
இந்தக் கேள்வி 20 வருடங்களுக்கு முன்னால் கேட்கப்பட்ட கேள்வி! கேள்வி கேட்டவர் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி. இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் அந்தக் கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது, எந்தப் பதில்களும் இல்லாமல்.
இரவிலும் வேலை, வழிய வழிய பணம், வீக் எண்ட் பார்ட்டி, லிவிங் டு கெதர், லேட்டஸ்ட் கார், டிரிபிள் பெட் ரூம் ஃபிளாட் என இந்திய இளைஞர்கள் தற்போது ஒரு வித கிளர்ச்சியில் இருக்கிறார்கள்.
"இளைஞர் கிளர்ச்சிப் போக்கு என்பது நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை விளக்குவது கூட வியாதி பரப்புகிற முறை என்று நான் அறிந்திருப்பதனால் அதனை விவரிக்காமல் தவிர்க்கிறேன்."
20 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதியிருப்பது வேறு யாருமல்ல, நமது ஜெயகாந்தன். அவருடைய எழுத்து எவ்வளவு பொறுப்புடனும், அக்கறையுடனும் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். "ஓர் ஆன்மீக ஆய்வுக்கு முன்னால் . . ." என்ற கட்டுரையில் அவ்வாறு எழுதியுள்ளார். என்னுடைய ஞாபகம் சரி என்றால், அந்தக் கட்டுரை 20 வருடங்களுக்கு முன்னால் குமுதத்தில் வெளிவந்தது.
ஆனால் இவ்வளவு பொறுப்புள்ள எழுத்துக்களையும், எழுத்தாளர்களையும் ஆதரித்த குமுதம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
பெத்தாபுரம் செக்ஸ் பற்றி கவர் ஸ்டோரி போடுகிறது. கிகல்லோ பாய்ஸ் பற்றி டிப்ஸ் தருகிறது. தமிழகத்தில் மறைவாக நடக்கும் செக்ஸ் கூட்டணிகளை இடங்களைக் குறிப்பிட்டு எழுதுகிறது. டுரிஸ்ட் ஸ்பாட்டுகளில் பொதுஜன கவனிப்புக்கு உள்ளாகாத தகாத உறவுகளை சந்து முனை அடையாளத்துடன் எழுதுகிறது. அதாவது பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியாமல் நடக்கும் தவறுகளுகளை மீடியா வெளிச்சம் காட்டி, அனைவருக்கும் அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் கடைசிவரியிலும், "ஐயோ பாவம் இளைஞர்கள், அவர்களை சீரழிவிலிருந்து யார் காப்பாற்றுவார்கள்" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது. இந்த வார குமுதத்தின் (அக் 08) முதல் இரண்டு பக்கங்களில் கிட்டத்தட்ட 10 உதடு கடிக்கும் காட்சிகள். அதற்கு அடுத்த பக்கத்திலேயே தமிழகத்தை சீரழிக்கும் டாப் 10 சமாச்சாரங்கள் என்று ஒரு போலி அலட்டல் சர்வே. சீரழிப்பதில் முதலிடத்தில் இருப்பது குமுதம்தான்.
காந்தி படத்தில் ஒரு அற்புதமான வசனம். "சுதந்திரம் பெறுவது முக்கியமல்ல. சுதந்திரத்தை பெறுவதற்க்கான தகுதியை அடைவதுதான் முக்கியம்", என்று காந்தி மக்களை நோக்கிச் சொல்கிறார். அதே போல பத்திரிகை நடத்துவது முக்கியமல்ல, நடத்துவதற்க்கான தகுதியை விடாதிருப்பதே முக்கியம். குமுதம் தற்போது ஒரு நல்ல பத்திரிகைக்கான தகுதியை இழந்துவிட்டது.