துவிட்டார் தயாரிப்பாளர். இதையும் விடக் கூடாது.

அனைவரும் கமல் போல 10 வேஷம் போட்டு, ரப்பர் மேக்கப் மாற்றி படமெடுத்தால் மட்டும்தான் ஒப்புக்கொள்வேன். இல்லையென்றால் தியேட்டர் வசூலை திருப்பிக் கொடுங்கள்.

இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. ஓ.ஞாநி அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்.

கருணாநிதியைத் திட்டி எழுதி போரடித்துவிட்டது போலிருக்கிறது. இப்போது ரஜினியை திட்டி எழுத ஆரம்பித்துவிட்டார் (பேத்த ஆரம்பித்துவிட்டார் என்றும் சொல்லலாம்).


"கமல்ஹாசன் தசாவதாரத்திற்கு சுமார் 20 மாதங்கள் வேலை செய்து 10 முறை ஒவ்வொரு சீனுக்கும் ரப்பர் மேக்கப் மாற்றி மாற்றி உழைத்து சம்பாதித்ததை ரஜினி குசேலனில் 20 நாட்கள் வேலை பார்த்து பத்து விக் மட்டும் மாற்றியே அனாயாசமாக சம்பாதித்துவிட்டார்",
என்று ஓ.ஞாநி புலம்புகிறார், ஸாரி குற்றம் சாட்டுகிறார்.

"யோவ் போன படத்துல நீ பத்து வேஷம் போட்டதால நான் 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்தேன். இந்தப் படத்துல நீ ஒரு வேஷம் தான போட்டிருக்க, அதனால நான் பத்து ரூபாய்தான் தருவேன். யாரை ஏமாத்தற?", மர்ம யோகி ரிலீசாகும் போது குமுதத்தில் ஓ பக்கங்கள் இப்படித்தான் கமலை கடித்துக் குதறுவதாக இருக்கும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கிறேன்.


அதே போல சுப்பிரமணியபுரம், சந்தோஷ் சுப்பிரமணியபுரம் என்று குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து அதிக லாபம் பார்த்த தயாரிப்பாளர்கள், அதில் பங்கு கொண்ட நடிகர் நடிகைகள் ஆகியோர்அனைவரும் பதுங்கத் தயாராக இருங்கள். அடுத்து ஓ.ஞாநி உங்கள் மேல் தான் பாயப் போகிறார்.

Wednesday, August 27, 2008

விவேக் - கூலிங் கிளாஸை கழட்டினால், நல்ல காமெடி பண்ணலாம்

சிவாஜி குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் நகைச்சுவையாக அழுவார்.
எம்.ஆர்.ராதா குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் நகைச்சுவையாக நக்கல் அடிப்பார்.
ரஜனி குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் காமெடி பஞ்ச் அடிப்பார்.

இதுதான் விவேக்.

விஜய் டிவி லொள்ளு சபா, சன் டிவி டாப் 10 பாடல்கள் இரண்டுமே ஒரே ஸ்டைல். ஏற்கனவே ஹிட்டான படம் அல்லது காட்சியை உல்டா செய்து பேத்தலான சேட்டைகள் செய்வதுதான், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே.

பல நேரங்களில் விவேக்கின் காமெடியும் இதே போலத்தான் இருக்கிறது.

அதிசயமாக விவேக் தமிழ் சினிமாவின் லீடிங் காமெடியன்களில் ஒருவர். அவரே (ரஜினி சொன்னதாக) குமுதத்தில் எழுதியது போல, கருத்து சொல்கிற மேட்டர் மட்டும் இல்லையென்றால், எப்போதோ காணாமல் போயிருப்பார்.

ஆரம்பத்தில் ஒல்லி உடம்புடன் கொஞ்சமாக பாடி லேங்வேஜையும், அதிகமாக மிகிக்கிரியையும் வைத்து சிரிப்புக் காட்டினார். போகப் போக. . . குறிப்பாக கூலிங் கிளாஸ் மாட்டி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பாடி லேங்வேஜ் மறைந்துவிட்டது. வெறும் (சிவாஜி + எம்.ஆர்.ராதா + ரஜினி + சில நேரம் வைரமுத்து) மிக்ஸிங் டயலாக்கை வைத்து வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

மாத்ருபூதம் வழங்கிய சின்னக் கலைவாணர் பட்டம், அவருடைய காமெடி சென்ஸை அமுக்கிவிட்டு, கருத்து இம்சையை முடுக்கிவிட்டுவிட்டது என்பது என்னுடைய எண்ணம்.

