Saturday, October 3, 2009

மூன்றே ஸ்வரங்களில் ஒரு பாடல் - எம்.எஸ்.வி, இளையராஜா, எல்.வைத்தியநாதன்


இசை என்பதே ஒரு அதிசயம். ஸ முதல் நி வரை உள்ள ஏழே ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனையோ கோடி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

நான்கு ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து முதலில் சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இந்த அதிசயத்திலும் அதிசயம் மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டும் வைத்துக் கொண்டு உருவான பாடல்கள். முதலில் இதை சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ”அதிசய ராகம்” என்று தொடங்கும் பாடலின் முதல் பகுதி ச...க...ப...நி என்ற நான்கே ஸ்வரங்களில் அமைந்த பாடல். என்னுடைய ஞாபகமும், இசை அறிவும் சரியாக இருந்தால் அந்த ராகத்தின் பெயர் மஹதி. பாடல் மஹதி ராகத்தில் துவங்கி பின்னர் ஒரு ராகமாலிகாவாக மலரும். மெல்லிசை மன்னரின் இந்த தைரியமான சோதனை முயற்சி மாபெரும் வெற்றி பெற்றது. திரை இசையில் இன்றைய பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு விதை விதைத்தவர் மெல்லிசை மன்னர்தான்.



இரண்டாவதாக மூன்றே ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து சாதித்தவர் எல்.வைத்தியநாதன்
கார்டுனிஸ்ட் ஆர்.கே.இலட்சுமணனின் மால்குடி டேய்ஸ் ஒரு டெலிவிஷன் தொடராக வெளிவந்தபோது அதற்கு புதுமையான டைட்டில் இசை தந்தார் எல்.வைத்தியநாதன். ”தா னா னா தனா தனா னா . . .” என்று ஆண் ஹம்மிங்கில் துவங்கும் அந்தப் பாடல் ச. . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் உருவான பாடல். அதற்கு முன்பும் சரி பின்பும் சரி எந்த நாட்டுப் புறப் பாடலும் மூன்றே ஸ்வரங்களில் அமைந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் இந்தப் பாடலில் அந்த ஹம்மிங்கைத் தவிர மற்ற பகுதிகளில் வேறு ஸ்வரங்களும் வருகின்றன.



அடுத்ததாக மூன்றே ஸ்வரங்களில் மெட்டமைத்து அசத்தியவர் இசைஞானி இளையராஜா
ஜெயா டிவி சார்பில் நடத்தப்பட்ட ஒரு மெகா இசை நிகழ்ச்சியில்
இளையராஜா ச . . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் அமைந்த அட்டகாசமான மெட்டை இசையமைத்து பாடிக் காட்டினார். பாடலுக்கான ஆர்கெஸ்ட்ரேஷனில் நான்கு நோட்டுகள் வருவதாக யு டியுபில் சில சந்தேகங்களை படித்தேன். என்னுடைய சிற்றறிவுக்கு அது புலப்படவில்லை.



மெல்லிசை மன்னரிடம் இயக்குனர் பாலசந்தர் மிகவும் புதுமையாக ஒரு பாடல் பண்ணலாம் என்று கூறினாராம். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி தற்செயலாக ஒரு நாள் திரு. பால முரளி கிருஷ்ணாவை சந்தித்தாராம். அப்போது அவர் எடுத்துக் கொடுத்த ராகம்தான் மஹதி
. இந்த தகவலை நான் எப்போதோ ஒரு முறை விகடன் அல்லது குமுதத்தில் படித்தேன்.சர்வஸ்ரீ இராகம் என்பது மூன்று ஸ்வரங்களில் அமைந்தது. அதே போல நான்கு ஸ்வரங்களில் அமைந்த இராகங்களும் உண்டு. லாவங்கி, மஹதி, சுமுகம் என அந்த இராகங்களுக்குப் பெயர். இந்த இராகங்கள் அனைத்தையும் உருவாக்கியவர் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.

