Saturday, October 17, 2009

ஆதவன் - ஒளிரவில்லை!


”அண்ணே தீபாவளிக்கு ஆதவன் எத்தனை டிக்கெட் வேணும்?”, உதயம் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான செல்வம் எங்கள் குடும்ப நண்பர்.
”10 டிக்கெட் போட்டிருங்க”, என்றேன். அவர் நைட் ஷோவிற்கு டிக்கெட் போட்டுக் கொண்டு வந்தார்.
இதற்கிடையில் எனது சித்தப்பா சோலை வழியாக திரு.சிவகுமார் அவர்களிடமிருந்தே தீபாவளிக்கு முதல் நாளே சத்தியம் தியேட்டரில் மாலை (பிரிவியு) காட்சிக்கான டிக்கெட் கிடைத்துவிட்டது.

சீட்டில் அமர்ந்த கொஞ்ச நேரம் கழித்து, ஒரு குடும்பம் வந்து இது எங்கள் சீட் என்றார்கள். அவர்கள் கையிலும் டிக்கெட், ஆச்சரியகரமாக அதே டிக்கெட் எண்கள். சரியாக டைட்டில் போட்டு படம் ஆரம்பிக்கும் நேரத்தில் இந்த இடைஞ்சல் கடுப்பாக இருந்தது. தியேட்டரில் விசில்கள் பறக்க ஆரம்பித்த வினாடிகளில் நானும் சித்தப்பாவும் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம்.

”ஹலோ இது என்னங்க கன்பியுஷன்? ஒரே டிக்கெட் நம்பரை எப்படி ரெண்டு பேருக்கு இஷ்யு பண்ணீங்க?”, டிக்கெட்டை வாங்கிப் பார்த்த உதவியாளர் முதலில் ஜெர்க் ஆனார். பிறகு முகத்தில் நமட்டுப் புன்னகையுடன், ”சார், இது சத்தியம் தியேட்டர். நீங்க சாந்தம் தியேட்டரோட டிக்கெட்டை வைச்சிருக்கீங்க. ரெண்டாவது ஃபுளோர் போங்க” என்றார். அசடு வழிந்து கொண்டே ரெண்டாவது புளோருக்கு விரைந்தோம். ”நம்மள விடு. தியேட்டர்காரனுக்கு தெரியாதா? எது சத்யம் டிக்கெட், எது சாந்தம் டிக்கெட்டுன்னு. . .?” இந்த கடுப்பான கேள்விகளுடன் சாந்தம் தியேட்டரில் நுழையவும், சூர்யா திரையில் தோன்றவும் சரியாக இருந்தது.

முதல் Action காட்சி முடிந்து, பிறகு டைட்டில் போட்டு, பிறகு ஒரு பாடலும் முடியும்போது சரிதான் சூர்யா பட்டைய கிளப்ப போகிறார் என்று தோன்றியது.




கூலிக்கு கொலை செய்யும் Paid Killerஆக அறிமுகம் சூர்யா செம பிட். சிக்ஸ் பேக்கை விடாமல் வைத்திருக்கிறார். டைட்டாக உடை அணிகிறார். விதம் விதமாக யோகாசனம் செய்கிறார். அப்புறம் கொஞ்சமாக நடிக்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்கிறார். நயன்தாராவைக் கூட மிகக் கொஞ்சமாகத்தான் கொஞ்சுகிறார். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவுகிற ஸ்டண்டை இந்தப் படத்துடன் விட்டுவிடுவது நல்லது. முதலில் பார்த்த ஆச்சரியம் விலகி சலிப்பாக மாறுகிற அளவுக்கு தாவிக் கொண்டே இருப்பது ஓவர் டோஸ்.

மற்ற நேரத்தில் எல்லாம் ஏ.சி பஸ் தேடுபவர்கள், தீபாவளி அவசரத்தில் மட்டும் கிடைக்கிற தகர டப்பா பஸ்ஸில் கூட தொற்றிக் கொண்டு ஊருக்கு விரைவார்கள். அதே போல ஒரு தீபாவளி அவசரத்தில் படம் எடுத்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமாரின் அவசர டச், அல்லது அவுட் ஆஃப் டச் படம் முழுக்க தெரிகிறது. சில காட்சிகளில் பழைய “முத்து“ வாசனை அடிக்கிறது. பல காட்சிகளில் புத்தம் புது டெக்னிகல் ”தசாவதாரம்” வாசனை அடிக்கிறது.

