Tuesday, September 23, 2008

பாசப் பறவைகள் - சீசன் 2

"யார் மேலயாவது கோபம்னா செல்வி இப்படிதான் பண்ணிடுது"
இது கலைஞரின் வசனம். படத்தில் எழுதியது அல்ல, நிஜத்தில் கூறியது.

தினகரன் விவகாரம்
முதன் முதலில் அழகிரிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கருணாநிதியின் மகள் செல்வியும், அவர் கணவரும் செல்வமும்தான். ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கிற அளவுக்கு வாக்குவாதம் சூடாகி, செல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.

தினமலர் விவகாரம்
சன் டிவி நியூஸ் எடிட்டர் ராஜாவுக்குப் பதிலாக, செல்வம் தன்னையே முன் நிறுத்திக் கொண்டார் அல்லது மாறன் சகோதரர்களால் நிறுத்தப்பட்டார். இப்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் நேரடி பாதிப்பு செல்வத்துக்குத்தான்.

தினகரன் விவகாரத்தில் தனது கணவர் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த விஷயத்தில் மிகவும் அப்செட் ஆனார் செல்வி. தற்போது தினமலர் விவகாரத்தில் கணவருக்கே நேரடி பாதிப்பு என்றதும் கலைஞரிடம் மிகவும் கோபித்துக் கொண்டதாகத் தகவல்.

இன்று பெங்களுருவிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

"யார் மேலயாவது கோபம்னா செல்வி இப்படிதான் பண்ணிடுது", சென்ற முறை செல்வி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கலைஞர் இப்படித்தான் சொன்னாராம்.

இந்த முறையும் அதே டயலாக்கை சொல்வாரா? அல்லது யார் மேலயாவது கோபம்னா நான் இப்படித்தான் செய்வேன் என்று தடாலடியாக எதையாவது செய்வாரா?

கணவருக்கே பாதிப்பா என்று கொதித்துப் போய் பார்த்துக்கொண்டிருக்கிறார் மருமகள் செல்வி . . .
தனக்கே பாதிப்பா என்று குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார் மருமகன் செல்வம் . . .
நமக்கு நேரடி பாதிப்பில்லை என்று நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேரன்கள் மாறன் பிரதர்ஸ் . . .
சின்னப்பசங்களுக்கு இடங்குடுக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன் என்று, பொறுமிக்கொண்டிருக்கிறார் மகன் அழகிரி.

பாசப் பறவைகள் சீசன் 2 ஆரம்பித்துவிட்டது என நான் நினைக்கிறேன்.

கைப்புள்ள தாக்குதலால் குழம்பியிருக்கும் விஜயகாந்த் இரசிகர்கள்


"அமெரிக்க ஜனாதிபதிக்கு சவால்விடுகிறேன்", என்று சந்து முனைக் கூட்டத்தில் யாரோ ஒரு பேச்சாளர் ஏதோ ஒரு கட்சியின் சார்பில் குவார்டர் அடித்துவிட்டு முழங்கிக் கொண்டிருந்தார் (அட கை தட்டுங்கப்பா என்று அவரே அன்பு வேண்டுகோளும் விடுத்தார்)

சந்து முனைக்காரர் அமெரிக்க ஜனாதிபதிக்கு சவால் விடுகிற காமெடியெல்லாம் சகஜம். ஆனால் பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி, சந்து முனைக் காரருக்கு சவால் விட்டால் . . .
ஆச்சரியம், கோபம், கையாலாகாத்தனம்,கேவலம் அவ்வளவுதானா என சகல நெகடிவ் உணர்வுகளையும் கலந்து, ஜீரணிக்க முடியாமல்,ஒரு அமெரிக்கன் நொந்து போவானா மாட்டானா?