மால்குடி டேய்ஸ் டைட்டில் இசையும், இளையராஜா தந்த இசையும் எந்தெந்த இராகங்களில் அமைந்தன என்று எனக்கு யாரும் சொல்லவில்லை. அதனால் எனக்குத் தெரியவில்லை. இசையில் இருக்கும் ஆர்வத்தால் இந்த தகவல்களை திரட்டியிருக்கின்றேன். இதில் தவறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லது என்னுடைய நண்பர் மற்றும் இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயண் அவர்களை அணுகுங்கள். இசை நுணுக்கங்களைச் சொல்வதில் அவர் வல்லவர்.

ஒன்று மட்டும் நிச்சயம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.வைத்தியநாதன், இசைஞானி இளையராஜா இவர்கள் அனைவரும் பிறவி இசை மேதைகள். இன்றைய தலைமுறை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையும் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் ஏராளமாக இருக்கின்றன.

இந்த இசை மேதைகள் வாழும் காலத்திலேயே நானும் வாழ்வதை ஒரு வரமாக நான் நினைக்கின்றேன்.

வாழ்க நமது இசை மேதைகள்! வளர்க அவர்கள் புகழ்! மேலும் பெருகட்டும் அவர்களுடைய இசை!



Friday, October 2, 2009

கலைஞர் டிவியில் கமல் தந்த டிப்ஸ்

காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக கலைஞர் டிவியில் கமலின் லைவ் Phone-in ஷோ.
பேசி வைத்துக் கொண்டு செய்வது போல இருக்கிறது என்று கமலே கிண்டல் செய்யும் அளவிற்கு, நிறைய வி.ஐ.பி போன்கள்.

யாருடைய கேள்விக்கோ பதில் சொல்லும்போது, ஹே ராம் போன்ற படங்களை திரையிடும்போது, அந்தப் படத்தில் இடம்பெறும் சரித்திர நிகழ்வுகள் பற்றிய டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்றார் கமல். அருமையான வார்த்தைகள். எந்த சப்ஜெக்டாக இருந்தாலும், கொஞ்சம் ஆழமாக படமெடுக்கும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வார்த்தைகள்.

டெலிவிஷன் ஷோக்களில் கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி ஒரு மினி அறிமுகம் அல்லது விவாதம் ஏற்பாடு செய்யலாம். அது போன்ற நிகழ்ச்சிகள் ஆடியன்ஸை தயார் செய்ய உதவும். நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு கிடைக்கும். அதனால் அந்த படத்தை இரசிப்பது இலகுவாக இருக்கும். படம் இரசிகனுக்கு புரியாமல் போய்விடக்கூடிய அபாயம் தவிர்க்கப்படும்.

காந்தி அஹிம்சை வழியில் போராடி நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். இந்த அளவிற்குதான் மக்கள் Non-detailஆக சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார் கமல். உண்மைதான், நம்மில் பெரும்பாலோர் அவ்வளவுதான் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஹே ராமின் தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கைபர் போலன் கனவாய், ஆரியர்கள், திராவிடர்கள், சுதந்திரப் போராட்டத்தின் போதிருந்த அரசியல் நிகழ்வுகள் . . . இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய அறிமுக நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டு அதன் பின்னர் ஹே ராம் திரையிடப்பட்டால் மக்கள் அந்தப் படத்தை இன்னமும் மனதுக்கு நெருக்கமாக உணர்வார்கள்.

கலைஞர் டிவியிடம் ஹேராம் படத்திற்கான உரிமை தற்போது இருக்கின்றதாம். எதிர்காலத்தில் படம் ஒளிபரப்பப்படும்போது, மேலே குறிப்பிட்டுள்ளது போல சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு Knowledge base உருவாக்கிவிட்டு ஒளிபரப்பினால் மக்கள் எளிதில் இரசிக்க முடியும். இந்த அறிவுறுத்தல் அன்பே சிவம் போன்ற படங்களுக்கும் பொருந்தும் என்றார் கமல். நான் இந்த பட்டியலில் குணா, ஆளவந்தான் போன்ற படங்களையும் சேர்க்க விரும்புகின்றேன்.

திரையுலக வாழ்க்கையில் பொன் விழா கொண்டாடும் நேரத்தில், ஒரு ஆசிரியராக இருந்து கமல் பல கருத்துக்களை அடக்கத்தோடும் ஆதங்கத்தோடும் சொல்லிக் கொண்டு வருகின்றார். திரைத்துறையில் நுழையவிருக்கும் என்னைப் போன்றோருக்கு அவருடைய வார்த்தைகள் ஒரு வழிகாட்டி.

