ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது ”மலரும் நினைவுகள்” என்ற நிகழ்ச்சி பிரபலம். நட்சத்திரங்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். அந்தக்காலத்தில் சினிமா கிளிப்பிங்கை பார்ப்பதே அபூர்வம் என்பதால் அந்த நிகழ்ச்சிக்கு ஏக வரவேற்பு. அதில் ஒரு முறை சிவாஜியின் மலரும் நினைவுகள் இடம்பெற்றது. ஆனால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து விட்டு மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்துவிட்டது. என்னைப் போன்ற சிவாஜி இரசிகர்களை அந்நிகழ்ச்சி ஒரு சதவிகிதம் கூட திருப்தி செய்யவில்லை.
இன்று நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்துவிட்டன. அத்தனை சேனல்களும் ஒரே நேரத்தில் முயன்றாலும் சிவாஜியைப் பற்றி ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதவிதமாக நிகழ்ச்சிகள் செய்யலாம். சிவாஜியைப் பற்றிப் பேச அத்தனை விஷயங்கள் உள்ளன.
தூர்தர்ஷனாவது ஏதோ முயற்சி செய்தது. ஆனால் அதில் ஒரு பங்கைக் கூட எந்த தனியார் சேனலும் செய்யவில்லை. செய்ய இயலாது என்று கூட தோன்றுகிறது.
டிவி, ரேடியோ என எதை எடுத்துக்கொண்டாலும் 24 மணி நேரமும் ஏதாவது நிகழ்ச்சிகளை தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் சீக்கிரமே கற்பனை வரண்டு போய், தொகுப்பாளர் தன்னைப் பற்றியே அலட்டிக் கொள்கிற சுய அபத்தங்கள் கூட நிறைய வருகிறது. டிவி ரேடியோ நிலையங்கள் அவற்றையும் வேறு வழியின்றி அனுமதிக்கின்றன. அவர்களில் ஒருவருக்காவது Quality Content பற்றிய எண்ணம் இருந்தால் சிவாஜி பற்றி எத்தனையோ விஷயங்களைப் பேச முடியும். சிவாஜி பற்றி மட்டுமல்ல அவர் போன்ற மாபெரும் மேதைகள் பற்றி நிறைய சொல்ல முடியும். ஆனால் இந்த இன்ஸ்டன்ட் யுகத்தில் அந்த வினாடி கண்ணிலும், செவியிலும் படுவதை மட்டுமே மனித மூளை கிரகிக்கிறது.
இன்றைய மீடியாக்கள் வெற்று விஷயங்களை மட்டுமே கடத்துகின்றன. அனுபவக் கடத்தல் நிகழ்வதே இல்லை.
நல்ல அனுபவங்களைத தேடி நமது டிவிக்களும், ரேடியோக்களும் பயணப்படும்போது சிவாஜி ஒருவேளை அவர்கள் கண்களில் படக்கூடும். அது வரை சிவாஜி தந்த அனுபவங்கள் அவரது இரசிகர்களின் மனதில் மட்டும் இருக்கும். இந்த பதிவு கூட பகிர்வு அல்ல. ஒரு தந்தையாக, சகோதரனாக, ஆசிரியனாக, இறை பக்தியாக, தமிழாக, உச்சரிப்பாக, தமிழ் குடும்ப அமைப்பாக, தமிழ் குடும்பங்களின் சந்தோஷமாக, துக்கமாக, எதிர்பார்ப்பாக, கனவாக சிவாஜி தந்து விட்டுச் சென்றிருக்கிற அனுபவங்களை அன்றைய என்னிலிருந்து இன்றைய எனக்கு நானே கடத்திக்கொள்கிற சிறு முயற்சி.