Saturday, June 30, 2012

புகாருக்கு செவிசாய்த்த வளசரவாக்கம் மின்வாரியம்!

அது சரியில்ல, இது சரியில்லன்னு எழுதறது மட்டும் பத்தாது. அது சம்பந்தமா ஏதாவது புகார் கொடுத்தீங்களா?
இல்லை . . .
ஆழ்வார் திருநகர்வாசிகளாவது புகார் தந்தார்களா?
தெரியவில்லை . . .
இது சரியான அணுகுமுறை அல்ல! முதல்ல அவங்களை விசாரிங்க. அவங்க எழுத்து மூலம் புகார் தந்திருந்தா ஒரு காப்பி வாங்கிட்டு வாங்க. நாம அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.

இன்று காலை வளசரவாக்கம் மின்வாரியத்தின் அலட்சியம் என ஒரு புகார் பதிவு எழுதியிருந்தேன். அதை வாசித்துவிட்டு, ஃபேஸ்புக் வழியாக அறிமுகமான நண்பர் சி.எஸ்.ராம் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரும் நானும் தொலைபேசியதைத்தான் மேலே எழுதியிருக்கிறேன்.

விசாரித்ததில் யாரும் எழுத்து மூலம் புகார் தரவில்லை என்பது தெரிந்தது. உடனே நண்பர் ராம், மின்வாரிய எமர்ஜென்சி நம்பரை அழைத்து, என் பெயரில் அவரே ஒரு புகாரை பதிவு செய்தார். கார்ப்பரேஷன் அலுவலகத்திலும் ஒரு புகாரை பதிவு செய்தார். பின்னர் மேயர் அலுவலகத்திற்கும் புகாரை எடுத்துச் சென்றார்.

புகார் தரும் முன் - இன்று காலை வரை அலட்சியம்




புகார்கள் காலை 10.30 மணி அளவில் பதியப்பட்டன. மாலை ஒரு ஆழ்வார் திருநார் அன்பர் வீட்டுக்கு வந்துவிட்டார். விஷயம் தெரியுமா? வெளியிலயே கிடந்து ஷாக் பயம் தந்து கொண்டிருந்த கேபிளை இன்னைக்கு மத்தியானம் சரி பண்ணி, யாருக்கும் தொந்திரவில்லாமல் பூமிக்குள்ள புதைச்சுட்டாங்க என்றார்.


புகார் தந்த பின் - இன்று மாலை முதல் சீர்செய்யப்பட்டு


ஏரியாவாசிகள் தந்த புகாராலா? நண்பர் ராம் கொடுத்த அழுத்தத்தாலா எனத் தெரியாது. வேலை நடந்துவிட்டது. தாமதமாக நடந்தது என்றாலும், உருப்படியாக வேலை நடந்துவிட்டது. மகிழ்ச்சி!

அதிகாரிகளின் மேல் புகார் தந்தால் மட்டும் போதுமா? அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அதையும் பாராட்ட வேண்டுமல்லவா... !!!

அதனால் ஆழ்வார் திருநகர்வாசிகள் சார்பாக, வளசரவாக்கம் மின்வாரியத்துக்கு ஒரு சபாஷ்!

உபயோகமான தகவல் - உங்கள் கவனத்திற்கு!

  • மின்வாரியம் எமர்ஜென்சி ஃபோன் -  155333 (சென்னைக்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் அழைக்கலாம்)
  • கார்ப்பரேஷன் புகார் மையம் - 1913


Friday, June 29, 2012

வளசரவாக்கம் மின்வாரியத்தின் அலட்சியம்!


சென்னை ஆழ்வார் திருநகர் காந்தி ரோடில் அபாயகரமாக வெளியே துருத்திக் கொண்டிருக்கும் மின் கேபிளைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். 

பெரிய விபத்து நடக்கும் வரை அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

பிஸியான இந்தச் சாலையில் சில நாட்களுக்கு முன்பு ஏதோ பிரச்சனை என்பதால், பூமிக்கு அடியில் இருந்த கேபிளை தோண்டியிருக்கிறார்கள். பிரச்சனையை சரி செய்த பின் அரைகுறையாக அப்படியே விட்டுவிட்டார்களாம்.

அருகில் இருந்த கடைக்காரர்களும், பொதுமக்களும் பல முறை புகார் செய்தபின், அந்த இடத்திற்கு ஏ.இ வந்தாராம். அவரும் கேபிளை மூடச் சொல்வதற்கு பதிலாக, ஆள் இல்லை என்று காரணம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

இதைக் கேட்டதில் இருந்து அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கேபிள் இன்னமும் புதைக்கப்படாமல் இருக்கிறது. மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈரத்தில் பொதுமக்கள் யாருக்காவது ஷாக் அடித்து விபத்து ஏற்பட்டுவிட்டால்... அப்படி ஏதாவது நடந்தால் அதற்கு இந்த பொறுப்பற்ற அலட்சிய அதிகாரிகள் தான் காரணம்.

அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது அண்ணா மேம்பால பஸ்விபத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? டிரைவர் தரப்பு, பஸ் ஓட்டை, சீட் ஆடிக் கொண்டிருந்தது. அதனால் திருப்பத்தில் கழன்று கொண்டு, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்கிறது. ஆனால் அதிகாரிகள் தரப்போ, டிரைவர் வேகமாகச் சென்றார், பாலம் சரியில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறது.  நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு இல்லை. அதனால் இது சாதாரணமாகத் தோன்றுகிறது. அதே போலத்தான் இந்த மின் கேபிள் விஷயத்திலும். பொதுமக்களும் புலம்புவதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இது பற்றிய புகாரை எழுத்து மூலம் தருவதில்லை. எனவே அதிகாரிகள் எங்கள் கவனத்துக்கே வரவில்லை என்று தப்பிவிடுகிறார்கள்.

எனவே விரைந்து நடவடிக்ககை எடுக்கும்படி அதிகாரிகளை வலியுறுத்தவும், இது திடீரென்று புதிதாக முளைக்கப்போகிற பிரச்சனை அல்ல. ஏற்கனவே இந்த அபாயம் இருந்தது, வளசரவாக்கம் மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை, தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள்  என்று பதிவு செய்யவும் இதை எழுதுகிறேன்.

இந்தியாவில் பெட்ரோல் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் என்ன?

பெட்ரோல் விலை ரூ. 2.46 காசுகள் குறைந்திருக்கிறது.

