Saturday, July 7, 2012

எப்படியோ முத்தம்!




மை போதுமா என வினவியவளின்
கண்களைத்தான் நெருங்கினேன்.
எங்கள் இதழ்கள் எப்படி ஒட்டிக் கொண்டன 
எனத் தெரியவில்லை.

கோவில் பிரகார முத்தம்





கொலுசுக்கால்களில் பட்டுப்பாவாடை உரச
பூக் கோலமிடும் வளையல் கரங்கள் சிணுங்க
அவள் இதழ்களில் என் இதழ்கள் பதிந்ததும்,
கோவில் பிரகாரத்தில் இச் என்ற ஒலி
இசையாய் எதிரொலிக்கும்.

Friday, July 6, 2012

பச்சக் முத்தம்



என் அழகு அம்மா தந்தது,

அணிகலன்கள் அப்பா தந்தது என்றாள்.
பச்சக் என்று இதழோடு இதழ் பதித்து
இது மட்டும் நான் தந்ததாக இருக்கட்டும் என்றேன்.

Thursday, July 5, 2012

ஆந்தை ரிப்போர்ட்டர் : இலவச நிலம்! கருணைக் கொலைக்கு இதுதான் தீர்வா?


சக்கர நாற்காலியில், மனநலம் குன்றிய தனது மகளை வைத்துக் கொண்டு, கண்ணீருடன் நின்றிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம், கடந்த வாரம் அனைத்து செய்தித் தாள்களிலும் வந்தன. சில மணி நேரங்களில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் அந்தப் பெண்.


ஐயா, மனநலம் குன்றிய நிலையில் உள்ள 14 வயதாகும் என் பெண் குழந்தையை என்னால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. பசியையும், இயற்கை உபாதையையும் கூட சொல்லத் தெரியாத என்னுடைய பெண் குழந்தையை  காப்பகங்கள் ஏற்க மறுக்கின்றன. என்னிடமும் பணம் இல்லை. இனியும் என்னால் கவனித்துக் கொள்ள இயலாது. எனவே கருணைக் கொலை செய்ய அனுமதி தாருங்கள் என்று  கலெக்டருக்கு ஒரு மனு எழுதித் தந்த அந்தப் பெண்ணின் பெயர் ஜெயா.


பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சிரமம்தான். வாடகை வீடு, தினசரி சாப்பாட்டுக்கே கடினம் எனும்போது அன்பையும் மீறி விரக்தி மனதை ஆக்கிரமிக்கத்தான் செய்யும். ஆனாலும் தனது மகளை கருணைக் கொலை செய்ய தூண்டுகிற அளவுக்கு ஒரு பெண் தயார் ஆகிறாள் என்றால் அதற்கு காரணம் அவள் மட்டுமா? ஏழ்மை எங்கும் இருக்கிறது. எனவே அது காரணமல்ல.  மனநலம் குன்றிய பெண்ணை ஏற்க மறுத்த காப்பகங்களும், மனோ ரீதியாக அப் பெண்ணை மேலும் பலவீனப்படுத்திய சுற்றுச் சூழல்களும் மனிதர்களும் காரணமாக இருந்திருக்கக்கூடும்.


மீடியாக்களின் வெளிச்சம் வந்தபின் தற்போது அப்பெண்ணுக்கு, அரசு தரப்பில் நிலமும், உதவித் தொகையும் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. சில காப்பகங்கள் கருணைக் கொலை எண்ணத்தை கைவிடும்படி அப்பெண்ணை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. அப்பெண்ணுக்கும் நிலம் கிடைப்பதில் சந்தோஷம்தான். ஆனால் . . . அப் பெண்ணின் நிலைக்கு இதுதான் தீர்வா?


37 வருடங்களாக கோமா நிலையில் உள்ள பெண்ணை பாதுகாக்கும் மருத்துவமனை
கடந்த வருடம் உச்ச நீதி மன்றத்துக்கு ஒரு மனு வந்தது. 37 வருடங்களாக கிட்டத்தட்ட உயிரற்று கோமா நிலையில் உள்ள அருணா ராமச்சந்திரா ஷண்பகம் என்ற பெண்ணை கருணைக் கொலை செய்துவிடலாம் என்று அந்த மனு வலியுறுத்தியது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கருணைக் கொலைக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், 37 வருடங்களாக அப்பெண்ணை பாதுகாத்து வரும் மருத்துவமனைக்கு பாராட்டும் தெரிவித்தது. கூடவே மருத்துவ  முறையிலான கருணைக் கொலை (Euthanasia) பற்றி தெளிவான விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.


அருணா மீண்டும் உயிர் பெற்று வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லவே இல்லை. இருந்தாலும் KEM மருத்துவமனை நிர்வாகமும், அங்கிருக்கிற மருத்துவர்களும் அருணாவை கைவிடுவதாக இல்லை. அருணாவின் பிறந்த நாளன்று கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். அப்பெண்ணுடன் அவ்வப்போது பேசுகின்றனர். காதலனே கைவிட்டாலும் மருத்துவர்கள் கைவிடாததன் காரணம், அருணா 37 வருடங்களுக்கு முன் அவர்களுடன் பணிபுரிந்த ஒரு நர்ஸ். அதே மருத்துவமனையில் அவளை மானபங்கப்படுத்த முயன்றான் ஒருவன். விளைவு.. அவன் சிறைக்குள்ளும், அருணா மீள முடியாத கோமாவிற்குள்ளும் தள்ளப்பட்டார்கள். அந்தக் கயவன் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டான். ஆனால் அருணா இன்னும் மீளவே இல்லை. ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால், உடன் பணிபுரிந்த அனைவரும் அருணா மீதுள்ள நட்பும் பாசமும் காரணமாக அவளை இன்னும் பராமரித்துவருகிறார்கள். அருணாவைப் பாதுகாக்க பொருளாதாரச் சுமை ஒரு தடையாக இருக்கவில்லை என்றாலும், எந்த நிலையிலும் அவளை நேசிக்க அவர்களுக்கு எந்த மனத்தடை இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.


தனது 14 வயது மகளை கருணைக் கொலை செய்யத் துணிந்த ஜெயாவுக்கும், இனி எந்த நிலையிலும் தனது மகளை கை விடாமல் நேசிக்கும் மனோ பலமும், பொருளாதார துணையும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.


