Saturday, June 4, 2011

நம்மை பின் தொடரும் GPS (லைட்டாக ஒரு அறிமுகம்)

நாம் போகுமிடமெல்லாம் GPS அறியும் - 


எத்திராஜ் கல்லூரிப் பெண்கள் எங்கே செல்வார்கள் என்று விவேகானந்தா பையன்கள் எப்படியோ மோப்பம் பிடித்து பின் தொடர்வார்கள். ஒரு வாரத்திற்கு ஒரு லெட்டர் போட்டு, காதலித்து கசிந்துருகிய காலத்திலேயே இந்த டிராக்கிங் சிஸ்டம் பக்காவாக இருந்தது. இது டிஜிட்டல் யுகம். இப்போது சாடிலைட் துணையுடன் டிராக்கிங் சிஸ்டம், நாடு விட்டு நாடு தாண்டுகிறது. அம்மாவுடன் காரில் சென்று கொண்டே, எஸ்.எம்.எஸ் வழியாக பைக் பையன்களை பின் தொடர வைக்கும் மொபைல் யுகம். நீங்கள் வளசரவாக்கம் வீட்டில் பல் துலக்கி, வடபழனி வசந்த பவனில் டிபன் சாப்பிட்டு, கோடம்பாக்கம் சிக்னலில் காத்திருந்து, ஜெமினி பார்சன் எதிரில் டீ குடித்தீர்கள் என்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம். உங்கள் மொபைல் போனில் இருக்கும் டிராக்கிங் சிஸ்டம், உங்கள் டை கட்டிய பாஸிக்கும், டைட் ஜீன்ஸ் போட்ட கேர்ள் பிரண்டுக்கும் அதுவே லைவ் பிராட்கேஸ்ட் செய்துவிடும். 

செல்லமாக GPS, விஸ்தாரமாக Global Positioning System என்று இந்த தொழில் நுட்பத்துக்கு நாமகரணம் உண்டு. பைனாகுலர் காட்டாத தொலை தூரங்களில் தோழமை சிப்பாய்களையும், எதிரி துப்பாக்கிகளையும் பின் தொடர, இந்த நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிலிட்டரி வசதிக்காக வந்த இந்த நுட்பம், தற்போது மிலிட்டரி ஹோட்டல்கள் எங்கே இருக்கிறது என்று தேடித் தரும் அளவிற்கு இலகுவாகவும், கிட்டத்தட்ட இலவசமாகவும் கிடைக்கிறது.  நெடுஞ்சாலை காரோட்டிகளுக்கு வழிகாட்டத்தான் GPS இராணுவ முகாமை விட்டு வெளியே வந்தது. ஆனால் அதிவிரைவாக இன்டர்நெட் இணைப்புகளும், அதனுடன் இணைந்த (Smart Phone) மொபைல் பேசிகளும் விசுவரூபம் எடுத்தவுடன், பட்டி தொட்டியெல்லாம் சினிமா போஸ்டர்களை விட வேகமாக GPS பரவிவிட்டது.

சென்ற மாதம் அம்பாசமுத்திரம் சென்றிருந்தேன். நல்ல ஹோட்டல் எங்கிருக்கிறது என்று விசாரித்து தெரிந்து, பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் கௌரி சங்கருக்குள் நுழைவதற்குள், லஞ்ச் டைம் முடிந்து டிபன் டைம் பக்கோடா வந்துவிட்டது. கௌரி சங்கர் எங்கிருக்கிறது? பஸ் ஸ்டாண்டில் இருந்து மேற்கா? கிழக்கா? எத்தனை கி.மீ அல்லது எத்தனை மீ? உட்பட அனைத்தும் எனது மொபைலில் தெரிந்திருந்தால் எனக்கு அன்றைய மதிய உணவு மிஸ் ஆகியிருக்காது. கௌரிசங்கரும் ஒரு கஸ்டமரை இழந்திருக்காது. இதனை மனதில் கொண்டுதான் தற்போது பல நிறுவனங்கள் GPS வழியாக தங்களை புரமோட் செய்து கொள்கிறார்கள். இதனால் என்ன வசதி என்றால், திருநெல்வேலி சென்றாலே போதும், இருட்டுக் கடைக்கு உங்கள் மொபைலே வழிகாட்டிவிடும். அதே போல அம்பாசமுத்திரம் வந்தாலே கௌரிசங்கர் வழிகாட்டி மேப்புடன் பாப்-அப் ஆகிவிடும்.

நாம் கேட்டதை எல்லாம் தரும் கூகுள் ஒரு கணக்கு சொல்கிறது. அதன்படி கூகுள் மேப் பயன்படுத்துபவர்கள் தற்போதைய நிலவரப்படி 150 மில்லியன் நபர்களாம். அதாவது கூகுள்  தரும் அனைத்து சேவைகளையும் பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் பேர் கூகுள் மேப் துணையுடன்தான் ஊருக்கோ, காபி ஷாப்புக்கோ, கோவிலுக்கோ, ஃபுட்பால் மாட்சுக்கோ வழிகேட்டு செல்கிறார்கள். நல்ல ஞாபகசக்தி உள்ள கம்ப்யூட்டர் உலகம் வாசகர்கள், சில வருடங்களுக்கு முன்பே GPS பற்றி நாம் எழுதியிருந்ததை நினைவில் வைத்திருப்பீர்கள்.

