Friday, April 27, 2012

சச்சின் எம்பி- இது செஞ்சுரியா? டக் அவுட்டா?

ஒரு பிராண்ட் ஐக்கானாக இருந்தாலும், தன் தோற்றம் பற்றி சச்சின் அவ்வளவாக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் சமீபகாலமாக தனது ஹேர்ஸ்டைலை மாற்றியிருந்தார். அதே போல வழக்கம்போல மௌனம் காக்காமல், அவரது ஃபார்ம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மீடியாவில் பதிலடி தந்தார். இந்த சிறு சிறு மாற்றங்கள் யாருடைய பார்வையிலும் பெரிதாகப்படவில்லை. ஆனால் திடீரென ராஜ்யசபா எம்.பி அவதாரம் எடுத்ததும், அந்த மாற்றம் நாடு முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது.

பெரும்பாலான மக்கள் நம்பவில்லை. சச்சினா? எம்பியாவா? என்றார்கள். டிவிட்டரில் எதிர்மறையான கருத்துகள் பரவத் துவங்கின. #unfollowsachin என்ற டேக் பற்றிக் கொண்டது. அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை உடனே சொல்லவில்லை. சுருக்கமாகச் சொன்னால் வரவேற்பை விட, எதிர்ப்புதான் அதிகம் காணப்பட்டது.

இதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று அரசியல்! நம்ப வீட்டுப் பிள்ளை என்ற பெயர் எடுத்திருக்கும் சச்சின் அரசியல் என்ற குப்பைக்குள் இறங்குவதா என்ற பொதுவான அதிர்ச்சி. இன்னொன்று அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கட்சி! சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தற்போது இருக்கும் அளவிற்கு எப்போதும் ஊழல் கட்சி என்று பெயரெடுத்தது இல்லை. அந்தக் கட்சியில் போய் சேர்வதா என்ற ஆதங்கம்.

சச்சின் தனது 100வது செஞ்சுரிக்கு தடுமாறியபோது எழுந்த விமர்சனங்களை விட, காங்கிரஸ் எம்பி அவதாரம் கடும் விமர்சனங்களைக் கிளப்பும்.
பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று ஒரு விளம்பரத்தில் அடிக்கடி சொல்வார். ஆனால் தனது திடீர் எம்பி அவதாரத்துக்கான சீக்ரெட் காரணத்தை அவர் வெளியில் சொல்லப்போவதே இல்லை. சொன்னாலும் எடுபடாது.

அரசியலில் சீக்ரெட் உண்டு. ஆனால் பூஸ்ட் கிடையாது. வெறும் விமர்சனங்கள் மட்டும்தான். களத்துல இறங்குங்க சச்சின். உங்களுக்காக கை தட்டின மக்கள் இனிமேல் பௌன்ஸர்களை வீசுவாங்க! அதை சமாளிச்சுட்டு மை எனர்ஜி இல்லை அவர் எனர்ஜி என்று தெம்பா பதில் சொல்லுங்க! சியர்ஸ்!

Monday, April 23, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 03

OK let him Do it!
இந்த வரிக்குள் ஒரு திருக்குறள் ஒளிந்திருக்கிறது. ஒளித்து வைத்தவர் மிகப் பெரிய பிரபலம். அவர் யார்? அது எந்தக் குறள்? 
இதனை நீங்கள் யூகித்துக் கொண்டே இதே வரியில் நிற்கலாம். அல்லது அடுத்த வரியை படித்துக் கொண்டே  யூகிக்கலாம்.

டைட்டானிக்கை மீண்டும் எடுக்க முடியுமா?
டைட்டானிக்கை 3Dயாக்கி மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். செம ஃபிரஷ். 97ல் வெளிவந்த படம் போலவே தெரியவில்லை. இப்போதுதான் முதல் முறை பார்ப்பது போல 

அவ்வளவு எமோஷன். பிரமாண்டமான கப்பலை, அதை விடப் பிரமாண்டமான காதலுக்குள் மிதக்க விட்டதுதான், திரைக்கதை சாமர்த்தியம். இப்போதும் கிளைமாக்ஸ் 

பார்க்கும்போது தொண்டை அடைத்துக் கொண்டு சோக்கிங். சரி.. 2Dயில் உருவான திரைப்படத்தை 3Dயில் எப்படி மாற்றினார்கள்? ஒரே புகைப்படத்தை ஒரே அளவில் 

போஸ்ட்கார்டுகளாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்துவிட்டு, ஒன்றை மட்டும் சில மில்லி மீட்டர்கள் நகர்த்தினால் எப்படி 

இருக்கும்? அதே போலத்தான் 2D டைட்டானிக்கை தனித்தனி தொடர் (இலட்சக்கணக்கான) புகைப்படங்களாக மாற்றி, இன்னொரு காப்பி எடுத்து அவற்றை ஒன்றன் மீது 

ஒன்று டிஜிட்டலாகவே அடுக்கி இன்னொரு படமாக்குகிறார்கள். இதை 3D கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கும்போது, திடும்மென்று முப்பரிமாணம் விரிந்து டைட்டானிக் 

கப்பல் நமது மூக்கு நுனியைக் கடந்து செல்கிறது. இவ்வளவுதானா என்று வியக்காதீர்கள். இன்னும் நிறைய்ய்ய்ய இருக்கிறது. டெக்னிகல் சமாச்சாரங்களை கொஞ்சம் 

கொஞ்சமாகப் படித்தால் ஈஸியாகப் புரியும். இல்லையென்றால் போரடித்துவிடும்.