பின் தகவல் : 
Euthanasia என்றால் இனி பிழைக்கவே மாட்டார்கள் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு அரசு அனுமதியுடன் இறந்து போக உதவுவது.
Passive Euthanasia - மருத்துவ சிகிச்சைகளை நிறுத்தி இறக்க உதவுவது.
Active Euthanasia - ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி நோயுற்றவரை இறந்து போக வைப்பது.


=============================================
சிறை நிரப்பும் போராட்டத்தால் திமுகவிற்கு தெம்பு கிடைத்திருக்கிறதா?
ஆம்
இல்லை
நறுக்கென்று உங்கள் பதிலை அனுப்புங்கள் பார்க்கலாம்.
=============================================

ஆந்தை ரிப்போர்ட்டரில் அக்கம் பக்கம் - 2  என்ற பெயரில் எழுதியுள்ள கட்டுரையின் நிறைவுப் பகுதி!


ஆந்தை ரிப்போர்ட்டர் : கடவுள் துகள், அமலா பால், ஆன்மீகம்


கடவுளின் துகளை கண்டுபிடித்தது எப்படி?
இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி அந்தங்களைத் தேடுவோரில் ஒரு பிரிவினருக்கு ஆன்மீகவாதிகள் என்று பெயர். இன்னொரு பிரிவினருக்கு விஞ்ஞானிகள் என்று பெயர். இந்த வாரம் இதுவரை எவருமே கண்டிராத, கடவுளைப் போல எவர் கண்ணுக்கும் புலப்படாத ஹிக்ஸ் போஸான் என்ற அணுத்துகளின் வாரம்! கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது போல ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்ற வாதம் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாகப்பட்டது ஹிக்ஸ் போஸான் இருப்பதாக 99.999% சதவிகிதம் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. 


அணுவுக்குள் அணுவாகி என்று ஔவையார் பாடியிருக்கிறார். அவர் எதற்காக அப்படிப் பாடினாரோ, நான் அந்த வரிகளை எப்போதுமே அணுவைப் பிளக்கிற சமாச்சாரத்துடன் இணைத்துக் கொள்வேன். ஒரு அணுவைப் பிளந்தால் அதற்குள் Sub atomic எனப்படும் துணைத் துகள்கள் கிடைக்கும். அவற்றில் முக்கியமானவை, Photons, gluons மற்றும் Higgs Boson. இதில் ஹீரோ யார் என்றால் ஹிக்ஸ் போஸான். இந்த துகளைத்தான் எவருமே இதுவரை கண்டதில்லை. அதை காணவும் முடியாது. எனவே இதை கடவுளின் துகள்(God's Particle) என்கிறார்கள்.


இருந்தாலும் இரு விஞ்ஞானிகள் குழுக்கள், இதை எப்படியாவது கண்டுபிடித்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கினார்கள். கண்டுபிடிக்க அவர்கள் பயன்படுத்திய லாஜிக் வெகு சிம்பிள். ஒரு எடை மேடையில் நானும், அமலாபாலும் (ஒருவரையொருவர் நெருக்கி இடித்துக் கொண்டு) நிற்பதாக வைத்துக் கொள்வோம். தராசு 120 கிலோ காட்டுகிறது. நான் இறங்குகிறேன். இறங்கியபின் எடை மேடை 50 கிலோ காட்டுகிறது. அப்படி என்றால் அமலாபாலின் எடை என்ன? 50 கிலோதானே.. இதே எடை பார்க்கிற லாஜிக்கைத்தான் ஹிக்ஸ் போஸனை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தினார்கள்.


ஒரு வினாக்கு 600 மில்லியன் முறை புரோட்டான், நியூட்ரான் கதிர்களை எதிரெதிரே மோதவிட்டார்கள். அந்த மோதலின் விளைவாக பெர்மியான், குளுயான், போட்டான், குவார்க், வெப்பம், மின்காந்த வீச்சுகள் மற்றும் ஹிக்ஸ் போஸான் துகள் உள்ளிட்டவை வெளிப்பட்டன. இவை அனைத்தையும் அப்படியே கூட்டாக எடை பார்த்தார்கள். அதை குறித்துக் கொண்ட பின்னர், (கண்ணுக்கு புலப்படாத) ஹிக்ஸ் போஸானை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் அணுத்தராசை விட்டு இறக்கினார்கள். அப்போது தெரிந்த எடைதான் 125.3+ GeV (Giga Electro Volts). அந்த எடைதான் ஹிக்ஸ் போஸானின் எடை. ஆக கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எடையை கண்டுபிடித்து, ஹிக்ஸ் போஸான் இருப்பதை நிரூபித்துவிட்டார்கள்.


சரி, இந்த ஹிக்ஸ் போஸான் மட்டும் ஏன் ஸ்பெஷல்? இந்தப் பிரபஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறியபோது எக்கச்சக்க தூசு. அந்த தூசுகளுக்கு எடை கொடுத்து, எடையால் உருவம் வரவைத்து சூரியன், பூமி, அமலாபால், நான் மற்றும் நீங்கள் என மாற்றியது இந்த ஹிக்ஸ் போஸான் என்கிற கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துகள்தான். ஹிக்ஸ் போஸான் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சம் இல்லை. அப்படியென்றால் ஹிக்ஸ் போஸான் தான் இந்த பூமியின் கடவுளா? 99.999% ஆம் என்கிறது அறிவியல் உலகம். மீதி .001% சதவிகிதம் ஏதோ டவுட் இருக்காம்.


அது ஏன் சொற்பமாக ஒரு டவுட், புரோட்டான், நியூட்ரான்களை எப்படி மோதவிட்டார்கள் என்பதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் (ஞாபகம் இருந்தால்) சொல்கிறேன். பின் குறிப்பாக ஒரு இந்தியத் தகவல் ஹிக்ஸ் என்பது இந்த கடவுளின் துகள் பற்றி முதன் முதலில் ஆராய்ந்து உறுதியாகச் சொன்ன பீட்டர் ஹிக்ஸ் என்பவரின் பெயர். போஸ் என்பது துணைத் துகள்களை வகை பிரித்து எளிதாகப் புரிய வழி செய்த சத்யேந்திர நாத் போஸ் என்ற இந்திய இயற்பியல் விஞ்ஞானியின் பெயர். இருவரின் பெயர் சுருக்கத்தையும் சேர்த்து கடவுளின் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். அப்புறம் இந்த கடவுளின் துகளை தேடும் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட மிக முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் நமது அப்துல் கலாம்.


