Friday, October 31, 2008

Times of India-யாவா? Crimes of India-யாவா?

சென்னையில் டிஸ்கோதெ கிளப்புகள் எங்கே இருக்கின்றன. அவற்றில் குடித்துவிட்டு இரவு முழுக்க கூத்தடிப்பவர்கள் யார் யார்? அவர்களைப்போல நாமும் எப்படி கூத்தடிப்பது, என்பது பலகாலம் சென்னை வாழ், தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரு செய்தித்தாள்களும் வந்தவுடன், அந்த இராத்திரி இரகசியங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் கிடைத்துவிட்டது. தினமும் அர்த்த இராத்திரி வரை ஆடும் அர்த்தமற்ற கும்மாளங்களுக்கு தினமும் ஒரு பக்க கவரேஜ். வாழ்க டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சில மாதங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் ரோடில் உள்ள ரெசாட்டுகளில் போலீஸ் திடீர் ரெய்டு நடத்தினார்கள். அரை குறை ஆடைகளுடன் இளைஞர்களும், இளைஞிகளும் கும்பல் கும்பலாக மாட்டினார்கள். ஒரு ரெய்டில் சில பெண்கள் குடித்துவிட்டு ஆடையே இல்லாமல் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்களாம். இந்தக் கண்றாவிக்கெல்லாம் செக் வைத்தவுடன், டெக்கான் கிரானிகள் சிலிர்த்துக் கொண்டது. போலீஸ் ஏன் அத்து மீறி ரெசாட்டுகளுக்குச் செல்கிறது? என்று கேள்வி எழுப்பியது. சில டெக்கிகள் (முழுக்கப் படித்துவிட்டு அரை குறை உடைகளுடன் கூத்தடிப்பவர்களை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் இப்படித்தான் செல்லமாக அழைக்கின்றன), போலீசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக பேட்டி கொடுத்ததும், அதை டெக்கான் வெளியிட்டதும் கேலிக் கூத்தின் உச்சகட்டம்.

அதே போல இரவு 11 மணிக்கு மேல் குடித்துவிட்டு ஆடக் கூடாது, அப்படி ஆடினால் அந்த கிளப்புகளுக்கு தடை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் உத்தரவு போட்டது. அவ்வளவுதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பொறுக்கவில்லை. தினமும் அரை மயக்கத்தில் வீடு திரும்பும் உயர் மட்ட(மான) குடி மகன்கள் பலரை பேட்டி கண்டு, 'தனி மனித உரிமையில் தலையிட நீ யார்?', 'எங்கள் சுதந்திரத்தை ஏன் பறிக்கிறாய்?' என்று செய்தி வெளியிட்டது. எது உரிமை? எது சுதந்திரம்? டைம்ஸ் ஆஃப் இந்தியா பதில் சொல்லட்டும்.

அக்டோபர் 25ம் தேதி, இலங்கைத் தமிழர்களின் படுகொலையை கண்டித்து, சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் ஒரே ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

Most of the students, drenched in the rain and shivering, stood for hours for a cause they had no clue about.

மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏன் நிற்கிறோம் என்றே தெரியவில்லையாம்.

எதுவும் தெரியாமல் நின்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே நின்றிருந்தாலும் அதில் என்ன தவறு. டிஸ்கோதெ கிளப்புகளிலும், ஈ.சி.ஆர் ரெசார்ட் மறைவுகளிலும் அரை குறை ஆடைகளுடன் திரிவதைக் காட்டிலும் இது மேலானதே. அந்த மாணவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் போனதற்கென்ன காரணம்?

சிவாஜி','தசாவதாரம்' போன்ற படங்கள் ரிலீசின் போது மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கியவர்களை ஒரு சாதனையாளர்களைப் போல வருணித்தது யார்? டிஸ்கோ இரவுகளில் சிரிப்பவர்களை கலர் போட்டோக்களாக வெளியிட்டு கெளரவப் படுத்துவது யார்? இலங்கைப் பிரச்சனை பற்றி மூடி மறைப்பது யார்? டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள்தான். இந்த பொறுப்பற்ற ஊடகங்களால்தான் இளைஞர்கள் சமூகத்தைப் பற்றி எந்தச் சுரணையுமின்றி வளர்கிறார்கள்.

எனவே டைம்ஸ் ஆஃப் இந்தியா எதுவும் தெரியாமல் நின்ற அந்த மாணவர்களுக்காக ஒரே ஒரு நாள் டிஸ்கோதெ பக்கங்களை நிறுத்தட்டும். நிறுத்திவிட்டு இலங்கைப் பிரச்சனை என்றால் என்ன என்று, ஒரு ஸ்பெஷல் எடிஷன் போடட்டும். தமிழக இளைஞர்களுக்கு எது சுதந்திரம்? எது உரிமை என்று புரிய இது உங்களால் ஆன சிறு முயற்சியாக இது இருக்கட்டும்.

