வாழ்க வளமுடன்!
தமிழின் அமுத வரி எடுத்தேன் ..
திருவெம்பாவை சொல்ல...
இந்த வரிகளை எழுதித்தந்தவள் ஃபேஸ்புக் தங்கை அமுதா. திருவெம்பாவை பற்றி எழுதும்போது, நமீதாக்களை பற்றிக் குறிப்பிடாமல் பக்தியோடு எழுதுங்கள், என்று செல்லமாக அதட்டி மேற்கண்ட வரிகளைக் கொடுத்தாள். அதிலிருந்து நான் தொடரவேண்டுமாம். 3 நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த எழுத்து கூட வரமாட்டேன்கிறது.
வெள்ளத்தில் ஏற்படும் சுழி, மெதுவாகத் துவங்கி, துரிதமாக பெருகி, படு குழியாக மாறி, எதையும் உள்ளுக்குள்ளே ஆழ்த்திவிடும். அந்தச் சுழி போன்ற மயக்கத்தில், (நமீதாக்களையும், தமன்னாக்களையும் இரசித்துக்கொண்டு) செல்லும் திசை தெரியாது (ஜொள்ளின்)ஆழத்தில் சிக்கும் (என்னைப் போன்ற ஜீவராசிகளின்) உயிர்களை உணர்வூட்டி, தட்டி எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" (சாமி கும்பிடும்போது, சினிமா நடிகை எதுக்குடா ராஸ்கல்) என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவதுதான் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.
ஸ்ஸ்ஸ் அப்பா, உருப்படியா ஒரு வரி எழுதலாம்னு பார்த்தா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .
மார்கழி மாதத்தில் நான் மட்டும்தான் 8 மணி போர்வைக்குள் பதுங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். அந்தக்காலத்திலேயே இறைவனை வழிபடவேண்டிய சில பெண்களே சுணக்கமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்பாடல்களில் வரும் பெண்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள்.(உய் உய்னு சுத்த தமிழ்ல கலக்கறனா?) அந்தப் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லாதவன், அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடுகிறார்கள். பிறகு இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன (என்னைப் போல பெட்ஷீட்டுக்குள் அலாரத்தை அணைத்துவிட்டு அரைமயகத்திலிருக்கும்) அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவிக்கிறார்கள்(என் மனைவி எனக்கு காபி தருவது போல), அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானை (மார்கழி மாசத்துலயாவது சாமியைக் கும்பிடுங்க என்று என் வீட்டில் அர்ச்சிப்பது போல) பாடத் தேற்றுகின்றனர்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர், இறை மணக்க, தமிழ் மணக்க, உளம் மணக்க திருவண்ணாமலை தரிசனத்தின்போது எழுதியபாடல்கள்.
நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று (தங்கை அமுதா என்னை, அண்ணா நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இன்பமாக இம்சிப்பதைப்போல) அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.
பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே.
"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"
(ஹையா... எழுதி முடிச்சுட்ட்ட்ட்ட்டேன். மைடியர் தங்கை அமுதா . . . எப்ப்பூடி? இந்த சேட்டைக்காரனும் பக்தி கலந்து எழுதுவேன்ல . .)
இனி திருவெம்பாவை