முதல் 15 நமிடங்களுக்குப் பின்  சூர்யாவை விட வடிவேலு அதிகம் ஆக்கிரமிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு புரோமஷன். அதாவது இவருக்கும் கிண்டல் செய்ய ஒரு ஜீவன் சிக்கியிருக்கிறது. அந்த ஜீவன் சரோஜா தேவி. 

அதிக பட்ச மேக்கப்புடன் சரோஜா தேவி ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். (இது எம்.ஜி.ஆர் காலத்துல வாங்கின லிப்ஸ்டிக்தான)  வடிவேலு அடிக்கடி சரோஜாதேவியின் மேக்கப்பை கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்.

நயன்தாரா தனது அழகை இழந்து கொண்டே வருகிறார். கன்னங்கள் ஒட்டிப்போய், ஒட்டாத மேக்கப்புடன் சூர்யாவுடன் டுயட் பாடுவதில் இளமை இல்லை.

ஆடியோ சிடியில் நன்றாக இருந்த பாடல்கள், திரையில் டல்லடிக்கின்றன. முக்கியமான எமோஷனல் காட்சிகளில் எல்லாம் ஆங்கில சோகப் பாடல்களை இசைக்கிறார் ஹேரிஸ் ஜெயராஜ். ஒட்டவில்லை!

மற்றபடி யாரையும், எதையும் குறிப்பிட்டு சொல்லத் தோன்றவில்லை. டப்பிங் குரல்கள் முதல், நடிகர், நடிகையர் தேர்வு வரை எல்லாமே ஒரு படி கம்மிதான்.


அப்புறம் அந்த 10 வயசு மேட்டர். ஒரு ஃபிளாஷ்பேக் காட்சியில் சூர்யா பத்து வயது சிறுவனாகத் தோன்றுகிறார். அது ஒரு கிராபிக்ஸ் நுணுக்கம். (இந்த நுணுக்கத்தின் e-How பற்றி அப்புறம் எழுதுகிறேன்) சூர்யாவை விட டெக்னிகல் டீமிற்குதான் அந்தப் பாராட்டுகள் அதிகம் போய் சேர வேண்டும். டைட்டிலில் அவர்கள் யார் என்று கவனிக்க முடியவில்லை. அவர்கள் யாராக இருந்தாலும், அந்த டெக்னிகல் டீமிற்கு பாராட்டுகள். ஆனாலும் அந்த பத்து வயசு எபிசோட், அழுத்தமில்லாத அறுவையான காட்சிகள்.

சூர்யா சாதாரண நடிகராக இருந்து ஒரு ஸ்டாராக எப்போதோ உயர்ந்துவிட்டார். இது அவருடைய ஸ்டார் ஸ்டேட்ஸை கேஷ் பண்ணுகிற படம். மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.

படத்தை விட End Title மகா நீளம். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சேர்ந்து படத்தின் புரொடியுசர் உதயநிதி ஸ்டாலினே தோன்றுவதால் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு மேல் டைட்டில் போடுகிறார்கள்.

ஆதவன் ஒளிரவில்லை!!!

பின்குறிப்பு -
இன்றைக்கு உதயம் தியேட்டரில் (தீபாவளி) நைட்ஷோவிற்கான டிக்கெட்டை யாருக்கு கொடுத்து மாட்டிவிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

திரு.சிவகுமார் அவர்களிடம் நான் சொல்ல மறந்தது என்ன?


”அறுபது வயசுக்கு மேல ஆச்சு. எத்தனையோ படம் நடிச்சிருக்கார். ஆனா இத்தனை வருஷத்துல இப்பதான் முதன் முதலா ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் குடுத்திருக்கார்.”