அப்படிச் செய்தால்தான் நீங்கள் Times of India, இல்லையென்றால் நீங்கள் Crimes of India.

Thursday, October 30, 2008

அவர் !!!

இறுதி யாத்திரைக்கு வருபவர்களில் பலரும் மறுநாள் 'பால்' எனப்படும் நிகழ்வுக்கு வருவதில்லை. என் தந்தை மரணமடைந்த போதும் அப்படித்தான். முதல்நாள் பெருகிவந்து தோள் கொடுத்த ஒருவர் கூட, என் தந்தை சடலமாக தீயில் கருகிய அடுத்தநாள் வரவில்லை. சடலத்தை எரிக்கும் தீயை விடத் தகிக்கும் தனிமை உணர்வு என்னை அப்போது வாட்டியது.

ஆறுதலாக மறுநாளும் அவர் மட்டும் வந்திருந்தார். சிதையில் சாம்பல்களுக்கிடையில் எலும்புத் துண்டுகளை சிறு குச்சிகளை வைத்துக் கிளறி தேடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மட்டும் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

சிதையின் சாம்பல் படிந்த கைகளில் ஒவ்வொரு எலும்புத்துண்டாக எடுத்து மண் சட்டியில் வைத்து சூடு ஆற தண்ணீர் ஊற்றினார். அந்த சமயத்தில் கூட அவர் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

என் தந்தையின் மறைவுக்கு முன்னும் பின்னும், எனக்கு இன்னொரு தந்தையாகவே இருந்து என்னை அவர் வழி நடத்தினார். சில நேரங்களில் ஒரு தோழனைப் போல பழகினார். என்னுடன் மட்டுமல்ல, அந்தக் காலனியில் வசித்த என் நண்பர்கள் ஒவ்வொருவருடனும் இருபத்தைந்து வருடங்களாக அப்படித்தான் பழகினார். அரை டிராயர் போட்ட பருவத்திலிருந்து, மணமாகி ஒரு குழந்தை பெற்ற பின்பும் கூட, கிட்டத்தட்ட நான் அவர் வீட்டில்தான் வளர்ந்தேன் என்று சொல்லலாம். பக்கத்து வீட்டு மாமா என்பதைக் கடந்த அந்த உறவுக்கு தமிழில் தனியாக வார்த்தைகள் இல்லை.

திடீரென ஒருநாள் வீடு மாற்றிச் செல்லப் போவதாகக் கூறினார். வீடு தேடி வந்து எங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டுச் சென்றார். மனதில் வார்த்தைகளில் வராத ஒரு வெறுமை. அவர் வீட்டைக் காலி செய்த கடைசி நாளன்று அவர் வீட்டிலிருந்து ஒரே ஒரு செடியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஏனோ தெரியவில்லை பறித்த செடிகளை என் வீட்டுத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லவில்லை.

தினமும் இரவு, அவர் வீட்டைக் கடக்கும் முன் அவரைப் பார்த்து 5 நிமிடம் பேசிவிட்டுத்தான் என் வீடு செல்வேன். ஆனால் அவர் இல்லாத அந்த வீட்டை தினமும் கடக்க நேர்ந்தபோது, அவரிடம் செலவழிக்க முடியாத 5 நிமிடங்கள் பெருகிப் பெருகி வெறும் தனிமையின் மூட்டையாகிப் போனது. அதைச் சுமக்க சுமக்க, என் தந்தையின் மரணத்தின் போது என்னை எரித்த தனிமைத் தீ மீண்டும் கொளுந்து விட்டு எரிவது போல ஒரு தகிப்பு. அவர் வீட்டிலேயே நான் விட்டுவிட்டு வந்த செடிகளைப் போல நாட்கள் கருகிக் கொண்டிருந்தன. அவர் வீடு மாற்றிப் போய் 3 மாதங்களாகியும் நான் அவரை சந்திக்கவே இல்லை, குறைந்தபட்சம் டெலிபோன் உரையாடல் கூட இல்லை என்பதை நான் திடீரென உணர்ந்தேன். ஏன்?

ஏன்? என்று எனது நண்பர்(அவருடைய மகன்)ஒருநாள் என்னைக் கேட்டார். நண்பரின் குரலில் 'அவர்' நேரடியாக என்னைக் கேட்டது போல உணர்ந்தேன். நாளையே பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தேன். ஆனால் நாளை என்பது அடுத்த 2 மாதங்களுக்கு வரவேயில்லை. ஏனோ தெரியவில்லை . . . நான் அவரை பார்க்கவில்லை, பேசவில்லை. மனதின் ஓரத்தில் தினமும் ஒரு உறுத்தல் என்னைத் தின்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் உறுத்தல், குற்ற உணர்வாக மாறி, தயக்கமாக நிலைத்துவிட்டது. என்ன விசித்திரம்!!! என்னை ஒரு தந்தையைப் போல பார்த்துக்கொண்ட அவரைப் பார்ப்பதில் எனக்கென்ன தயக்கம்?

