Friday, November 14, 2008

மாணவர்களே எங்களை மன்னியுங்கள்!!

எனது இனிய(?) மாணவர்களே,

இன்றைக்கு உங்கள் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் கல்வியோ, கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோ அல்ல. 
 இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஒளிபரப்பான 'கொலை வெறி' தாக்குதலில் உங்கள் அனைவரையும் பார்த்தேன். சிலர் உதடுகளில் மிரட்டல்,சிலர் உதடுகளில் இரத்தம்.சிலர் கையில் கத்தி, சிலர் கையில் உயிர்.

உங்கள் கல்லூரி மூடப்பட்டதற்கு உங்கள் கையிலிருந்த கத்தியும், சிலரின் உடலில் இருந்த இரத்தமும்தான் காரணம் என்று இந்த ஊரும், உலகமும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் நீங்களே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

பின் யார்தான் காணரம்?

ஜாதி, மதம், இனம் என நமது சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும், நாற்றங்களையும் கல்லூரி கட்டிடங்களுக்குள்ளும், வகுப்பறைக்குள்ளும் நாங்கள் பரப்பி வைத்திருக்கிறோம். நீங்கள் அட்மிஷன் வாங்கும்போதிலிருந்தே உங்களை அறியாமல் அதில் காலை வைத்து அழுக்காகிப் போகிறீர்கள்.

இன்றைக்கு ஒவ்வொரு கட்சியிலும் மாணவரணி என ஒன்று உள்ளது. நீங்கள் அதில் ஒரு அங்கம், இதில் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் எல்லாக்கட்சிகளுக்கும் ஒவ்வொரு அணி உருவாகியுள்ளது. இதுதான் கோளாறு.

கட்சித் தலைவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்களோ, எப்படியெல்லாம் முறைகேடு செய்கிறார்களோ, எப்படியெல்லாம் வன்முறை செய்கிறார்களோ, எப்படியெல்லாம் அவற்றிலிருந்து தப்பிக்கிறார்களோ அவற்றையெல்லாம் நீங்கள் கல்லூரியில் படிக்கும்போதே அனுபவித்துக் கற்றுக் கொள்கிறீர்கள்.

நாங்கள் எடுக்கிற சினிமாக்களும், சின்னத்திரை சீரியல்களும் வகை வகையான கத்திகளையும், துப்பாக்கிகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விதம் விதமான கொலைவெறிகளை தூண்டியிருக்கிறது. வெறி கொண்டவன் வெற்றி பெறுவான் என்று போதித்திருக்கிறது.

நாங்கள் தேர்ந்தெடுத்த நாடாளும் அரசியல்வாதிகளும், அவர்களை எதிர்க்கின்ற அரசியல்வாதிகளும் அந்த துப்பாக்கிகளையும், கத்திகளையும் நிஜ வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயன்படுத்தி ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைக் காட்டித்தான் உங்களை வளர்த்தோம்.

காந்தி கூட மாணவர்களை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் அவர்களை வைத்து வெற்று கோஷம் போடவில்லை. அவர்களை வைத்து ஓட்டு சேகரிக்கவில்லை. அவர்களை வைத்து புதிய கல்வி முறைகளையும், திட்டங்களையும் உருவாக்கி சோதித்துப் பார்த்தார்.  ஆனால் நாங்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டோம்.
இன்று எங்களைப் பார்த்து நீங்கள் கத்தியை பயன்படுத்துகிறீர்கள்.
சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் கற்றுக்கொடுத்ததைத்தான் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீரகள்.


மாணவர்களாகிய நீங்கள் தனியான இனமோ சமூமோ அல்ல. நாங்கள் தான் நீங்கள், நீங்கள்தான் நாங்கள்.

அதனால் நீங்கள் குற்றவாளிகள் அல்ல. உங்களைக் குற்றவாளிகளாக வளர்த்த நாங்கள்தான் குற்றவாளிகள்.

அதனால் எங்களை கத்தியின்றி, இரத்தமின்றி மன்னியுங்கள்.