நம்ம ஆன்மீகத்துல இல்லாததா, சயின்ஸ்ல இருக்கு
Everything came from Nothing என்கிறது நம்ம ஆன்மீகம். கடவுளின் துகள் இதைத்தான் செய்திருக்கிறது. ஒன்றுமே இல்லாத ஒரு Black Holeல் இருந்து வெடித்துச் சிதறிய ஒன்றுமே இல்லாத தூசுகளுக்கு எடையும், உருவமும் தந்திருக்கிறது. Black Hole அல்லது Dark Matterக்குள் எல்லாம் அடங்கிவிடும். இந்த பூமி, வானம், கடல் மற்றும் காலமும் கூட. அதற்குள் போய்விட்டால் இறந்தகாலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது. எல்லாம் ஒன்றே. எல்லாம் அடங்கிய இந்த ஒன்று வெடித்தால் அதிலிருந்து எல்லாம் பிறக்கும். இல்லையேல் வெடித்தவை எல்லாம் அதற்குள் போய் அடங்கும் என்பது நமது ஆன்மீகத் தத்துவம். Singularity with a field of All Possibilities.  புராணங்களில் அணுவுக்குள் அணுவாய் இருப்பவர், ஆயிரம் கரங்களும், சிரங்களும் கொண்டவர் என்று கடவுள் வர்ணிக்கப்படுகிறார். கடவுளின் துகளும் அவ்வாறே வர்ணிக்கப்படுகிறது. அணுவின் உள்ளிருந்து கொண்டே அணுவைப் பிளக்கிறது. அதிலிருந்து மேலும் பல அணுக்களை உருவாக்குகிறது. அவற்றிற்கு உருவமும், எடையும் தருகிறது. நம்ம ஆன்மீகத்துல இல்லாததா, சயின்ஸ்ல இருக்கு என்கிறார்கள் உண்மையான ஆன்மீகவாதிகள்.


என்னைக் கேட்டால் ஏதோ ஒரு புள்ளியில் ஆன்மீகவாதிகளும், அறிவியல்வாதிகளும் ஒன்றிணைந்து இருவரும் ஒருவராகவே மாறிவிடுகிறார்கள். அந்த வகையில் முதல் அறிவியல் ஆன்மீகவாதி ஒளியின் தத்துவம் சொன்ன ஐன்ஸ்டீன்.

ஆந்தை ரிப்போர்டரில் அக்கம் பக்கம் என்ற பெயரில் நான் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி!

சாக்லேட் கடத்தல் முத்தம்!



‘என் சாக்லேட் எங்கே?‘ என்றான்,
அவளின் கடைக்குட்டி தம்பி வந்து கொண்டே.

‘காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு‘ என்றேன்,
அவள் இதழ்களில் ஊறிக் கொண்டிருந்த சாக்லேட்டை
என் இதழ்களுக்கு கடத்திக் கொண்டே!

சுடிதார் டிசைன் முத்தம்




பூ போட்ட சுடிதார் கேட்டாள்!
என் இதழ்களால் அவள் அதரங்களின்
உதட்டுச் சாயம் எடுத்து
அவள் அணிந்திருந்த சுடிதாரில் 
இதழ் பூக்கள் பதித்தேன்.

செல்ஃபோனாக மாறிய முத்தம்




முத்தம் கலந்த பேச்சுக்களால்
ஃபோனில் லிப்ஸ்டிக் கறை படிவது தவிர்க்க,
என் இதழ்களையே 
அவளின் செல்ஃபோனாக்கினேன்.

ஓடி விளையாடும் முத்தம்



ஓடிக் களிக்கும் பொழுதுகளில்

அவள் கன்னத்திலும், தோள்களிலும், கூந்தலிலும்
உடையின் மடிப்புகளிலும்
தடுக்கிவிழும் முத்தங்களுக்கு,
அவள் இதழ்களால் ஒத்தடம் பெறப் பிடிக்கும்.

தமிழக அரசின் 24 மணி நேர குடி சர்வீஸ்!


24 மணி நேரமும் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி. சென்னை மற்றும் திருச்சியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இனி 24 மணி நேரமும் குடி சப்ளை செய்யலாம் என்று தமிழக அரசு ஒரு ‘செம ஹாட்டு மச்சி‘ அறிவிப்பை வெளியிட்டடிருக்கிறது. ஆனால் சைட் டிஷ் சப்ளை செய்யலாமா என்பது பற்றி அந்தக் குறிப்பில் சைடு தகவல் எதுவும் இல்லை.

சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நகர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு செல்லும். டாஸ்மாக்கர்கள் 24 மணி நேரமும் குடி நீர் சப்ளை இல்லை என்றால் கூட பொறுத்துக் கொள்வார்கள். கடை மூடிய பின்னும் ஷட்டர் கேப் வழியாக எப்படியாவது வாங்கி இன்னொரு கட்டிங் அடிப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினருக்கு இந்த கட்டிங் திறமை இல்லாததால், அவர்கள் வசதிக்காக இந்த 24 மணி நேர குடி சர்வீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குடிப்பு...ஸாரி.. செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இந்த அறிவிப்பால் இனி 24 மணி நேரமும் பீர் கிளாஸ் நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று குடிகார வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன.

என்ன செய்கிறார் கவுன்சிலர் (வார்டு எண் 113) - போயஸ்கார்டனுக்கு அருகிலேயே கழிவு நீர் அடைப்பு

பாபு தெருவுக்குள் நுழைந்தால் 3 ஆச்சரியங்கள் வரும்.

முதல் ஆச்சரியம், போயஸ்கார்டனுக்கு அருகில் இவ்வளவு குறுகலான தெருவா என்பது.
இரண்டாவது ஆச்சரியம், மனிதக் கழிவுகள் மிதக்கும் சாக்கடை நீர் அடைத்துக் கொண்டிருக்கும் அந்த தெருவுக்குள் மூக்கைப்பிடித்துக் கொண்டு மக்கள் எப்படி வசிக்கிறார்கள் என்பது.
மூன்றாவது ஆச்சரியம், போயஸ்கார்டனுக்கு அருகிலேயே இருந்தும், வார்டு (எண்.113) கவுன்சிலர் உதாசீனமாக நடந்து கொள்வது.

