Wednesday, November 25, 2015

பளிச்சென்றுசொல்லி விடுகிறேன் சுகிர்தா!

சுகிர்தராணியை பார்த்திருக்கிறேன். அறிமுகமில்லாததால் புத்தகக் கண்காட்சியில் கண்டும் காணாதது போல் கடந்திருக்கிறேன். நான் பொறுப்பேற்று நடத்தியிருக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தபோது சில புன்னகைகளையும் பகிர்ந்திருக்கிறேன். ஏதோ ஒரு நாளில் தொலை பேசியில் பேசத் துவங்கியிருக்கிறேன். சுகிர்தாவின் குரலிலேயே இந்தக் கவிதையை கேட்டிருக்கிறேன். கவிதை எப்படி இருக்கிறது என்று சுகிர்தா கேட்டபோது நன்றாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையேதான் சொல்வேன். 

ஆனால் ”நன்றாக இருக்கிறது” என்பதற்கு அகராதிகள் தரும் அர்த்தம் வேறு. என் உணர்வுகள் தரும் அர்த்தம் வேறு. அது என்னவென்று அப்போதும் சொல்லத் தெரியவில்லை. இப்போதும் சொல்லத் தெரியவில்லை. சில கவிதைகள் கடைசி வரிகளில் இருந்து துவங்கும். இந்தக் கவிதையும் அப்படியே. இந்தக் கவிதையில் ஆங்காங்கே நானும், நீங்களும் சுகிர்தாவும் இருக்கிறோம். வாழ்த்துகள் சுகிர்தா!

"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"

-சுகிர்தராணி.

Wednesday, November 11, 2015

நாங்களே 100 கோடி வைத்திருக்கிறோம். அம்மாவிடம் 1000 கோடி சொத்து இருக்காதா?


 

அம்மாவுக்கு 1000 கோடி சொத்து இருப்பது ஒரு பெரிய விஷயமா?

மேடையில் அமர்ந்திருக்கும் நகரச் செயலாளர் பழனிக்கு 100 கோடி சொத்து இருக்கு. நகரத் தலைவர் அமுதாவுக்கு 100 கோடி சொத்து இருக்கு. மதியழகன், பாலசுப்ரமணின்னு எங்க எல்லாருக்கும் கோடிக் கணக்குல சொத்து இருக்கு. எங்களுக்கே இவ்வளவு இருக்கும்போது அம்மாவுக்கு இருக்கக் கூடாதா?

- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர். (ஜுனியர் விகடன்)

இவ்வாறு தானே முன்வந்து மற்றவர்களின் சுருட்டல்களுக்கும் சேர்த்து வாக்குமூலம் கொடுத்துள்ள . . .

பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி
இன்றுமுதல்
பள்ளி கல்வி துறை அமைச்சர் 100.C.வீரMONEY
என்று அழைக்கப்படுவார்.

Friday, October 30, 2015

#மல்லிகைக்கிழமை


காற்றின் திசையை
மல்லிகைக்கு தந்துவிட்டு
நீ பார்க்கும் திசையெங்கும்
எனை வீசியடிக்கிறாய்.

Friday, October 23, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬


மல்லிகையைப் போல்
சிரிக்கிறாள் அவள்!
அவளைப் போல
மணக்கிறது மல்லிகை!


Friday, October 9, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬மல்லிகையால் தன் முகம் செய்து 
கூந்தலில் அணிகிறாளோ! 
அவள் சூடியிருக்கும் மல்லிகை 
என்னை பார்க்கும்போதெல்லாம் 
அவளே என்னை பார்ப்பது போல் ஒரு மயக்கம்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Saturday, October 3, 2015

நடிகர் சங்கத் தேர்தல் அறிக்கை (ஒரு கற்பனை)


அரசியலாகிவிட்ட நடிகர் சங்கத் தேர்தல் அறிக்கைகள் இனி இப்படி வரக்கூடும்.

ஒவ்வொரு நடிகருக்கும் மாதம் 10 வகையான இலவச நடிப்பு.

படம் சொதப்பினாலும் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாட மானிய விலை ஹால்.

புதிதாக ஒரு பிரிவை உண்டாக்கி வாரம் ஒரு நடிகருக்கு விஜய் டிவி விருது

அரசாங்கத்தை குறை கூறும் பஞ்ச் டயலாக்குகளை கண்டுபிடித்து பீப் சவுண்டு சேர்க்க முதுகெலும்பில்லா கண்காணிப்புக் குழு.

குதறி எடுக்கும் ஆன்லைன் தாக்குதலில் இருந்து தப்பிக்க விலையில்லா முகக்கவசம்.


Friday, October 2, 2015

#மல்லிகைக்கிழமை


கண்ணாடி பார்த்து மல்லிகை சூடும்போது
அவள் தன்னைப் பார்ப்பது போல்
இரகசியமாய் என்னைப் பார்க்கிறாள் என்பது
பின்னால் நிற்கும் எனக்கும் தெரியும்
என்னை வரவழைத்த மல்லிகைக்கும் தெரியும்.
#மல்லிகைக்கிழமை

Saturday, September 26, 2015

#மல்லிகைக்கிழமைஅவள் கழுத்துக் கதகதப்பில் 

ஈர மல்லிகைச் சரம் உலர்ந்து மலரும்போது
பூமிப் பந்தே மல்லிகைப் பந்தானது போல்
ஒரு மாய வாசம் எனைச் சூழ்ந்தணைக்கிறது!

#ப்ரியம் என்பது‪#‎ப்ரியம்‬ என்பது
ரயில் நிலையத்தில் யாரையோ தேடும் பாவனையில்
நான் உன்னையே சுற்றிச் சுற்றி வருவதும்,
தோழிகளிடம் விடைபெறும் பாவனையில்
நீ என்னிடம் கையசைத்து விடைபெறுவதும்.