டெஸ்க் டாப்பிலிருந்து, லேப் டாப்புக்கு தாவிய நவயுக ஹைடெக்கர்கள் தற்போது, ஐ பேட், ஸ்மார்ட் போனுக்கு தாவிவிட்டார்கள். அதற்கு காரணம், விரல் நுனியை விட சிறிய நக நுனியில் கேட்டதெல்லாம் தரும் இந்தக் கருவிகள் தான். இந்த நவயுக கணிணிகள் எப்போதும் இணையத்துடன் இணைந்தே இருப்பதால், Facebook, Foursquare மற்றும் twitter போன்ற சமூக வலைத் தளங்கள் எல்லாம், தற்போது GPS நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.

இந்த தளங்களில் நீங்கள் நணப நண்பிகளுடன் பீநட்ஸ் வறுத்துக் கொண்டிருக்கும்போதே, மௌண்ட் ரோடில் டிராபிக் நெருக்கடி, எனவே கிண்டி ரூட்டை பிடியுங்கள் என்று சேதி வந்துவிடும். எங்கு சந்திக்கலாம் என்று நீங்கள் தயங்கித் தயங்கி கேட்கும்போதே, ஊரிலிருக்கும் அத்தனை காபி ஷாப்புகளுக்கும், அரையிருட்டு ரெஸ்டாரண்டுகளுக்கும் கூகுள் மேப் விரிந்துவிடும். எனவே தற்போது வியாபார நிறுவனங்கள் தங்களது மார்க்கெட்டிங் உத்தியில் பெரும்பங்கை GPS வழி பிரச்சாரத்துக்கு செலவிடுகிறார்கள்.

நீங்கள் ஃபேஸ்புக்கில் எனக்கு நோக்கியா பிடிக்கும் என்று யாரிடமாவது சொல்லிக் கொண்டிருந்தால், சந்தடியில்லாமல் நோக்கியாவின் விளம்பரங்கள், புது மொபைல் மாடல்கள் உட்பட சகலமும், உங்களைச் சுற்றி இணையத்தில் எங்காவது வந்து கொண்டே இருக்கும்,  இந்த கோடைக்கு கேரளா சென்று ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கிறேன் என்று நீங்கள் டிவீட் செய்தால் போதும், கேரள ஓய்வு விடுதிகள், தங்கும் செலவுகள், போக்குவரத்து வசதிகள் என அனைத்தும் உங்கள் பக்கத்தில் மின்னும்.

Friday, June 3, 2011

Firefox - Word : டிப்ஸ்


வாரக் கடைசி என்பதால், விடுமுறை ஜோரில்  பலருக்கு படிக்க பொறுமை இருக்காது. எனவே சுருக்கமாக இரண்டே இரண்டு டிப்ஸ்.


நெருப்பு நரி உலவியில்(Firefox), ஹோம் பேஜாக இணைப்பு கொடுத்திருக்கும் வலைத் தளத்தை எப்போது வேண்டுமானாலும் திறக்க என்ன வழி?

தினமும் முதலில் பார்வையிட விரும்புத் தளத்தை நாம் ஹோம் பேஜாக கொடுப்பது வழக்கம். உலவியில் அடுத்தடுத்து பல Tabகளை திறந்த பின்னும் ஒரே கிளிக்கில் ஹோம் பேஜை கொண்டு வர முடியும். உலவியில் உள்ள ஹோம் பட்டனை மௌஸின் நடு பட்டனால் கிளிக் செய்தால் போதும். ஹோம் பேஜ் திறந்து கொள்ளும்.

மைக்ரோசாஃப்ட் வேர்டு வழியாக எந்த டாகுமெண்டை உருவாக்கினாலும், முதலில் defaultஆக Times New Roman ஃபாண்ட் தான் இருக்கிறது. இதை மாற்றிக் கொள்ள முடியுமா?

அதுதான் உங்கள் விருப்பம் எனில் தாராளமாக default fontஐ மாற்றலாம். 
Format -> Font ->(நீங்கள் விரும்பும் புது ஃபாண்ட்) -> Default
இதைச் செய்தால் போதும்.

Thursday, June 2, 2011

எம்.எஸ்.ஆபீஸ் - கூகுள் குரோம் - எக்ஸல் :டிப்ஸ்

நான் கூகுள் குரோம் - 7 பிரவுசர் பயன்படுத்துகிறேன். ஆனால் கிராபிக்ஸ் தொடர்பானவற்றை பார்க்கும்போது, இயல்பான வேகத்தில் இயங்காதது போலத் தோன்றுகிறது. இதனை சரி செய்ய முடியுமா?

நமது கணிணிகளில் GPU - Graphics Processing Unit என்கிற சமாச்சாரம் ஒன்று உள்ளது. இதனுடன் சரியாக தொடர்பு இல்லாத எல்லா கிராபிக்ஸ் மென்பெர்ருள்களும்  தடுமாறும்.எனவே நமது கூகுள் குரோம் பிரவுசருக்கு சில கட்டளைகளை தர வேண்டும்.

  • டெஸ்க் டாப்பில் உள்ள, கூகுள் குரோம் ஷார்ட் கட்டின் மேல் right click செய்யுங்கள்.
  • ஒரு விண்டோ திறக்கும். அதில் Properties என்பதை தேர்ந்தெடுத்து, Shortcut டேபை கிளிக் செய்யுங்கள்.
  • Target டெக்ஸ் பெட்டியில் contentsக்குப் பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்துவிட்டு, '--'-enable-accelerated-compositing' என்பதை ஒரு எழுத்து கூட மாறாமல் டைப் செய்யுங்கள். பிறகு Apply->OK கொடுங்கள்.
இனி நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் சமாச்சாரங்கள் முன்பிருந்த பிரச்சனைகள“ இன்றி தெரியும்.
நான் ஆபீஸ் 2010 பயன்படுத்துகிறேன். எனது நண்பரின் கணிணியில் உள்ள ஆபீஸ் 2010ல் மெனுக்கள் வேறு மாதிரி உள்ளன. மெனுக்களை நமது விருப்ப்படி மாற்றிக் கொள்ள முடியுமா?