ISR VENTURES மற்றும் ”அவர்” குழுவினர் சார்பாக திரு.கமலஹாசன் அவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

Thursday, October 1, 2009

எனக்கு குழந்தைகளையும் பெண்களையும் அதிகம் பிடிக்கும்

கடவுளை நேசிப்பவன்
கடவுளாக முடிவதில்லை!
பெண்ணை நேசிப்பவன்
பெண்ணாகச் சம்மதிப்பதில்லை!
ஆனால்
குழந்தையை நேசிப்பவன்
குழந்தையாகிப் போகிறான்!

எழுதிய நாள் - 28.10.90

நான் எழுதிக் கிழித்துப் போட்ட எத்தனையோ டைரிகளில், கிழியாமல் தப்பிய ஒரே ஒரு டைரி தற்போது என்னை பழைய நினைவுகளில் தாலாட்டிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்த இன்னுமொரு கவிதைதான் மேலே இருப்பது.

அதென்னமோ தெரியவில்லை, எனக்கு குழந்தைகளையும் பெண்களையும் அதிகம் பிடிக்கும். எனக்குப் பிடித்த பெண்களின் அருகாமை என்னை மேலும் கண்ணியமாக வைக்கின்றது. எனது கற்பனைகளில் உணர்வுகளின் வீச்சை அதிகமாக்குகின்றது. கல்லூரி நாட்களிலும் பின்னர் எனது சிநேகிதிகள் ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆகும் வரையிலும் நான் எனக்கு மிகவும் பிடித்த நானாக இருந்தேன்.

பெண்களை விட எனக்கு அதிகம் பிடித்தவர்கள் குழந்தைகள். அவர்களின் மழலையும், ஏன் என்கிற கேள்விகளும், சின்ன மழைத்துளிக்கு கூட கண்களின் பரவசம் காட்டும் ஆச்சரியங்களும், எனக்கு உன்னை விட்டால் யாருமில்லை என்பது போல நம் விரல்களை பிடித்துக் கொள்ளும் பத்திர உணர்வும், பரபரவென விளையாடிவிட்டு, சட்டென்று ஒரு நொடியில் நம் தோளிலும் மார்பிலும் உறங்கும் பாசமும் . . .

தேவதைகளும், கடவுள்களும் குழந்தைகளின் உருவத்தில்தான் நேரில் வருகின்றார்கள். பெண்கள் அவர்களை பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்.

நான் சொல்வது சரிதானே? சரிதான்.

Wednesday, September 30, 2009

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

இங்கே இருக்கையில்
தமிழுக்கு அமுதென்று பேர்!
அங்கே இலங்கையில்
அளவுக்கு மிஞ்சிய அமுதென்று பேர்!

தமிழன் என்று சொல்லி
தலை நிமிரும் போதெல்லாம்
தலை வெட்டப்படுகிறது.

கோவலன் இருந்திருந்தால்
சிலம்பு விற்கப் போகமலேயே
சிரம் இழந்திருப்பான்.

கண்ணகியின் சிலம்புகள்
அவள் கற்புடன்
பறிமுதல் செய்யப்பட்டிருக்கும்.

எழுதிய நாள் - 5.4.85

இன்று பழைய டைரியை புரட்டியபோது, தற்செயலாக கண்ணில் பட்டு நெஞ்சில் தங்கிய வரிகள். கிட்டத்தட்ட 24 நான்கு வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதை. கவிதை என்று கூட சொல்ல மாட்டேன். பொங்கிக் கொப்பளித்த உணர்வு. அந்த உணர்வு அன்று தமிழகத்தில் எல்லா இளைஞர்களுக்கும் இருந்தது. இன்றும் அதே உணர்வு தமிழகத்தில் இருக்கிறதா என்றால், இல்லை. ஆனால் அன்றும் இன்றும் இலங்கையில் நிலை மாறவில்லை.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

Tuesday, September 29, 2009

இனி பதிலடி தர மாட்டேன் - கருணாநிதி

ஜக்குபாய் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பின் வருமாறு பேசியிருந்தார்.