பல்லைக் காணோம்


”வாயைத் திறங்க”
”ஈஈஈஈஈ....”
”ஈஈஈஈஈ இல்ல... ஆஆஆ”
”ஆஆஆஆஆ”
”ஆ....”
”என்ன ஆச்சு?”
”பல்லைக் காணோம்”
”இல்லையே காலையில பிரஷ் பண்ணும்போது கூட இருந்துச்சே...”
”கடவாய் பல் ரெண்டும் பாதிப்பாதிதான் இருக்கு”
”மீதி...”
”உங்களுக்கு சுகர் இருக்கா?”
”வீட்டுக்கு வாங்கிட்டுப்போற சுகர்தான் இருக்கு”
”பி.பி”
”மாத்திரை இருக்கு. ஆனா ஒரு மாசமா சாப்பிடல”
”வயசு என்னாச்சு”
”52”
”வயசுதான் முக்கிய காரணம்”
”இப்ப என்ன பண்றது?”
”பிபி செக் பண்ணிட்டு பல்லை பிடுங்கிடலாம்”
”பிடுங்கிட்டா டொக்காகிடுமே”
”வேற வழியில்ல. பக்கத்து பல்லும் ஆடுது”
”அதையும் பிடுங்கணுமா? ”
”சேச்சே... புதுசா பல்லு கட்டிடலாம்”
”அந்த பல்லை வைத்து பட்டாணி கடிக்கலாமா?”
”தாராளமா.. தினமும் கழற்றி பிரஷ் பண்ணினா 5 வருஷம் கேரண்டி”

ஆகவே அடுத்த முறை நான் உங்களை 5 வருட காரண்டியுடன் கூடிய புதுப்பற்களுடன் சந்திக்கிறேன். நீங்கள் பட்டாணி, முறுக்கு உள்ளிட்ட நொறுக்குகளை தயார் செய்து வையுங்கள். உற்சாகமான வணக்கம்! சியர்ஸ் மக்காஸ்!

Saturday, September 5, 2015

We Miss You BK

இந்த உலகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதை நாமே தெரிந்து கொள்கிறோம். ஆனால் அதே உலகம் நாம் பார்க்கிற கோணத்தில் இருந்து ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. இதனை நாம் அறிந்து புரிந்து கொள்வதற்கு ஒரு குருவை நமது வாழ்க்கையில் சந்திக்க வேண்டியதிருக்கிறது.

தொலைக்காட்சித் துறை என்பது இனி இப்படித்தான் இருக்கும். இதில் செய்வதற்கு இனி என்ன இருக்கிறது என்ற ஒரு சலிப்பான எண்ணம் வந்திருந்தது எனக்கு. ஆனால் இது வரை செய்தது எதுவுமே துவக்கம் மட்டுமே இனிமேல்தான் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது என்று ஒரு புதிய கோணத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பால கைலாசம் என்கிற பிகே. அந்த வகையில் அவரே எனது குரு.

சாடிலைட், காமிரா, கேபிள், DTH என அனைத்து தொழில்நுட்பங்களையும் கடந்த மனித மனங்களை ஊடுருவும் உணர்வுபூர்வமான ஒரு தத்துவமாக தொலைக்காட்சித்துறையை நோக்குவதற்கு எனக்கு  கற்றுத்தந்தவர் அவரே. அவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்கு தேவைப்பட்ட அவகாசங்களும், உரையாடல்களும், வாதங்களும், மோதல்களும், புரிதல்களும், ஏமாற்றங்களும், சினங்களும், சீற்றங்களும், புன்னகைகளும் அபாரமானவை. முற்றிலும் அந்நியனாக, நல்ல நண்பனாக, சக பணியாளனாக, மாணவனாக, சில நேரம் ஒரு ஆசிரியனாகவும் அவருடன் பழக நேர்ந்த அந்தச் சில மாதங்கள் என் வாழ்க்கையின் உன்னதமான உணர்வுக் குவியல்கள். புதுப்புது எண்ணங்களால் நான் தினம்தோறும் புதியவனாகிக் கொண்டிருந்தேன்.

இன்று அவருடைய கனவு மட்டும் என்னுடனும், அவரைப் புரிந்து கொண்ட பலருடனும் ஒரு அக்னியாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கிறது. என்றோ ஒரு நாள் மனிதம் போற்றும் ஒரு புதிய வெளிச்சம் இந்த தொலைக்காட்சி உலகில் ஒளிரும். அதற்கு அவரே காரணம்.

எங்கள் நண்பனே, குருவே நீங்கள் இறுதியாக பேசிய சில வார்த்தைகளுடன் உங்களுடைய தொலைபேசி எண் இன்னமும் என் அலைபேசியில் இருக்கிறது. உங்கள் குரல் இனி அதில் கேட்கப்போவதில்லை. ஆனால் உங்கள் குரலாக என்றேனும் ஒரு நாள் நான் ஒலிப்பேன்.

We Miss You BK! குருவே போற்றி!

Friday, September 4, 2015

#மல்லிகைக்கிழமை

அவள் கூந்தலில் மயங்கிய 
பூக்கள் சரியாமலிருக்க
ஹேர் பின்களையும்,
அவள் கூந்தல் மயக்கிய 
நான் சரியாமலிருக்க
தன் கண்களையும் பிரயோகிக்கிறாள்.

#மல்லிகைக்கிழமை

Thursday, September 3, 2015

எப்போதிருந்து நீ நான் ஆனாய்..


உன்னை பார்ப்பதற்கு முன்பே
உன்னை எனக்குத் தெரியும் 
என்றுதான் நினைக்கிறேன்.

உன்னை நான் சந்திப்பதற்கு முன்
அதிகாலையில் நான் ஜன்னலைத் திறந்ததும்
என்னுள் நுழைகிற காற்றாக நீ இருந்திருக்கிறாய்.

நான் தினசரி நீரூற்றும் செடியாக இருந்திருக்கிறாய்.
பூக்களை பறித்துக் கொண்டு புன்னகைக்கும்
பக்கத்து வீட்டுச் சிறுமியாக இருந்திருக்கிறாய்!

எங்கிருந்தோ ஒலித்து என்னை  முணுமுணுக்க வைக்கும் 
பாடலாக இருந்திருக்கிறாய!
ஒரே ஒரு துளியாக என் மேல் விழுந்துவிட்டு
வராத மழையாக இருந்திருக்கிறாய்.

நள்ளிரவிலும் என்னை அடையாளம் கண்டு 
வாலாட்டும் ஜீவனாக இருந்திருக்கிறாய்!
நான் புரிந்து கொள்ள ஆசைப்படும்
கவிதையாக இருந்திருக்கிறாய்!

ஒரு நாள் நீ நீயாகவே வந்தாய்
ஆனால் 
எனக்கே தெரியாமல் ஏதோ ஒரு தருணத்தில்
நீ நானாகவும் ஆகிவிட்டாய்!


Monday, August 31, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
திரையரங்க இருளில் வரிசை எண் தேடும்போது
அனிச்சையாக நீ என் கரம் பற்றிக்கொள்வதும்
சலனப்படம் முடிந்து இருள் கலையும்வரை
பற்றிய உன் கரங்களை நான் விடாதிருப்பதும்.

Thursday, August 20, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
அவள் தோளிலிருந்து அருவி போல் சரியும் துப்பட்டாவை
தயக்கத்துடன் நான் நேர் செய்வதும்.
உதடு கடித்தபடி ஈர மருதாணி விரல்களால் 
வெட்கத்துடன் அவள் என் கன்னம் கிள்ளுவதும்.