இந்த வரியை படிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் பெட்ரோல் பங்க்கில் க்யூவில் நின்று வந்திருக்கலாம். அல்லது நண்பருக்கு ஃபோன் செய்து ஆட்டோகாரன் பெட்ரோல் விலையை காரணம் காட்டி 200 ரூபாய் கேட்டதைச் சொல்லி அங்கலாய்த்திருக்கலாம். அல்லது உங்கள் அக்காவோ அம்மாவோ பெட்ரோல் விலை ஏறினா ஏன் காய்கறி விலை ஏறணும் என்று காய்கறி வண்டிக்காரனிடம் மல்லு கட்டுவதை கவனித்திருக்கலாம்.

அதே போல இந்த வரியை வாசிக்கும்போது, அப்பாடி ஏதோ இரண்டு ரூபாயாவது இறக்கினானுங்களே, இதை அப்பவே செய்திருக்கலாம்ல. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு குறைச்சிட்டாங்களா, என ஆபீசிலும், கேன்டினிலும், பஸ்ஸிலும் பேசிக் கொண்டு வந்திருப்பீர்கள்.

சரி ஏன் இந்த ஏற்ற இறக்கங்கள்? மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஏன் ஏழு ரூபாய் விலை ஏறியது? விலை ஏற்றத்தை மறந்து அதற்குப் பழகிப் போயிருந்தபோது ஏன் விலை இறங்கியது?

பொதுவாக கச்சா எண்ணை விலை ஏறினால் உலகமெங்கும் பெட்ரோல் விலையும் எகிறிவிடும். ஆனால் இந்த முறை அப்படியில்லை. கச்சா எண்ணை ஒரு நயா பைசா கூட ஏறவில்லை. ஆனாலும் பெட்ரோல் விலை ராக்கெட் போல எகிறியது. காரணம் யூரோ கரன்ஸி. அதென்ன யூரோ கரன்ஸி. உலகப் போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் அதிகம் புழங்கும் கரன்சியாக அமெரிக்க டாலர் வந்துவிட்டது. எனவே உலகமே போண்டியானாலும் அமெரிக்கா சமாளித்துக் கொள்ளும் நிலை இன்றும் இருக்கிறது. இதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் பல ஒன்று சேர்ந்து ஐரோப்பிய யூனியன் ஒன்றை உருவாக்கின. இந்த நாடுகள் அனைத்துக்கும் பொதுவாக யூரோ மணி என்ற கரன்ஸியை உருவாக்கின. டாலருக்குப் போட்டியாக இதை உருவாக்கி தங்களுக்குள் கொடுக்கல் வாங்கலை எல்லாம் யூரோ கரன்சியாகவே செய்து வந்தார்கள். ஆனால் இதெல்லாம் ஓரளவுக்குத்தான். ஏற்கனவே ஏற்றுமதி இறக்குமதிக்காக கடன் வாங்கிய நாடுகள் பல, டாலர்களில்தான் வர்த்தகம் செய்து வந்தார்கள். அதனை உடனடியாக மாற்ற இயலவில்லை. இந்த யூரோ-டாலர் குழப்பத்தால் யூரோ மணியின் மதிப்பு தடாலடியாக கீழே விழுந்துவிட்டது. இதனால் ஐரோப்பிய யூனியனில் அங்கத்தினர்களாக இருந்த சில நாடுகள் திவாலாகிவிட்டன.

யூரோ மணி கீழே விழுந்ததும் பதற்றத்தில் டாலரின் மதிப்பு முன்பை விட எக்கச்சக்கமாக உயர்ந்தது. எனவே வேறு வழியில்லாமல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கீழே இறங்கிக் கொண்டே வந்தது. எனவே டாலருக்கு நிகராக 45 ரூபாயாக இருந்த இந்திய கரன்ஸி கிட்டத்தட்ட 60 ரூபாயாக இறங்குகிற நிலை வந்துவிட்டது. நாம் நம் நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணையை டாலர்களில்தான் இதுவரை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலும் அப்படித்தான் வாங்க முடியும். ஆனால் ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால் நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு குறைந்தபட்சம் 8 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

நம்நாட்டில் பெட்ரோல் விற்பனை பெரும்பாலும் தனியார் வசம்தான் உள்ளது. இந்த விலை உயர்வை தாங்க முடியாத அந்த நிறுவனங்கள் அடம்பிடித்து விலையை ஏற்றிவிட்டன.

காரணம் இந்த விலைக்கு கச்சா எண்ணையை தொடர்ந்து வாங்கினால் ஒரு நாளைக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன.

இதை எப்படிக் குறைப்பது என அரசும் அந்த நிறுவனங்களும் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில் நாம் பெட்ரோல் பங்கில் சண்டை பிடித்துக் கொண்டிருந்தோம்.

யூரோ கால்பந்து அரையிறுதியில் இத்தாலியும், ஜெர்மனியும் மோதிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் பெட்ரோலின் விலை இரண்டு ரூபாய்க்கும் மேல் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை குறைப்புக்கு காரணம் நமது ரூபாயின் எழுச்சிதான். ஒரேடியாக வீழ்ந்து வந்த இந்திய ரூபாய், தற்போது ஸ்டெடியாக இருக்கிறது. யூரோவின் மதிப்பு மேலும் சரியாதிருக்க மன்மோகன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிலர், சில ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் கொடுத்ததை ஞாபகத்தில் கொள்ளுங்கள். இது போன்ற நடவடிக்கைகளால் யூரோ ஸ்டெடி ஆனதும், ரூபாயும் டாலருக்கு எதிரான தள்ளாட்டத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே பெட்ரோலின் விலையும் நம்மைப் பொறுத்தவரை குறைந்துவிட்டது.

இம்முறை டாலரின் மதிப்பு உயர்ந்தும் ஐடி நிறுவனங்களின் மதிப்பு உயரவில்லை.
ஓ.. பெட்ரோல் கிடைக்காததற்கு இதுதான் காரணமா என்று ஆச்சரியப்படுகிற அதே நேரத்தில் இந்த செய்தி எங்களுக்கு எதற்கு என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும். பெட்ரோலுக்கும் ஐடிக்கும் தொடர்பு இருக்கிறது. இது போல டாலர் விலை உயர்ந்து ரூபாயின் மதிப்பு சரியூம்போதெல்லாம் பங்கு மார்கெட்டில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் உயரும். ஐடி நிறுவனங்களின் பங்கை வாங்க ஒரு போட்டியே நடக்கும். காரணம் பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க டாலரில்தான் பெரும்பாலும் சம்பாதிக்கின்றன. எனவே டாலரின் மதிப்பு உயரும்போது ஐடி நிறுவனங்களின் சொத்து மதிப்பும் உயருகின்றன. எனவே ஐடி நிறுவனங்களின் பங்கை வாங்கி விற்க பெரும்போட்டி நடக்கும்.