பலமுறை எடுத்துச் சொல்லியும் வார்டு கவுன்சிலர் கண்டு கொள்ளவில்லை என்பது பாபு தெருவாசிகளின் குற்றச்சாட்டு.  கவுன்சிலர் அலுவலகத்தினர் கடந்த ஒரு வாரகாலமாக இதோ பார்க்கிறோம், உடனே பார்க்கிறோம் என்று ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். இதுவரை கவுன்சிலர் நேரடியாகப் பேசவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

ஏதோ நம்மால் ஆனது. நண்பர்கள் துணையுடன், கார்ப்பரேஷன் கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோரின் உடனடி கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் கழிவு நீர் அகற்றப்பட்டு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன்!

Tuesday, July 3, 2012

அப்பா-அம்மா தருணங்கள்!

உன் பொண்ணு உன்னை விட அழகுடி... 
என்று மற்றவர் வியக்கும்போது 
மகளின் கூந்தலைக் கோதி அணைத்தபடி அம்மாவும்,

ஜம்முன்னு வளர்ந்துட்டான்டா . . .
என்று மற்றவர் வியக்கும்போது
பைக்கில் மகனின் பின் அமர்ந்தபடி அப்பாவும்,

தங்கள் பிள்ளைகள் பற்றி கம்பீரப் பெருமை கொள்கிறார்கள்.

காத்திருப்பின் உன்னதம் . . .


சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன்
வீடு திரும்பல..

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, காலங்கள் விழுங்கிய தன் குரலை மீட்டெடுக்கும் முயற்சியில் பாடிக் கொண்டிருந்தார். அப்போது தோன்றிய எண்ணம் இது.

காத்திருத்தலின் சுகத்தை நாம் இழந்துவிட்டோமோ?

கணவனுக்காக மனைவியும்
காதலிக்காக காதலனும்
பள்ளிக் குழந்தைக்காக அம்மாவும்
டிபன் பாக்ஸில் பங்கு தருவதற்காக நண்பனும்
தங்கை வைக்கும் மீதிக்காக அக்காவும் . . .

காத்திருப்பதில்தான் எத்தனை வகைகள், எத்தனை பரிவுகள், எத்தனை வலிகள், எத்தனை சுகங்கள்...

காத்திருத்தல் என்பது தற்போது நெரிசல் மிகுந்த சாலைகளில் மட்டுமே நிகழ்கிறது.

எங்கள் தெரு முனையில் தினமும் மாலை 3.30 மணிக்கு ஒரு பெரியவர் நின்று கொண்டிருப்பார். அவர் நிற்காவிட்டாலும், அவருடைய பேரனைச் சுமந்து கொண்டு வரும் பஸ் அங்கே நிற்கும்.  ஆனாலும் மழையோ, வெயிலோ அங்கேயே நிற்பார். பஸ்ஸை விட்டு இறங்கியதும், அவரை ஓடி வந்து கட்டிக் கொள்ளும் அந்தச் சிறுவனின் அணைப்பும், குதூகலமும்   காத்திருப்பின் உன்னதங்களைச் சொல்லும் குறுங்கவிதை!

சியர்ஸ் மக்காஸ்! உங்களுக்காக காத்திருக்கிறேன், நிறைய புன்னகைகளை தேக்கிக் கொண்டு!

Monday, July 2, 2012

கற்றதும் கற்பதும் : டிவி, மொபைல், கேம் ஸ்டேஷன்களை இணைக்கும் Smart Glass


என்னுடைய நண்பருக்கு நண்பர், மைலாப்பூரில் மைசூர் சில்க்ஸ் பட்டுப்புடவைகள் விற்றுக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்து 20 வருடங்களாக அந்தக் கடை ஒரே மாதிரிதான் உள்ளது. கடைப் பையன்கள் பையர்கள் ஆகிவிட்டாலும், மைசூர் சில்க் தவிர வேறெதுவும் உள்ளே நுழைந்தது இல்லை. காஸ்ட்லியான மைசூர் பட்டுகளுக்கு இடையில் என் நண்பர் போன்ற அப்பாவி ஆண் ஜந்துக்களுக்காக ஜிப்பாக்கள் மற்றும் வேட்டிகளுக்கு என்று தனி கொசுறு செக்ஷன் உண்டு. 

மத்த புடவைக்கடையெல்லாம் அமலா பால், அனுஷ்காவை மாடலாகப் போட்டு விதம் விதமாக விளம்பரம் தந்து என்னென்னவோ பட்டுப் புடவை விக்கறாங்களே, நீயும் அந்த மாதிரி ஏன் பண்ணக் கூடாது என்று என் நண்பர் எப்போதுமே அக்கடைக்காரரிடம் கேட்பார். அதே கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு கிட்டத்தட்ட அதே தொனியில், எனக்கு இருக்கற இதே கஸ்டமர்ஸ் போதும். மைசூர் சில்க் அப்படின்னா அவங்க இங்கதான் வருவாங்க. அவங்களுக்கு பொண்ணு, பேத்தி எல்லாம் இங்கதான் வருவாங்க. அதனால நமக்கு இதுவே போதும் பாஸ் என்பார்.

கிட்டத்தட்ட அந்த மைசூர் சில்க்காரர் போலத்தான் மைக்ரோசாஃப்டும், மென்பொருளை விட்டுவிட்டு வன்பொருள் பக்கம் வராமல் இருந்தது. அவர்கள் கல்லா கட்டியதெல்லாம் விண்டோஸ் போன்ற மென்பொருள்களில்தான். தற்போது முதன் முறையாக ஞானோதயம் வந்து சர்ஃபேஸ் - Surface என்ற வன்பொருளை இறக்கியிருக்கிறது. ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஐ-பேட், குளிகைக் கணிணிகள், ஆன்ட்ராயிட் ஃபோன்களால், மேசைக் கணிணிகளின் பயன்பாடு குறைந்து வருகிறது என்பது உண்மை. அபாயகரமாக குறையாவிட்டாலும் குறைந்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட மைக்ரோசாஃப்ட் தானும் ஐ-பேட் போன்ற வடிவத்தில் ஒரு பேடை இறக்கியிருக்கிறது. அதுதான் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்.