நல்லவேளையாக என்னுடைய நீண்ட நாளைய நண்பன், 'அவரை' பார்ப்பதற்க்காகவே சென்னை வந்திருந்தான். பட்டென ஒட்டிக்கொண்டேன். 'அவர்' வீட்டுக்கு வருகிறேன் என்று அவரைத் தவிர எல்லோரிடமும் சொல்லிவிட்டு என் நண்பன் கூடவே 'அவர்' வீட்டுக்குச் சென்றேன். அவர் எப்போதும் போல அதே உரிமையுடன் 'ஏண்டா கடன்காரா என்னை பார்க்க இத்தனை நாளா வரல?' என்று திட்டோ திட்டென திட்டினார். அவர் திட்டத்திட்ட நான் தனிமைச் சுமைகள் குறைந்து இலகுவாகிக் கொண்டு வந்தேன்.

'சரி எல்லோரும் லஞ்ச் போலாமா?' நண்பன் கேட்டான்.
'ஓ.எஸ் போலாமே . .' என்று அவரும் ஒரு நண்பனைப் போல இயல்பாக கூட வந்தார்.
15 வருடங்களுக்கு முன்பு, என் தந்தையின் மரணத்தின் போதும் இப்படித்தான் இயல்பாக வந்தார். அப்போது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் எதனாலோ தொடர்ந்து அவரைத் தவிர்த்து வந்த என்னை, எப்போதும் போல ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஹோட்டலுக்கு வந்தபோது, அவருடைய வருகை எனக்கு பெரிதாகப் பட்டது.

Monday, October 27, 2008

ஜெ, வை.கோ, விஜயகாந்த், சூப்பர் ஸ்டார்களுக்கு த.பாண்டியனின் யோசனை

தமிழ் சினிமாவைப் போலவே, தமிழக அரசியலிலும் கிளாமருக்குத்தான் மரியாதை. அந்த வகையில் தமிழக கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு கடைசி பட்சம்தான். அதனாலேயே பல நேரங்களில் அவர்களின் தெளிவான உருப்படியான சிந்தனைகள் மற்றும் யோசனைகள் தமிழக மக்களைப் போய்ச் சேருவதில்லை. இலங்கைத் தூதர் பேசில் ராஜபக்ஷே சென்னை வந்து சென்ற பின்னர் இலங்கைப் பிரச்சனை மீண்டும் வெறுமனே கருணாநிதியை மட்டும் சுற்றும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி த.பாண்டியன் அருமையான சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த கட்டமாக கருணாநிதி இந்த யோசனைகளை பரிசீலித்து ஆவண செய்ய முயற்சிக்கலாம்.

  • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் தொடர்பாக நேஷனல் செக்யூரிட்டி அட்வைஸர் எம்.கே. நாராயணன், ஃபாரின் செக்ரட்டரி ராகவன் ஆகியோரின் பரிந்துரைகளைக் கேட்பதை இந்திய அரசு உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்குப் பதிலா தமிழர்களை அந்தப் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.
  • இலங்கை அரசு அனுமதித்தால் இரண்டு தமிழக மத்திய மந்திரிகள் அல்லது தமிழக எம்.பிக்கள் இருவரை பிரணாப் முகர்ஜியுடன் இலங்கைக்கு அனுப்பி நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
  • அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சாராத மருத்துவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பெளத்த மத பிட்சுக்கள், மெளல்விகள், கிறித்துவ பாதிரியார்கள், இந்துசாதுக்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்களுடைய கண்காணிப்பில் வழங்க வேண்டும்
  • திரை இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரின் பேச்சு, வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட பேச்சே தவிர அரசியல் அறிக்கைகள் அல்ல. அதனால் அரசு அவர்கள் விஷயத்தில் கடுமையைக் குறைக்கலாம்
கருணாநிதியை காய்ச்சி எடுக்கும் பதிவர்கள் இந்த யோசனையை உரக்கச் சொல்லலாம்.
தமிழக போலீஸ் என்னை கைது செய்ய முயற்சி செய்கிறது என்று போலிக் கூச்சல் போடாமல் ஜெயலலிதா இந்த யோசனைகளை கருணாநிதிக்குச் சொல்லலாம்.
வருங்கால முதல்வர் என்று தன்னை வருணித்துக் கொள்ளும் விஜயகாந்த், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் மக்கு மாதிரி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்காமல், இதை அப்படியே காப்பியடித்து, கருணாநிதியை நிர்பந்திக்கலாம்.
வை.கோ ஜெயிலுக்குள்ளிருந்துகொண்டே, புலிகள் ஆதரவை விடாமல், அ.தி.மு.க அம்மாவை கெட்டியாக பிடித்துக் கொண்டு இந்த யோசனைகளை செய்யச் சொல்லி கர்ஜிக்கலாம்.
நவம்பர் 1ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் நடிகர்கள், சீமான், அமீர் கைதுகளால் தொடை நடுங்கி மெளனவிரதமிருக்காமல், இந்த யோசனைகளை தமிழக முதல்வருக்கு ஒரு வசனமாக அவரவர் ஸ்டைலில் படித்துக் காட்டலாம்.

இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதியின் அரசியல்

கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்!

இது சில அல்லது பல இலங்கைத் தமிழர்களின் குற்றச்சாட்டு.

மின்வெட்டு பிரச்சனையிலிருந்து தப்பிக்கவே கருணாநிதி இலங்கைப் பிரச்சனையை கையிலெடுத்தார்!

இது சில அல்லது பல தமிழகத் தமிழர்களின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு நியாயானவை?

எம்.பி.க்கள் ராஜினாமாவிற்கு 28ந் தேதி கெடு கொடுத்திருந்தீரகளே. தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிராணப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறபட்ட கருத்துகள் இருப்பதால்அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

பிரணாப் முகர்ஜி சென்னை வந்து சென்றபின், வெளியான கலைஞர் பேட்டி இது. இதிலிருந்து ஒரு விஷயத்தை யூகிக்க முடிகிறது. கருணாநிதி அறிவித்தபடி 28ம் தேதி தி.மு.க எம்பிக்கள் ராஜினாமா செய்தாலும், காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள். கருணாநிதியோ,முகர்ஜியோ இதை பத்திரிகையாளர்களிடம் தெளிவாகச் சொல்லவில்லை என்றாலும், கருணாநிதியின் சூசகமான பதில் இதை சொல்லாமல் சொல்கிறது. இரண்டு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க மற்றும் பா.ம.க எம.பிக்களின் நிலை என்னவென்று இன்னும் அக் கட்சித் தலைவர்கள் முடிவாகச் சொல்லவில்லை.

ஏற்கனவே தங்கபாலு என்கிற காங்கிரஸ் பொம்மை, டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு செய்வோம் என்று பின்வாங்கிவிட்டது. ராமதாஸ் 28ம் தேதி வரட்டும், அப்போது பார்க்கலாம் என்று அப்போதே சொல்லிவிட்டார். இன்னமும் அ.தி.மு.க ஆதரவு நிலையிலிருந்து மாறாத ம.தி.மு.க என்ன செய்யும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. கம்யூனிஸ்டுகள் இந்த வினாடி வரை ராஜினாமா பற்றி வாயைத் திறக்கவேயில்லை.

இந்த நிலையில் தி.மு.க மட்டும் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மிகப் பெரிய அரசியல் முட்டாள்தனமாக இருக்கும்.

தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்து, மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த வினாடியே இங்கே காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் தமிழக அரசை கவிழ்ப்பார்கள்.

கருணாநிதியும், சோனியாவும் தொலைபேசியில் இதைத்தான் பேசியிருப்பார்கள். பிரணாப் முகர்ஜி நேரில் வந்து அதை நேரில் வந்து கருணாநிதியிடம் உறுதி படுத்திவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அப்படியென்றால் இலங்கைப் பிரச்சனை ?

காங்கிரஸ் எம்.எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படாத ஒரு தி.மு.க மெஜாரிட்டி அரசு அமைய வேண்டும்.

இப்போது போலவே மத்திய அரசின் குடுமி, தமிழக அரசின் கையில் இருக்கவேண்டும்.

இருந்தால் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மேலும் ஸ்திரமான முடிவுகள் எடுக்க முடியும்.

இப்போதைக்கு . . .
  • இராணுவ உதவிகளை செய்ய மாட்டோம் என இந்தியா உறுதி.
  • ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைத் தூதர் உறுதி
  • 800 டன் நிவாரண பொருட்களை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க உறுதி
  • நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு முயற்சி
  • தமிழக மீனவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்த மாட்டோமென இலங்கை உறுதி.

இன்றைய தி.மு.கவின் அரசியல் நிலையை மனதில் கொண்டு பார்த்தால், தற்போதைக்கு கருணாநிதியால் இந்த அளவுக்குத்தான் முடியும் எனத் தோன்றுகிறது.

தி.மு.க எம்.பிக்களையும் இழந்து, தமிழ்நாட்டில் ஆட்சியையும் இழந்தபின் இலங்கைப் பிரச்சனையை தீர்க்க வழியுண்டு என்றால், அதனை தாராளமாக கருணாநிதிக்கு சிபாரிசு செய்யலாம், இல்லையென்றால் முதலிரண்டு குற்றச் சாட்டுகளையும் தொடரலாம்.