ஆனால் இந்த முறை அந்த மாதிரி பரபரப்பு எதுவும் இருக்கவில்லை. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 8 ரூபாய் வரை வீழந்தாலும் ஐடி நிறுவனங்களுக்கான மவுசு கூடவில்லை. காரணம் . . . . ரொம்ப சிம்பிள். நம் நாட்டின் ஐடி நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவை மட்டும் நம்பி இல்லை. அமெரிக்கா தவிர நிறைய உள்நாட்டு புராஜக்டுகளை நம்பி இயங்குகின்றன. அதனால் டாலரின் ஏற்றம் ஐடி நிறுவனப் பங்குகளை வாங்கி விற்கும் பங்கு தரகர்களுக்கு அதிக உற்சாகம் தரவில்லை.


Wednesday, June 27, 2012

அண்ணா மேம்பால விபத்துக்கு காரணம் கவனக் குறைவான ஓட்டுனரா? சரியாக பராமரிக்காத நிர்வாகமா?

தடம் எண்.17M!  பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் வழக்கம்போல மதியக் கூட்டம். படிக்கட்டில் சில பயணிகள் தொங்கிக் கொண்டிருக்க, அண்ணா மேம்பாலத்தைக் கடந்து இறங்கிக் கொண்டிருக்கும்போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். 
சில வினாடிகள்தான். பக்கச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து தலை கீழாக விழுந்துவிட்டது. படுகாயம் அடைந்த 30 பயணிகள் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

இது தற்போது கிடைத்திருக்கும் முதல் தகவல். தகவல்களை விட யூகங்களும், வதந்திகளும் எக்கச்சக்கமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மிக முக்கியமானது. ஓட்டுனர் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதே அது. இந்த விபத்தில் இது உண்மையோ பொய்யோ, பல பேருந்து ஓட்டுனர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

காதில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு மோட்டர் பைக், ஆட்டோ, கார், பஸ் ஓட்டுவது சென்னையில் சர்வசாதாரணம். தனக்கு ஒன்றும் ஆகாத வரையில், இதை ஒரு கவனக் குறைவாகவே எவரும் கருதுவது இல்லை. பெண்களே அக்கறையின்றி இப்படிச் செல்வதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

நேற்று அமைச்சர் செல்லூர் ராஜி அவர்களின் மகன் இதே போல் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வேகத் தடையில் மோதி தூக்கி எறியப்பட்டு இறந்ததாக கூறப்பட்டாலும், அவர் செல்ஃபோன் பேசிக் கொண்டே மோட்டர் பைக் ஓட்டியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். போக்குவரத்து துறையில் பல வருடங்களாக மெக்கானிக் பிரிவில் பணிபுரிந்து வரும் (பெயர் வெளியிட விரும்பாத) நண்பர் ஒருவர் குறிப்பிட்டதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சம்பளம் தரமுடியாது என்ற காரணம் காட்டி  மெக்கானிக் பிரிவில் பணியிடங்களை நிரப்புவதே இல்லையாம். இதனால் மெக்கானிக்குகளுக்கு பஞ்சம். அதே போல, உதிரி பாகங்களுக்கு என்று சரியான பட்ஜெட்டையும் ஒதுக்குவது கிடையாதாம். இருப்பதை வைத்துக் கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்பது அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவாம். அவருடைய கூற்றுப்படி, சரியாக பராமரிக்கப்படாமல் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார். எனவே ஓட்டுனர் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இது போல விபத்துகள் எந்த நேரமும் நடக்கலாம் என்ற பகீர் தகவலைக் கூறினார்.

இனியும் சென்னை போக்குவரத்து துறையும், போக்குவரத்து காவல்துறையும் தூங்கி வழியக் கூடாது. மக்களின் உயிரைப் பற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது. போக்குவரத்துத் துறை உடனடியாக அனைத்து பேருந்துகளின் இயங்கும் நிலையை பரிசோதிக்க வேண்டும்.

அதே போல போக்குவரத்து காவல் துறை மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், மொபைல் ஃபோன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் விஐபி அது இது என தயவு தாட்சண்யமே பார்க்கக் கூடாது.

Cut !


Cut . . .

முதல் வார்த்தையே கட்டா என்று யோசிப்பவர்களுக்கு, பவர்கட்டின் இம்சைகளைப் பற்றி 30 வார்த்தைகளில் கட்டுரை எழுதி அனுப்பலாம் என்றிருக்கிறேன். அதற்கு மேல் ஒரு வார்த்தை இருந்தாலும் கட் செய்துவிடலாம். ஏனென்றால் ஒரு இரவுக்கு ஒரு வார்த்தைதான் எழுத முடியும் போலிருக்கிறது. அதற்கு மேல் பவர்கட் அனுமதிப்பதில்லை. இந்தக் கட்டுரையை எழுத 5 இரவுகள் தொடர் முயற்சி எடுத்து, ஒவ்வொரு முறையும் பவர்கட்டால், தூக்கத்தையும் இந்தக் கட்டுரையையும் இழந்தேன். தற்போது ஒரு பகல் பொழுதில் (எடிட்டரின் 30 வார்த்தைகளுக்கு மிகாத செல்ஃபோன், ஃபேஸ்புக் நினைவூட்டல்களுக்குப் பின்) எப்படியோ எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்வது கூட தவறு. எதையோ டைப் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த வரி அல்லது அடுத்த வார்த்தை என்னவாக என்ற யூகம் கூட இல்லாத நிலையில் விரல்கள் எதையோ டைப் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மேட்டரை அனுப்பி விட வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே உள்ளது. நேரத்துக்கு மேட்டரை அனுப்ப முடியாமல் அநியாய தாமதமாகிவிட்டதால் என்மனதுக்குள் ஒரு பிம்பமாக உருவெடுத்திருப்பது எது தெரியுமா? தவறவிட்ட ரயில்.

தவறவிட்ட ரயில் போல
தூக்கம் பின் செல்கிறது.