ஒரு பிரபல நடிகரை இப்படி கலாட்டா செய்தது என் சித்தப்பா சோலை.  அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு இரசித்து சிரித்த அந்த நடிகர், அவருடைய நண்பர், ஓவியர், கம்ப ராமாயணப் பேச்சாளர் திரு. சிவகுமார்.

பெரிய மனிதர்களை நெருக்கத்தில் பார்க்கும்போது, அவர்களிடம் சொல்ல நினைக்கும் பல விஷயங்கள் மறந்துபோகும். இன்றைக்கு என் சித்தப்பாவுடன், திரு.சிவகுமார் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவரிடம் மறக்காமல் சொல்ல நினைத்து, கடைசியில் மறந்து போனேன். அது . . .?

”டேய் சிவகுமார் போன் பண்ணினாரு. சத்தியம் தியேட்டர்ல ஆதவன் படத்துக்கு ரெண்டு டிக்கட் இருக்காம். நாலு மணிக்கு கிளம்பி வா. அவரை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு, படம் பார்த்துட்டு வந்துடலாம்”, என்று செல்போனில் என் சித்தப்பா சொன்னார்.

”ஓ.கே. சித்தப்பா”, என்று சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் திரு.சிவகுமார் வீட்டில் ஆஜர்.

”வந்துட்டியா . . . வாடா. . . வாடா. . .”, என்று சித்தப்பாவை அழைத்தவர், ”இது யாரு? ஐ.எஸ்.ஆர் பையனா? வாப்பா. . . நல்லா இருக்கியா?” என்று என்னையும் நலம் விசாரித்தார்.

எனது சித்தப்பா சோலை, நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். அவரது நெருக்கத்தின் காரணமாகவே, எனது தந்தையின் மறைவுக்குப் பின்னும் எங்கள் வீட்டில் நடந்த அனைத்து குடும்ப விழாக்களுக்கும் திரு.சிவகுமார் அவர்கள் வருகை தந்தார். எனது தங்கை திருமணத்தின் போது அவர் பரிசளித்த, அவரே வரைந்த காந்தி பென்சில் டிராயிங், 15 வருடங்களுக்குப் பின்னும் எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.


”டேய். இன்னைக்கு ஹிண்டு பேப்பர் படிக்க சொன்னேனே, படிச்சியாடா?, இது திரு.சிவகுமார்.
”இல்லையே. நான் போய் வாங்கறதுக்குள்ள எல்லா பேப்பரும் வித்துடுச்சு”, இது என் சித்தப்பா சோலை.
”பாத்தீங்களா? எப்படி இருக்கான்? எடைக்கு எடை போடறதுக்கு கூட சில பேர் பேப்பர் வாங்கறதில்ல. இன்னைக்கு ஹிண்டு பேப்பர்ல என்னை பத்தி வந்திருக்கு. சேலம் சோனா காலேஜ்ல நான் பேசினதபத்தி சினிமா பிளஸ் பகுதியில போட்டிருக்கான். படிடான்னா . . . படிக்காம வந்துட்டு என்னையே கிண்டல் பண்றான். ஆமா நீங்க படிச்சீங்களா?”, அவர் பேசுவதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த நண்பரும் இல்லையென்றார்.
”க்கும் . . . எல்லாம் ஒரே ரகம்”

தலைவர்கள், சமூக அந்தஸ்தில் பெரியவர்களாக இருப்பவர்கள் போன்றோர் தனது நண்பர்களுடன் ”வாடா...போடா” என்று மனது விட்டு ஜாலியாக பேசும், எந்த பாசாங்கும் இல்லாத, இறுக்கமற்ற நிமிடங்களை நான் எப்போதுமே சுவாரசியமாக படிப்பேன். இன்று திரு.சிவகுமாரும், எனது சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து பேசிக் கொண்டிருந்தபோது நான் என்னை மறந்தேன்.

ஆதவன் படத்தின் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு எழுந்தோம். 
”போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. நானே இன்னும் படம் பார்க்கல. நாளைக்குதான் வீட்டோட போகப்போறேன்”
”ஓ...நீங்க நடிக்கலன்னவுடனே வீட்டோட போய் பார்க்கற தைரியம் வந்திடுச்சா”
”டேய் . . . போடா . . .போடா. . .தம்பி நீ நாளைக்கு மறக்காம விஜய் டிவியில நான் பேசுறதை பாரு”.