அப்படி ஒரு நொந்து போன ஒரு மனநிலைதான் விஜயகாந்த் இரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு திடீரென வந்துவிட்டது. கலைஞருடன் மோதல், ஜெயலலிதாவுடன் விளாசல் என ஒண்டிக்கு ஒண்டி பிளந்து கட்டியபோது "அசத்துறான்யா" என விஜயகாந்துக்கு கைதட்டியவர்கள் எல்லாம், வடிவேலு எபிசோடில் பொசுக்கென "நல்லாத்தான போய்க்கிட்டிருந்திச்சி" என கன்னத்தில் கை வைத்து நொந்திருக்கிறார்கள்.

விஜயகாந்த் இரசிகர்களைப் பொருத்தவரை கலைஞரும், ஜெயலலிதாவும் வில்லன்கள். இந்த பிரமாண்ட வில்லன்களின் இடத்தில் இனி ஒரு 'கைப் புள்ளையா'? இனிமேல் இந்த காமெடியன் கூடவா நம்ம தலைவர் மோதணும். ஐயய்ய நல்லால்ல, எப்படியாவது கதையை மாத்துங்க, என்று ஏமாற்றமும் கையாலாகாத்தனமும் மிக்ஸ் ஆகி இரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்கள்.

விஜயகாந்த்தை கலைஞர் முரசொலியில் புரட்டியெடுத்த போதும், ஜெயலலிதா 'குடிகாரன்' என வறுத்தெடுத்த போதும் அவற்றை அனல் பறக்க இரசித்தார்கள். ஏனென்றால் அவர்களுடைய விளாசல்களால் விஜயகாந்தின் மவுசு கூடிக்கொண்டே வந்தது. ஆனால் ஒரு கைப்புள்ளையின் சவால் அவர்களை நிலை குலைய வைக்கிறது. இவன் கூட மோதுனா தலைவருக்கு அசிங்கம், மோதாம விட்டா பங்கம். இப்ப என்னடா செய்யறது?

இதே மனநிலைதான் விஜயகாந்துக்கும். அதனால்தான் கைப்புள்ளையை இயக்குவதும் கருணாநிதிதான் என்று மீண்டும் தி.மு.க மேல் பாய்கிறார். விஜயகாந்தின் சினிமா இரசிகனாக இருந்து அரசியல் ஆதரவாளராக மாறிய அனைவருக்கும் இப்போது குழப்பம். தலைவர் படம் தீடீர்னு ஏன் இப்படி ஆயிடுச்சு? வடிவேலு வில்லனா வெறும் காமெடியனா?

வடிவேலுவை அப்படியே விட்டா பயமிருக்காது. தொட்டா பாப்புலாரிட்டி ஏறிடும். தொடலாமா? வேண்டாமா? கலைஞர் திட்டத்திட்ட நம்ம தலைவருக்கு மவுசு ஏறின மாதிரி, நம்ம தலைவர் திட்டத் திட்ட ஒரு கைப்புள்ள பாப்புலர் ஆகுதே. தலைவரையே ஜெயிப்பேன்னு சவால் விடுதே. இப்ப என்ன பண்றது? தொடலாமா? கூடாதா?

ஸ்ஸ்ஸ்.... அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .

இன்றைக்கு விஜயகாந்த் இரசிகர்களின் மனநிலை இதுதான்

Monday, September 22, 2008

வடிவேலு மோதலால் வயசுக்கு வந்திருக்கும் புது மொட்டு விஜயகாந்த்

திடீரென நாணிக் கோணி பேச ஆரம்பித்தால்
அந்தப் பெண் வயசுக்கு வந்து விட்டாள் என்று அர்த்தம்
திடீரென மாற்றி மாற்றிப் பேசினால்
அந்த அரசியல்வாதி வயசுக்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

காதல் படத்தில் ஹீரோ பரத் மோதியவுடன், ஹீரோயின் சந்தியா சட்டென வயசுக்கு வந்து விடுவார். அதே போல சினிமா காமெடியன் வடிவேலு ஒரு ஹீரோவைப் போல மோதியதும், அரைகுறை விஜயகாந்த் ஒரு ஹீரோயின் போல விசுக்கென முழு அரசியல்வாதியாக பூப்பெய்திவிட்டார்.