தாராளமாக மாற்றிக் கொள்ள முடியும்.
Files ->Options->Customize Ribbon
இதே வரிசையில் கிளிக் செய்து கொண்டே வந்தால், மெனுக்களை மாற்றி அமைக்கும் விண்டோ திறக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு எக்ஸல்(Excel) ஃபைலின் குறிப்பிட்ட பகுதியை படமாக மாற்ற முடியுமா?தேவையான பகுதியை முதலில் மௌஸ் வைத்து தேர்ந்தேடுங்கள். 
பிறகு Shift கீயை அழுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து Edit->Copy Imageஐ தேர்வு செய்யுங்கள்.

குழந்தையின் முதல் முத்தம் போல - முதல் மழை

ஃபேஸ்புக்கில் அல்லது டிவிட்டரில் ஒரே ஒரு மெசேஜ் அளவுதான். அதை ஒரு பதிவாக எழுதலாமா என்ற யோசனையுடன், ஃபேஸ்புக்கிலிருந்து இங்கு மறு பதிப்பு செய்திருக்கிறேன்.


மழைக்காலங்களின் முதல் சில நாட்கள் விசித்திரமானவை. வானம் கறுத்திருந்தாலும், குடையை எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சோம்பல் தடுக்கும். பெரும்பாலும் மாலையில் துவங்கும் முதல் மழையை பார்த்ததும், பலர் எங்கோ ஒரு கட்டிடத்திற்குள் சட்டென மறைவார்கள். சிலர் மரத்தடியில் ஒதுங்குவார்கள். சிலர் தேநீர் கடைகளுக்குள் புகுவார்கள்.

எனக்கு எப்போதுமே மழையில் நனையப் பிடிக்கும். அதுவும் முதல் மழையை தவற விட மாட்டேன். நேற்றைய முன் தினம், திடீரென சென்னையை நனைத்த மழை என்னையும் நனைத்த பின், என் மனதில் தோன்றிதை, எழுத்தில் கொண்டு வந்துவிட்டேன்.

ஃபேஸ்புக்கில் இதற்கு தலைப்பு தேவைப்படவில்லை. வலைப் பதிவு தலைப்பு கேட்கிறது. என்ன தலைப்பு வைப்பது....ம்ம்ம்ம்ம்ம்... 



குழந்தையின் முதல் முத்தம் போல (தலைப்பையே முதல் வரி ஆக்கிவிட்டேன்)
திடீரென முதல் மழை!
துளிகள், உதிர்ந்த பூக்களின் தூளிகளாகும்
விந்தையை இரசித்தபடி,
மழையை குடையாக்கி,
நனைந்தும் நனையாமல் நான்.

விண்டோஸ் 7 - டிப்ஸ்

நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் Screen Shot எடுப்பது எப்படி?
வழக்கமாக அனைவரும் Print Screen பட்டனை பயன்படுத்துவார்கள். இது விண்டோஸின் அனைத்து பதிப்புகளிலும் வேலை செய்யும். ஆனால் இது முழு திரையையும் படம் பிடித்துவிட வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் படம் பிடிக்க வேண்டுமென்றால், விண்டோஸ் 7, Snipping Tool என்ற மென்பொருளை தருகிறது. Start - Programs - Accessories -Snipping Tool வழியாக, இதனை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை நான்கு வகையாக பயன்படுத்தலாம்.
  • Free-form Snip - திரையில் எந்தப் பகுதி வேண்டுமோ, அதை மௌஸை வைத்து குறித்தால் போதும். அந்தப் பகுதி ஒரு .png படமாக சேமிக்கப்பட்டுவிடும்.
  • Rectangular snip - ஒரு செவ்வகப் பெட்டிக்குள் திரையில் தோன்றுவதை .png இமேஜாக சேமிக்கலாம்.
  • Window Snip - ஒரு ஃபயர் பாக்ஸ் விண்டோவுக்குள் தோன்றுவதை மட்டுமோ, ஒரு ஹெல்ப் மெனு விண்டோவில் தோனறுவதை மட்டுமோ நாம் .png படமாக சேமிக்கலாம்.
  • Full-screen Snip - முழு திரையையும் ஒரு .png படமாக சேமிக்கலாம்
என்னுடைய வன்தட்டுகளை (Hard disk) பாதுகாக்க அடிக்கடி Defragment செய்கிறேன். என் ஹார்டு டிஸ்கில் C,D,E, F என நான்கு டிரைவ்கள் உள்ளன. இவற்றை தனித்தனியாக defrag செய்யாமல், ஒரே கட்டளையில் அனைத்தையும் Defrag செய்ய முடியுமா?
எளிதாகச் செய்யலாம். முதலில் ஒரு புதிய NotePad ஃபைலை திறந்து கொள்ளுங்கள். அதில் பின்வரும் கட்டளைகளை உள்ளிடுங்கள்.
@echo off
defrag.exe -f c
defrag.exe -f d
defrag.exe -f e
defrag.exe -f f
பின்னர் இந்த ஃபைலை defrag.cmd என்ற பெயரில் சேமியுங்கள். பிறகு Start->Run->கிளிக் செய்து cmd என டைப் செய்யுங்கள். DOS திரை வரும். அங்கு defrag.cmd என டைப் செய்யுங்கள். இது போதும். Defrag துவங்கிவிடும்.

விண்டோஸ் 7, XP மற்றும் Vistaவிலும் இந்த கட்டளைகள் வேலை செய்யும்.