”சரி சார்” என்று எழுந்தேன். எழும்போது எதையோ மறக்கிறேன் என்று தெரிந்தது.

நாங்கள் விடை பெற்று வெளியே வந்தோம். தற்செயலாக டிக்கட்டை திருப்பி பார்த்தேன். டிக்கெட்டின் பின்னால் சோலை என்று எழுதியிருந்தது.
”பார்த்தியாடா . . . எவ்வளவு ஆர்கனைஸ்டா இருக்காரு. இத்தனை பிசிக்கு நடுவுலயும், சும்மா ரெண்டு டிக்கட்டை தூக்கி குடுக்காம பேரை எழுதி வச்சு, கரெக்டா குடுக்கறாரு” என்று வியந்தார் என் சித்தப்பா.

அடுத்த வினாடி திரு. சிவகுமார் அவர்களிடம் நான் எதை சொல்ல மறந்தேன் என்பது ஞாபகம் வந்தது. அது . . . தீபாவளி வாழ்த்து! அதனால் என்ன . . . இந்த பதிவின் வழியாக அவருக்கு வாழ்த்து சொல்லிவிடுகின்றேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Friday, October 16, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 3



”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

சிட்டி சென்டர், பீச், பீட்சா கார்னர் என காலையிலிருந்து தவிர்த்த முத்தம்.
கடைசியாக நைட்ஷோவில் எதிர்பார்த்து கிடைக்காமல் போன முத்தம்.

”முடியாதுன்னா முடியாது”, செல்லச் சிணுங்கலுடன் அவனை தலை கலைத்து இறங்கி நடந்தாள்.

சத்தம் கேட்டு யாரும் விழித்து விடக் கூடாது என்பதற்க்காக தெரு முனையிலேயே மோட்டர் பைக்கை அணைத்திருந்தான் அவன். அதனால் அவளுடைய செல்லச் சிணுங்கல் கூட கூடுதல் டெசிபலில் கான்கிரிட் சுவர்களில் மோதி எதிரொலித்தன.

சன்னமான நிலா வெளிச்சத்தில் அவளது மெல்லிய உதடுகள் ”வா என்னை முத்தமிடு” என்பது போல ஒளிர்ந்தன.  பைக்கை ஸ்டாண்டு போட்டு விட்டு சட்டென அவளை அவள் வீட்டு சுவற்றுடன் அழுத்தினான்.

”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

ஆர்வத்தை மீறிய தயக்கம். தயக்கத்தை மீறிய பயம். கிசு கிசுப்பான குரலில் ”ஹையோ சுவத்துல இருந்து கையை எடு. நான் உள்ள போகணும். யாராவது வந்துட்டாங்கன்னா பிரச்சனையாகிடும்” என்றாள்.

அவன் கையை எடுக்கவில்லை. பள பளவென ஒளிர்ந்த அவளுடைய உதடுகளுக்கும், அவனுடைய உதடுகளுக்கும் 10 மில்லி மீட்டர்தான் இடைவெளி. இருவருக்கும் நெருக்கம் தந்த மயக்கத்தில் அவர்களுடைய மூச்சு காற்று கூட புயல் காற்றைப் போல ஒலித்தது.


”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

”வேண்டாம். யாராவது பார்த்துடுவாங்க”

”ஒண்ணே ஒண்ணு”

”வேண்டாம் ப்ளீஸ்”

”ஜஸ்ட் ஒரே ஒரு கிஸ்”

”நோ”

”ஏண்டி ராட்சஷி, நோ சொல்ற? அவன் கேட்கிற முத்தத்தை குடுத்து தொலையேன்”

இருவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள்.  வாசலில் அவளுடைய அக்கா, தம்பி, அம்மா மற்றும் அப்பா. வீட்டில் எல்லா விளக்குகளும் மள மளவென எரிந்தன. அதிர்ச்சியில் விலகக் கூடத் தோன்றாமல் அவளை சுவற்றுடன் அழுத்தியபடியே நின்றிருந்தான் அவன்.


