Saturday, December 3, 2011

கனிமொழி இனி ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும்!

கனிமொழி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். கிட்டத்தட்ட 192 நாட்கள் திஹார் சிறை வாசம். அதுவும் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக. கருணாநிதி போன்ற அரசியல்வாதியின் மகளாக இருப்பதின் சௌகர்யம், அசௌகர்யம் இரண்டையும் ஒரு சேர அனுபவித்திருக்கிறார் கனிமொழி.

அவர் ஜாமீனில்தான் வெளியே வந்திருக்கிறார். இன்னமும் சட்டத்தின் முன்னால் அவர் குற்றம்சாட்டப்பட்டவர்தான். இதிலிருந்து அவர் மீண்டு வருவது ஒரு நெடிய போராட்டமாக இருக்கும். மீண்டு வரமுடியாமலும் போகலாம்.

அவர் சென்னைக்கு வந்திறங்குகிற வேளையில் இரண்டு அரசியல் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒன்று, அவருடைய வருகையை ஒட்டி திமுகவின் கொண்டாட்டங்களை பாதிக்கும் வகையில் ஸ்டாலினை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வது. இரண்டு, சென்னை சங்கமம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து கனிமொழியையே கைது செய்வது. முதலாவது வதந்திக்கு முகாந்திரம் அதிகம். இரண்டாவது நடந்தாலும் நடக்கலாம்.

தனது அரசியல் எதிரி கருணாநிதியை பழிவாங்க, ஜெயலலிதாவுக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடையாது. இதை கருணாநிதியை விட கனிமொழி நன்றாக உணர வேண்டும். இல்லையென்றால் அவர் நசுக்கப்படுவார். கனிமொழி உடனே என்ன செய்ய வேண்டும்?

சென்னை வந்ததும், அப்பாடா என ஓய்வெடுக்காமல் தமிழக அரசியல் கோதாவில் இறங்க வேண்டும். ஜெயலலிதா சார்பில் திமுகவிற்கு எதிராக முடுக்கிவிடப்படும் வழக்குகளையும், நெருக்கடிகளையும் நேரடியாக சந்திக்க வேண்டும்.

கனிமொழி இனி எப்படி இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடை  ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைதான் உதாரணம். பெண்ணாக இருந்தாலும், நெருக்கடி வந்த போதெல்லாம், முன் எப்போதையும் விட மேலும் வலிமையுடன் ஜெயலலிதா களம் இறங்கியிருக்கிறார். ஓடி ஒளியவில்லை. அவரையே முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை அரசியல் களத்தில் சந்திக்க கனிமொழி தயாராக வேண்டும்.

தான் ஒரு அரசியல்வாதியா? அரசியல்வாதியின் மகள் மட்டுமா? என்பதை அவர் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. திஹாரிலிருந்து அவருடைய தனி விமானப் பயணம் சென்னையைத் தொடும்போது அவர் இந்தக் கேள்விகளுக்கான விடையுடன் தரையிறங்க வேண்டும்.

அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ள இதை விட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது.

காலம் கேள்விகளை மட்டுமே வீசும். பதில் மட்டுமே நாம். உங்கள் பதில் என்ன கனி?

Thursday, December 1, 2011

பாலை - விமர்சனம்

இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும்போது, பாலை திரைப்படம் திரையரங்குளை விட்டுப் போயிருக்கலாம்.

Canon 5D, 7D ஸ்டில் காமிராக்களை வைத்து, வசதி குறைவான லைட்டிங்கில் படம்பிடித்து, ஒரு லாப்டாப்பில் எடிட் செய்யப்பட்ட படம். அந்த வகையில் இந்தப் படத்துக்கும், அதன் குழுவினருக்கும் பாராட்டுகள்.

கதைக் களம் வித்தியாசமானது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்கள் வகுக்கப்பட்டு தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை. முல்லை நிலத்தில் வசிக்கும் தமிழர்களை, வந்தேறிகள் பாலை நிலத்துக்கு துரத்தியடிக்கிறார்கள். ஓடி ஒளிந்த தமிழர்கள் போரிட்டு மீண்டும் முல்லை நிலத்தை வெல்கிறார்கள்.

அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியதை, இரண்டு மணி நேரத்துக்கு இழு இழு என்று இழுத்துவிட்டார்கள். சம்பவங்களோ, திருப்பங்களோ இல்லாத திரைக்கதை. படம் பார்த்து முடிக்கும்போது அசதியாக இருக்கிறது. மனதில் எதுவுமே தங்கவில்லை.