இன்னும் சந்தைக்கு வராத இந்த சர்ஃபேஸ் பற்றி நான் ஏற்கனவே சிலவருடங்களுக்கு முன் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் மைக்ரோசாஃப்ட் தனது ஆக்ரோஷமான வியாபார உத்திகளால் மற்ற நிறுவனங்களை மிரட்டியெடுக்கும். அவர்களுடைய தயாரிப்பை விட, வியாபார உத்திகள்தான் பிரபலம். ஆனால் இம்முறை தயாரிப்பும் சிறப்பாக இருப்பதாக சில டெக் செய்திகள் கசிகின்றன. ஆப்பிளின் ஐ-பேடுக்கு கடும் போட்டியாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.

முதல் காரணம் இந்தப் பேடில் இணைக்கத் தேவையான மௌஸ் போன்ற அனைத்து தேவைகளையும் தானே தயாரித்திருக்கிறது. மற்ற நிறுவனங்களை துளியும் சாரவில்லை. எனவே இதுக்கு அது ஒத்துவரவில்லை என்பது போன்ற பிரச்சனை வராது. 

இரண்டாவது முக்கிய காரணம், மேசைக் கணிணிகளில் நாம் பயன்படுத்தும் அதே ஆபரேட்டிங் சிஸ்டம் சர்ஃபேஸிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் விண்டோஸ் பிசியில் நீங்கள் இயக்கும் அத்தனை மென்பொருட்களையும் நீங்கள் சர்ஃபேஸிலும் இயக்க முடியும். ஆப்பிளின் ஐ-பேட் அப்படி அல்ல என்பது மிக முக்கிய வித்தியாசம்.

சர்ஃபேஸ் - Surface வாயிலாக வன்பொருள் துறையில் முதன் முதலில் இறங்கியிருந்தாலும் மைக்ரோசாஃப்ட் படு தெம்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

டிவி, மொபைல், கேம் ஸ்டேஷன்களை இணைக்கும் ஸ்மார்ட் கிளாஸ் - Smart Glass
இதுவும் மைக்ரோசாஃப்ட் சமாச்சாரம்தான். ஆப்பிள் ஏர் - Apple Air என்றொரு மென்பொருள் உண்டு. அதனை வைத்துக் கொண்டு உங்கள் மொபைல் ஃபோன், டிவி, கேம் ஸ்டேஷன்களை ஒன்றிணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட அதே தொழில் நுணுக்கத்துடன் சந்தைக்கு வந்திருப்பதுதான் Smart Glass.

சில வருடங்களுக்கு முன் துபாய் சென்றிருந்தேன். கராமாவில்  ஒரு தூத்துக்குடிக்காரரை சந்தித்தேன். அவர் எனக்கு டிவிட்டரில் அறிமுகமானவர். எனவே அவருடைய வீட்டுக்குச் சென்றதும், ஃபில்டர் காபி, மெதுவடை மற்றும் சுஜாதா, சாண்டில்யன், ஜெயகாந்தன்களை விழுங்கிவிட்டு டிவிட்டரை ஆன் செய்துவிட்டார். அவருடைய பிசி திரை போதாது என்பதால் தியேட்டர் எஃபக்டடில் கேபிள் போட்டு LCD TV திரைக்கு இணைப்பு தந்துவிட்டார். தொடர்ந்து ஒரு மணிநேரம் அவரும் நானும் டிவிட்டரில் உலவி அரட்டையடித்து மீண்டும் சந்திப்பதாக விடைபெற்றேன். இன்னமும் சந்திக்கவில்லை. அந்த ஃபில்டர் காபிக்காக மீண்டும் செல்லலாம்தான்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நண்பர் டெக் பிரியர் என்பதால் கேபிள்கள், அடாப்டர்கள் எல்லாம் வாங்கி கணிணித்திரையை டிவி திரைக்கு கொண்டு வந்துவிட்டார். எல்லோரும் அப்படிச் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே இவை எல்லாவற்றையும் ஒரு பட்டன் வழியாக இணைக்க விடுவிக்க ஒரு அலை மென்பொருள் தேவைப்படுகிறது. அதுதான் Smart Glass. உங்களுக்கு XBox தெரிந்திருக்கும். அது ஒரு விளையாட்டு டப்பா. வெர்சுவலாக பாக்ஸிங் பண்ணலாம், ஃபுட்பால் கிரிக்கெட் விளையாடலாம், ராக்கெட் லாஞ்ச் பண்ணலாம், அடுத்த நாட்டின் மேல் பாம் போடலாம், ஏலியனாக மாறி யாருடனோ போர் புரியலாம். இந்த எக்ஸ் பாக்ஸை பயன்படுத்தி உங்கள் மொபைலையும், டிவியையும் நீங்கள் இணைத்துக் கொள்ள முடியும்.

படுக்கையில் படுத்துக் கொண்டே உங்கள் மொபைலில் உலவிக் கொண்டிருந்த தளத்தை உங்கள் டிவிக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதே போல டிவியிலிருந்து மொபைலக்கு இடம் மாற்றலாம்.

கூகுள் இந்த விஷயத்தில் பிஸ்தா. Smart Glassலும் இது இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையா, புருடாவா என்பது வந்தபின்தான் தெரியும்.

இன் & அவுட் சென்னை - மதுரை பொற்றாமரை குளத்தில் பீஹாரி



தியேட்டர்களுக்கு அதிக வருமானம் தருவது பார்கிங்கா? பாப்கார்னா?

சென்னைவாசிகளில் பணம் படைத்தவர்களை விட, பணம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்தான் அதிகம். ஷாப்பிங் மால் மற்றும் மால் தியேட்டர் கூட்டங்கள் இதைத்தான் காட்டுகிறது. வாசலில் பூக்காரியிடம் 3 ரூபாய் பேரம் பேசி எக்கச்சக்க விலை எனப் புலம்பிவிட்டு, பளபள மால்களில் கூந்தலை அடக்கும் பைசா பெறாத ரப்பர் பேண்டுக்கு முப்பது ரூபாயை பேரம் பேசாமல் கொடுக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலையை இந்திய கார்ப்பரேட் ஸ்டைல் வியாபார ஸ்தலங்கள் குறிவைத்து அபகரிக்கின்றன.