வடிவேலு மோதலை (அகில உலகமும் எதிர்பார்த்தது போல) கருணாநிதியின் சதி என்று அவர் சன் நெட்வொர்க்கில் அளித்த பேட்டி சூப்பர் காமெடி.

புதுசாக வயசுக்கு வந்திருக்கும் அரசியல்வாதி விஜயகாந்தின் பல்டிக்கு சில சாம்பிள்கள்.

அன்று
யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். கூட்டணி வைத்தால் ஊழல்தான் பெருகும்.

இன்று
தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் கூட்டணி வைப்பேன்.(கையெழுத்தெல்லாம் வாங்காம, கம்யூனிஸ்டுகளுடன் ஏற்கனவே பேச ஆரம்பிச்சிட்டாரு)

அன்று
குடும்ப அரசியல் செய்ய மாட்டேன்.
இன்று
மச்சினன் சுதிஷிம், மனைவி பிரேம லதாவும் கட்சிக்கு உழைப்பதில் என்ன தவறு?

அன்று
பவர்கட்டுக்கு காரணம் மின்வெட்டு ஆற்காடு வீராசாமியின் திறமைக் குறைவுதான்
இன்று
எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் என எனக்கு செய்தி வந்துள்ளது.

அன்று
(சென்ற வருடம்) வடிவேலு குடித்துவிட்டு கலாட்டா செய்கிறார்
இன்று
வடிவேலு விவகாரம் கருணாநிதியின் திட்டமிட்ட சதி

அன்று
கருணாநிதியைப் போல எனக்கு பதவி ஆசை கிடையாது
அன்றே
2011ல் நான் முதலமைச்சர் ஆவேன்

நிறம் மாறும் ஜெயலலிதாவும், அவரின் இமேஜ் பூஸ்டர்களும்

தேர்தல் நெருங்கும்போது, யாரை வேண்டுமானாலும், எனது அன்புச் சகோதரர், தம்பி என்று சொல்லி உருகுவார் ஜெயலலிதா.
அதே போல தேர்தல் முடிந்தபின் போயஸ் தோட்டத்தின் இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் சசி அக்காவுடன் ஒளிந்துகொண்டு யார் கண்ணுக்கும் படாமல் ஐஸ்பாய் விளையாடுவார், பிடிக்காதவர்களை எட்டி உதைப்பார்.

அவர் நிறம் மாறும் அதே சமயம், அவருடைய ஆதரவு ஊடகங்களும் நிறம் மாறும். குறிப்பாக தேர்தல் நெருக்கத்தில் வர வர ஜெயலலிதா மாறிவிட்டார் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

உதாரணத்திற்கு இன்றைய தினமலர்.காம்(Sep 22,08)

ஜெ., போக்கில் மாற்றம்; பொதுக்குழு காட்டும் உண்மை
இதுதான் தலைப்பு - இனிமேல் தினமலரின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளதை, சமீபத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வெட்ட வெளிச்சமாக்கியது.
அதாகப்பட்டது, ஜெயலலிதா மாறிவிட்டார் என்பதை யாரோ இருட்டடிப்பு செய்து வைத்திருந்தார்களாம்.

