
எங்களுடைய ”அவர்” திரைப்படத்தில் மொத்தம் 9 புதிய பிண்ணனி பாடும் குரல்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். 2 குழந்தைகள், 3 பாடகிகள் மற்றும் 4 பாடகர்கள். இவர்களுடன் கோரஸ் பாடிய 8 குழந்தைகளையும் சேர்த்தால் மொத்தம் 17 அறிமுகப் பாடகர்கள். பாடிய அனைவருமே திறமைசாலிகள். சிறு சிறு தயக்கங்களைத் தவிர, மறுபடி மறுபடி டேக் வாங்கி நேரத்தை வீணடிக்கவில்லை. இந்த திறமைசாலிகளைப் பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.
அவர்களுடைய குரல்களில் இருந்த சின்னஞ் சிறு பிசிறு அல்லது தவறுகள் குறித்து இசையமைப்பாளரும், இஞ்சினியரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை. காரணம் மென்பொருள்கள்(Audio Manipulation Softwares). எங்கேயாவது டியுனிங் விலகியிருந்தால் Antares Autotuning என்கிற மென்பொருள் விலகல்களை ஒரே கிளிக்கில் சரி செய்துவிடுகின்றது. இந்த மென்பொருள் இஞ்சினியர் மற்றும் இசையமைப்பாளர்களிடையே மிகப் பிரபலமாக உள்ளது. புல்லாங்குழல், தபேலா உட்பட எந்த இசையில் பிசகியிருந்தாலும் ஒரு சில கிளிக்குகள்தான். டியுனிங் சரியாகிவிடுகிறது.
ஆனால் குரல்கள் (Vocal Corrections) பெருமளவில் சரிசெய்யப் படவேண்டுமானால் Melodyne அட்டகாசமாக கை கொடுக்கிறது. எந்தக் குரலை கொடுத்தாலும் அதிலுள்ள ஸ்வரங்களைப் பிரித்து, ஆராய்ந்து எந்த இடத்தில் குரல் பிசகியிருக்கிறது என்று தானாகவே கண்டுபிடித்து சரி செய்துவிடுகின்றது. அதிலும் தவறுகள் இருந்தால் Auto Corrections முறையை தவிர்த்து விட்டு Manual முறையில் ஒவ்வொரு ஸ்வரமாக பாடகர்களின் குரல்களை பிரித்து மேய்ந்து விடலாம்.
எங்கள் இசையமைப்பாளர் விவேக் நாராயண் Melodyne பயன்படுத்துவதில் ஜகஜால கில்லாடி. ராஜேஷ் வைத்யாவின் வீணை முதல் அறிமுக குழந்தைப் பாடகி அனுஷாவின் குரல் வரை பல்வேறு ஒலி கலவைகளை ஸ்வரம் ஸ்வரமாக பிரித்து சரி செய்து, தன் விருப்பம் போல மாற்றிவிட்டார்.
இங்கே சொடுக்கினால் Melodyne பற்றிய தகவல்களும், டெமோவும் கிடைக்கும்.
எதற்கு இந்த மென் பொருள்களைப் பற்றிச் சொல்கிறேன் என்றால் . . .
அவசரமாக தவறு செய்வது முதல்
அதைவிட அவசரமாக சரி செய்வது வரை
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே மின்னல் வேகத்தில் சாத்தியம்.
ஆனால் Antare Autotuning மற்றும் Melodyne போன்ற Audio Manipulation மென் பொருள்கள் பற்றிய ஞானமும், அவற்றை பயன்படுத்தும் திறமையும் மிகவும் அவசியம்.
யாருக்காவது Melodyne கன்சல்டிங் வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக இசையமைப்பாளர் விவேக் நாராயணை அணுகலாம். Antare Autotuning கன்சல்டிங் வேண்டுமென்றால் சவுண்டு இஞ்சினியர் திரு.ராகேஷை அணுகலாம்.
ஆக தைரியமா பாடுங்க - கிடார் வாசியுங்க. சொதப்பல்களை மறைக்க இருக்கவே இருக்கு அசத்தல் மென் பொருள்கள்.