மிலிட்டரி ரிடையர்டு அப்பா கையில் துப்பாக்கியுடன் சர சரவென அருகில் வந்தார். அவர் கண்களில் கொலை வெறி!

”மரியாதையா அவனை சுவத்துல இருந்து கையை எடுக்கச் சொல்லு. 15 நிமிஷமா காலிங் பெல் அடிச்சுக்கிட்டே இருக்கு”

நீதி :
முத்தம் தர ஏற்ற இடம். காலிங் பெல் இல்லாத இடம். எனவே காலிங் பெல் இருக்கிற இடங்களில் முத்தம் தரவோ, பெறவோ முயற்சிக்காதீர்கள்.

Wednesday, October 14, 2009

அன்பே சிவம் வாழ்வே தவம் : கமல் - ரஜினி என்கின்ற இரு மேதைகள்!



”சார் நான் போகணும்?”

அவர்(AVAR) திரைப்படத்திற்கான ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காக ஒத்திகையுடன் கூடிய தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மும்முரமாக விதம் விதமாக நடித்து அசத்திக் கொண்டிருந்த அந்த இளம் நடிகர், திடீரென ஸ்விட்ச் போட்டது போல நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

”சார் நான் போகணும்?”

”ஏன்?” என் குரலில் நான் வெளிக்காட்டாத ஒரு கோபம் இருந்தது.

”விஜய் டிவியில கமல் புரோகிராம் பார்க்கணும்.”

சட்டென என்னுடைய கோபமும் ஆர்வமாக மாறிவிட்டது.

"OK. Pack Up!"

எவ்வளவு மும்முரமான வேலையாக இருந்தாலும் பாதியில் முடித்துக் கொள்ள தூண்டும் அளவிற்கு விஜய் டிவி இரண்டு நாட்களாக எனது கவனத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது. காரணம் கமல் என்கிற மகா கலைஞனுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சி. நிகழ்ச்சி முழுவதும் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த கமலும், அருகில் அமர்ந்திருந்த ரஜனியும் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கட்டிப் போட்டுவிட்டார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.

ஏற்கனவே ரஜினியும், கமலும் என்ன பேசினார்கள் என்பதை நான் பல வலைப்பதிவுகளில் படித்து நெகிழ்ந்து போயிருந்தேன் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தேன். குறிப்பாக ஆனந்த விகடனில் வந்திருந்த கட்டுரை படிக்கும்போதே கண்களை பணிக்கச் செய்தது. எத்தனை முறை அந்த கட்டுரையை வாசித்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

இரண்டு நாட்களாக இடையில் வந்த விளம்பர இம்சைகளை பொறுத்துக் கொண்டு, ரிமோட்டை கையிலெடுக்காமல் நிகழ்ச்சியை தொடரந்து இரசித்தேன். கிட்டத்தட்ட நானும் அந்த ஸ்டேடியத்தில் ஒருவனாக அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்.

உன்னைப் போல் ஒருவன் படம் வெளியானதிலிருந்தே கமலின் ஆக்கிரமிப்பு எனக்குள் பெருகிக் கொண்டே இருக்கின்றது. காரணம் திரைப்படத்திற்கு வெளியே அதற்கான புரோமஷன் நிகழ்ச்சிகளில் கமலின் ஆத்மார்த்தமான பங்களிப்பு. கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சேரன், லிங்குசாமி, மிஷ்கின், அமீர் ஆகியோருடனம் கமல் உரையாடியபோது மாணவர்களுடன் ஒரு பேராசிரியர் உரையாடியதைப் போலத்தான் இருந்தது. நானும் என் வீட்டிலேயே ஒரு கடைசி பெஞ்ச் மாணவனாக அமர்ந்து கமல் கூறிய கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டேன்.