செல்கிறது என்று முடித்த இந்த சந்தர்ப்பத்தில் ஏரிக்கா ஜாங் எழுதிய இந்தக் கவிதை வரிகள் எப்படி என் ஞாபகத்தில் வந்தன என்று  தெரியவில்லை. ஆனால் சுஜாதா ஞாபகத்தின் மேல் பரப்பில் நீச்சல் அடிக்கிறார். ஏனென்றால் என்னைப் போன்றவர்களுக்கு ஆனந்த விகடன் துணுக்குகளை மீறி ஏரிக்கா ஜாங்கையெல்லாம் அறிமுப்படுத்தியவர் அவரே.

அவரே சொல்லிட்டார் என்றால் விட்டுவிட முடியுமா என்றார் அந்த தேனாம்பேட்டை போலீஸ்காரர். கிளையண்ட் மீட்டிங் முடிந்து அவசரமாக பைக்கை கிளப்பும்போது, மெட்ரோ ரயிலுக்காக தேனாம்பேட்டையில் சில பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாறியிருப்பதை நண்பர் கவனிக்கவில்லை. பின் சீட்டில் அமர்ந்திருந்த என் அவசரப்படுத்தலால் லபக் என்று அவரே போலீஸ்காரரின் எதிரில் போய் நின்றுவிட்டார். ஏன் சார் இது ஒன்வேன்னு தெரியாதா என போலீஸ்காரர் லைட்டாக கடுமை காட்ட, நண்பர் அவருக்குத் தெரிந்த ஹி..ஹி.. மற்றும் ஹா..ஹாக்களை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தார். சரியாக அதே நேரத்தில் மற்றொரு போலீஸ்காரரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு போனி டெயில் இளைஞன் ஏதோ ஒரு அரசியல் பிரபலத்தின் பெயரைச் சொல்லி, சார் அவரே சொல்லிட்டார். அப்பவும் விடமாட்டேன்னா என்ன அர்த்தம் என்று வம்பிழுத்துக் கொண்டிருக்க.. எங்களை மடக்கிய போலீஸ்காரரும், நீங்க போங்க சார் என்று எங்களை அனுப்பிவிட்டு, யார் அவன் ரொம்ப துள்ளுறான் அந்த போனி டெயில் இளைஞனை நோக்கிப் போய்விட்டார்.

போய்விட்டார் என்றுதான் நினைத்தேன். டேய் நான் இன்னும் போகல, நீதான் காமிரா மேன். நீ இல்லாம நான் கொடைக்கானல் போக முடியாது மரியாதையா புறப்பட்டு கோயம்பேடு வா, ஏதாவது பஸ் பிடிச்சுக்கலாம் என்றார் நண்பர். முதன் முதலில் இக்கட்டுரையை எழுதால் ஒத்திப் போட்டது அப்போதுதான். ஒரு மணி நேரம் கொடுத்தால் எழுதிவிட்டு வந்துவிடுவேன், என்றேன். சரி வெயிட் பண்றேன் என்றார். ஆனால் மின்சார வாரியம் வெயிட் பண்ணவில்லை. படக் கென்று பவரை பிடுங்கிவிட்டது.

அனாவசிய ஒரு மணி நேர காத்திருப்பு மற்றும் நண்பரின் அவசரப்படுத்தலுக்குப் பின், கொடைக்கானல் போய் எழுதிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு இருட்டிலேயே உடை மாற்றி, எதையோ சாப்பிட்டு ஆட்டோ பிடித்தபோதுதான் உணர்ந்தேன். பர்ஸ் எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டுக்கு திரும்பவும் நேரமில்லை. ஆட்டோ கோயம்பேடை நெருங்கியிருந்தது. நண்பரை போனில் அழைத்து ஆட்டோவுக்கு செட்டில் செய்யச் சொல்லிவிட்டு, பணமில்லையே என்ன பண்ணலாம் என்றேன். நீ கவலைப்படாதே என்னிடம் பணம் இருக்கிறது என்றார். ஏதோ ஒரு வால்வோ ஏசியைப் பிடித்து உள்ளே அமர்ந்து, மதுரை போய், திண்டுக்கல் போய் கொடைக்கானலை அடைந்து ஹோட்டலில் ரூம் போடச் சென்றபோது நண்பர் பர்ஸை துளாவ ஆரம்பித்தார். என்னடா என்றேன். ஒண்ணுமில்ல என்றார். ஒண்ணுமில்லன்னா ஏன் டென்ஷன் ஆகிற என்றேன். ஒண்ணுமில்லன்னா என் பர்ஸ்லயும் ஒண்ணுமில்ல. உன்னைப் போலவே நானும் ஏடிஎம் கார்டை வீட்டுலயே மறந்துட்டேன்.

மறந்துட்டேன் என்று இந்த வார்த்தையைச் சொன்னதும், சுவாரசியம் கருதி சீரியல்களில் விளம்பர இடைவேளை அல்லது அடுத்த வாரம் கார்டு வரும். அதே பாணியில் நாங்களும் காசு இல்லாமல் கொடைக்கானலில் எப்படிச் சமாளித்தோம் என்பதை அடுத்த முறை சொல்கிறேன். இப்போதைக்கு கட்.

(கட் குறிப்பு - இந்தக் கட்டுரையில் முந்தைய பாராக்களின் கடைசி வார்த்தை எதுவோ அதுவே அடுத்தடுத்த பாராக்களின் முதல் வார்த்தை! ஹி..ஹி..ஹி... இதை செக் பண்ணுவதற்காகவாவது இந்தக் கட்டுரையை நீங்கள் மீண்டும் புரட்டத்தான் வேண்டும் என்ற புளங்காகிதத்துடன் Cut. . . !)

Tuesday, June 26, 2012

அங்கும் இங்கும் - 01 : திடீர் நகரில் திடீர் தமிழ் டெஸ்ட்!


திடீர் நகரில் திடீர் தமிழ்தாய் வாழ்த்து டெஸ்ட்!
இன்று காலையில் சைதாப்பேட்டை திடீர் நகரில் ஒரு பள்ளிக்கூட விழா. நமது சென்னை மேயர் சைதையார்தான் சிறப்பு விருந்தினர். விழா நிறைவடையும்போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் யாராவது ஐந்து பேர் மேடைக்கு வந்து தமிழ்தாய் வாழ்த்து பாடுங்கள் என்றார். மாணவ தயக்கங்கள், ஆசிரியர் வடிகட்டல்களுக்குப் பின் ஒரு சிறுமி மேடை ஏறினாள். எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெறும் என்று தயங்கி, இழுத்து, மூச்சு வாங்கி வாழ்த்துதுமே.. என்று முடித்தாள். தொடர்ந்து கைதட்டல்கள். உடனே மேயர் தனது பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார். கொடுக்கும்போதே அந்த மாணவி பாடும்போது எத்தனை பிழை செய்தாள் என்று தெரியுமா எனக் கேட்டார். நான்கைந்து என்றார் ஆசிரியை. ம்ம்ம்ம்... இதுதான் நடக்கக் கூடாது என்கிறேன். தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் எந்தப் பிழையும் இன்றி மாணவர்களுக்கு பாடத் தெரிய வேண்டும். இதை கவனத்துல வைச்சுக்கோங்க. இந்த 500 ரூபாயை ஆளுக்கு 100 ரூபாயா அந்த மாணவர்களுக்கு கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு, தேசிய கீதத்துக்கு அட்டென்ஷனில் நிற்க ஆரம்பித்துவிட்டார்.

