Wednesday, April 11, 2012

சென்னையில் நில நடுக்கம் - நேரடிக் காட்சிகள்!



 இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணி அளவில் திடீரென இந்தோனேஷியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.7 என்று கணக்கிடப்பட்டுள்ள இந்த நில அதிர்வு கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 8வது பெரிய நில நடுக்கம். இதன் பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் நிலஅதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் முடக்கிவிடப்பட்டுள்ளன. சென்னை மெரினா கடற்கரைப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேசியாவில் உருவாகியுள்ள சுனாமி அலைகள் சென்னையை மாலை சுமார் 5 மணிக்கு தாக்கும் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்களிடையே அச்சம் நீங்கவில்லை.

மேலும் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தும் விதமாக மாலை 4 மணி அளவில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் நிலஅதிர்வு உணரப்பட்டது. கோடை விடுமுறையைத் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்தனர். பல மொபைல் ஃபோன்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் செயல் இழந்துவிட்டன. இதனால் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

சில பகுதிகளில் அது பவர்கட் சமயமாதலால் பாதுகாப்பு கருதி மீண்டும் மின்சார இணைப்பு கொடுக்காமல் தள்ளிப்போடப்பட்டது.

ஆனாலும் மக்கள் அஞ்சத் தேவை இல்லை. ஒருவேளை சுனாமி வந்தாலும் மிகவும் குறைவாக 0.2 மீட்டர் அளவிற்கு மட்டுமே சுனாமி அலைகள் உயரும் என்று கூறப்படுகிறது.






நெல்லை மாவட்டத்தில் சுனாமி உணரப்படவில்லை என்றாலும், இந்த திடீர் நில அதிர்வைத் தொடர்ந்து கூடங்குளம் அணுஉலை தொடர்பான செய்திகளும், ஊகங்களும் மீண்டும் உயிர் பெறத் துவங்கிவிட்டன.