திரு. ஞானராஜசேகரன் இயக்கிய பாரதி படத்தை பார்த்துவிட்டு கமலிடம் கேட்டார்களாம். மீண்டும் ஒரு முறை பாரதி படத்தை எடுக்க முடியுமா? அதற்கு அவருடைய 

பதில்... ஏன் முடியாது. பாரதியைப் பற்றிச் சொல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றாராம்.

அதே போல டைட்டானிக் படத்தை மீண்டும் எடுக்க முடியுமா எனக் கேட்டால், என்னுடைய பதிலும் ஏன் முடியாது என்பதுதான். ஜேம்ஸ் காமரூன் காதலை 

மையப்படுத்தியது போல, அந்த விபத்தில் தப்பிப் பிழைத்த ஈவா ஹர்ட் என்ற 7 வயது குழந்தையை மையப்படுத்தி ஒரு புது டைட்டானிக் எடுப்பேன்.

மீண்டும் குறள் டெஸ்ட்
'This man, this work shall thus work out,' let thoughtful king command; 
Then leave the matter wholly in his servant's hand. 
இந்த வரிகள் எந்த திருக்குறளை குறிக்கின்றன? முதல் வரிக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது. தொடர்பைக் கண்டுபிடிக்க, முதல் பாராவுக்கும், இந்தப் பாராவுக்கும் 

கண்களை அசையுங்கள். கண்களுக்கு சிறந்த எக்ஸர்சைஸ். இது திருக்குறள் அல்ல.. கண் டாக்டர் குரல்.

2D முதல் 7D வரை
பிரபல கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் தற்செயல்தான். ஆதாம் ஆவாளை ஈர்க்கப் பயன்பட்ட ஆப்பிள், புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவியது ஒரு தற்செயல்தான். 

ஆப்பிள் உருவான காலத்தில் இருந்து மரத்திலிருந்து கீழேதான் விழுந்து கொண்டிருக்கிறது. ஐசக் நியூட்டனும் அதை வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறார். ஆனால் 

திடீரென ஒரு நாள் ஏன் இது கீழே விழுகிறது. மேலே செல்ல வேண்டியதுதானே என்று அவருக்குத் தோன்றியது தற்செயல்தான். அந்த தற்செயல் சிந்தனையின் 

விளைவாகத் தோன்றியதுான் புவிஈர்ப்பு விசை பற்றிய கண்டுபிடிப்புகள். 

சினிமாவிலும் தற்போது அது போல ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு பிரளயத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. Canon 7D என்றொரு ஸ்டில் காமிரா சில 
வருடங்களுக்கு முன்பு அறிமுகமானது. அதில் போனால் போகட்டும் என்று வீடியோ ரெக்கார்டிங் ஆப்ஷனும் தந்திருக்கிறார்கள். என்னைப் போல சிக்கன ஆசாமி, எதற்கு 

தேவை இல்லாமல் வீடியோ காமிராவுக்கு வாடகை. இந்த ஆப்ஷனையே பயன்படுத்தலாமே என்று தற்செயலாக முடிவெடுத்து ஒரு டாகுமெண்ட்ரி படத்தை எடுத்திருக்கிறார். 

பெரிய திரையில் போட்டுப் பார்த்த நண்பர்களுக்கு ஆச்சரியம். சினிமா காமிராவுக்கு இணையான படத் துல்லியம். அவ்வளவுதான் அந்தச் செய்தி பரபரவென பரவி தற்போது 

கோடம்பாக்கம் வரையில் வந்துவிட்டது. நானும் ஒரு Canon 7D வைத்திருக்கிறேன். ஒழுங்காகப் பயன்படுத்தத் தெரிந்தால் அட்டகாசமாக முழு திரைப்படத்தையும் 

இதிலேயே எடுத்துவிடலாம். அரவான், மெரீனா போன்ற படங்களில் இந்தக் காமிரா அட்டகாசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காமிராவின் விலையே இலட்சம் + சொச்சம் 

தான். நல்ல கதை இருந்தால் (மட்டும்) இந்தக் காமிராவை எடுத்துக் கொண்டு படம்பிடிக்கப் புறப்பட்டுவிடுங்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் இந்த மாத செல்வா ஸ்பீக்கிங் சினிமா ஸ்பெஷல் ஆகிவிடும் போலிருக்கிறது. அதனால் ஒரு யு டர்ன். அவ்வப்போது நான் மறக்காமல் 

யாஹீ தளத்திற்குள்ளும் நுழைவதுண்டு. அதில் பார்த்த சுவாரசியமான டிப்ஸ்! திருமண வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமா? 3 டிப்ஸ். முதலாவது நல்ல சாப்பாடு. 

இரண்டாவது நல்ல உடல் பயிற்சி. மூன்றாவது நல்ல டைம் பாஸ் என்று போட்டிருந்தார்கள். நம் நகர்ப்புற வீடுகளில் பொதுவாக மனைவிகள் (வேறு வழியின்றி) 

சமைக்கிறார்கள், கணவர்கள் தொந்திக்கு பயந்து உடற் பயிற்சி செய்கிறார்கள், இருவரும் சேர்ந்து தனித்தனியாக ஃபேஸ்புக்கில் டைம் பாஸ் பண்ணுகிறார்கள்.
இதனால் நல்ல திருமண வாழ்க்கை கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் டிப்ஸ் பேஜில் வந்திருந்த ஃபிட்னஸ் விளம்பரங்கள் மூலமாக யாஹீவுக்கு வருமானம்  என்பது மட்டும் உறுதி.

திருக்குறளும் பாப்பையா குரலும்
அரசியல் காரணமாக புத்தாண்டு தினங்கள் மாறினாலும் பாப்பைய்யாவின் பட்டிமன்றங்கள் மாறுவதில்லை. பல வருடங்களா பாரதி பாஸ்கர், ராஜா என ஒரே டீமை வைத்து 

வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக T20 கிரிக்கெட் போல இளைய முகங்களும் தென்படுகின்றன. ஆரம்ப கால பட்டிமன்றங்களில் நிறைய  இலக்கியம் இருக்கும். இப்போது வெறும் ஜோக் தோரணம்தான். இருந்தாலும் இவருடைய பட்டி மன்றத்தை தொடர்ந்து ஒளிபரப்பாகின்ற டமில் ஹீரோயின்களின் பேட்டிக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்பதால் இன்னமும் பலகாரங்களுடன் சாலமன் பாப்பைய்யாவின் பட்டி மன்றத்தையும் தவிர்க்க முடியவில்லை. அவர் ஒரு குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். 

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

இந்த உரைக்கும் கட்டுரையின் முதல் வரிக்கும், ஐந்தாவது பாராவுக்கும் ஒரு குறள் பாலம் இருக்கிறது. 

டாட்டா கார்டுகளை விஞ்சும் இன்டர்நெட் பேக்
வெளியூருக்கு பயணிக்கும்போது, சில நேரங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டுகிற டாட்டா கார்டுகள் கூட சொதப்புகின்றன. ஆனால் 98 ரூபாய்க்கு இன்டர்நெட் பேக் டாப்அப் செய்தால் எங்கிருந்தாலும் இணைப்பு கிடைக்கிறது. நான் பல நேரங்களில் என் மொபைல் போனைத்தான் லாப்டாப்புடன் இணைக்கிறேன்.

ஏ.ஆர்.இரகுமான்
இசைப் புயலை பல வருடங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். புயல் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அமைதியான புன்னகையுடன் கை குலுக்கினார். நான் எழுதியிருந்த ஸ்க்ரிப்டில் இருந்த பிரமாண்டம் என்ற வார்த்தையை நீக்கிவிடும்படி வார்த்தைகளுக்கே வலிக்காமல் கூறினார். நமக்கு எதுக்கு சார் அந்த வார்த்தையெல்லாம் என்றார். பிறகு இதுதான் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறை. இதுதான் உங்கள் எடிட்டிங் மெஷின் என்றார். அது ஒரு ஆப்பிள் இயங்குதளம் கொண்ட மேக் மெஷின். எனக்கு பழக்கமில்லையே என்றேன். கற்றுக்கொள்ள எத்தனை நாள் ஆகும்? எனக் கேட்டார். 30 நாட்களுக்குள் கற்று வேலையை முடிக்கிறேன் என்றேன். வெரிகுட், ஆல் த பெஸ்ட் என்று கைகுலுக்கிவிட்டு கே.எஸ்.இரவிக்குமாரிடம் பேசச் சென்றுவிட்டார். செல்லும்போது, OK let him Do it! என்று தன் உதவியாளரிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஒருவரை அழைத்துவிட்டால் அவர் மேல் அவர் வைக்கும் அபார நம்பிக்கைக்கு இணை இல்லை. அவருடன் இணைந்து பணி புரியும் இசை வல்லுனர்கள் எல்லாம் தங்களின் பெஸ்ட்டை மட்டுமே இரகுமானுக்குத் தருகிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் திறமையின் மேல் அவர் வைக்கும் நம்பிக்கை. இவர் நாம் நினைப்பதை தந்துவிடுவார் என்ற உறுதி. அதற்கான எல்லா சூழலையும் அமைத்துத் தரும் தன்மை. தந்த பின் பொறுமையாகக் காத்திருந்து, தனக்கு வேண்டியதைப் பெறும் இலக்கு. இதுதான் ஏ.ஆர். இரகுமான்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

இதை வள்ளுவர் ஏ.ஆர்.இரகுமானுக்குச் சொன்னாரா எனத்தெரியாது. ஆனால் இரகுமான் இந்தக் குறனை கடைபிடிக்கிறார்.

In & Out Chennai (Apr) இதழுக்காக எழுதியது.