நான் தமிழ் எழுத்துருக்களை(fonts) விண்டோஸ் 7ல் இன்ஸ்டால் செய்வது எப்படி?
முந்தைய பதிப்புகளை ஒப்பிடும்போது, முதல்பார்வையில் எழுத்துருக்களை இன்ஸ்டால் செய்வது கடினம் போலத் தான் தோன்றும். ஆனால் இதிலும் மிக எளிதுதான். நான் இரண்டு வழிகளைச் சொல்கிறேன். 
  • முதல் வழி, Fonts இருக்கும் ஃபோல்டர்களை திறந்து கொண்டு, ஃபாண்டுகளின் பெயருக்கு மேல் வலது மௌஸ் பட்டனை அழுத்தி Installஐ தேர்ந்தெடுக்கலாம்.
  • இரண்டாவது வழி, Fonts ஃபோல்டர்களை திறந்து கொண்டு, Alt பட்டனை அழுத்துங்கள். மெனு தோன்றும். அதில் File Menuவில், 'New Font' வழியாக, இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஃபாண்டுகளை தேர்ந்தெடுங்கள்.
குறிப்பு - Fonts Folder எங்கிருக்கிறது எனத் தெரியாவிட்டால், Control Panelஐ தேர்வு செய்து, Appearance and Personalization என்பதை கிளிக் செய்து, பின்னர் Fonts ஃபோல்டரை கண்டு கொள்ளுங்கள்

Wednesday, June 1, 2011

ஜி-மெயில் டிப்ஸ்

இது வரை வாசிக்காத (unread messages) மெயில்களை மட்டும் இன்பாக்ஸில் கொண்டு வரவேண்டுமா?
ஜிமெயிலின் தலைப் பகுதயில் உள்ள Search Mail பெட்டியில் 
label:unread label:inbox
என்ற கட்டளையை அப்படியே டைப் செய்துவிட்டு என்டர் கீயை அழுத்தினால் போதும்.

Attachmentகளை மறக்காமல் இணைக்க ஞாபகப்படுத்தும் மென்பொருள்
இந்த லிங்கில் உள்ள GMail Attachment Reminder என்ற மென்பொருளை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் send பட்டனை அழுத்தியவுடனேயே, உங்கள் மெயிலில் attached என்ற வார்த்தை உள்ளதா எனத் தேடும். attached என்ற வார்த்தை இருந்தால் உடனே attachment இணைக்கப் பட்டு உள்ளதா என பரிசோதனை செய்யும். நீங்கள் இணைக்க மறந்திருந்தால், இணைக்கச் சொல்லி வற்புறுத்தி, இணைக்க வைக்கும். 

Chat வசதியை முடக்க முடியுமா?
ரொம்ப சிம்பிள். ஜிமெயில் இன்பாக்ஸின் வால் பகுதியில், அதாவது கடைசி வரி Turnoff Chat என்ற வரி இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும். மீண்டும் அதையே கிளிக் செய்தால், chat வசதி திரும்ப வந்துவிடும்.

நான் கேட்காமலேயே Buzz வசதி வந்துவிட்டது. இதை எப்படி முடக்குவது?
இன்பாக்ஸின் கடைசி வரிக்கு முந்திய வரிக்கு வாருங்கள். Turnoff Buzz என்பதை கிளிக் செய்யுங்கள். Buzz மறைந்து போகும்.

குறிப்பிட்ட சிலர் அனுப்பிய மெயிலை தேடும்போது, அவருடன் chat செய்ததும் சேர்ந்து வருகிறது. இதை தவிர்க்க முடியுமா?
Serach பெட்டியில் 
-label:Chat 
என்ற கட்டளையை கொடுங்கள் போதும்.
மீண்டும் தேவை என்றால்
+label:Chat
என்ற கட்டளையை கொடுங்கள்.

கம்ப்யூட்டர் உலகம் (ஏப்ரல்) இதழில் நான் எழுதியது

Tuesday, May 31, 2011

நள்ளிரவும், நல் இதயமும்!


நள்ளிரவு! சென்னைக் கோடையின் முதல் மழை, இடி-மின்னலுடன் ஆர்ப்பாட்டமாக துவங்கியது. பஸ்ஸிக்கும் ஆட்டோவுக்கும் காத்திருந்தவர்கள், ஒதுங்க இடம் தேடி நொடியில் மறைந்து போனார்கள். நான் மொபைல் போனை மட்டும் பத்திரப்படுத்திவிட்டு, மழையில் நனைய ஆரம்பித்தேன். 

”சார்.. ஏன் சார் நனையற.. கை குடு சார்”
பக்கத்தில் ஒரு லாரி நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். தெரு விளக்குகள் அணைந்திருந்ததால், கை நீட்டிய அந்தக் குரலின் முகம் தெரியவில்லை. இருந்தாலும் அந்தக் குரலில் இருந்த அக்கறை என்னை ஈர்த்தது. மழையில் நனையும் சுகத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, அந்தக் குரலின் கை பிடித்து லாரியின் பின்புறம் ஏறி அமர்ந்தேன். மெத்து மெத்தென்றிருந்தது. இலைகளைக் கசக்கியது போல, அழுத்தமான பச்சை வாசம்.