பெரும்பாலும், அவருடைய காமெடி அனைத்தும், படத்துடன் ஒட்டாமல் தனி டிராக்காகத்தான் இருக்கிறது. அதனால்தான் 'விஜய் டிவி லொள்ளுசபா' காமெடி போல அடிக்கடி பழைய படங்களை உல்டா செய்யும் டிராக் பிடிக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படங்களில் கூட அவர் எக்ஸ்டிரார்டினரி பெர்மாமன்ஸ் கொடுத்ததில்லை. காரணம் 'கருத்து சொல்கிற பாணி'.

இன்னொன்று எப்போதுமே 90 சதவிகித படங்களில் கல்லூரி மாணவன் போல ஜீன்ஸ், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் தோற்றம். வெரைட்டியான மேக்கப் கூட இல்லாமல் பல படங்களை ஒப்பேற்றிவிட்டார். அவர் கிராமங்களில் அவ்வளவாக எடுபடாததற்கு காரணம், எப்போதுமே 'சிட்டி லுக்' கொடுத்த அவருடைய உடைகளும், பேச்சுக்களும்தான்.

அசட்டுத்தனங்களும், சேட்டைகளும் நிரம்பிய காமெடியன், படாரென ஒரு கட்டத்தில் எமோஷனலாக கண் கலங்க வைக்க வேண்டும். அந்த திறமை விவேக்கிடம் கம்மி.

கூலிங் கிளாசையும், கருத்தையும் கழட்டி வைத்துவிட்டால் நம்மால் இன்னும் நல்ல விவேக்கை பார்க்க முடியும்.

Monday, August 25, 2008

சன் டிவிக்கு வயதாகி விட்டதா?

முதுமை எப்போது வரும்?
வயதானால் வரும்
தோல்விகள் வரும்போதும் வரும்

சன் டிவி இரண்டாவது வகை.
தற்போது சேனல் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் வீழ்ந்துவிடவில்லை. ஆனாலும் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறது.

முதல் காரணம் - தி.மு.க லேபிளை இழந்தது.
அதில் கணிசமானோர் இன்னமும் பழக்க தோஷத்தில் சன் டிவிதான் பார்க்கிறார்கள். ஆனால் இரசிக்கவில்லை.

2வது காரணம் - மதியம் முதல் இரவு வரை அழுகாச்சி சீரியல்கள்
டி.ஆர்.பியில் இடம் பிடிக்க தாய்மார்கள் உதவினாலும், வீட்டில் உள்ள ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் வெறுக்க ஆரம்பித்து விஜய்டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த இடைவெளியில்தான் ஜோடி நம்பர் -1 ஜெயிக்க ஆரம்பித்தது

3வது காரணம் - மாற்றிக் கொள்ள முடியாத பழைய ஸ்டைல்
புரோகிராமிங் ஃபார்மட் முதல் டிரையலர் வரை இன்னும் அதே பழைய ஸ்டைல். நேற்று வந்த சேனல்கள் கூட அசத்தல் கட்டிங்குகளால் கலக்கும்போது, இங்கே இன்னமும் தூரன் கந்தசாமியின் குரலில் ஜவ்வுமிட்டாயாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் செட், கலர், டிரையலர் என மாற முயற்சித்து அரைவேக்காடாக கைவிட்டுவிட்டார்கள்

4வது காரணம் - செய்திகள்
முன்பு தி்.மு.க நிழலில் இருந்தபோது, ஜெயலலிதா முதல்வர் ஆனதையே லாங் ஷாட்டில் காட்டி மக்களிடம் இருந்து மறைக்கப் பார்த்தார்கள். தற்போது ஜெயலலிதா கொடநாட்டில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தபோதும், அவருக்காக சவுண்டு கொடுத்தவர்கள் சன் டி.விதான். இந்த திடீர் பல்டி அவர்கள் மேலிருந்த நம்பகத்தன்மையை 70 சதவிகிதம் குறைத்துவிட்டது. 30 சதவிகிதம் தேறியதற்கு காரணம் மந்திரியாக இருந்தபோது தயாநிதி மாறனின் அசத்தல் பெர்பாமன்ஸ்.

5வது காரணம் - எக்ஸ்பர்ட்ஸ் இல்லை
ஜெயா டிவியில் சுஹாசினி வந்து விட்டார். விஜய் டிவியில் மதன் பார்வை. இவர்கள் சினிமா என்றால் என்ன என்று தெரிந்தவர்கள். சினிமா எடுக்கும் படைப்பாளிகள் மத்தியில் மரியாதைக்குரியவர்கள். ஆனால் சன் டிவியில் இன்னமும் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் தொகுப்பாளர்கள்தான் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். செய்தி மற்றும் அலசல் நிகழ்ச்சிகளிலும் இதே நிலை தான்.