”காஞ்சீபுரம் விழாவில் நான் உணர்ச்சிமிக்க சொற்பொழிவு ஆற்றியதாக கேட்டவர்கள் எல்லாம் சொன்னார்கள். பேசும் போது நான் சொல்ல விட்டது- அதை இங்கே சொல்ல நினைப்பது இது வரையிலே என் மீது விழுந்த கணைகளுக்கு பதில் கணைகள் நான் அவர்கள் விடுத்த அதே கணைகளைப் போல் இதுவரையில் நான் விட்டிருந்தால் அதை நீங்கள் எல்லாம் மறந்து விடுங்கள்

நான் வாழ்வில் முக்கால் பகுதியை முடித்து விட்டு, அந்த முக்கால் பகுதியில் முத்தமிழுக்கு, இந்த முத்தமிழ் நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு, மூன்று புறமும் கடலால் சூழந்துள்ள இந்தியத் தீபகற்பத்திலே உள்ள மக்களுக்கும் என்ன செய்தேன், இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதிலே தான் நான் என்னுடைய கவனத்தைச் செலுத்துவேனே அல்லாமல், யார்-யார் என்ன சொன்னார்களோ, அதற்கு அளிக்க வேண்டிய விளக்கங்களை, அதற்குத் தர வேண்டிய மறுப்புகளை அதற்குத் தர வேண்டிய விவரங்களை இயக்கத்திலே இருக்கின்ற தொடர்புடைய மற்றவர்கள் சொல்லிக் கொள்ளட்டும்- அவர்கள் அந்தப்பணியை ஆற்றட்டும்.

நான் யாருக்கும் அவர்கள் தருகின்ற கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்பதை நேற்று காஞ்சீபுரத்திலே மனதிலே பதிய வைத்துக் கொண்டேன். அதை இன்று அண்ணா அறிவாலயத்திலே கலைஞர் அரங்கத்திலே வெளியிடுகின்றேன். இது தான் உறுதி, உறுதி, உறுதி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது அரசியல் அல்ல.”

என்னைப் போன்ற அரை குறை கலைஞர் அபிமானிகளுக்கும், கலைஞர் வெறியர்களுக்கும், கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கும் கலைஞரிடம் மிகவும் பிடித்ததில் ஒன்று எது தெரியுமா? உடனுக்குடன் சளைக்காமல் தன்னை நோக்கி பாய்ந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி தருவது. ஆனால் சில நேரங்களில் அது தரம் தாழ்ந்து அவரது அபிமானிகளையே முகம் சுளிக்க வைக்கும். எதற்க்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என்று எண்ண வைக்கும். சமீபத்திய உதாரணம் ஜெயலலிதாவை திருமதி.ஜெயலலிதா என்று விமர்சனம் செய்தது.

கலைஞருக்கு யார் உபதேசம் செய்தார்களோ? இனி அதுபோல் சரிக்கு சரி பதிலடி தர மாட்டேன் என்று கூறிவிட்டார். ஆனால் அந்த வேலையை கட்சியின் மற்ற தலைவர்களும் தனது தொண்டர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டார். அதுதான் கவலையாக இருக்கிறது. இனி வெற்றிகொண்டான் போன்ற பேச்சாளர்களை கையில் பிடிக்க முடியாது.

ஆக (தரம் தாழந்தாலும்) பதிலடி நிச்சயம் இருக்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம். இனி கலைஞர் பெயரில் இருக்காது.

Monday, September 28, 2009

ஸ்ருதிஹாசன் - தைரியமான துவக்கம்



நேற்றைய ஆயத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் கமல் ஆக்ரமித்துக் கொண்டார். உன்னைப் போல் ஒருவன் உண்டா என்று ஒவ்வொரு சேனலும் கொண்டாடி மகிழ்ந்தன. எனக்குப்பிடித்தது ”மக்கள் மன்றத்தில் கமல்” என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி கமலைப் பார்த்தவுடன் அழுதுவிட்டார். உணர்ச்சிகரமான அந்த துவக்கத்தால் கமலே அடிக்கடி நிகழ்ச்சியில் கண் கலங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபியும் கலங்கித்தான் போனார். ரீமேக் பற்றி கேள்வி வந்தபோது, அது தவறில்லை, நானே என் அப்பாவின் ரீமேக் தானே என்று எந்த பாசாங்கும் இல்லாமல் சொன்னார்.