”இன்னா சார் பார்க்கற.. வைக்கோல் காஸ்ட்லி ஆயிடுச்சு சார். ஒரு கட்டு 15 ரூபா. அதான் இப்போ கரும்புத் தழைய போடறோம்.”
இப்போது கண் இருளுக்குப் பழகியிருந்தது. லாரி முழுவதும் பூந் தொட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. லாரி ஓடும்போது குலுங்கலில் அவை உடையாமலிருக்க (ஷாக் அஃப்ஸார்பர்) கரும்புத் தழை.
”ஒரு தொட்டி எவ்வளவு?”
”30 ரூபா சார். பண்ருட்டியில இருந்து கொண்டு வர்றோம். மாசம் ஒரு தடவை வருவோம்”
”உங்க கிட்ட வாங்கறவங்க எவ்வளவுக்கு விப்பாங்க?”
”அது தெரியாது சார்”
”ஆட்டோ...” பேச்சு சுவாரசியத்தில் ஒரு காலி ஆட்டோவை தவற விட்டேன்.
”ஆட்டோ வேணுமா சார்...இரு நான் புடிச்சி தர்றேன். அது வரைக்கும் இதுல உட்காரு. என ஒரு பூந்தொட்டியை கவிழ்த்து போட்டார்”
மழை வலுத்துக் கொண்டே இருந்தது. தொடர்ந்து 4 ஆட்டோக்கள் நிற்காமல் மழையில் வழுக்கிக் கொண்டே சென்றன.
”நீ எங்க சார் போணும்?”
”வளசரவாக்கம்”
”போரூர் போற வழியில இருக்கே.. அதுவா?”
”ஆமாம்..”, இப்போதும் அந்தக் குரலின் முகம் தெரியவில்லை.

”சார்.. கொஞ்சம் ஒதுங்கிக்கோங்க சார்”, புதிதாக இரு இளைஞர்கள் ஒரு அரை டிரவுசர் மட்டும் அணிந்து கொண்டு, வெற்று உடம்புடன் எங்கிருந்தோ முளைத்தார்கள்.
நான் ஒதுங்கிக் கொள்ள, மள மளவென்று பூந்தொட்டிகள் லாரியிலிருந்து சாலையோர நடைபாதைக்கு மாறின. சுமார் 15 நிமிடங்களில், மழையை பொருட்படுத்தாமல், ஆயிரம் பூந்தொட்டிகளை இறக்கி வைத்தார்கள்.

கோடை மழைக்கு இணையான, அவர்களின் வேகத்தை வியந்து கொண்டே இருந்தபோது, சார் நீ அப்படியே உட்காரு, என்றபடி அந்தக் குரல் லாரியிலிருந்து குதித்து, முன்புறம் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தது.

நான் சுதாரிப்பதற்குள், லாரி புறப்பட்டுவிட்டது. நள்ளிரவில் மழைச் சாரலில் நனைந்தபடி, முற்றிலும் எதிர்பாராத ஒரு லாரிப் பயணத்தை, மின்னல் படமெடுத்துக் கொண்டே வந்தது. வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஐந்தே நிமிடம். வடபழனி நூறு அடி ரோடு வந்துவிட்டது.

”சார்.. இங்க இறங்கிக்க சார்”
லாரியிலிருந்து குதித்து, பின்புறத்திலிருந்து சுற்றிக் கொண்டு வந்து,
”ரொம்ப தாங்ஸ்ப்பா...” என்றேன்.
”அட.. இதுக்கு இன்னாத்துக்கு சார் தாங்ஸ். ஏதோ என்னால ஆன உதவி. பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கற. நடு ராத்திரியில நீ மழையில நனையறது பொறுக்கல. அதான் உன்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டேன். ஆட்டோ... ஸாரை ஏத்திக்கோ. சார் அந்த ஆட்டோவில ஏறிக்கோ சார். வரட்டா”
லாரி என் பதிலுக்கு காத்திருக்கவில்லை. யு டர்ன் எடுத்து போய்க் கொண்டே இருந்தது.

”ஸார்.. வர்றீங்களா இல்லையா..”
ஆட்டோக்காரரின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். மழை இன்னும் விடவில்லை. நனைந்து கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.
”எங்க சார் இறங்கணும்?”
”இங்கேயே நிறுத்துப்பா..”

பணத்தை கொடுத்துவிட்டு, எந்த இடம் எனத் தெரியாமலேயே, ஆட்டோவில் இருந்து இறங்கி, மழையில் நனைய நனைய நடக்கலானேன்.
தலை முதல் பாதம் வரை சில்லென நனைந்துவிட்டேன். என் உடலை நனைத்தது மழையாக இருக்கலாம். ஆனால் என் இதயத்தை நனைத்தது, முகம் தெரியாத அந்த லாரிக்காரின் நேசம்.

Monday, May 30, 2011

நம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவனங்கள்!


37,00,80,000 ரூபாய் சுருட்டல்! 
சுருட்டியது யார்? 
செல்போன் சேவை தரும் நிறுவனங்கள். 
சுருட்டியது யாரிடமிருந்து? 
செல்போன் பயன்படுத்தும் நம்மிடமிருந்து.

நிஜமாகவா என்று அதிர்ச்சி அடைபவர்களுக்கு ஒரு கேள்வி. VAS என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. VAS என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் அவ்வப்போது பணம் திருடப்படுகிறது என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். 

Value Added Service என்பதின் சுருக்கமே VAS.
மாதம் இருபது ரூபாயில் இருந்து தினமும் இருபது ரூபாய் வரை பணம் கறக்கும் இந்த வசதிகளைப் பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

உங்களுக்கு ஃபோன் செய்யும்போது குறிப்பிட்ட பாடலை காலர் டியுனாக ஒலிக்க விடுவது, தூங்கி எழுந்தவுடன் ராசிபலன் சொல்வது, காதல் டிப்ஸ் கொடுப்பது, மருத்துவ ஆலோசனை சொல்வது, கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது, டிராபிக் ஜாம் என அலறுவது உட்பட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம்.

