"மெட்ராஸ் அமர்க்களமா மாறிகிட்டிருக்கில்ல?", இது நான்.
"மண்ணாங்கட்டி! அவசரமா ஒன் பாத் ரூம் வந்தா, ஒதுங்கறதுக்கு இடமில்ல. மவுண்ட்ரோடுல சாந்தி தியேட்டர்ல இருந்து சஃபையர் வரைக்கும் ஒரு பத்து மூத்திர சந்து இருக்கு. ஆனா ஒரு பப்ளிக் டாய்லெட் கிடையாது. இதுக்குப் பேரு சிட்டியா?", பல்லைக் கடித்துக்கொண்டு பயங்கர கோபத்துடன் பேசியது, நண்பர் ஆந்தைக் குமார் (அப்போதைய ஜீ.வி. ஆந்தையார்)
"அட ஆமா, போனவாரம் கூட நான் இப்படித்தான் அவசரமா . . .", என இன்னொரு நண்பர் தன் ஒன் பாத்ரூம் அவஸ்தையை விவரிக்க . . . ஆந்தைக் குமார் குறுக்கிட்டு,
"உங்க கதையை விடுங்க, எத்தனை பொம்பளைங்க இந்த மாதிரி சிட்டிக்குள்ள அவஸ்தைப் படறாங்க தெரியுமா? நீயாவது ஏதாவது சந்துக்குள்ள புகுந்திடுவ, பொம்பளைங்க என்னய்யா செய்வாங்க? ஏதோ ஸ்பென்சர் பிளாஸா அது இதுன்னு அலட்டறீங்களே... அதுல எத்தனை டாய்லெட் இருக்குன்னு சொல்லுங்க.. அப்புறம் சொல்றேன் அது அலட்டலா? குமட்டலான்னு?"
ஆந்தைக் குமாரின் அதே நியாயமான கோபத்தை, சென்ற வார ஆனந்த விகடனில் தீதும் நன்றும் பகுதியில் நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொட்டிருந்தது இன்னொரு சென்சிடிவ் ஏரியா. பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் இயற்கை உபாதை அவஸ்தைகளை கோபமும் வலியும் கலந்து எழுதியிருந்தார். ஆண்கள் ஏதோ ஒரு நிறுத்தத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள்? காட்டு வழியில் இருளில் பஸ்ஸை நிறுத்தி லைட்டை அணைத்து, பெண்களின் இயற்கை அவசரங்களை கழிக்க நேரும் அவலமான, அபாயமான தருணங்களை நாஞ்சில் நாடன் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
பஸ் பயணத்தில் வாந்தியைக் கட்டுப்படுத்த, மாதவிலக்கை தள்ளிப் போட மாத்திரைகள் உண்டு. அதே போல மூத்திரத்தை கட்டுப்படுத்த மாத்திரைகள் கண்டு பிடிப்பதைப் பற்றி மருந்து கம்பெனிகள் சிந்திக்கலாம் என்று அவர் யோசனை சொல்லியிருந்தார்.
ஆனால் மருந்துக் கம்பெனிகளை நாடுவதை விட, எதிர் வரும் தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளையும் (வாக்குச் சீட்டு வழியாக) முகத்தில் குத்தி இந்த 'இயற்கை உபாதை பிரச்சனையை' பற்றி ஒரு தீர்வு சொல்லச் சொல்லலாம்.
ஆனந்த விகடன் மூலமாக இந்த பிரச்சனை பற்றி பலரும் சீரியஸாக சிந்திக்க வைத்ததற்க்காக நாஞ்சில் நாடனுக்கு நன்றி!
அப்புறம் . . .
(ஆந்தை) குமார் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?