விருகம்பாக்கம் ஃபேம் நேஷனல் தியேட்டரில் என்னென்ன படங்கள் ஓடுகிறது என்பதை இலவசமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் நடந்துதான் செல்ல வேண்டும். காரில் போனால் ஐம்பது ரூபாயும், பைக்கில் சென்றால் முப்பது ரூபாயும் குறைந்தபட்சம் கறந்துவிட்டுதான் உங்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். படம் பார்க்கச் செல்லுபவர்களிடம் பணம் கேட்பது ஓரளவுக்கு நியாயம். விசாரிக்கச் செல்பவர்களிடம் பணம் பறிப்பது நியாயமா?

தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஐடியா. படம் எடுப்பதை விட, பார்க்கிங்கில் நல்ல காசு. பார்க்கிங் காண்டிராக்ட் கிடைக்காவிட்டால் பாப்கார்ன் விற்கலாம். தியேட்டருக்கு வெளியே 10 ரூபாய்க்கு கிடைக்கும் பாப்கார்னை உள்ளே 50 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த கொள்ளைகளை நமது நடுத்தர வர்க்கம் விரும்பி ஏற்பதுதான் விசித்திரம்.

கிரெடிட் கார்டு விற்பவர்களை
உனக்கு சிபாரிசு செய்யலாம்
என்று முடிவு செய்துவிட்டேன்.
நீதான் உண்டியலில் பணம் சேர்ப்பதை 
வெறுக்கிறாயே. 

ஃபேஸ்புக்கின் கட்டாய மின்னஞ்சல்
இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கிறதா? இருந்தால் உங்களைப் பற்றிய விபரங்களை ஒரு முறை சரிபாருங்கள். குறிப்பாக மின்னஞ்சல் முகவரியை. அப்படியே ஷாக் ஆகிட்டேன் என்பீர்கள். ஏனென்றால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி உங்களைக் கேட்காமலேயே மாற்றப்பட்டிருக்கும். என்னுடைய மின்னஞ்சல் r.selvakkumar@gmail.com ஆனால் அது r.selvakkumar@facebook.com என்று மாற்றப்பட்டிருந்தது. யார் மாற்றியது? வேறு யார் ஃபேஸ்புக்கேதான். நம்மைக் கேட்காமல் நமது முகவரியை மாற்றுவது தனிமனித சுதந்திரத்தின் அத்து மீறல் இல்லையா? அத்து மீறல்தான். ஆனால் யார் கேட்பது. நாம் எல்லோருக்குமே ஃபேஸ்புக் என்கிற போதை இருக்கிறது. என்ன விலை ஏற்றினாலும் டாஸ்மாக்வாசிகள் சின்ன முணுமுணுப்பு கூட இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து கொண்டு க்யூவில் நின்று கொண்டு குடிப்பது போல, நாம் ஃபேஸ்புக் போதையை விட்டு விலக முடியாமல் அதிலேயே புழங்குகிறோம்.

2010ல் ஃபேஸ்புக் தனது மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால் எவரும் கண்டு கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் சிக்ஸர் அடித்தாலும் மின்னஞ்சல் விஷயத்தில் டக் அவுட் ஆகிவிட்டது. அதைச் சீண்டுவார் இல்லை. எனவே குறுக்கு வழியில் அனைவரையும் ஃபேஸ்புக் மின்னஞ்சலை பயன்படுத்த வைக்க நடந்திருக்கும் முயற்சிதான் இந்த அத்து மீறல். நான் கல்லூரி படித்த காலத்தில் என்னுடைய மேடை உதார்களையெல்லாம் பார்த்துவிட்டு, ஏம்பா உன்னை நம்ம கட்சியில சேர்த்தாச்சுப்பா என்றார் லோக்கல் பிரமுகர் ஒருவர். என்னை கேட்கவே இல்லை. அது போல உங்களை எங்க மின்னஞ்சல் சேவைக்கு மாத்தியாச்சு என்கிறது ஃபேஸ்புக் என்கிற மூஞ்சு புக். ஸாரி டியர் மூஞ்சு புக். எனக்கு உங்க மின்னஞ்சல் சேவை வேண்டாம். அதுவும் இது போல என்னைக் கேட்காமலேயே (ஏ)மாற்றுகிற சமாச்சாரம் வேண்டவே வேண்டாம்.

கடந்தவாரம் சிலர் தங்களுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக புலம்பிக் கொண்டிருந்தார்கள். இந்த இ-மெயில் மாற்றங்களினால் ஏற்பட்ட கோளாறுதான் இது என்பது போனஸ் தகவல்.

சென்னை சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் பரங்கிமலைகள்
நீங்கள் பரங்கி மலையை தரிசிக்க வேண்டும் என்றால், சென்னையின் ஒவ்வொரு தெருவிலும் தரிசிக்கலாம். தேவைப்பட்டால் அதில் இடறி விழுந்து புழுதியில் புரண்டு சந்து முனை விநாயகரை பூஜிக்கலாம். சென்னை நகரின் மாபெரும் அபத்தங்களில் ஒன்று ஸ்பீட் ப்ரேக்கர்கள் எனப்படும் இந்த முதுகுபிரேக்கர்கள்தான். சென்னையில் நயன்தாரா திருமண பிரேக்கர்களுக்காக நெஞ்சுவலி வந்து அவதிப்படுபவர்களைக் காட்டிலும், ஸ்பீட் பிரேக்கர்களால் அவதிப்படும் முதுகுவலி, இடுப்புவலிவாசிகள்தான் அதிகம். இவர்கள் டாக்டருக்கு பணம் கொடுப்பதை விட வக்கீல்களுக்கு ஃபீஸ் கட்டலாம்.  இவற்றை சந்துக்கு சந்து கட்டிவிட்டிருக்கும் பொறியாளர்களின் மேல் கேஸ் போட்டு இந்த வேகத்தடைகளை நீக்கினால், முதுகும், இடுப்பும் வலியிலிருந்து தப்பிக்கும்.

