Tuesday, June 7, 2011

GPS - நம்மைப் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறது? (பாகம் - 3)

நாம் போகும் இடம் அறிந்து, நாம் தேடும் விஷயம் கண்டுபிடித்து, நாம் விரும்பி வைத்திருக்கும் மொபைல் அல்லது ஐ-பேட் அல்லது லேப்டாப்புக்கு தானாக விஷயம் வந்து சேர்வது எப்படி?

இது வண்ணாரப் பேட்டையில் உட்கார்ந்து கொண்டு, ஏற்காடு மலை உச்சியில் இடம் வாங்குவது போலத்தான். வண்ணாரப் பேட்டையில் உள்ள வாங்குபவருக்கும், ஏற்காடு மலை உச்சியில் இருக்கும் விற்பவருக்கும் இடையில் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாங்குபவர், விற்பவர் என இருவருக்குமே விஷயங்களை லீக் செய்து வியாபாரத்தை நடத்துகிறார்கள். அதே போல, இணையத்தில் உலவுபவர்களின் தேவைகளை அறிந்து கொள்வதில் சமூக வலைத் தளங்களில், நமது விருப்பங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அப்படி பெறப்படும் தகவல்கள், GPSடன் இணைக்கப்பட்டு நமக்கு கிடைக்கின்றது.



ஊர்விட்டு ஊர் செல்லும்போது, நீங்கள் தற்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்ற செய்தியை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் கவனித்திருப்பீர்கள். இதனை வெறும் ஒரு வழித் தகவலாக இல்லாமல், உங்களிடமிருந்தும் ஏதாவது தகவல் வாங்குவதன் மூலம் நீங்கள் எங்கிருந்து, என்ன செய்கிறீர்கள் என்ற விபரம் சேகரிக்கப்டுகிறது. இந்த தகவலை சேகரிப்பவர்கள், ஃபேஸ்புக், ஃபோர்ஸ்கொயர், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள். ஆரம்பத்தில் ஒரு துளியாக இருக்கும் தகவல், ஒரு கட்டத்தில் ஒரு கடல் போல விரிவடைந்துவிடுகிறது.

மாயவரத்தில் பிரயாணம் செய்வோர், பானிபூரியும், பேல்பூரியும் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். நெல்லூர் செல்பவர்கள், மருந்து கிடைக்கவில்லை என்று அலுத்துக் கொள்கிறார்கள். சேலம் அம்மா பேட்டையில் ரியல் எஸ்டேட் பற்றி விசாரிக்கிறார்கள், என விதவிதமான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரியல்எஸ்டேட், மருந்து சப்ளை செய்வோர், உணவுவிடுதி நடத்துவோரின் விளம்பரங்கள் பெறப்பட்டு அனுப்பப்டுகிறது. இதனால் நமக்கும்  Location specificஆக, அந்த ஊருக்குள் நுழைந்ததுமே , அனைத்தும் தேடாமலேயே கிடைக்கிறது. நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கிடைக்கிறது, வியாபாரம் பெருகுகிறது.

ஆன்லைன் போட்டோ தளங்களில் Location
தற்போது ஆன்லைனில் போட்டோக்களை ஏற்றி சேமித்து வைப்பது மிகச் சுலபம். அப்படி ஏற்றும் போது loation என்ற ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருப்பீர்கள். இதன் பிண்ணனி இதுதான். சென்னைக்காரர்கள் அடிக்கடி ECR ரோடில் புகைப்படம் எடுத்துப் போடுகிறார்கள் என்றால், அங்கே வியாபார வாய்ப்பு அதிகம் உள்ளது என வியாபார நிறுவனங்களுக்கு உங்களை அறியாமல் தகவல் தருகிறீர்கள். 