Wednesday, August 19, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
கடற்கரை மணலில் கிறுக்கிய உன்பெயரை
யாரும் பார்க்கும் முன் 
நான் கலைப்பதும்,
உள்ளங் கைகளில் கிறுக்கிய என் பெயரை
யாரும் பார்க்கும் முன் 
முத்தமிட்டு நீ பொத்தி வைப்பதும்.

Tuesday, June 2, 2015

‪#‎தங்ஸ்வீட்ஸ்‬ - ஜீன் 2015


அம்மாவுக்கு அடங்காமல்
அப்பாவுக்கு பிடிகொடுக்காமல்
அக்காவுக்கு முகம்கொடுக்காமல்
கோபத்துடன் அறைக் கதவை
அடைக்கும்போது,
ஆதரவுடன் உள்ளே வந்து
சினத்துடன் திட்டித் தீர்த்து
சாந்தமுடன் கோபம் தணித்து
அண்ணனை தன் தம்பியைப் போல்
ஆராதிப்பாள் தங்கை!


Friday, May 22, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬

ஒரே சரத்திலிருந்து
மணப்பது எது மயக்குவது எது
என எப்படியோ தரம் பிரித்து,
மணக்கும் மல்லிகையை
சாமிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு
மயக்கும் மல்லிகையால்
என்னை அள்ளிச் செல்கிறாள் அவள்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Tuesday, May 19, 2015

ஒரு ஊழலை ஒழிக்க இன்னொரு ஊழலுக்கு துணை போக வேண்டிய இழிவான தமிழக அரசியல் நிலை

தமிழகத்தில் தற்போது அரசியல் செய்து கொண்டிருப்பது ஜெயலலிதா மட்டுமே. மற்ற தலைவர்கள் அனைவரும் ஃபேஸ்புக் போராளிகள் போல டெஸ்க்டாப் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.  

ஸ்டாலின் கல்யாணப்பத்திரிகை கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார். கலைஞர் ஆங்காங்கே கிடைக்கும் குமாரசாமி குளறுபடி கணக்கை திரும்பத் திரும்ப ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதுடன் திருப்தியடைந்துவிட்டார். ஃபேஸ்புக், டிவிட்டர் அன்பர்களுக்குத்தான் வேறு வழியில்லை. குமாரசாமி தீர்ப்பு சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் அதே போல பரிட்சை ரிசல்ட் போல காத்திருந்ததுதான் காமெடி. 

நடுவில் ஒரே ஒரு முறை ஆம் ஆத்மி மட்டும் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்குச் சென்று ஒரு கலக்கு கலக்கியது. மற்ற கட்சிகள் குறிப்பாக  திமுக இதே போல மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு அதிரடியாக களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் தீர்ப்பு வரட்டும் என்று தங்களுக்கு இருந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். ஜெயலலிதா உள்ளே இருந்தாலும் அதிமுக ஆக்டிவாக இருந்தது. தங்கள் தலைவியை லைம் லைட்டிலேயே வைத்திருந்தார்கள். மண்சோறு, மொட்டை என்று அபத்தங்களின் உச்சக்கட்டமாக இருந்தாலும், தமிகத்தின் ஒரே ஆக்டிவ் கட்சி அதிமுகதான் என்ற மாயையை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார்கள். 

மாறாக மற்ற கட்சிகள் வெறும் பராக்கு பார்க்கும் கட்சிகளாக இருந்துவிட்டன. எப்படியாக இருந்தாலும் ரிசல்ட் ஜெவுக்கு எதிராகத்தான் வரும் என்று கனவு கண்டு தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். ஆனால் ஜெ அனைவரின் பேராசையையும் தகர்த்து எறிந்துவிட்டார். நீதிபதியையே விலைக்கு வாங்கி நீதி மன்றங்களையே கேலிக்கு உரியதாக அவர் மாற்றிவிட்டார். ஆனாலும் அரசியலைப் பொறுத்த வரை வல்லவன்தான் வெல்வான். மற்றவன் தோற்பான். இன்று ஜெயலலிதா ஜெயித்திருப்பதற்கும் மற்ற தலைவர்கள் என்ன செய்வது என்று தவிப்பதற்கும் இதுதான் காரணம்.

ஜெயலலிதா தனக்கிருந்த கடைசி வாய்ப்பையும் பயன்படுத்தி தகிடுதத்தம் செய்து  வெளியே வந்தது போல, எதிர்கட்சிகளுக்கும் கடைசியாக ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பு என்னவென்றால் மீண்டும் ஏதோ ஒரு ஆசாமி வந்து ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு தருவார் என்று நம்பிக் கொண்டிருக்காமல், முடங்கிப்போய் இருக்கும் அரசாங்கத்தை எதிர்த்து தினம் ஒரு போராட்டம் நடத்தலாம். 

ஜெயலலிதா பதவி ஏற்கும் தினம் அவருக்கு ஒரு கேக் வாக்காக இருக்கக் கூடாது. அன்றும் அதற்குப் பின்னும் அதிர வைக்கும் போராட்டங்களை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவு உடனே கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிமுகவை அதிர வைக்க முடியும். முடியவேண்டும்! அதிமுக என்ற அடிமைகளின் கட்சி தாங்கள் நினைத்தால் எதை வேண்டும் செய்ய முடியும் என்ற ஆணவத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா - குமாரசாமி கூட்டுத் தீர்ப்புக்குப் பின் அவர்களின் இறுமாப்பு பெருகிவிட்டது. சமீபத்திய தொலைகாட்சி பேட்டிகளில் இரண்டாம், மூன்றாம் கடைசி கட்ட பேச்சாளர்கள் கூட எங்களை அசைக்க முடியாது, நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம், ஜெயலலிதாவுக்காக எல்லா திட்டத்தையும் நிறுத்திவைப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக கடந்த முறை  ஆட்சியில் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் மண்ணைக் கவ்வினார்கள். அதே போல இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் தோற்க வேண்டும்.

எனவே எதிர்கட்சிகள் ஜெ.பதவி ஏற்கும் தினம் முதல் போராட்டத்தை பெரிதாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். மக்களிடம் பிரச்சனைகளை பேச வேண்டும். ஜெயலலிதாவைப் பற்றி பேசுவது வீண். மக்கள் ஊழலை ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள். அரசியல் கட்சிகள் அவர்களை பிரெயின் வாஷ் செய்துவிட்டன. ஜெயலலிதா மட்டுமல்ல கலைஞர் உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இத்தனை வருடம் அரசியல் நடத்திக் கொண்டிருக்கக் காரணமே மக்கள் ஊழலை ஒரு பெரிதான விஷயமாக நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் இன்று இருக்கும் அத்தனை தலைவர்களும் சிறையில்தான் இருப்பார்கள். எனவே ஜெயலலிதா, ஊழல் என்றெல்லாம் நேரத்தை வீணடிக்காமல் மின்சாரம், தண்ணீர், விலைவாசி, டாஸ்மாக் உள்ளிட்ட மக்கள் பிரச்சனை தொடர்பாக மக்களை அணுக வேண்டும். இதற்குத்தான் மக்கள் கொஞ்சமாவது திரும்பிப்பார்ப்பார்கள்.

எத்தனை தவறு செய்தாலும் தான் தொடர்ந்து ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற ஜெவின் இறுமாப்பை உடைத்து எறிய வேண்டும். ஆனால் அதனைச் செய்ய நம்மிடம் தவறே செய்தாத தலைவர்கள் இல்லை என்பதுதான் சோகம். ஜெவைத் தட்டிக் கேட்க ஏற்கனவே ஜெயலலிதாவைப் போல தவறு செய்த தலைவர்கள் தான் இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு வேறு வழியில்லை! ஊழலின் உச்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவை அவருக்கு வழிகாட்டியாக இருந்த மற்ற ஊழல் தலைவர்கள்தான் வெல்ல முடியும். எனவே அந்த தலைவர்கள் தங்கள் தூக்கத்தை கலைத்து சுறுசுறுப்பாக அரசியல் செய்ய வேண்டும். தமிழக எதிர்கட்சிகளுக்கு என் கோரிக்கை இதுவே.

நான் உள்ளிட்ட தமிழக மக்களிடம் நான் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை விட்டுவிடுவோம். அதற்கு அடுத்த தேர்தலிலிருந்து ஊழல் செய்து வெற்றிபெறுபவர்களையும், சட்டத்தை வளைத்து நடமாடிக் கொண்டிருப்பவர்களையும் தலைவர்களாகவோ, தலைவிகளாகவோ ஏற்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுப்போம். நமக்கு கிடைக்காவிட்டாலும் நமக்கு அடுது்த சந்ததியருக்கு நிச்சயம் காமராஜரைப் போல ஒரு தலைவர் கிடைப்பார், கிடைக்க வேண்டும்.

Monday, May 18, 2015

மே - 18 பாடல் : எப்படி நாங்கள் மறப்பது?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கிச்சன் கேபினட் என்ற அரசியல் நையாண்டி நிகழச்சி தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதில் பல சிறப்பு அம்சங்கள். மிக முக்கியமாக தலைப்புச் செய்திகளை ஒரு பாடலாக பாடுவார்கள். அதற்காக தினமும் ஒரு பாடல் சுடச்சுட தயாராகிறது. எனது நண்பர் விவேக்நாராயண் தினமும் 2 மணி நேரத்தில் பாடலை இசையமைத்து பாடி பதிவு செய்து அனுப்பிவிடுகிறார். இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இன்று மே-18 நினைவேந்தலை முன்னிட்டு நண்பர் கார்மல் எழுதியுள்ள கவிதைக்கு அவர் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளும், இசையும் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

எப்படி நாங்கள் மறப்பது
இந்த நாளை
எப்படி நாங்கள் மறப்பது
கொத்துக்கொத்தாய் 
மடிந்த மண்ணில்
ஈரம் இன்னும் தீரல
குருதி
ஈரம் இன்னும் தீரல
முள்ளிவாய்கால்
கொள்ளி வைத்த
கொடிகள் இன்னும் சாகல
தொப்புள்
கொடிகள் இன்னும் சாகல.
எப்படி நாங்கள் மறப்பது
இந்த நாளை
எப்படி நாங்கள் மறப்பது
வாய்க்கால் மண்ணில்
வளரும் உண்மை
வானம்தொடுவதை பார்க்கலாம்
உரிமை
வானம் தொடுவதை பார்க்கலாம்
முள்ளிவாய்க்கால்
விதைத்த விதைகள்
விருட்சமாக எழலாம்
தியாக
விருட்சமாக எழலாம்.
எப்படி நாங்கள் மறப்பது
இந்த நாளை
எப்படி நாங்கள் மறப்பது
முள்ளிவாயக்காலை
எப்படி நாங்கள் மறப்பது…..


Thursday, May 14, 2015

#ப்ரியம் என்பது


‪#‎ப்ரியம்‬ என்பது

மழைதான் ஆனால் கவலையில்லை என்று
நான் ஃபோனில் சொல்லிக் கொண்டிருப்பதும்,
உன் துப்பட்டா குடைக்குள்
மழை நனைக்காமல்
என்னை நீ அணைத்திருப்பதும்.

Monday, May 4, 2015

Cine Sense : C for Change

C for Change and C for Cinema too!

We live for the moments that leave memories forever. A film maker films those sublime feelings in each of the project thru the lens from the heart. Many years back director Cheran did an “Autograph” and aesthetically rekindled charming memories of puppy loves, crushes and diehard romances of audience. But if you ask him now, he has more than one volume of Autograph which is filled with pains than gains of a film maker. 

The changing trend in cinema industry pushes the art back and brings the business first. The corporate structure bifurcates the industry into two and gives space only for the biggies and others are sidelined. Cheran stands on the other side and trying to innovate a new business model which skips cinema malls to reach the homes of audience directly. There may be faults, biased stands in the present business model. But can C2H the innovation of Cheran taste success by avoiding the traditional method and people init? It's a big question. More than twise the C2H launch was postponed and finally hit the doors of 20 lakh homes as Cheran claims.

I too had few discussions with Mr. Cheran about the pros and cons of C2H. I suggested him to think and apply beyond DVD format and local cables. With the technology in hand, I promoted the idea of global streaming of movies on pay per view basis to moving taxis, trains, busses, air planes, hotels, malls and homes of any part of the world. My opinion is, if I can't give theater experience then I should supplement with more exclusive contents which I cant get in theatres. After his first release “JK Enum Nanbanini Kadhai”, he may or may not go for this suggestion, since it involves lots of business activities like tieups to carry the content to desired destinations. But if he is not, soon somebody else will do it, because the trend is fast changing.

But not just Mr. Cheran and others are feeling the heat. It's not just restricted to Kollywood, Tollywood, Mollywood or Bollywood. Including Hollywood the entire movie industry is facing a crisis. Invaded by mobile phones, wearable gadgets, video games and streaming web portals, younger audiences are rapidly drifting away. But this doesn't mean that cinema industry itself will drown, we should think other way. 

Like Cheran thinks there are many heads thinking to float, survive and win the challenge. The strength of cinema is Story telling, which cant be replaced by any technology. Only the presentation will change, story telling will remain same. So there is no threat to Cinema. How to reach is challenging. Cinema is the only entertainment medium which survived for more that 100 years and growing. So the real possibility is soon the industry will rebound with freshly equipped with modern futuristic advancements.

Just visualize it. In another Ten years, virtual theaters may come, i.e instead of going to theaters, we will create virtual giant screens on air, which only can be seen using a wearable glass. With the latest interactive technology, the audience may have the pleasure of changing the twists and turns of a movie, in simple we may watch customized cinema. I also predict beyond that, literally, we can be part of a movie and we can watch ourselves in a cinema. I Googled a synopsis of Brave New World (1931), a novel by Aldous Huxley which predicts a similar entertainment experience.

Cinema will become more like interactive TV says Christopher Nolan, the Interstellar director. He predicts film makers and exhibitors will respond strongly and creatively to the change and challenge of modern interactive mediums. Never before cinema is challenged like this, actually now the industry feels only the tip of the challenge. 

The new trending developments will force innovation, experimentation and expense. Now people say with the invasion of digial platforms the cost of production has come down, but the future will be a costly affair, which will demand more investments to produce, promote and distribute.


In kollywood Kamal smelled the change and tried to release Viswaroopam thru DTH. Now Cheran trying to go further with C2H. 

So buckle your seat belt because we too as a fan part of the super fast change.

Sunday, April 26, 2015

#முத்தகம்அவளுடைய
வாயாடி என்ற பட்டத்தைக் 
களவாடினேன், 
பேசவேவிடாமல்
தொடர் இதழ் முத்தங்களால்!
#முத்தகம்

Thursday, April 16, 2015

காசு - பணம் - நெட்டு : நம்மிடமிருந்து இன்டர்நெட்டை பறிக்க முயற்சி


காத்து ஃப்ரீ.. ஆனா சுவாசிக்கறதுக்கு துட்டு குடுத்துடணும்.

ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இப்படித்தான் நம்மை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றன. அதாவது இன்டர்நெட் ஃப்ரீயாம். ஆனால் நாம் பயன்படுத்தும் வெப்சைட்டுகளுக்கும், ஆப்ஸ்களுக்கும் கட்டணமாம்.

உதாரணமாக internet.org என்ற வெப்சைட்டுக்குள் நுழைய முயற்சி செய்யுங்கள். ரிலையன்ஸ் வழியாக இன்டர்நெட் இணைப்பு இருந்தால் உள்ளே வா அல்லது வெளியே போ என்று துரத்தும். அது போல ஒவ்வொரு நிறுவனமும் விதம் விதமாக வெப்சைட்டுகளுக்கும், ஆப்ஸ்களுக்கும் பூட்டு போடும். நாம் பணம் கட்டினால் மட்டும்தான் அந்த பூட்டுகள் திறக்கும்.

இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய TRAI அமைப்பு அந்த பணக்கார  காசுபறிக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உண்டு. அந்த நிறுவனங்களின் செல்வாக்கு அப்படி. அதனால் இப்போதே விழித்துக்கொண்டு நமது எதிர்ப்பைக்காட்டுவோம்.

இன்டர்நெட் என்பது ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி நம் அனைவருக்கும் பொதுவானது என்ற உரிமையை நிலைநாட்டுவோம்.

http://www.savetheinternet.in/ இந்த இணையதளத்தில் நமது எதிர்ப்பை பதிவு செய்வோம். நமது ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சக்தியையும் நிரூபிப்போம்.

#netneutrality

Wednesday, April 15, 2015

#ப்ரியம் என்பது#ப்ரியம் என்பது
மருதாணிக் கைகள் காட்டி
எப்படி இருக்கு என  
குழந்தையைப் போல நீ குதூகலிப்பதும்,

உன் உள்ளங்கைகளை தொட்டிலாக்கி
குழந்தைகளைப் போல
என் கன்னங்களை நான் படுக்க வைப்பதும்.

Friday, March 20, 2015

#மல்லிகைக்கிழமைநான் எத்தனை தொலைவில் இருந்தாலும்
என்னை கூந்தல் எல்லைக்குள் இழுத்து வருகின்றன  
அவள் சூடும் மல்லிகைச் சரங்கள்!
#மல்லிகைக்கிழமை

Thursday, March 19, 2015

#‎ப்ரியம்‬ என்பது#‎ப்ரியம்‬ என்பது
நான் இரசித்த பொட்டை
கண்ணாடி பார்த்து
நீ விதம் விதமாக 
இட்டுப் பார்ப்பதும்,

நீ இரசித்த சட்டையை
கண்ணாடி பார்த்து
நான் மீண்டும் மீண்டும் 
அணிந்து பார்ப்பதும்.

Wednesday, March 11, 2015

‪#‎ப்ரியம்‬ என்பது

‪#‎ப்ரியம்‬ என்பது
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
முதலில் நான் வரவேண்டும் என
நீ காத்திருப்பதும்,
நண்பர்கள் விடைபெறட்டும் என
நம் தனிமைக்காக
நான் காத்திருப்பதும்.

Sunday, March 8, 2015

மகளிர் தின வாழ்த்துகள்!


என்றாவது ஒரு நாள்
என் குரலுக்குப் பதிலாக
என் ஆன்மாவின் குரல்
யாருக்காவது கேட்டிருந்தால் 
அதற்குக் காரணம்
எனது ஆன்மாவாக திகழும் பெண்களே.
அவர்களின் நேசமே எனது குரல்!

இன்றொரு நாள் அவர்களின்
கைவளையாகவோ, கால்கொலுசாகவோ மாறி
அவர்களின் அசைவுகள் தரும் ஒலிகளால்
அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்க விருப்பம்!

பெண்மையும் அதன் மென்மையும் 
அது தரும் வலிமையும் உண்மையும் வாழ்க!

மகளிர் தின வாழ்த்துகள்!
‪#‎womensday‬

Tuesday, March 3, 2015

நாமும் பங்கேற்கிற Interactive வீடியோக்கள்

வாட்ஸ்அப்பிலோ, டெலிகிராமிலோ யாருடனோ கொஞ்சிக் கொண்டிருக்கும்போது நாம் வெறும் திரையைப் பார்ப்பதில்லை. கொஞ்சல் முகத்தின் சொந்தக்காரரை மனதுக்குள்ளே திரையிட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் கொஞ்சித்திரிந்த பீச், மால்கள், மறைவுப்பிரதேசங்கள், இசிஆர் பைக் ரைடுகள் என எல்லாம் வந்து போகும். இந்த அனுபவங்களை அப்படியே 3Dயாக்கினால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். இதற்கான நுட்பங்கள் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. இப்போது எக்ஸ்ட்ரா லார்ஜாக ஒரு கற்பனை. அந்த 3D பிம்பங்களுக்குள் நான் அவ்வப்போது உள்ளே சென்று வரமுடியுமா? நிஜத்தில் சாத்தியமில்லை. ஆனால் உள்ளே நுழைந்து வெளிவரும் நிஜ நம்மையும் 3D பொம்மை(Virtual Reality)யையும் கலக்கிற நுட்பம் ஏற்கனவே கலக்கிக் கொண்டிருக்கிறது. Augmented Reality என்று பெயர். சுருக்கமாக AR.

இந்த நுட்பத்தை கொஞ்சம் மாற்றி 3Dக்கு பதில் உண்மையான பிம்பங்கள். மண்ணில், விண்ணில், கடலில் என பிடித்த இடங்களையெல்லாம் ஒரு சிலிக்கன் சில்லில் பதித்துவிட்டு அதை ஒரு ஹெட் செட்டுக்குள் பதித்து நம் தலையில் மாட்டிவிட்டால் என்ன ஆகும்? ஒரு மாயாபஜார் நம் கண்முன்னே உருவாகும். அந்த பிம்பங்களுக்குள் நாமும் நடப்போம், ஓடுவோம், தொடுவோம், படுவோம், சுடுவோ இன்னும் என்னென்னவோ செய்வோம்.

இந்த மாய 3D ஹெட்செட்டுகளை  ஃபேஸ்புக்கும் (Oculus rift), சோனியும்(Morpheous) ஏற்கனவே தயாரித்துவிட்டன. தற்போது HTC போட்டியாக தனது ஹெட்செட்டுடன்(Vive) களத்தில் குதித்துள்ளது.

எதிர்காலத்தில் AR + VR சேர்ந்த நாமும் பங்கேற்கிற Interactive சினிமாக்கள் வந்துவிடும். தயாராக இருங்க.இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள்

இரண்டே பேர் நடித்திருக்கும் படம்
வித்தையடி நானுனக்கு

இதே போல் இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள் எத்தனை இருக்கும் என்று கூகுளில் தேடினேன். பத்து படங்களைக் கூட பட்டியல் போட முடியவில்லை. அந்த வகையில் எங்களுக்கு ஒரு பெருமை. உலக அளவில் டாப் - 10க்குள் வந்துவிட்டோம்.

DUEL
SLEUTH
BEFORE SUNRISE
BEFORE SUNSET 
GRAVITY
ANTICHRIST
GERRY

இவையெல்லாம் இதுவரை ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள். அந்த வரிசையில் எங்களுடைய ”வித்தையடி நானுனக்கு” திரைப்படமும் சிறப்பு கவனம் பெறுகிறது. தற்போது திரைப்படத்தை Crowd Funding முறையில் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் வெள்ளித் திரையில் வித்தையடி நானுனக்கு திரைப்படத்தைக் காணலாம்.Monday, March 2, 2015

தமிழக அரசியல் - அடைத்துக்கொண்டிருக்கும் சாக்கடை

 ஜெயலலிதாவுக்கும், மதுவுக்கும், இலவசங்களுக்கும் அடிமையாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிற கட்சி!
கருணாநிதி குடும்பத்தின் ஏற்ற தாழ்வுகளும், சண்டைகளும், சச்சரவுகளும்தான் கட்சிக்கும் அதன் தொண்டனுக்கும் என நிர்பந்திக்கிற கட்சி!
பொறுப்பான எதிர்கட்சி பதவியை இலவசமாகக் கிடைத்த டிஸ்கவுண்ட் கூப்பன் போல உதறித் தள்ளுகிற விஜயகாந்த் கட்சி!
இவர்கள் அனைவருடனும் தேவைப்படும்போது அவ்வவ்போது ஒட்டிப் பிரிகிற கட்சி!
தமிழகத்தில் இப்படி நான்கு வகை கட்சிகள்தான் இருக்கின்றன.

ஊழல் செய்வதும், அதிலிருந்து தப்பிக்கும் தந்திரங்களும் தான் அரசியல் என்பதைத்தவிர இந்தக் கட்சிகளிடம் வேறு கொள்கைகள் இல்லை.
ஊழல் செய்யும் தலைவர்களும், அவர்களை கும்பிட்டுத் தரிசிக்கிற தொண்டர்களும், அவர்களை ஊக்கப்படுத்தும்  சார்பு நிலை மீடியாக்களும் பெருகிவிட்டார்கள்.

அரசியலை சாக்கடை என்பார்கள். இன்றைய தமிழக அரசியலை அடைத்துக்கொண்டிருக்கும் சாக்கடை என்று சொல்லலாம். துர்நாற்றம் சகிக்கவில்லை. தமிகழத்தில் இதுவரையில் இவ்வளவு கேவலமான அரசியல் சூழ்நிலை நிலவியதில்லை. நல்ல கட்சி, நியாயமான கட்சி என ஒரு கட்சி கூட இல்லை. நல்ல தலைவர், நியாயமான தலைவர் என்று ஒரு தலைவர் கூட இல்லை. இவ்வளவு ஏன் ... நியாயமான அரசியல் பேசுகிற ஒரு நல்ல புத்தகம் கூட இல்லை.

மாபெரும் அரசியல் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. அந்த வெற்றிடத்தை மீண்டும் இதே ஊழல் சாக்கடைகள்தான் நிரப்பும் என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது. இவர்களின் மேல் சலிப்பும், கோபமும் இருந்தாலும் நல்ல தலைமை நல்ல தலைவர் என்று எவருமே கண்களுக்குத் தென்படாததால் இந்த சாக்கடைகளில் ஏதாவது ஒன்றுதான் 2016ல் மீண்டும் அரசாளும். 

Friday, February 20, 2015

இயக்குநர் வசந்தபாலனுடன் மனம் திரும்புதே!

மற்றவர்களுக்காக ஒரு நான்
எனக்காக ஒரு நான்
என இரண்டு ”நான்”களாகத்தான்
நம்மில் பலர் இருக்கிறோம்.

இரண்டு நான்களாக அல்லாமல் ஒற்றை நானாக இருப்பது மிகுந்த சிக்கலானது. நம்மைப்பற்றி நாமே சதா முரண்பட்டுக்கொண்டிருப்போம். ஆனாலும் வெகு சிலர் விரும்பி அப்படி ஒரு நிலையை ஏற்கிறார்கள். அவர்களைப் புரிந்து ஏற்கும் நண்பர்களையும், உறவினர்களையும் அடைகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இயக்குநர் வசந்தபாலன் என்பது என் கருத்து.

”மனம் திரும்புதே” நிகழ்ச்சிக்காக சந்தித்த சில நிமிடங்களைத்தவிர அவருடன் எனக்கு எந்த நேரடித்தொடர்பும் இல்லை. ஆனாலும் அவர் அப்படிப்பட்டவர், எதற்காகவும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத முழுமையான ”நான்” அவர். மனிதர்களிடம் மட்டுமல்ல, இயந்திரங்களிடம் கூட இதயங்களை எதிர்பார்க்கிற சிறந்த மனிதர் என்பது என் கருத்து. நேற்று மனம் திரும்புதே நிகழ்ச்சியில் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டார். தனது நண்பர் வரதன் பற்றி அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் நெகிழ்வானவை.

இந்த நிகழ்ச்சி தன்னை நெகிழ வைத்துவிட்டது என மனமார பாராட்டினார். இனி அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே கூட போகலாம். ஆனால் ஒரே ஒரு முறை அவருடைய இதயத்தை தொட்டுவிட்டேன். அதுவே எங்கள் நிகழ்ச்சிக்கும், எனக்கும் கிடைத்த வெற்றி. அவர் இன்றும் என்றென்றும் மனநிறைவோடு தொடர்ந்து இயங்கவும், இயக்கவும் வாழ்த்துகள்!

”மனம் திரும்புதே” நிகழ்ச்சி சனிக்கிழமை(21.02.2015) இரவு 9 மணிக்கு.

Saturday, February 14, 2015

ஒரு முறையாவது காதலிக்கப்படவேண்டும்

காதலிக்கும்போது
வானத்தை தொட்டுவிடலாம் போலிருக்கும்.
காதலிக்கப்படும்போது
வானம் நம்மைத் தொடுவது போலிருக்கும்.
விண்ணைத் தாண்டலாம் - ஆனால்
ஒருபோதும் காதலைத் தாண்டமுடியாது.
வானம் பறப்பதை சுகம் எனச் சொல்லும்.
காதல் சிறைப்படுவதை சுகம் என உணர்த்தும்.
காதலுக்கென்று ஒரு வானம் உண்டு.
அங்கே காதல் மேலே
வானம் கீழே!
நாம் ஒரு முறை கூட காதலிக்காமலிருக்கலாம் - ஆனால்
ஒரு முறையாவது காதலிக்கப்படவேண்டும்.
உண்மைக் காதல் நாம் நம் மனதில் இருப்பதல்ல.
மற்றவர் மனதில் வசிப்பது.
நான் உங்கள் மனதில் இருக்கிறேனா?

Sunday, February 8, 2015

கிரவுட் ஃபண்டிங்!


வசந்த சேனா வசந்த சேனா!
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நானென்ன நானா
சேனா... வசந்த சேனா!

இந்தப் பாடல் பலருக்கும் ஞாபகம் இருக்கும். ஆனால் படத்தின் பெயரைக் கேட்டால் தெரியாது. இது சூர்யா நடித்து அதிகம் பிரபலமாகாத ஸ்ரீ என்றொரு படம்.  அந்தப் படத்தின் இசையமைப்பாளர் T.S.முரளிதரன். எனது நண்பர்!

 ரோஜாவும் ஏ.ஆர்.இரகுமானும் வருவதற்கு முன், என்னிடம் ஒரு ஆடியோ கேசட் வந்தது. மெரைன் இஞ்ஜினியராக இருந்த எனது நண்பன் ஒருவன் அதைக்கொடுத்து, இதில் என் நண்பனின் டியூன்ஸ் இருக்கிறது கேட்டுப்பார் என்றான். அக்கால வழக்கமான ஆர்மோனியம், கிடார், தபேலா ஒலிகளை எதிர்பார்த்து அசட்டையாக கேசட்டை ஒலிக்கவைத்தேன். முதல் டியூன் கேட்டதுமே நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் கூட்டமே அசந்துவிட்டது. நாங்கள் எவரும் அதற்கு முன்பு கேட்டிராத டிஜிட்டல் இசை. புத்தம் புது ஒலிகள். அவ்வளவுதான் அன்றே அவரை நண்பராக்கிக்கொண்டேன். பல கதைகள் பேசி, பல டியூன்கள் போட்டு தற்போது அவரே ஒரு இயக்குநராகிவிட்டார்.

வித்தையடி நானுனக்கு படம் ரெடி
”அவர்” என்ற டைட்டிலுடன் ஒரு படத்தை தயாரித்து இயக்க முடிவு செய்திருந்தேன். அதற்காகவே Canon 7D மற்றும் உபகரணங்கள் வாங்கியிருந்தேன். அப்படங்களுக்கான பாடல் ஒலிப்பதிவின்போது முரளி ஒரு கதை சொன்னார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உடனடியாக தயாரிக்க முடியும் என்பதையும் விளக்கினார். அதனால் சட்டென்று தைரியம் பிறந்து ”அவர்” படத்துக்கு முன் ”வித்தையடி நானுனக்கு” படத்தின் தயாரிப்பில் இறங்கி படத்தையும் தயாரித்துவிட்டோம். நான் ISR Ventures, முரளி Media Merchants. இருவரின் கூட்டுத்தயாரிப்பாக படம் ரெடி.


தயாரிப்புக்காக அல்ல - ரிலீசுக்காக Crowd Funding 
இப்போது அதன் தொடர்ச்சியாக படத்தின் ரிலீசுக்காக Crowd Funding-ல் இறங்கியுள்ளோம். முதலில் தயங்கிய என்னை முரளியின் விடாத தொடர் முயற்சி மாற்றிவிட்டது. www.indiegogo.com என்ற இணையதளத்தை ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக கவனித்தபின் இதில் நம் முயற்சியை துவக்குவோம் என்றார். இதோ.. நாங்கள் தயார்!

650 ரூபாய் போதும்
ஆளுக்கு ரூ.650.  இதுபோல 3500பேரை ஒருங்கிணைக்கலாம் என்றார். விட்டால் மீண்டும் தயங்குவேன் என்று முயற்சியை துரிதப்படுத்திவிட்டார். ”வித்தையடி நானுனக்கு” உருவாவதற்கு அவருடைய முயற்சியே காரணம். நானாவது திரைப்படம் தயார் ஆனதும், டிவி நிகழ்ச்சிகள், டாகுமென்டரிகள் என பல திசைகள் திரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் முரளி தனது அவருடைய ஆர்வம் குறையால் அதிலேயே கவனமாக இருக்கிறார். அதனால் திரைப்படம் வெளியாவதற்கும் அவருடைய முயற்சிகள் நிச்சயம் வெற்றியைத்தரும் என்று நம்புகிறேன். இணை தயாரிப்பாளராக நானும் அவருடைய முயற்சி வெற்றிபெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் படம் தயாரிப்பது எளிது. வெளியிடுவதுதான் கடினம். தயாரிப்புச் செலவை விட வெளியிடும் செலவு அதிகம். அதற்கு Crowd Funding உதவும் என்றுதான் தோன்றுகிறது. அதனாலேயே இந்த முயற்சி. எங்களைப்போன்ற புதிய சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களும் இந்த இணையதளத்தை ஒரு முறை பார்க்கலாம், நம்பிக்கை பெறலாம்.

https://www.indiegogo.com/projects/vithaiyadi-naanunakku-tamil-feature-film

வித்தையடி நானுனக்கு பற்றிய Crowd Funding விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

கிரவுட்ஃபண்டிங் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?
கிரவுட்ஃபண்டிங் வழியாக எங்கள் திரைப்படம் ரிலீஸ் ஆவது ஒருபுறம் இருக்கட்டும். டிஜிட்டல் சினிமா பிரபலம் ஆகாத காலகட்டத்தில் ”அவர்” திரைப்படத்தின் துவக்கவிழாவையே ”டிஜிட்டல் சினிமா” பற்றிய வொர்க் ஷாப்பாகத்தான் நடத்தினோம். அதுபோல கிரவுட் ஃபண்டிங் பற்றியும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளத்தயார். எங்களைப் போன்ற புதிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது பற்றி கேள்விகள் இருக்கும். கிரவுட் ஃபண்டிங் என்றால் என்ன? அதன் வழியாக எவ்வளவு திரட்ட முடியும்? அது எப்படி சாத்தியமாகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல நீங்கள் நண்பர் முரளியை அழைக்கலாம். அவருடைய எண் - 9841524590

பின் குறிப்பாக ஒரு ஃபிளாஷ்பேக்
வசந்தசேனா பாடல் வெறும் டியூனாக இருந்தபோது நான்தான் அதற்கு வரிகள் எழுதினேன்

பூவைக்கண்டேன் பூவும் ஆனாள்
நிலவைக் கண்டேன் நிலவும் ஆனாள்
கவிதை கண்டேன் கவிதை ஆனாள்
தோழி... காதல் தோழி!

வெறும் டியூனாக இருந்த பாடல் பின்னொருநாளில் திரைப்பாடலாக உருவெடுத்தது போல, முரளியின் ”வித்தையடி நானுனக்கு” படமும் திரைப்படமாக விரைவில் தியேட்டர்களின் திரையைத்தொடும் என்று நம்புகிறேன்.

Sunday, February 1, 2015

விண்டோ ஷாப்பிங் போல விண்டோ ரீடிங்!

விண்டோ ஷாப்பிங் போல விண்டோ ரீடிங் பழக்கம் எனக்கிருந்தது. முன் அட்டை, பின் அட்டை, சில பக்கங்களை புரட்டல், விலை பார்த்தல் என புத்தகங்களை கடப்பேன். கடந்த வருடத்திலிருந்து சிறு மாற்றம். மாற்றகர்த்தா முரளி.Muralikrishnan Chinnadurai தொணதொணவென்று புத்தகங்கள் பற்றிப் பேசி, எழுத்தாளர்களுடன் கைகுலுக்க வைத்து, இலக்கிய விழாக்களில் டீ கொடுத்து உட்கார வைத்து, புத்தக சந்தையில் சுண்டல் கொறிக்க வைத்து புத்தகங்களும் வாங்க வைத்துவிட்டான்.
புத்தகத்தையும், எழுத்தாளர்களின் கையொப்பத்தையும் ஒருசேரவாங்கி காலை நடைக்குப்பின் பின் புரட்டுவது நன்றாகத்தான் இருக்கிறது. மாதம் ஒரு புத்தகம் வாசித்தல் என்ற எனது புத்தாண்டு சுயசவால் நிறைவேறிடும் போலிருக்கிறது. இந்த மாதம் மட்டுமே இரண்டு புத்தகங்களை வாசித்துவிட்டேன்.
கவிஞர். சித்தலிங்கய்யா (கன்னடத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட 40 கவிதைகள்) மலர்விழி - மதுமிதா Madhumitha Raja
லண்டாய் - (ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்) தங்கை விஜயலட்சுமி Vijaya Lakshmi
வாசித்தேன் என்பதைச் சொல்வது எளிது. என்ன புரிந்து கொண்டேன் என்பதை எழுத மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியிருக்கிறது. ஆகவே விரைவில் சினிமா விமர்சனம் போல நான் புத்தக விமர்சனமும் செய்வேன் என்ற எச்சரிக்கையுடன் ...
சியர்ஸ் மக்காஸ்!

சாக்லெட்டாழ்வார்!

எதிலும் ஆழமாக ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்றார்களாம். ஆனால் அந்தக் காலத்தில் எங்கும் எதிலும் பக்தியைத்தான் நிரப்பியிருக்கிறார்கள். காதலைக்கூட பக்தியாக்கி வழிந்து அழுது தொழுதிருக்கிறார்கள்.

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிமிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாண் ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார்
இந்தப் பத்து ஆழ்வார்களும் பெருமாலை டிசைன் டிசைனாக வியந்திருக்கிறார்கள். நீதான் ஆழி, ஊழி, காடு, மடு, மலை, அலை, காலம் என சில்லறையாகவும் இவை எல்லாமே நீதான் என மொத்தமாகவும் வணங்குகிறார்கள். பிறகு நீ எனக்குள் வா அல்லது நான் உனக்குள் வருகிறேன் நாமனைவரும் ஒற்றையே என Singularity தியரி வடிக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் நீங்களும், நானும் நாமும் கூட ஆழ்வார்கள்தான். எப்போதும் இதிலேயே மூழ்கியிருப்பாதால் ஃபேஸ்புக்காழ்வார்கள். எனக்கு மட்டும் இன்னொரு பெயர். அடிக்கடி சாக்லெட்டில் ஆழ்வதால்,
சாக்லெட்டாழ்வார்!

(சுஜாதா எழுதியுள்ள ”ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்” புத்தகத்தை நான் படிக்க ஆரம்பிச்சிட்டேன்னு சொன்னா இப்ப நீங்க கண்டிப்பா நம்புவீங்க)