நாட்டிய நாடகத் தன்மை படம் முழுவதும் இழையோடுகிறது. வெள்ளைத் துண்டுகளும், மலர் கிரீடங்களும்தான் மேக்கப். சில நேரங்களில் ஃபேஷன் ஷோ ராம்ப் வாக் போல இருக்கிறது. குறிப்பாக காயாம்பூ என்கிற பெண் பாத்திரம் தோன்றும்போதெல்லாம் அப்படி இருக்கிறது. அந்தப் பெண் ஈர்க்கிறார். அவர் ஏற்கனவே இரு தமிழ் படங்களில் நடித்திருக்கிறாராமே..

மற்ற நடிகர்களில் எவருடைய முகமும் மனதில் தங்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி வந்து மறைகிறார்கள். தமிழர்களும், வந்தேறிகளும் மோதுகிற காட்சிகளில், இருவருமே ஒரே மாதிரி வெள்ளை துண்டுகளை அணிந்து கொண்டு, இருட்டிலும், மணல் புழுதியிலும் மோதும்போது, யார் யாரை தாக்குகிறார்கள் என்றே புரியவில்லை.

பழந் தமிழர்கள் போர் செய்வதைத் தவிர வேறெதுமே செய்யவில்லையா? இவ்வளவு நீளமான படத்தில் தமிழர்களின் மற்ற குணாதிசயங்களையும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம்.

இந்தப் படம் தியேட்டர்களை விட்டு போகக் காரணம், சினிமாவை கையில் வைத்திருக்கும் பெரிய பண முதலைகள் என இயக்குனர் சில பேட்டிகளில் குற்றம்சாட்டியிருந்தார்.

சுவாரசியமில்லாத காட்சியமைப்புகள் நிறைந்த பாலையை எவ்வளவு பெரிய பண முதலையும் ஓட வைக்க முடியாது என்பதுதான் என் கருத்து.

வித்தியாசமான படங்கள் எல்லாம், நல்ல படங்கள் அல்ல. - உதாரணம் பாலை.

மயக்கம் என்ன - விமர்சனம்


கமலா தியேட்டரில் படத்தைப் போட்டுவிட்டு கதவுக்கு வெளியே கார்பெண்டருக்கு வேலை கொடுத்துவிடுகிறார்கள். DTS 5.1 ஐயும் மீறி அவர் ரம்பம் போடுகிற சத்தம் உள்ளே வருகிறது. இத்தனைக்கும் நைட் ஷோ!

நல்லவேளை படத்தில் ரம்பம் இல்லை. ஆனால் அக்மார்க் செல்வராகவன் பிராண்ட் கோடாலி இருக்கிறது. எடுத்தவுடன் நண்பனின் காதல் பிளக்கப்படுகிறது. நண்பனின் காதலி அறிமுகமான இரண்டாவது காட்சியிலிருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கதாநாயகனின் காதலியாகிறாள் என்பதுதான் (வழக்கமான) முதல்பாதி.

இரண்டாவது பாதியில் நாயகன் திடீர் மனநோயாளியாக மாறுவதும் வழக்கமான செல்வராகவன் ஸ்டைல்தான். ஒரே மாற்றமாக, இதில் காதலி, மனைவியாகி, நாயகனை அவன் இலட்சியம் நிறைவேற உதவுகிறாள்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார். ரிச்சா கங்கோபாத்யாய அவருக்கு ஈடு கொடுக்கிறார். கொஞ்சம் தெலுங்கு வாடையடிக்கும் முகம் என்றாலும், பூசினாற் போல இருப்பதால் அம்மணி கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்டு வருவார் என நினைக்கிறேன்.

படம் முழுவதும், மாற்றான் மனைவி மற்றும் மாற்றான் காதலியின் மேல் ஆசைப்படுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அனைத்துப் படங்களிலும் செல்வராகவனின் இதே பாத்திரப் படைப்புகளால், கோபமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது.

படம் பார்க்கும்போது, சில காட்சிகள் பிடிக்கிறது. அதுவும் வீடு வந்ததும் மறந்து விடுகிறது. படம் முழுக்க தனுஷ் தயங்கித் தயங்கி காதலிக்கிறார், தயங்கித் தயங்கி போட்டோகிராபராக முன்னேறுகிறார். மயக்கம் என்ன என்பதற்கு பதில் தயக்கம் என்ன என்று டைட்டில் வைத்திருக்கலாம்.

புது தயாரிப்பாளர் (மனைவி) என்பதால் செல்வராகவனிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அடுத்த படத்துக்கு புது உதவியாளர்களுடன் புதிய களத்தை அவர் தேடிப் பிடிக்க வேண்டும்.

மயக்கம் என்ன... மயக்கவில்லை!

Monday, November 28, 2011

எண் முத்தம்!





பேனா கேட்டேன்
இல்லையென்றாள்!


தாள் கேட்டேன்
இல்லையென்றாள்!


அதனால் இதழோடு இதழ் பதித்து
முத்தங்களின் எண்ணிக்கையால்
என் தொலை பேசி எண்களை புரிய வைத்தேன்.