இப்படி பல சேவைகள் இருப்பதும், அதற்க்கென்று தனித்தனி கட்டணங்கள் இருப்பதும் தவறில்லை. ஆனால் இந்த சேவைகளை நீங்கள் கேட்காமலேயே, உங்கள் தலையில் கட்டி, உங்களிடம் சொல்லாமலேயே, பணத்தையும் எடுத்துக் கொள்வதில்தான் புத்திசாலித்தனமான சுருட்டல் துவங்குகிறது.

இராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்ற சின்ன கிராமத்திலிருந்து என் சித்தப்பா சென்னை வந்தார். வேட்டி மடிப்புக்குள் செல்போன் வைத்திருக்கும் அவரை மொபைலில் அழைத்தபோது, லேட்டஸ்ட் பாடல் காலர் டியுனாக ஒலித்தது. அவரிடம் எப்படி இந்தப் பாட்டை காலர் டியுனா வச்சீங்க என்றேன். அவ்வளவுதான் பொங்கிவிட்டார். 

அட நீ வேறப்பா..இந்த பச்சை பட்டனை அமுக்கினா பேசலாம். சிவப்பு பட்டனை அழுத்தினா கட் பண்ணலாம். இதுதான் எனக்குத் தெரியும். என்கிட்ட போய் இந்த பாட்டு எப்படி வந்ததுன்னு கேட்டா எனக்கு எபபடித் தெரியும்? நான் இந்தப் பாட்டையெல்லாம் கேக்கறதே இல்ல. ஆனா அப்பப்போ பாட்டு மாறிக்கிட்டே இருக்கு. திடீர் திடீர்னு 30 ரூபா போயிடுது. இத எப்படி தடுக்கறதுப்பா என்றார் பரிதாபமாக..


கடந்த வாரம் ஐதராபாத் செல்ல வேண்டியிருந்தது. புறப்படும் முன் எனது மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். 98ரூபாய்க்கு ஏதோ பாக்கேஜ் இருக்கிறது, ஒரு மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். நானும் பணத்தை கட்டிவிட்டு, எப்போது ஆக்டிவேட் ஆகும் என்றேன். ஈஸி ரீசார்ஜ் செய்தாச்சு சார். நீங்க உங்க போனில் என்னைக்கு செட்டப் செய்கிறீர்களோ, அன்றிலிருந்து ஒரு மாதம் வேலிடிட்டி என்றார்கள். காரில்தான் பயணம். உடன் வந்த நண்பர் டாட்டா கார்ட் இணைப்புடன் லேப்டாப் கொண்டு வந்திருந்ததால், நான் எனது ஃபோனில் இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று.

பயணமெல்லாம் முடிந்து திடீரென மொபைல் இன்டர்நெட்டுக்கு பணம் கட்டியது ஞாபகம் வந்தது. உடனே கஸ்டமர் கேர் ஆலோசனையின் படி இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்தேன். செய்தவுடனேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்னும் ஒரு நாள்தான் வேலிடிட்டி இருக்கிறது என்றது ஒரு குரல். உடனே இன்டர்நெட் ரீசார்ஜ் செய்த கடையை தொடர்பு கொண்டேன். கடைக்காரரோ கூலாக, ரீ சார்ஜ் செய்த அன்றிலிருந்து ஒரு மாதம் கணக்கு சார். வாங்கின அன்னைக்கே ஆக்டிவேட் செய்து பயன்படுத்தாதது உங்க தப்பு என்றார். சிறிய வாக்குவாதத்திற்குப் பின் கஸ்டமர் கேரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அரை நாள் முயற்சித்தால், ஒரே ஒரு முறைதான் கஸ்டமர் கேர் நபரை லைனில் பிடிக்க முடிகிறது. எனது 98 ரூபாய் போயே போச்.

குமார் என்கிற சேல்ஸ் மேனேஜர். ஊர் ஊராக பயணம் செய்பவர். ஊரிலிருந்தால் மோட்டர் பைக்கிலேயே சுற்றுபவர்.  இனி மிஸ்டு கால் பற்றி கவலைப் படவேண்டாம். மிஸ்டு கால் நம்பர்கள் எல்லாம் உங்களுக்கு எஸ்எம்எஸ்ஆக வரும் சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வந்ததாம். நாம் கேட்காமலேயே இந்த சேவை நமக்கு வந்தது எப்படி என்று குழம்பிய நண்பர், பேலன்ஸ் செய்திருக்கிறார். 30 ரூபாய் அபேஸ் ஆகியிருந்ததாம். எரிச்சலடைந்த குமார், திரும்பத் திரும்ப கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டாராம். பலன் ஏதுமில்லை. மாதம் 30 ரூபாய் அவருடைய மொபைலில் இருந்து கரைந்து கொண்டே இருக்கிறது.

2005ல் இருந்து இந்த புற வழி சுருட்டல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு சேவை 3 மாதத்துக்கு இலவசம் என்பார்கள். இலவசம் தானே என்று நீங்களும் 3 மாதமும் பயன்படுத்துவீர்கள். நான்காவது மாதம், உங்கள் அக்கவுண்டிலிருந்து அந்த சேவைக்காக பணம் உங்களைக் கேட்காமலேயே உருவப்பட்டுவிடும். இதை நீங்கள் கண்டுபிடித்து கேட்டால் உருவுதல் நிற்கும். இல்லையென்றால் துளித் துளியாக உங்கள் பணத்தை சுரண்டுவார்கள்.