பொதுக்குழுவில் அவரது பேச்சும், நடந்து கொண்ட விதமும், அவர் மீது இதுவரை இருந்துவந்த பல இமேஜ்களை உடைத்தெறியும் வகையில் அமைந்திருந்தது.
அதாகப்பட்டது, இது வரை ஜெயலலிதா பற்றி நமக்கிருந்த எண்ணமெல்லாம், யாரோ திட்டமிட்டு உருவாக்கிய தவறான இமேஜ்தானாம். அந்த இமேயையெல்லாம் ஜெயலலிதா இந்த பொதுக்குழுவில் அடித்து நொறுக்கிவிட்டாராம்
.
தமிழ்ப் பத்திரிகைகளையோ, தமிழ் சேனல்களையோ பார்ப்பதில்லை என அவரே குறிப்பிட்டிருக்கிறார். . . . . . . . . . . . . தினமலர் உட்பட சில பத்திரிகைகளின் பெயரைக் குறிப்பிட்டு, அன்று அவர் சாடினார். இந்தப் பத்திரிகைகள் தன்னையும், கட்சியையும் புறக்கணிப்பதாகக் கூறினார்.செய்திகளையும், அறிக்கைகளையும் முழுமையாக வெளியிடுவதில்லை என்றும் பேசினார். இதன் மூலம், தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகளை அவர் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார் என்பதும், தினமலர் நாளிதழில் தன்னைப் பற்றிய செய்தி வருவதை அவர் எந்தளவிற்கு விரும்புகிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.
அதாகப்பட்டது, சசி அக்காவுடன் சேர்ந்து கொடநாட்டை குறட்டை நாடாக மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் (எப்போதும் தன்னை உயர்த்திப்பிடிக்கும்) தினமலர் போன்ற பத்திரிகைகள் கூட தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்று அவர் நொந்து கொள்ளவில்லையாம். ஏன் (இமேஜ் பூஸ்டர்)செய்தி வெளியிடவில்லை என்று உரிமையோடு சாடினாராம்.

அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள் சேடப்பட்டி முத்தையா, செல்வகணபதியை மட்டுமல்லாது சென்னையை ஒரு முறைக்கு மேல் பார்த்திராத ஊராட்சி வார்டு மெம்பர் வரை, தன் கட்சியில் இருந்து சென்றவர்கள் தி.மு.க.,வில் எப்படி அவதிப்படுகின்றனர் என்பதைச் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அதாவது, சேடப்பட்டி முதல் ஏதோ ஒரு பட்டியின் வார்டு மெம்பர் வரை யாரையும் காலில் விழ வைக்காமல், காத்திருக்க வைக்காமல், அவர் தனக்கு சமமாக உட்கார வைத்திருந்தாராம். இன்று அவர்கள் எல்லோரும் உரிய மரியாதை கிடைக்காமல் தி.மு.கவில் அவதிப்படுகிறார்களாம். தன்னுடைய (அவ)மரியாதையை ஒதுக்கி, இந்த (அவ)மரியாதையை எப்படி அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள் என்று ஜெயலலிதா ஆச்சரியப்பட்டாராம்.


பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், கட்சியினருடன் அமர்ந்து கலகலப்பாக பேசினார். அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். இதன் மூலம், தானும் மற்ற தலைவர்களைப் போல், அனைவரிடம் எளிதில் பழகுவேன் என்பதை வெளிப்படுத்தினார்.மொத்தத்தில், பொதுக்குழு மூலம் ஜெயலலிதா, தன் மீது இதுவரை இருந்துவந்த பல்வேறு இமேஜ்களை உடைத்தெறிந்துள்ளார் என்பதை வெளிப்படையாக உணர முடிந்தது.
அதாகப்பட்டது, தேர்தல் வரும்போதெல்லாம் ஜெயலலிதா இப்படித்தான் நடந்து கொள்வார் என்பது தவறாம். மற்ற நேரங்களில் குறிப்பாக தோற்று விட்டால் ஒளிந்து கொள்வதும், ஜெயித்துவிட்டால் காக்கவைத்து, கண்டபடி திட்டி அவமதிப்பார் என்பதும் தவறாம். மக்கள் மனதில் இருந்த இது போன்ற தவறான இமேஜை எல்லாம் ஜெயலலிதா அடித்து நொறுக்கிவிட்டாராம்.

ஜெயலலிதா அடக்கத்தின் மறுஉருவம்
அமைதியின் சின்னம்
மரியாதை வள்ளல்
கருணைக் கடல்
என்று நம்பிட்டோம்யா . . . நம்பிட்டோம்!!!