புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கிச்சன் கேபினட் என்ற அரசியல் நையாண்டி நிகழச்சி தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதில் பல சிறப்பு அம்சங்கள். மிக முக்கியமாக தலைப்புச் செய்திகளை ஒரு பாடலாக பாடுவார்கள். அதற்காக தினமும் ஒரு பாடல் சுடச்சுட தயாராகிறது. எனது நண்பர் விவேக்நாராயண் தினமும் 2 மணி நேரத்தில் பாடலை இசையமைத்து பாடி பதிவு செய்து அனுப்பிவிடுகிறார். இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இன்று மே-18 நினைவேந்தலை முன்னிட்டு நண்பர் கார்மல் எழுதியுள்ள கவிதைக்கு அவர் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளும், இசையும் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
எப்படி நாங்கள் மறப்பது
இந்த நாளை
எப்படி நாங்கள் மறப்பது
கொத்துக்கொத்தாய்
மடிந்த மண்ணில்
ஈரம் இன்னும் தீரல
குருதி
ஈரம் இன்னும் தீரல
முள்ளிவாய்கால்
கொள்ளி வைத்த
கொடிகள் இன்னும் சாகல
தொப்புள்
கொடிகள் இன்னும் சாகல.
எப்படி நாங்கள் மறப்பது
இந்த நாளை
எப்படி நாங்கள் மறப்பது
வாய்க்கால் மண்ணில்
வளரும் உண்மை
வானம்தொடுவதை பார்க்கலாம்
உரிமை
வானம் தொடுவதை பார்க்கலாம்
முள்ளிவாய்க்கால்
விதைத்த விதைகள்
விருட்சமாக எழலாம்
தியாக
விருட்சமாக எழலாம்.
எப்படி நாங்கள் மறப்பது
இந்த நாளை
எப்படி நாங்கள் மறப்பது
முள்ளிவாயக்காலை
எப்படி நாங்கள் மறப்பது…..