அந்த வகையில் ஸ்ருதிஹாசனும் கமலின் அப்பட்டமான ரீ மேக் தான். முதல் படமே (தமிழ் சினிமாவைப் பொருத்தவரை) சோதனை முயற்சி. பாடல்களே இல்லாத படத்தில் தைரியமான அறிமுகம். அதைக் குறிப்பிட்டு, கலைஞர் டிவியில், ஒரு வகையில் ஸ்ருதி ஹாசனுக்கு நல்லதும், கெடுதியும் ஒரே நேரத்தில் செய்திருக்கிறீர்கள் என்று இயக்குனர் லிங்குசாமி கூறினார். கமல் உடனடியாக அதற்கு பதில் சொன்னார். ஸ்ருதி வழக்கமான கோடம்பாக்க இசை (ரெண்டு டுயட் - ஒரு குத்து - ஒரு ஹீரோ இன்ட்ரொடக்ஷன்) பயின்றவர் அல்ல. திரை இசை என்றால் கதைக்கேற்ப பிண்ணனி இசை கோர்ப்பதுதான் என்பதை கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அதனால் ஸ்ருதிக்கு இதில் ஏமாற்றமும் இல்லை, சோதனை முயற்சி என்ற கர்வமோ, பெருமையோ, தயக்கமோ இல்லை. அவர் கற்றுக் கொண்டதை செய்து பார்த்திருக்கிறார் அவ்வளவுதான் என்றார் கமல்.

ஸ்ருதியின் இந்த துவக்கம் எதிர்கால திரை இசை அமைப்பாளர்களுக்கு நம்பிக்கை தரும் நவீன துவக்கம் என்பது என் கருத்து.

வெற்றி பெற்ற ஸ்ருதிக்கும், வெற்றி பெற உழைத்துக் கொண்டிருக்கும் ஏராளமான உன்னைப் போல் ஒருவன்களுக்கும் வாழ்த்துகள்!

Sunday, September 27, 2009

”குறு குறு கண்களிலே” ஹாலிவுட் படத்தில் தமிழ் பாடல்

இரட்டை ஆஸ்கர் வெற்றிக்குப் பின் இன்று உலக அளவில் அதிகம் கவனிக்கப்படும் இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.இரகுமானும் ஒருவர். இதனை கருத்தில் கொண்டு தனது அடுத்த ஹாலிவுட் படத்தை மிகக் கவனமாக தேர்ந்தெடுத்ததாக ஏ.ஆர்.இரகுமான் கூறியிருந்தார்.

Couples Retreat - அவர் ஆஸ்கர் விருதுக்குப் பின் இசையமைக்கும் முதல் ஹாலிவுட் திரைப்படம். அதன் டிரையலர்களை பார்க்கும் போது வழக்கமான ஹாலிவுட் மசாலா நகைச்சுவை படம் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.



ஆனால் இசையைக் கேட்கும்போது ஓரிரு டிராக்குகளைத் தவிர மற்றவற்றில் நகைச்சுவைக்கான அடையாளங்கள் பெரிதாக ஏதுமில்லை. இங்கே கிளிக் செய்தால் Couples Retreat Sound Tracks அனைத்தையும் கேட்கலாம்.

ஹாலிவுட் படமென்றாலும் நமது ஏ.ஆர்.இரகுமானின் வழக்கமான இந்தியன் டச் மிளிர்கிறது. தனது பாணியை விட்டு விலகி தனது தனித்தன்மையை அவர் இழந்துவிடவில்லை. அந்த வகையில் ஒரு ஆறுதல்.

Sharks என்கிற டிராக்கில் ரங்கீலாவில் வந்த ”ஹேய் ராமா யே க்யா ஹீவா” பாடலில் பயன்படுத்தப்பட்ட அதே ராகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

The Waterfull என்கிற டிராக் குரு திரைப்படத்தில் வந்த ”ஒரே கனா” பாடலை கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறது.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால் ”குறு குறு கண்களிலே” என்ற தமிழ்பாடல் ஏ.ஆர்.இரகுமானின் குரலிலேயே தீம் மியுசிக் போல சும்மா ஜில்லென்றிருக்கிறது. என்ஜாய்!