வேகத் தடைகளின் மேல் மேல் வரிகுதிரைகள் போல வெள்ளைக் கோடுகள் இருக்க வேண்டும். இரவுகளில் கண்களில் பட எளிதாக ஒளிரும் தன்மையுடன் வண்ணம் பூச வேண்டும். 40 மீட்டர்களுக்கு முன்பாகவே வாகன ஓட்டிகளை அறிவிப்பு பலகை வைத்து உஷார்படுத்த வேண்டும் என்பது IRCயின் விதி. IRC என்பது Indian Road Congress என்பதின் சுருக்கம். நமது மாநகராட்சி இஞ்சினியர்கள் பரங்கிமலையை ஸாரி, ஸ்பீட்பிரேக்கர்களை கட்டி முடித்ததும், விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருக்கிறதா என்பதை இவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். ஆனால் எங்கெங்கே வேகத்தடைகள் உள்ளன என்ற பட்டியலே இவர்களிடம் இல்லையாம். அப்புறம் எப்படி இவர்கள் சரிபார்ப்பார்கள்.

சென்னையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி எதிர்ப்படும் இவற்றில் மோதி ஒரு முறையாவது தூக்கி வீசப்படாத மோட்டர் பைக்கர்களே கிடையாது. ஏதோ அப்பா, அம்மா செய்த புண்ணியம். தினசரி பத்திரமாக வீடு வந்து சேருகிறோம். அதனால் நாமும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. இந்த வாரம் நடந்த ஒரு விபத்தில், அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்களின் மகன் வேகத்தடையில் மோதி வீசி எறிப்பட்டு இறந்துவிட்டார் என்றவுடன், பரபரவென இதை சரிசெய்ய வேண்டும் என்று பேச்சு எழுந்திருக்கிறது.

இன்னும் ஒரு வாரம். அதற்குள் அஜீத்தின் பில்லா - 2 ரிலீசுக்கு தயாராகிவிடும். நாமும் அதில் மும்முரமாகிவிடுவோம். வேகத்தடை பயங்கரத்தை மறந்துவிடுவோம். ஆமா.. கமலின் விஸ்வரூபம் எப்போ வருது?

மதுரை பொற்றாமரைக் குளத்தில் ஹிந்தி
நான் மதுரைக்கு செல்லுவதற்காகவே அடிக்கடி எனக்காகவே ஒரு சந்தர்ப்பம் தயாராகிவிடுகிறது. ஒரு மாதத்திற்கு முன் திருநெல்வேலிக்கு நேரடி டிக்கெட் கிடைக்காததால் மதுரையில் நின்று சென்றேன். 3 வாரங்களுக்கு முன் நண்பர் வீட்டுத் திருமணம். இருநாட்களுக்கு முன் வில்லாபுரத்தில் ஒரு ஆன்லைன் பயிற்சி திட்டம் பற்றிய டெமோ. இம்முறை உடன் வந்த நண்பர் மெகா பக்தர் என்பதால் காலையும், மாலையும் மீனாட்சி அம்மனுக்கு ஹலோ சொல்லும் பாக்கியம் கிட்டியது.

சங்கத் தமிழ் வளர்த்த பொற்றாமரைக் குளத்தில் ஹிந்தி பேசிய கட்டிட வேலை பார்க்கும் பீகாரி பெண்மணிகள் கருங்கற்களை வீசி நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஹெலிகாப்டர் கிராஷ் போல மகா இரைச்சல். ஸ்டீல் அஸ்பெஸ்டால் ஷீட்டுகளை சரிவாக அடுக்கி அதில் கற்களை டமார் டமார் என உருட்டி விட்டதில் ஏக தூசி. அருகில் இருந்த பீஹார் மேஸ்திரிகள், நான் ஃபோட்டோ எடுப்பதைப் பார்த்ததும், சுப்-கப் என்று அந்தப் பெண்மணிகளை அதட்டிக் கொண்டிருந்தார்கள்.

நக்கீரா! சென்னையோ? மதுரையோ? மாநகராட்சி இன்ஞினியர்களுக்கு இயற்கையிலேயே அறிவு மட்டா?

தனியார் பேருந்து நிறுவனத்தின் அலட்சியம்
இப்போது சென்னை ரிடர்ன் கதைக்கு வருகிறேன். வழக்கமாக கே.பி.என் பஸ் நன்றாக இருக்கும் என்பார்கள். இந்த முறை ஸ்லீப்பர் என்று ஆன்லைன் ரிசர்வேஷனில் பணம் வாங்கிக் கொண்டு, மதுரைக்கு புஷ்பேக்தான் என்று டபாய்த்தார்கள். ஓய்வெடுக்க மாற்று டிரைவர், துணைக்கு க்ளீனர் கூட இல்லாமல் இரவு முழுவதும் ஒரே டிரைவர். மனிதர் தூங்கிவிடுவாரோ என்ற பயத்திலேயே எனக்கு தூக்கம் வரவில்லை. பக்கத்து சீட் அன்பரின் குறட்டை ஒரு உபரி தொந்திரவு. நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக நிறுத்தச் சொல்லி பயணி ஒருவர் கேட்டதற்கு டிரைவர் அனாவசியமாக கோபித்துக் கொண்டார்.

இந்த சிடுசிடுப்பு இம்சை, அதிகாலை சென்னை வரும் வரை தொடர்ந்தது. எல்லா பயணிகளையும் எடுத்தெறிந்து மரியாதைக் குறைவாகப் பேசினார். இருந்தாலும் நானோ, உடன் வந்த நண்பர்களோ அவரை கோபிக்காமல் விட்டுவிட்டோம். அதற்கு ஒரே காரணம் தான். இருப்பது ஒரு டிரைவர். துணைக்கு இன்னொரு டிரைவர் தர வேண்டிய கே.பி.என் நிர்வாகம் பணத்தை வாங்கி பாக்கெட்டை நிரப்புவதோடு தன் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டது. இருக்கிற இந்த டிரைவரையும் கோபித்தால், வாதம் விவாதமாகி அவர் பத்திரமாக வண்டியை செலுத்த முடியாமல் போய்விடலாம் என்பதால் அமைதி காத்தோம்.