டிவிட்டரில் Hash(#) Tag
Twitter தளத்தில் Hash tag பிரபலம். கோ படத்தில் நடிகை ராதாவின் மகள் சூப்பராக நடித்துள்ளார் #karthika என்று நீங்கள் டிவிட்டுவீர்கள். அச்சு அசலாக அவர் சிறு வயது ராதா போலவே உள்ளார் #karthika என இன்னொருவர் டிவிட்டுவார். அவருடைய கண்கள் அழகு. #karthika என மற்றுமொருவர் டிவிட்டுவார். ஆளாளுக்கு ஒரு ட்வீட் (அதாவது ஒரு குறுஞ்செய்தி) ஒருவர் அமெரிக்காவில், ஒருவர் அம்மா பேட்டையில், ஒருவர் வண்ணாரப் பேட்டையில். வெவ்வேறு நேரத்தில் அனுப்பிய ட்வீட் ஆனாலும் #karthika என்ற அடையாளத்தை க்ளிக்கினால், அத்தனை பேரின் ட்வீட்டுகளும் ஒன்றாக வரும். ஒரு இலட்சம் பேர் #karthika வை பயன்படுத்தியிருந்தாலும், அத்தனை பேரின் ட்வீட்டுகளும் ஒன்றாக வரும்.

இது போல #tn_election #rajini #2G #fb #samsung #nokia என பல்வேறுவிதமான ஹேஷ்(#) டேகுகளை நாம் டிவிட்டரில் கவனிக்கலாம். இதனை ஹேஷ்(#) டிரண்ட் என்கிறார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் ஹேஷ்(#) டேகுகளை வைத்து மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளே புகுகின்றன.

FourSquareல் மேயர் விளையாட்டு
இந்த தளத்தில் காட்பரி நிறுவனம் தனக்கென ஒரு பக்கத்தை திறக்கும். அதில் தனது லேட்டஸ்ட் விளம்பரங்களை ஒளி ஒலி பரப்பும். தனது புதிய சாக்லேட் பற்றி தகவல் தரும். டிஸ்கௌண்ட் அறிவிப்புகளை வெளியிடும். இதனை பார்வையிடுவதோடு நில்லாமல், இந்த பக்கத்துக்கு வந்து பார் என தன் நண்பர்களையும் அழைத்து வருபவர்களை இந்த விளம்பரப் பக்கம் ஸ்பெஷலாக கவனிக்கிறது. அதிக நண்பர்களை அழைத்து வந்து பார்க்க வைத்தவருக்கு மேயர் என்ற பதவி தரப்படுகிறது. மேயருக்கு ஸ்பெஷல் கவனிப்பாக டிஸ்கவுண்ட் மற்றும் இலவசங்கள்  தரப்படும். இதைப் பார்த்து ஆர்வமடைபவர்கள் தாங்களும் மேயராக விருப்பப்படுவார்கள். எனவே அதிக நண்பர்களை அவர்களும் திரட்டுவார்கள். அவர்களின் ஆர்வம் மறைமுகமாக வியாபாரத்தை வளர்க்கும்.

விமர்சனம் வழியாக வியாபாரம்
உதாரணமாக Samsung ஒரு வியாபாரப் பக்கத்தை திறக்கிறது என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொல்ல அனுமதி தரப்படும். எனக்கு இந்த புதிய மாடல் மொபைல் போன் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது என்றால், என்று சில வரிகளை எழுதுவீர்கள். இதைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை ஆமோதித்து மற்றொருவர் தன் கருத்தை சொல்வார். சிலர் தனக்கு அந்த குறிப்பிட்ட மாடலால் பிரச்சனை என்பார். உடனே நீங்கள் அந்த குறிப்பிட்ட பிரச்சனையை தீர்ப்பது எனறு அவருக்கு தீர்வு சொல்வீர்கள். நன்றாக கவனியுங்கள். Samsung கிற்குப் பதிலாக நீங்கள் யாரோ ஒரு Samsungவாடிக்கையாளரின் பிரச்சனையை தீர்க்க உதவிக் கொண்டிருக்கின்றீர்கள். இதை கவனிக்கும் samsung உங்களுக்கு தள்ளுபடி ஆஃபர், ஞாயிற்றுக் கிழமை பார்ட்டி, இலவச கூப்பன் என எதையாவது தந்து உங்களை தன் வசத்திலேயே வைத்திருக்கும். இந்த சேவையில் மகிழ்ந்து நீங்களும் பலரை samsungகிற்கு மாறச் செய்வீர்கள்.

Facebook - Googleன் தாமதமான என்ட்ரி.
ஃபேஸ்புக் இன்றைய தேதியில் மிகப்பிரபலமான சமூக வலைத் தளம். ஆனால் இந்த வகை மார்க்கெட்டிங் இலாபத்தை புரிந்து கொள்வதில் தாமதம் செய்துவிட்டது. அதனால் ஃபேஸ்புக் ஸ்பெஷல் என்று நவீன உத்தி எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்க்கில்லை.