விஜய் டிவியில் இரசிகர்களுடன் உரையாடினார். கமலைக் கண்டதும் மாணவி ஒருத்தி கண்கலங்கி பரவசமடைய, கமலும் குரல் கம்ம விழியோரம் ஒரு துளி கண்ணீர் சிந்தினார். அந்த வினாடியிலிருந்து ஏனோ தெரியவில்லை, கமல் என்கிற மேதை எனக்குள் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து கொண்டே இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கமலின் பல படங்களை நான் தொடர்ந்து பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். இந்த ஞாயிற்றுக் கிழமை குருதிப்புனல் பார்த்தேன்.

இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகிய இந்த பிரமாண்டமான பாராட்டு விழா, ஒரு தனி மனிதனை திகட்டத் திகட்ட பாராட்டுவதற்க்காக நடந்த நிகழ்ச்சிதான். வெவ்வேறு மனிதர்களிடமிருந்து வெவ்வேறு விதமாக வெளிப்பட்ட ஒரு தனி மனித பாராட்டுதான். கமல் கூட தனது ஏற்புரையில் அதை குறிப்பிட்டார்.

ஆனால் கமல் என்கிற மேதை ஒரு தனி மனிதனல்ல. 50 ஆண்டு கால சினிமா அனுபவம். பல வேதனைகளையும், சாதனைகளையும் ஒரு சேர தாங்கி நிற்கின்ற மகானுபவம். கடந்ததை மறந்து எப்போதும் அடுத்ததை நோக்கிய மாபெரும் தேடல். உழைப்பு! உழைப்பு! உழைப்பு!

அதனால்தான் தென்னிந்தியத் திரை உலகின் அத்தனை ஜாம்பவான்களும் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் முகம் நிறைய சந்தோஷமும் நிறைவும் இருந்தது. அவர்களுடைய உணர்வுகள் என்னையும் தொற்றிக் கொண்ட பின் என்னை நானே புதிதாக உணர்கின்றேன்.

கமல்-ரஜினி போன்ற அடக்கமும், தன்னம்பிக்கையும், துடிப்பும், சாதனையும் நிரம்பிய இரு மாபெரும் கலைஞர்கள் உள்ள தமிழ் சினிமாவில் நானும் நுழையப்போகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கே பரவசமாகத்தான் இருக்கின்றது. இவர்களைப் போல மேதைகளை பார்த்துவிட்டு உள்ளே நுழையும்போது கர்வம் தொலைந்து, பணிவு பெருகி மிகச் சிறியவனாக உணர்கின்றேன். நான் கடக்க வேண்டிய தொலைவுகளை எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் அணுகும் மனநிலைக்கு வந்துவிட்டேன். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற எண்ணங்கள் மேலோங்க இன்னமும் தன்னம்பிக்கை கூடி துடிப்பாக உணர்கின்றேன்.

”ஷோ எப்படி இருந்தது?”, நான் இரவு மணி 12ஐ நெருங்குகையில் மாலையில் ஒத்திகை பார்த்த நடிகரை செல்போனில் அழைத்தேன்.

”என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் சார் . . . கமல் - ரஜினி மாதிரி ஜாம்பவான்கள் இருக்கறி ஃபீல்டுல நானும் ஒரு நடிகனா நுழையப்போறேன்னு நினைச்சா பயமும், பெருமையும் கலந்து வருது சார்”

அதற்கப்புறம் அவர் சொன்னது எதுவும் எனது நினைவில் இல்லை. கிட்டத்தட்ட அவருடைய மன நிலைதான் எனது நிலையும்.

விரைவில் நான் இயக்கும் ”அவர்” திரைப்படம் உங்கள் பார்வைக்கு வெளிவரும். ஒரு ஏகலைவனாக இருந்து கமல்-ரஜினி போன்ற துரோணாச்சார்யார்களிடம் நான் பெற்ற பாடம் ”அவர்” திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்துத் தரும் என்று நம்புகிறேன்.

மிகச் சிறந்த நண்பர்களாக, நடிகர்களாக, மனிதர்களாக மிகப்பெரிய ஆளுமையைக் கொண்டிருக்கும் ரஜினிக்கும் கமலுக்கும் எனது மானசீக வணக்கங்களும், நன்றியும்!

அன்பே சிவம்! வாழ்வே தவம்!