நமது பிரச்சனையே இதுதான். நமக்குத் தேவையான அடிப்படை வசதிகள், அதற்கான உரிமைகள் பற்றிய குறைந்தபட்ச அக்கறை கூட நமக்கு இல்லை. அரசாங்க அதிகாரிகளும் நம்மில் ஒருவர்தானே. அதனால்தான் அரசாங்கமும் நம்மைப் போலவே அலட்சியமாக இருக்கிறது.

புக் ஆஃப் ரிவ்யூ நம்ம ஊரில் உண்டா?
நண்பர் ஒருவர் ஹாலோ பிளாக் சைஸில், பரிசுப் பேப்பர் சுற்றி, ஒரு புத்தகம் தந்தார். என்ன இது என்றேன். உங்கள் மகளுக்கு குழந்தைக் கதைகள் என்றார். இத்தனை தடிமனாக ஒரே புத்தகமா? பொதுவாக குழந்தைகளுக்கு இத்தனை எடையுள்ள புத்தகங்கள் பிரசுரிக்க மாட்டார்களே என்றேன். சார்.. எதையாவது சொல்லி என்னைக் குழப்பாம, உங்க மகளுக்கு கொடுங்கள் சார் என்றபடி காரில் ஏறி புறப்பட்டுவிட்டார். அவர் சென்றபின் பிரித்துப் பார்த்தேன். அது கதைப் புத்தகம் இல்லை. குழந்தை கதைகளைப் பற்றிய விமர்சனப் புத்தகம். புக் ஆஃப் ரிவ்யூ. நம்ம ஊரில் இந்த மாதிரி புத்தகங்களை பப்ளிஷர்கள் வெளியிடலாம். புத்தகம் வாங்குவதற்கு முன், புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்ணா மேம்பாலத்தில் பஸ் விபத்து
இந்தக் கட்டுரையை எழுதி முடித்த சில வினாடிகளில் இந்த தகவல் கிடைத்தது. சென்னையின் இதயமான அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று கட்டுப்பாடு இழந்து சுவரை இடித்துக் கொண்டு தலை கீழாக விழுந்துவிட்டது. படுகாயம் அடைந்த 30 பயணிகள் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

இது தற்போது கிடைத்திருக்கும் முதல் தகவல். தகவல்களை விட யூகங்களும், வதந்திகளும் எக்கச்சக்கமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மிக முக்கியமானது. ஓட்டுனர் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதே அது. இந்த விபத்தில் இது உண்மையோ பொய்யோ, பல பேருந்து ஓட்டுனர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

காதில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு மோட்டர் பைக், ஆட்டோ, கார், பஸ் ஓட்டுவது சென்னையில் சர்வசாதாரணம். தனக்கு ஒன்றும் ஆகாத வரையில், இதை ஒரு கவனக் குறைவாகவே எவரும் கருதுவது இல்லை. பெண்களே அக்கறையின்றி இப்படிச் செல்வதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

அமைச்சர் செல்லூர் ராஜி அவர்களின் மகன் இறந்த விபத்தில் வேகத் தடையில் மோதி தூக்கி எறியப்பட்டு இறந்ததாக கூறப்பட்டாலும், அவர் செல்ஃபோன் பேசிக் கொண்டே மோட்டர் பைக் ஓட்டியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

இனியும் சென்னை போக்குவரத்து காவல்துறை மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், மொபைல் ஃபோன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் விஐபி அது இது என யாருக்கும் தயவு தாட்சண்யமே பார்க்கக் கூடாது.

கொஞ்சம் ஸினிக்கலான கவிதை (என்றும் சொல்லலாம்)
------------------------------------------------
டாக்ஸ் பிரச்சனை
போனஸ் பிரச்சனை
பெட்ரோல் பிரச்சனை
இஞ்சினியரிங் சீட் பிரச்சனை
ரேஷன்கார்டு பிரச்சனை
பவர்கட் பிரச்சனை
காதல் பிரச்சனை
நாத்தனார் பிரச்சனை
சுகர் பிரச்சனை
என எந்தப் பிரச்சனையும் இல்லாமல்
டிராபிக் நெரிசலில்
கையேந்திப் பிழைக்க
உன்னால் எப்படி முடிகிறது?

(டாக்ஸ் பிரச்சனையில் துவங்கி சுகர் பிரச்சனை வரை உள்ள வரிகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும் மாற்றி எழுதிக் கொள்ளலாம். ஏனென்றால் பிரச்சனைகள் வரிசையாக வருமே தவிர, வரிசையில் வருவதில்லை. சியர்ஸ்!!!)


கல்யாண மண்டப புரோக்கராக அவதாரம் எடுத்திருக்கும் ஜெ.வுக்கு ஒரு கடிதம்

மாண்புமிகு கல்யாண மண்டப புரோக்கரம்மாவுக்கு வணக்கம்,


ஒரு புத்தகத்தை இருமுறை வாசிப்பதை விட, ஒரு கல்யாணத்தையே இருமுறை செய்வது நல்லது என்று சமீபத்தில் நடந்த 1006 கல்யாண வைபவத்தில் நிரூபித்தீர்கள். 

அதே போல, நூலகங்களுக்குப் போய் புத்தகம் படிக்கும் ஆர்வலர்களை விட, நூலகங்களில் கல்யாணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அதிகம் என நீங்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை தற்போது திருமண மண்டபமாக மாற்றி வாடகைக்கு விட்டிருப்பதன் மூலம், தமிழகத்தில் தலை சிறந்த கல்யாண மண்டப புரோக்கராக உயர்ந்திருக்கிறீர்கள்.

இதே போல, உங்கள் போயஸ் கார்டன் வீட்டின் ஒரு பகுதியையும், கொட நாடு கெஸ்ட் ஹவுஸின் ஒரு பகுதியையும் திருமண மண்டபங்களாக அறிவித்துவிட்டால், மண்டபம் கிடைக்காமல் திண்டாடும் தமிழகம் உங்களை வாழ்த்தும். ஒரே ஆண்டில், நூறாண்டு கல்யாண மண்டப புரோக்கர்களையும் மிஞ்சியவர் என்ற புகழும் உங்களுக்கு கிடைக்கும்.

இப்படிக்கு,
நூலகங்களில் கல்யாண மண்டபங்களை விரும்பாத ஒரு சாதாரணன்.

(பின் குறிப்பு - The Hinduவில் வெளியான ஒரு செய்திக் குறிப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது)