Saturday, May 18, 2024

கடவுள் யார்?

எனக்கு கடவுள் மேல் பயமில்லை. கடவுளை நம்புகின்றவர்கள் மேல் தான் பயம். ஸ்டீபன் ஹாக்கிங்!

இது இன்று நான் பார்த்த பதிவு. உண்மையில் அவர் அப்படிச் சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த பிரபஞ்சத்தின் உண்மையை அறிந்து கொள்ள முனைபவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் கடவுளைப்பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்.
The concept of "God" is not the same for all. It differs from person to person based on their real life experiences.
ஒவ்வொருவரும் அவரவருடைய அனுபவத்தின் அடிப்படையில் கடவுள் என்கிற தத்துவத்தை புரிந்து கொள்கிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லும் 3 கதைகள்!


ஸ்டீவ் ஜாப்ஸ் 3 கதைகள் சொல்கிறார்.
நம் வாழ்வில் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
கான்சரிலிருந்து மீண்டு வந்து வாழக் கற்றுத்தருகிறார்.

Friday, May 17, 2024

I don't know how to name it!

 

How to Name it?

இளையராஜா இசையில் 1986ம் ஆண்டு இந்த மேற்கத்திய - இந்தியக் கலப்பு (Western Indian Fusion) ஆல்பம் வெளியானது.
அதற்கு முன்பு எனக்குப் பரிச்சயமான ஒரே ஃபியூஷன் ஆல்பத்தின் பெயர் சக்தி. எல்.சங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு வினாயக்ராம், மெக்லாஃலின் ஆகியோரின் வித்தியாசமான கூட்டணி. பக்கத்து வீட்டில் இருந்த மோகன கிருஷ்ணன் மாமாதான் எனக்கு இந்த உலகத்தின் ஜன்னல். புதிய சங்கதிகளை அவர்தான் அறிமுகப்படுத்துவார். 1973ல் உருவான சக்தி கூட்டணியின் இசையை அவர் வீட்டில்தான் இசைத்தட்டில் கேட்டேன். ஸ்டீரியோவில் மேற்கத்திய இசையுடன் கை கோர்த்துக் கொண்டு, கடமும், தபேலாவும் என்னை வியக்க வைத்தன. வித்தியாசமான அந்த இசைக்கலவை எனக்கு இசையின் புதிய பரிமாணங்களை அறிமுகம் செய்தது. அப்போதுதான் திரை இசைக்கு வெளியே உள்ள கலப்பிசை உலகிற்குள் முதல் முதலாக நுழைந்தேன்.
எம்.எஸ்.வியின் பாதிப்பு இல்லாத இளையராஜாவின் இசை என்னை பரவசப்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. சில பாடல்களில், இந்திய திரை இசை இரசிகர்கள் எவருமே அதற்கு முன் கேட்டிராத பரிசோதனைகளை அவர் முழு வீச்சுடன் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதுவரை இந்தியத் திரை இசை தொட்டிருந்த திசைகளைக் கடந்து அவர் பயணப்படத் துவங்கியிருந்தார். அவருடைய இசை ஏன், எப்படி வித்தியாசமாக மாறிக் கொண்டிருக்கிறது எனப் புரியாமலேயே அதனை நான் உள்வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. முரட்டுக்காளை என்கிற மசாலாப் படத்தில் கூட ”எந்தப் பூவிலும் வாசம் உண்டு” என சிம்பொனி வாசமடிக்க வைத்தார்.
அப்போதுதான் 1986ல் How to Name it? என்கிற ஆல்பம் வெளியானது. உலக இசையில் புது வகை இசையாக ஒரு பியூஷன். தான் பண்ணைபுரத்துக்கான கலைஞன் மட்டுமல்ல, இவ்வுலகம் அனைத்துக்குமான கலைஞன் என இளையராஜா தன்னைத் தானே உணர்ந்து கொண்ட ஆல்பம் அது. அதற்குப் பின் இருவருடங்கள் கழித்து 1988ல் Nothing but Wind வெளியானது. மீண்டும் ஒரு இசை வீச்சு. ஸ்டீரியோ வாக்மேனை மாட்டிக் கொண்டு கல்லுப்பட்டியில் ஆள் நடமாட்டமே இல்லாத மிகப் பரந்த வெளியில் அந்த இசையைக்கேட்டு மயங்கிக் கிடந்த தருணங்கள் ஞாபகம் வருகிறது.
இளையராஜா அப்படியே தொடர்வார், சர்வதேச அரங்கில் தன் இசையை அரங்கேற்றுவார் என நினைத்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை. மீண்டும் திரை இசைக்கே வந்துவிட்டார். மிகப் பெரிய இடை வெளி. திருவாசகத்தை சிம்பொனி வடிவத்தில் வெளியிட்டார். எவருமே நினைத்துப் பார்க்க முடியாத முயற்சி அது. அடுத்தடுத்து அவருடைய முதல் சிம்பொனி வெளியாகப்போவதாக செய்திகள் வந்தன. அவ்வப்போது அது குறித்த தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன. ஆனால் இன்று வரை அந்த சிம்பொனி வெளிவரவே இல்லை.
அவருடைய மகள் பவதாரிணியின் பிரிவிற்குப் பிறகு அவர் புதிய இசையுடன் வருவார் என நான் அனுமானித்தேன். ஒரு மனிதன் தன் இயல்புக்குள் கரைந்து போவது துயரத்தை மறக்கும் வழி. இசைப்பதுதான் இளையராஜாவின் இயல்பு. நான் எதிர்பார்த்து போலவே தற்போது தனது புதிய சிம்பொனியைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு இசை உலகில் புதிய ஆரவாரத்தை எழுப்பியிருக்கிறது. எல்லோரும் அந்த சிம்பொனிக்கா இப்போதே தயாராகிவிட்டார்கள்.
இளையராஜா இந்த மண்ணில் மேலும் ஒரு புதிய இசை அதிர்வை உருவாக்கத் தயாராகிவிட்டார். எண்பது வயதை தொட்டுவிட்ட ஒரு கலைஞனிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருப்பதே அதிசயம்தான்.
மடை திறந்து தாவப்போகும் அந்த சிம்பொனி இசையலைக்காக காத்திருக்கிறேன். என்னுடைய இந்த உணர்வுக்கு என்ன பெயரிடுவது எனத் தெரியவில்லை. I don’t know how to name it.

Tuesday, May 14, 2024

கண்ணதாசன் எழுதிய இருவரி இராமாயணம்

 

இரண்டே வரியில் இராமாயணம்!

”காலங்களில் அவன் வசந்தம்” என்றொரு மேடை நிகழ்ச்சி! ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. கண்ணதாசனைக் கொண்டாடும் அந்த மேடையில் இசைக்கவி இரமணன் கண்ணதாசன் பாடல்களை பாடி சிலாகிப்பார். இன்றும் அந்நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். இரண்டே வரியில் கண்ணதாசன் இராமாயணத்தை எழுதியிருப்பதாகப் பாடிக் காட்டினார். வியந்து போனேன்!

கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்க வில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே!

படம் - அவள் ஒரு தொடர்கதை
பாடல் - அடி என்னடி உலகம்
இசை - எம்.எஸ்.வி
இரு வரி இராமாயணம்
https://youtu.be/JMoH_zRU0r0?si=0qP1ei4PUGii8_JL

சின்னச் சின்ன சந்தங்களில் மிகப் பெரிய சங்கதிகளை மிக இலகுவாக இந்தப்பாடலில் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன். அவருக்கென்றே பிறந்தது போல எம்.எஸ்.வி இசையமைத்திருக்கிறார்.