செல்போன் சேவை நிறுவனங்களின் இது போன்ற அராஜகங்களை எல்லாம் கட்டுக்குள் வைக்கத்தான் TRAI (Telecom Regulatory Authority of India) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இலவசமாக ஒரு சேவையை சில காலம் வழங்கிவிட்டு, வாடிக்கையாளரின் சம்மதத்தை கேட்காமலேயே திடீரென பணம் வசூலிப்பது கூடாது என்று ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. ஆனால் செல்போன் சேவை கொள்ளையர்கள் அசரவில்லை. இந்த சேவை வேண்டாம். இதற்கு நான் பணம் கட்ட மாட்டேன் என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்பினால் பணம் பிடுங்கப்படமாட்டாது என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னார்கள். 

ஒரு பெரிய செல்போன் சேவை நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருந்த நண்பர் ஒருவர் (பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன்) கூறிய தகவல் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கேட்காமலேயே பணத்தை உருவிக் கொண்டு, ஒரு சேவையை திணிக்கிறோம். இதை கவனித்துவிட்டு, எனக்கு வேண்டாம் என்று எங்களை அணுகுபவர்கள் 200-300 பேர்களே. அவர்களிலும் 50-60 பேர்தான் எங்களுடைய எல்லா இழுத்தடிப்புக்கும் அசராமல், தங்கள் பணத்தை வாபஸ் பெறுகிறார்கள். மற்றவர்கள் அலுத்துப் போய் விட்டுவிடுகிறார்கள் என்றார். ஒரு இலட்சம் பேரிடம், அவர்களின் சம்மதம் இன்றி மாதம் 30 ரூபாய் உருவப்பட்டால் அதற்குப் பெயர் சேவையா? கொள்ளையா?

TRAI சர்வ வல்லமை பொருந்தியதாக கூறப்பட்டாலும், அவ்வப்போது சில அறிக்கைகளுடன் நின்றுவிடுகிறது. செல்போன் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக பணச் சுருட்டலை கண்டும் காணாதது போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் மேல் திணிக்கப்படும் இந்த சேவை தேவை இல்லை என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்ப வேண்டியதில்லை, என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் கில்லாடி கிரிமினல் செல்போன் நிறுவனங்கள், அதற்கும் ஒரு சால்ஜாப்பு கண்டுபிடித்தன. நாங்கள் வாடிக்கையாளருக்கு போன் செய்தோம். அவர் ஆமாம் என்றார். அதனால்தான் இந்த சேவையைத் தந்தோம் என்று புதுக்கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களோ, எங்களுக்கு எந்த போனும் வரவில்லை என்றார்கள். சிலரோ போன் வந்தது, நான் வேண்டாம் என்றேன். ஆனாலும் எனக்கு அந்த சேவை திணிக்கப்பட்டு பணம் உருவப்பட்டுவிட்டது என்றார்கள்.

வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதாக கூறிக் கொள்ளும் செல்போன் நிறுவனங்கள், அவற்றை பதிவு செய்து வைப்பது இல்லை.  வேண்டுமென்றே அவை இப்படிச் செயல்படுவதால்  இவற்றை சரி பார்க்கவும் வழியில்லை. எனவே TRAI மீண்டும் தன் கட்டுப்பாடுகளை இறுக்கியது. இனிமேல் ஏதாவது சேவையை ஒரு வாடிக்கையாளருக்கு தந்தால், SMS, Email அல்லது Fax வழியாக எழுத்து பூர்வமாக சம்மதம் பெற வேண்டும். சம்மதம் தரும்போது சேவை பற்றிய முழு விபரங்களையும், கட்டணம் உட்பட அனைத்தையும் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  SMS மற்றும் Email மூலமாக Acknowledgement பெற வேண்டும். எனறு புது விதிகளை உருவாக்கியது. ஆனால் செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த விதிகள் எதையும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. TRAIக்கு அஞ்சுவதாகத் தெரியவில்லை.

ஒரு காய்கறி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் மாதம் 4000 ரூபாய் சொற்ப வருமானத்திற்கு, காய்கறிகளை சுத்தம் செய்யும் வேலையில் உள்ள கவிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய மொபைல் போனிலிருந்து தினமும் 20 ரூபாய் போய்க் கொண்டே இருந்ததாம். நண்பர்கள் யாரோ விளையாடுகிறார்கள் என்று அசட்டையாக இருந்தவர், பாதிச் சம்பளம் வெட்டியாக கரைவதை உணர்ந்தவுடன், விஷயம் தெரிந்த பக்கத்துவீட்டுக் காரரிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அவர் விசாரித்து தெரிந்து கொண்டது என்ன தெரியுமா? கல்பனா GPRS வேண்டுமென்று கேட்டுக் கொண்டாராம். அதனால் தினமும் 20 ரூபாய் பிடித்துக் கொண்டார்களாம். GPRSனா என்ன என்று கேட்கும் அந்த பரிதாபப் பெண்ணை போல பணம் பறிகொடுப்பவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர்.

தினமும் பூ விற்று பிழைப்பு நடத்தும் ஜெயாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
அண்ணா கொஞ்சம் இத இன்னான்னு பாரேன். யாரோ ஒரு பொண்ணு போன் பண்ணுச்சு. இங்கிலீஷ்ல இன்னா பேசுச்சுன்னே புரியல. நான் கட் பண்ணிட்டேன். இப்போ இன்னாடான்னா, 30 ரூபாய் பூடுச்சு என்றாள். போனை வாங்கிப் பார்த்தால் அதில் ஒரு SMS வந்திருந்தது. அதாவது தினசரி மெடிக்கல் டிப்ஸ் தருவதற்க்காக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டுவிட்டதாம். ஆங்கிலம் தெரியாத ஒரு பெண்ணிடம், ஆங்கிலத்தில் பேசி பணத்தை உருவும் இந்த அராஜகத்துக்கு என்ன பெயர்?

மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும், இது போல பணத்தை பறிகொடுத்த சம்பவம் ஒன்றாவது இருக்கும். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாடலை உங்கள் காலர் டியூனாக்க விரும்பினால், ஸ்டார் பட்டனை அழுத்துங்கள், என்ற குரலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். நான் தான் ஸ்டார் பட்டனை அழுத்தவே இல்லையே. அப்புறம் எப்படி இந்தப் பாட்டு வந்துச்சு. எனக்கு 30 ரூபா போயிடுச்சே என்று புலம்புபம் இலட்சக் கணக்கானவர்களின் குரலை எங்காவது கேட்டிருக்கிறீர்களா? இது பற்றி எழுதப் போகிறேன் என்றவுடன் இது போல பல புலம்பல்களைக் கேட்டேன்.

TRAI இது குறித்தும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தது. ஸ்டார் பட்டனை அழுத்தியதாலேயே வாடிக்கையாளர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளரிடம் பேசி, அவரை SMS. Email அல்லது Fax வழியாக சம்மதம் பெற வேண்டும் என்று கூறியது. 2009ல் வெளிவந்த இந்த கட்டுப்பாட்டுக்கு எந்த செல்போன் சேவை நிறுவனமும் மதிப்பளிக்கவில்லை.

அதுவும் இந்த ஸ்டார் பட்டன் விவகாரம் வாடிக்கையாளருக்கே மிகத் தாமதமாகத்தான் தெரியவருகிறது. அவருக்கு ஃபோன் செய்யும் யாராவது, பாட்டு மாறியது பற்றி சொன்னால் மட்டுமே அவருக்குத் தெரியும். அதுவரையில் அவருக்கு பணம் பறிபோனதே தெரியாது. தெரியவரும்போது, அந்த சேவை ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்திருப்பதால், அந்த தொகையை திரும்பப் பெற்றதாக ஒரு உதாரணம் கூட கிடையாது.

வாடிக்கையாளர் புகார் தந்தால் ஒரு மாதத்துக்குள் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை நிறுவனத்தின் மேல் தவறு இருந்தால், அடுத்த இரண்டு மாதத்துக்குள் பிரச்சனையை தீர்க்க வேண்டும். TRAIயின் இந்த விதி முறைகளை மேலோட்டமாகப் பார்த்தால் சேவை நிறுவனங்கள் தப்ப முடியாது என்பது போலத் தோன்றும். ஆனால், அடுத்த வரியை படித்தால் உங்களுக்கு நம்பிக்கையே போய்விடும். அதாவது சேவை நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை குறித்த காலத்துக்குள் எடுக்கத் தவறினால், அவர்களுக்கு அபராதமோ, தண்டனையோ எதுவுமே கிடையாது, என்பது தான் அது. அதாவது TRAI என்பது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று செல்போன் சேவை நிறுவனங்களைப் பார்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறது. அதற்கு மேல் எதையும் செய்வதற்கு TRAIக்கு அதிகாரமில்லை.

மொபைல் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக போக்கால் எவ்வளவு பணம் சுருட்டப்படுகிறது என்பது பற்றி ஒரு சிறிய புள்ளி விபரம் பார்ப்போம். ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னால் உங்களிடம் அதற்க்கான அனுமதி பெற்ப்படுகிறதா? என்ற கேள்வியுடன், இந்தியா முழுவதும் மாநிலம் வாரியாக ஒரு புள்ளிவிபரக் கணக்கு எடுக்கப்பட்டது. அதன்படி 23.89% சதவிகித மக்களிடம், அவர்களின் அனுமதி இல்லாமலேயே சேவை(VAS) வழங்கப்பட்டு பணமும் சுரண்டப்படுகிறது. அதாவது 18504000 நபர்களிடம எந்த அனுமதியும் இன்றி குறைந்தது ஆளுக்கு 20 ரூபாய் உருவப்படுகிறது. கணக்கிட்டால் பகீர் என்றிருக்கும்.  18504000 x 20 = 37,00,80,000 ரூபாய்.

இந்த கூட்டுக் கொள்ளையில் Airtel, Aircel, Idea, Vodfone உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. இவர்களை தட்டிக் கேட்க வேண்டிய TRAI அமைப்பு, அவ்வப்போது சில சட்ட திட்டங்களை கூறிவிட்டு, வேடிக்கை பார்க்கிறது.

இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், கடந்த ஆண்டு (2010) TRAI அமைப்பால் 3285 புகார்கள் பெறப்பட்டு அவை சம்பந்தப்பட்ட செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக, பாராளுமன்றத்தில் திரு.சச்சின் பைலட்(Minister of State for Communications and Information Technology) கூறினார். 771 மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு TRAI என்ற அமைப்பு தெரியும். கரிசல்காட்டு விவசாயிக்கும், காய்கறியும், பூவும் விற்றுப் பிழைக்கும் சாதாரணர்களுக்கும் பணம் பறிபோனதே தெரியவில்லை.அவர்கள் TRAIக்கு இமெயில் அனுப்பி புகார் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தம். எனவே நமது அரசாங்கம் இந்த பணச் சுருட்டலை தடுக்க, கடுமையான சட்ட திட்டங்கள் வகுத்து, செல்போன் சேவை நிறுவனங்களை அடக்கி வைக்க வேண்டும்.

அது வரையில் வாடிக்கையாளர்களாகிய நாம்தான் விழிப்புடன் இருந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும். செல்போன் சேவை என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.
கம்ப்யூட்டர் உலகம் (மே ) இதழில் நான் எழுதிய கட்டுரை