6வது காரணம் - பெரிய படங்களை வாங்க முடியாத நிலைமை
தற்போதைய பெரிய படங்கள் அனைத்தையும் தங்கள் அரசியல் பலத்தால் கலைஞர் டி.வி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பலனை கலைஞர் டிவி இன்னமும் அனுபவிக்கவில்லை. ஆனால் பாதகத்தை சன் டிவி அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது சன் டிவியை யாராலும் ஜெயிக்கவே முடியாது என்ற நிலைமை மாறி அது தோற்றுக் கொண்டு வருவதை நேயர்களும், சன் டிவியும் உணருகிற ஒரு சூழ்நிலை இதனால் உருவாகிவிட்டது.

கடைசியாக ஒரு வரி - முதுமை வந்து விட்டால், எப்போதோ நடந்த நல்லதுகளை அசைபோடுவோம். சன் டிவி இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் - மெட்டிஒலி ரிப்பீட்.

Sunday, August 24, 2008

படம் நன்றாக இல்லையென்றால் எனக்கு தியேட்டர்காரர்கள் டிக்கெட் பணத்தை திருப்பித் தருவார்களா?

படம் ஓடாவிட்டால், கல்லா நிரம்பாவிட்டால், போட்ட பணத்தை திருப்பித் தரும்படி (வினியோகஸ்தரை விட்டுவிட்டு) ரஜினியை கேட்கும் உரிமை தியேட்டர்காரர்களுக்கு இருக்கிறது(என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

அதே போல பின்வரும் அட்டவணைப்படி தியேட்டர்காரர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது (என்று நான் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன்)


5ரூபாய்

நாற்றம் பிடித்த டாய்லெட்டை பயன்படுத்த வைத்ததற்க்காக
10 ரூபாய்
முன்னிருக்கையில் இருப்பவரின் தலை மறைப்பது போலவே எப்போதும் என்னிருக்கை இருந்ததற்க்காக
10 ரூபாய்
பாதிப்படத்தில் நைசாக ஏ.சி.யை ஆஃப் செய்ததற்க்காக
10 ரூபாய்
பார்க்கிங்கில் 10 ரூபாயை பிடுங்கிக்கொண்டு வண்டியின் பாதுகாப்புக்கு பொறுப்பில்லை என்றதற்க்காக
10 ரூபாய்
இன்டர்வெல்லில் தண்ணீர் பாட்டில் விற்காமல், கூல் டிரிங்ஸ் விற்று பாக்கெட்டை காலியாக்கியதற்க்காக
40 ரூபாய்
இத்தனை இம்சைகளுக்கு மேலே பெரும் இம்சையாக மட்டமான படத்திற்கு டிக்கெட் கொடுத்ததற்க்காக

ஆக மொத்தம் 5 + 10 + 10 + 10 + 10 + 40 = 85 ரூபாய் தியேட்டர் ஓனர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு திருப்பித் தர வேண்டும்.

நடிகர் நாசரின் பெருந்தன்மை


நாசரின் வீடு சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது. அங்கு அவரிடம் பாலா என்பவர் பல காலமாக சமையல் வேலை பார்த்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் நாசர் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த பாலா 'தண்ணி' அடித்து விட்டு கற்களை வீசி நாசர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கியிருக்கிறார்.

ஆனால் நாசர் போலீசிடம் புகார் கொடுக்கவில்லை. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ரோந்து போலீசார் சந்தேகம் வந்து நாசரிடம் விசாரிக்க நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார். போலீசார் அவற்றை ஒரு புகாராக கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாசர் மறுத்துவிட்டிருக்கிறார்.

நாசர் ஏன் வேலையை விட்டு பாலாவை நீக்கினார் என்பது தெரியவில்லை.
ஆனால் சமையல்காரர் பாலா தண்ணி அடித்துவிட்டு கற்களை வீசி ரகளை செய்ததற்கு காரணம் 'வெறும் ஆத்திரம்தான்'
போலீஸ் தானாகவே வந்து விசாரிக்கும்போது நாசர் என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஆனால் புகார் தர மறுத்திருக்கிறார்.

அது நாசரின் பெருந்தன்மை என்றேன் நான், இல்லை, இதில் வேறு ஏதோ இருக்கக்கூடும் என்று என் நண்பர் மறுத்தார். இதில் நாசரின் பெருந்தன்மையைத் தவிர வேறு ஏதும் இருந்து விடக்கூடாது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.

போட்டியும், பொறாமையும், வெற்றுச் சவடால்களும் பெருகிவிட்ட இந்தக் கால கட்டத்தில் விட்டுக்கொடுத்தலும், மன்னித்தலும் செய்திகளாக அடிக்கடி வரவேண்டும் என்று நினைக்கிறேன் நான்.