நான் காமிரா மேன் அவதாரம் எடுத்திருந்ததால், மேயரை விழுங்கிக் கொண்டு காமிரா ஓடிக் கொண்டிருக்கும்போதே நினைவுகளை ரீவர்ஸ் கியர் போட்டு 6 மாதத்திற்கு முந்திய குற்றாலம் இசக்கி ரிசாட்ஸ்சுக்கு ஓட விட்டேன். பசுமை விடியல் என்ற நான் சம்பந்தப்பட்ட மரம்நடு விழா. சிறப்பு விருந்தினராக அம்பா சமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா. அவரும் நானும் பள்ளி படித்த நாட்களில் இருந்து நண்பர் என்பதால் நட்பின் அடிப்படையில் விழாவுக்கு சம்மதித்திருந்தார். தேசிய கீதத்திற்குப் பின் விழா நிறைவடையும்போது, மேயரைப் போலவே உச்சரிப்பு பிழைகளை சுட்டிக்காட்டி, தேசிய கீதத்தை ஒழுங்கா பாடணும் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

அம்மா பாசறையில் தமிழ்தாய் வாழ்த்து பாடச் சொல்லி எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி, மேயர் உட்பட அனைவரையும் டெஸ்ட் பண்ணுவார்களோ. இருவரும் ஒரே மாதிரி நடந்து கொண்டதைப் பார்த்ததால் இப்படி எண்ணத் தோன்றுகிறது.

ஓகே... ஃபிளாஷ்பேக் முடிந்து இப்போது உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என் காமிரா. எங்கே பிழையின்றி பாடுங்கள் பார்க்கலாம்!
நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில் . . .

சகுனியும் - பாபாவும்
சென்னை ஆழ்வார்திருநகரிலிருந்து ராமாவரம் செல்லும் வழியில் நடிகர் திரு. சிவகுமார் அவர்களுக்கு சொந்தமான ஒரு நிலம் உள்ளது. நிலத்தைச்சுற்றி உள்ள காம்பவுண்டு சுவரில் சூர்யா-கார்த்தியை வாழ்த்தி, பிறந்தநாள் மற்றும் வெற்றி பெற வாழ்த்துகள் சுவரொட்டிகள் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கும். தற்போது சகுனி வெற்றி பெற கார்த்தி போர்படை தளபதிகள் சுவற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, இந்த நிலத்தை தலைவர் கட்சியினர் அபகரிக்க முயன்றதாகவும், பின்னர் ஆட்சி மாறி தலைவி கட்சியினர் மீட்டுத் தந்ததாகவும் அவ்வளவாக பிரபலமாகாத வதந்தி ஒன்று நிலவியது. நிலம் பிரச்சனையில் சிக்கி இருந்த காலத்தில், திரு.சிவகுமார் மற்றும் அவருடைய உற்ற கோவை நகர நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்து இரண்டே நாட்களில் (மிரட்டல்கள் காரணமாக) கலைக்கப்பட்டதாகவும் வதந்தி போன்ற ஒரு செய்தி உலவியது. நான் மறந்து போயிருந்த அந்த வதந்திகளை நேற்றிரவு பார்த்த சகுனி படம் ஞாபகப்படுத்திவிட்டது. இந்த வரியிலேயே சொல்லிவிடுகிறேன் படம் குப்பை. கார்த்தியின் குடும்ப சொத்தாக இருக்கும் ஒரு வீட்டை, மாநில முதல்வர், பாலம் கட்டுவதாகச் சொல்லி அபகரித்துவிடுகிறார். அவரை சகுனி வேலை பார்த்து கார்த்தி எப்படி வெல்கிறார் என்பதே இந்த குப்பையின் கதை. சிவகுமார் குடும்பத்தினரின் சொந்தப் படம் இது. ஒரு வேளை சொந்த அனுபவம் அரசியல் படமாகிவிட்டதோ... டவுட்டு.

டவுட்டே இல்லாமல் சொல்வதென்றால் ரஜினியின் பாபா படத்திலும் இதே போல ஒரு காட்சி வரும். அவருடைய வீட்டை ஒரு தலைவர் அபகரிப்பார். அதுவரை மனிஷா கொய்ரலாவின் பின்னால் தெரியும் ரஜனி, உடனே சொடக்குப்போட்டு, கவுண்டவுன் சொல்லி வில்லனுடன் மோத ஆரம்பித்துவிடுவார். பாட்ஷா காலத்தில் ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை தலைவி கட்சியினர் அபகரிக்க முயன்றபோது ஏற்பட்ட கசப்பையே ரஜினி காட்சிகளாக்கினார் என்பது பழைய தகவல்.

சகுனி வேறு, பாபா வேறு என்றாலும், இரண்டுக்கும் அடிப்படை காரணம் தனிப்பட்ட அரசியல் கசப்போ?

சூட்டைக் கிளப்பும் அதிபர் தேர்தல்கள்
நமது அடுத்த ஜனாதிபதி பிரணாப்தான் என்பதில், அவரது போட்டியாளர் சங்மா உட்பட எவருக்கும் சந்தேகமில்லை. திரு.அப்துல்கலாம் அவர்களை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஆதரிக்காத நிலையில், பி.ஜே.பி தனது சார்பாக யாரை நிறுத்துவது என குழம்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சுயேச்சையாக பி.ஜே.பியின் துணையுடன் நின்று தேர்தலை எதிர்கொள்ள முயற்சித்ததாக சில செய்திகள் கசிந்திருக்கின்றன. இதற்கு அத்வானி, ஜெயலலிதா மற்றும் பிஜிபட்நாயக்கும் கூட ஒப்புக் கொண்டதாகத் தகவல். அரசியல் தலைவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், நாடெங்கிலும் இளைஞர்களின் ஆதரவு அவருக்கு இருந்ததால், அவர்களை திரட்டி, அவர்களின் துணையுடன், அண்ணா ஹசாரே பாணியில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் வீட்டு வாசலில் கலாமுக்கு ஆதரவான கூட்டங்கள் நடத்தி, மீடியாக்கள் துணையுடன் ஒரு பரபரப்பை உண்டு பண்ணலாம். அது தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பை தராவிட்டாலும், நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும் என அவரது ஆலோசகர்கள் கூறினார்களாம். ஆனால் தனது ஆசிரியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை ஆலோசித்தபின், இந்த எண்ணத்தைக் கைவிட்டாராம்.

எகிப்தில் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது. தாஹீர் சதுக்கத்தில் மக்கள் முழக்கமிட முகமது மோர்ஸி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சர்வாதிகாரியாக எகிப்தை தனது விரல் நுனியில் வைத்திருந்த முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின், முகமது மோர்ஸி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எகிப்திய அதிபராக பதவி ஏற்கிறார். கிட்டத்தட்ட 80 நீண்ட வருடங்கள். முபாராக் வீழ்ந்த பின்னும், அவருக்கு கட்டுப்பட்டிருந்த எகிப்திய ராணுவம், நீதி மன்றம் மட்டும் அரசியல் சட்டங்கள் அவ்வளவு எளிதாக மோர்ஸியை பதிவி ஏற்கவிடவில்லை. ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை செய்து, அவர் கட்சியினர் வென்ற தொகுதிகளை செல்லாது என்று அறிவித்தது முபாரக்கின் நிழல் படிந்த அதிகாரம். ஆனால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவிட்டதால், உலகம் முழுக்க உற்றுப்பார்க்கத் துவங்கியதும், சர்வாதிகாரம் நிறைய தயக்கங்கள் மற்றும் கோபத்துடன் தனது பிடியை தளர்த்திக் கொண்டிருக்கிறது. எகிப்திய அரசு சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சிக்கு மாறப்போகிறது. அது அவ்வளவு எளிதல்ல. அதற்கான சட்டங்களை இயற்றி அதை கடைபிடிப்பதுதான் மோர்ஸிக்கு முன்னிருக்கும் சவால். அந்த சவாலில் அவர் வெல்லுவதற்கு, இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமகனாக இருந்து என் வாழ்த்துகள்!


கடைசி பாரா - கடைசி கேள்வி
இந்தியாவில் ஆள் துளையில் சிக்கி இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் . . .
1. பெற்றோர்களின் கவனமின்மை
2. நிர்வாகத்தின் பொறுப்பின்மை
இந்த இரண்டில் உங்கள் கருத்து எது?

செல்வா ஸ்பீக்கிங் - (சிநேகா, சூகர்பெர்க் திருமணம்)

சஸ்பென்ஸ் திருமண இன்விடேஷன்
‘என் மகனுடைய கல்யாணத்துக்கு கூப்பிட்டிருந்தேனே... ஏன் வரல?‘ என்றார் நண்பர்.  என் ஞாபகங்களைத் தோண்டியபடி எப்போ? என்றேன். தெரியாத மாதிரி கேட்கறதுல நீங்க ஒரு கிங் என்றார். நிஜமாவே தெரியல. எப்போ கூப்பிட்டீங்க என்றேன். ஒரு வாரத்துக்கு முன்னால் என்றார். எனக்கு ஒரு மணி நேரம் முன்னாடி சொன்னாலே, மறதி ஓவர் டேக் செய்துவிடும். ஒரு வாரம் என்றால், எப்படி ஞாபகமிருக்கும். அதனால் சமாளித்து, மன்னிக்கணும் வேலை பிஸியில் நீங்கள் இன்விடேஷன் கொடுத்ததையே மறந்துவிட்டேன் என்று ஹிஹிஹிளித்தேன். 

அதற்குப் பின் தான் சூப்பர் கிளைமாக்ஸ். அது என்ன என்பது சஸ்பென்ஸ். சஸ்பென்சை நான் எப்போ சொல்லுவேன், எப்படிச் சொல்வேன் என்பது எனக்கே தெரியாது.

சிநேகா - பிரசன்னா திருமணம்
மீண்டும் இன்னொரு திருணமத்தைப் பற்றி பேசப் போகிறோம். சிநேகா - பிரசன்னா நட்சத்திரத் திருமணம். இந்த திருமணத்திற்கும் நான் செல்லவில்லை. என்னைப் பார்த்து, ஏன் எங்கள் திருமணத்திற்கு வரவில்லை என்று சிநேகாவும் கேட்கவில்லை, பிரசன்னாவும் கேட்கவில்லை. காரணம் அவர்களுக்கு என்னைத் தெரியாது. ஆனாலும் அவர்களுடைய திருமணத்தை நான் வேடிக்கை பார்த்தேன். உபயம் விஜய் டிவி.  ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, தங்கள் திருமணத்தை கவர் செய்து ஒளிபரப்பும் உரிமையை சிநேகா-பிரசன்னா தம்பதியர் விஜய் டிவிக்கு அளித்ததாகக் கேள்விப்பட்டேன். மேற்கத்திய நாடுகளில் இந்தக் கலாச்சாரம் உண்டு. தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை, கமர்ஷியலாக்கும் இந்தக் கலாச்சாரம், நமது தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. பணம் சம்பந்தப்பட்டுவிட்டது என்பதாலோ என்னவோ, சில வெட்கங்களும்-புன்னகைகளும் காமிராவுக்கான ஒத்திகையாகவே எனக்குப்பட்டது. சிநேகா-பிரசன்னா தம்பதியினர் தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்க்கை நடத்தினால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை, அதற்கு காது குத்துவதையும் விஜய் டிவியின் காமிரா துரத்தும். ஒரு வேளை அவர்கள் அதற்குள் மார்கெட் இழந்தால், விஜய் டிவி அதற்குப் பதிலாக நீயா நானா நடத்தப் போய்விடும். அந்த ஏற்றத் தாழ்வுகளை எதிர்பார்த்து சமாளிக்கும் மனத் தின்மையுடனும், சந்தோஷத்துடனும் வாழ சிநேகா-பிரசன்னா தம்பதியினரை மனமார வாழ்த்துகிறேன்.

உறைந்த சாக்லேட்
நான் ஒரு சாக்லேட் பிரியன். அதனால் என்னை சந்திக்கிற நண்பர்கள் பலரும் எனக்கு சாக்லேட் பரிசளிப்பார்கள். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த நண்பர் ஒருவர் எனக்கு ஒரு சாக்லேட் பரிசளித்தார். சாக்லேட்டை கொடுக்கும்போதே, உடனே பிரிட்ஜ்ல வைச்சுடுங்க. உங்க ஊர் வெயில்ல இளகிடுச்கு என்றார். அவர் கொடுக்கும்போது கிட்டத்தட்ட ஒரு ஜீஸ் பாக்கெட் போல ஆகிவிட்டது. அதனை பிரிட்ஜிக்குள் வைத்துவிட்டு கிட்டத்தட்ட இரு வாரங்களாக மறந்தே போனேன். இந்த வரியை எழுதும்போது, தாகத்திற்கு பிரிட்ஜைத் திறந்தால், அந்த சாக்லேட் பாக்கெட் கண்ணில் சிக்கியது. எடுத்துப் பார்த்தால் எல்லா சாக்லேட்டுகளும் ஒன்றாகி உறைந்து ஒரு இனிப்பான ஐஸ் கட்டி போல ஆகிவிட்டது. கத்தியை வைத்து முயற்சித்தும் அதனை பிளக்க முடியவில்லை என்பதால், அதனை பென்சில் சீவுவது போல சீவிச் சீவி சுருள் சுருளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். உலகிலேயே இது போல சாக்லேட் சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். சரி எதற்காக இந்தத் தகவல் என்று கேட்கிறீர்களா? இனிப்பான சங்கதி ஏதாவது சொல்ல வேண்டும் எனத் தோன்றியதால் இதைச் சொல்கிறேன்.

ஏர்போர்ட் டியூட்டி ஃப்ரி கடைகளில் மலிவு விலை சாக்லேட் வாங்கும் பலரும் சீன சாக்லேட்டுகளை வாங்கிவருவார்கள். பார்ப்பதற்கு மொளுக் மொளுக் என்று போஷாக்காக இருக்கும். இப்படி குண்டாக காட்சியளிப்பதற்காகவே, இந்த சாக்லேட்டுகளில் melamine என்றொரு சமாச்சாரத்தை கலப்பார்களாம். குறிப்பாக குழந்தைகளின் உடல் நலத்திற்கு இது தீங்கானதாம். அதனால் இந்த மலிவு விலை சீன சாக்லேட்டுகளை தவிர்த்துவிட வேண்டும். இனிப்பான தகவல், உபயோகமான தகவலாகவும் இருக்க வேண்டுமில்லையா... அதற்குத்தான் இந்த சீன சாக்லேட் சப்ளிமெண்ட்.

ஃபுட்கோர்ட்டில் நுழையும் முன் . . .
முதன் முதலில் துபாய் போய் இறங்கியபோது, நான் சந்திக்கவிருந்த நபர், ஃபுட் கோர்டுக்கு வந்துடுங்க என்றார். எனக்குத் பரிச்சயமான ஒரே கோர்ட் சைதாப்பேட்டை கோர்ட்தான். அதனால் அவர் சாப்பாடு சம்பந்தமாக ஏதோ கோர்டுக்கு அழைக்கிறாராக்கும் என்று நினைத்துவிட்டேன். உள்ளே நுழைந்ததும் ஒன்றும் புரியவில்லை. வரிசையாக பர்மா பஜார் கடைகள் போல, சாப்பாட்டுக் கடைகள், அவற்றின் எதிரில் எக்கச்சக்க டைனிங் டேபிள்கள். உள்ளே நுழையலாமா? உட்காரலாமா? உட்கார்ந்தாலே துட்டு கேட்பார்களா என்று ஒரே குழப்பம். எனவே ஃபுட்கோர்ட் உள்ளே நுழையாமல் கலவையான இறைச்சி வாடையை சங்கடமாக நுகரந்தபடி சும்மா நடந்து கொண்டிருந்தேன். நண்பர் வந்தவுடன்தான், எந்தக் கடையிலும் சாப்பாடு ஆர்டர் செய்யலாம், எந்த டேபிளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று புரிந்தது.

தற்போது ஃபுட்கோர்ட் இல்லாத ஷாப்பிங் மால்களே சென்னையில் இல்லை. LKG பிள்ளைகள் கூட ஃபுட்கோர்டில் பர்கர் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றன. சென்னையிலேயே பிரபலமான ஒரு  ஃபுட்கோர்ட். இங்கே 100 ரூபாய் கட்டி ஒரு கிரெடிட் கார்டு வாங்க வேண்டும். 90 ரூபாய்க்கு சாப்பிட்டால் மீதி பத்து ரூபாயை உங்களுக்குத் தர மாட்டார்கள். அவர்களிடமே தங்கிவிடும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அங்கு சாப்பிடுகிறார்களாம். ஆளுக்கு பத்து ரூபாய் அவர்களிடம் விட்டு வந்தால், கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இலட்சம் ரூபாய் அவர்களுக்கு எந்த செலவும் இல்லாத உபரி லாபம்.

வெயிலில் வாடும் காய்கறிகாரனிடமும், கோவில் பூக்காரிகளிடமும், பத்து பைசாவுக்கு சண்டை போடுகிற நாம், கோடீஸ்வர ஷாப்பிங் மால்களில் இப்படி ஏமாந்து இழப்பதை மிகப் பெருமையாகவும் ஒரு அந்தஸ்தாகவும் நினைக்கிறோம். எனது நண்பர் சுரேகா இந்த வருடம் புத்தாண்டின் போது அதே ஃபுட் கோர்டில் மீதிப் பணத்தை தந்தாக வேண்டும் என்று சண்டையிட்டு பணத்தை வாங்கிக் கொண்டுதான் வெளிவந்தார்.
அடுத்தமுறை அந்த ஃபுட்கோர்டில் சாப்பிட உட்காரும்போது இதனை மனதில் கொள்ளுங்கள். 

கிளைமாக்ஸ்
நண்பரிடம், ‘நீங்க இன்விடேஷன் கொடுத்ததையே மறந்துட்டேன், நீங்க எப்போ வந்து இன்விடேஷன் தந்தீங்க‘ என்றேன். அவர் ஹா..ஹா..ஹா எனச் சிரித்துவிட்டு நான் உங்களுக்கு கைப்பட இன்விடேஷன் தரவே இல்லை. ஃபேஸ்புக்கில் என் பையன் கல்யாணம் பற்றி எல்லாத்துக்கும் பொதுவா மெசேஜ் போட்டிருந்தேன். உங்களுக்கு tag பண்ணியிருந்தேன். நீங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க என்றார்.

முன்பெல்லாம் வீடு வந்து அழைப்பிதழ் தருவார்கள். அப்புறம் தபாலில் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள். பின்னர் இமெயில் அழைப்பிதழ்கள், அப்புறம் மொபைலில் அழைக்க ஆரம்பித்தார்கள். தற்போது ஃபேஸ்புக்கில் மெசேஜ் போட்டாலே அது இன்விடேஷனுக்கு சமம் என்ற மனநிலை நமக்கு வந்துவிட்டது.

நான் வாசித்த ஹைகூ
காட்டிக் கொடுப்பதில்
முதல் பரிசு
கண்ணாடிக்கு

நான் எழுதிய புக்கூ
கணவனையும்
நண்பனாக அறிமுகப்படுத்துவது
ஃபேஸ்புக்

கடைசிச் செய்தி! 
ஃபேஸ்புக்கை வடிவமைத்து, நமக்குத் தந்த சூகர்பெர்கிற்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அவருடைய திருணமத்திற்கு நாளின் பெரும்பகுதியை அவர் உருவாக்கிய ஃபேஸ்புக்கிலேயே கழிக்கும் என்னைப்போன்ற அப்பிராணி நண்பர்களுக்கு அவர் அழைப்பிதழ் தரவில்லை.

சகுனி - திரை விமர்சனம்!

இடைவேளை!

‘டேய் எழுந்திருடா.. எழுந்திருடா... ஐயய்யோ என்னடா எழுந்துக்க மாட்டேங்கிறான். செத்துட்டானா... டேய் இவனை எழுப்புடா..‘
‘டாய்.. நான் சாகலடா.. ‘
‘என்னது நீ சாகலயா.. போச்சு போ.. நீ எஸ்கேப் ஆகிட்டேன்னு நினைச்சேன். இப்படி வந்து சிக்கிட்டியேடா?‘

படத்து டயலாக்கை விட, பக்கத்து சீட் டயலாக் நச். (பக்கத்து சீட்டர்கள் புண்ணியத்தில்) இடைவேளை விட்டப்புறம்தான் என்னால் சிரிக்க முடிந்தது. அதுவரை சந்தானமும், கார்த்தியும் எவ்வளவோ கிச்சு கிச்சு மூட்டிப் பார்த்தார்கள். ரீல் அந்து போனதுதான் மிச்சம்.

முதலில் தனக்கொரு என்ட்ரி வைத்துக் கொண்டு, நாலு சீன் கழித்து சந்தானத்துக்கும் ஒரு என்ட்ரி கொடுத்து, கெக்கே பிக்கே என ஜோக் அடித்து, சாராயக் கடையில் ஒரு பாட்டு வைத்து, அவ்வப்போது ஒரு பெண்ணை காதலித்துவிட்டால் முதல் பாதி தப்பிவிடும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார் கார்த்தி.

சந்தானம் இன்னமும் சிவா மனசுல சக்தி படப்பிடிப்பு முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதே பிரடிக்டபிள் காமெடி டிராக். நண்பேன்டாவாக ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் வரிசையில் தற்போது கார்த்தி. ஒரே மாற்றம் பழைய படங்களில் கசங்கிய சட்டையுடன் வருவார். இப்போது ஹீரோக்களை விட பளபளப்பாக டிரஸ் பண்ணுகிறார்.

ஹீரோயின் பெயர் தெரியவில்லை. முகமும் என்ட் டைட்டிலுக்கு முன்பே மறந்து போச்சு. கௌரவத் தோற்றங்களில், சோப்ளாங்கி காட்சிகளில் அனுஷ்காவும் ஆன்ட்ரியாவும் பரிதாபமாக வந்து மறைகிறார்கள். பிரகாஷ் ராஜை ஏதோ ஒரு மொட்டை மாடிக்கு வர வைத்து, ‘யார்ரா அவன்? அவனை வரச் சொல்லுடா‘ என்ற டயலாக்கை வேறு வேறு மாடுலேஷனில் எடுத்து வைத்துக்கொண்டுவிட்டார்கள். படம் முடியும் வரை அதையே பேசிக் கொண்டிருக்கிறார். செல்லம் இனிமே உஷாரா இருக்கணும். இல்லன்னா இப்படியே பேச வைத்து காலி பண்ணிவிடுவார்கள். கந்துவட்டி அக்காவாக ராதிகாவும், கார்த்தியின் அத்தையாக ரோஜாவும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். இவர்களைத் தவிர, அவ்வப்போது ரஜினியின் கட்அவுட்டுகளும், பேனர்களும் காட்சியில் வந்து போகின்றன.

கார்த்தியின் பூர்வீக வீட்டை பாலம் கட்டுவதற்காக அரசாங்கம் கையகப்படுத்துகிறது. பாலம் கட்டும் காண்ட்ராக்டை பினாமி பெயரில் வைத்திருக்கும் முதலமைச்சரை சந்தித்து வீட்டை திருப்பித் தர கேட்கிறார் கார்த்தி. அவர் மாட்டேன் என்றதும், கிங் மேக்கராக சகுனி வேலை செய்து கந்து வட்டிப் பெண்ணை மேயராக்குகிறார். ஜெயிலில் இருக்கும் எதிர்கட்சித் தலைவரை முதல்வராக்குகிறார். முதல்வர் பிரகாஷ்ராஜை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

ஆட்டோவுக்கு கூட காசில்லாத ஒருவன் எப்படி ஒரு அரசாங்கத்தையே மாற்றுகிறான் என்கிற ரஜனி ரேஞ்ச் மசாலாவை, திரைக்கதையே எழுதாமல், அபத்தக் காமெடி உப்புமாவாக்கி நம்மை தியேட்டரை விட்டு விரட்டியடிக்கிறார்கள். வேகமாக விரட்டுவதற்கு ஹை டெசிபல் பிண்ணனி இசை உதவுகிறது.

டிக்கெட்டுக்கு 600 ரூபாய், பாப்கார்ன், பெப்ஸிக்கு 550 ரூபாய்.. தண்டம்.. தண்டம்.. பணமும் போச்சு, (நைட் ஷோவினால்)தூக்கமும் போச்சு என்றபடியே ஒரு குடும்பம் வெளியேறிக் கொண்டிருந்தது.

234 தொகுதிகளிலும் ஆளுக்கு 1000ம் ரூபாய் தந்தால் கூட இந்தப் படத்தை எவராலும் இரசிக்க முடியாது.