கூகுள் தனக்கென ஒரு புதிய சமூக வலைத்தளத்தை வெளிக்கொண்டு வரப்போவதாக பல நாள் வதந்தி ஒன்று உண்டு. அதில் GoogleMapல் உள்ள சகல அம்சங்களுடன், மேலும் ஸ்பெஷலாக இன்னும் பல விஷயங்கள் வரப்போகிறதாம். பார்க்கலாம்...

Sunday, June 5, 2011

நம்மை பின் தொடரும் GPS - பயன்கள்(பாகம் - 2)


நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்டுகிறீர்கள்
சமீபத்தில் ஓரு Aircel விளம்பரம் பார்த்தேன். திருமணத்தின் போதே கிராமத்திற்கு சென்று சேவை செய்ய விருப்பம் தெரிவிக்கும் ஒரு பெண், இதே காரணத்தால் கணவனுடன் மனஸ்தாபம் கொள்கிறாள். இருவரும் பிரிகிறார்கள். மனம் பொறுக்காத கணவன், தனது 3G போன் வழியாக, தனது மனைவியின் செல்போன் இருக்கும் இடத்தை அறிந்து, அவளையும் அவளிருக்கும் கிராமத்தையும் கண்டுபிடித்து, மீண்டும் கரம் கோர்க்கிறான். சுமார் ஒரு நிமிடம் வரும் இந்த விளம்பரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருப்பார்கள் உறுத்தாத இசை. அதை விட முக்கியமானது, GPS வழியாக ஒருவர் இருக்கும் இடத்தை மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் என்பதை உணர்த்தியிருப்பது.

இந்த தொழில் நுட்பத்துடன் கைகோர்த்து, தான் இருக்கும் இடத்தை உணர்ந்த மின்னணு கருவிகள் (Location-aware devices) வந்துவிட்டன. அந்தக் கருவியில் (உதாரணமாக மொபைல் போனில்) பயன்படக் கூடிய மென் பெர்ருள்களும் (Applications) பெருகிவிட்டன. இவற்றிற்கு உதாரணமாக Google Maps மற்றும் அவற்றை அருமையாக பயன்படுத்தும் twitter உள்ளிட்ட தளங்களைச் சொல்லாம்.

அந்த ஏர்செல் விளம்பரத்தில் வரும் காதலர்களுக்கு மட்டுமல்ல, வியாபாரம் மற்றும் சுற்றுலா பயணத்தில் இருக்கும் அனைவருக்கும் இது மிகச் சிறந்த துணை.

GPS செயல்படும் விதம் பற்றி எளிய விளக்கம்
நான் முன்பு ஒரு முறை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு ஒரு குறும்படம் செய்து தந்தேன். அதில் லாரி ஓட்டுனர்களுக்கு பெட்ரோல் நிரப்ப ப்ரீபெய்டு கார்டு தருகிறார்கள். அதில் GPS தொழல்நுட்பம் உண்டு. லாரி எங்கு சென்று கொண்டிருக்கிறது, விழுப்புரமா? பாண்டிச் சேரியா? என்பதை லாரி முதலாளி உட்கார்ந்த இடத்தில் இருந்து தனது லாப்டாப் வழியாக தட்டிப் பார்த்துக் கொள்ளலாம். லாரி எங்காவது நின்று கொண்டிருந்தால், எந்த இடத்தில் நிற்கிறது, எவ்வளவு நேரமாக நிற்கிறது என்பதை ஒரு மௌஸ்க்ளிக்கில் அறிந்து கொள்ளலாம். GPS பொறுத்தப்பட்ட அந்த smart cardக்கும், சாடிலைட்டுக்கும் அறுந்துவிடாத தொடர்பு உண்டு. எனவே அந்த கார்டு தொடர்ந்து சாடிலைட்டுகளால் கண்காணிக்கப்பட்டு அந்த விபரங்கள் ஒரு வெப்சைட்டில் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் அந்த வெப்சைட்டை பார்ப்பதின் மூலம், லாரி எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

GPS வேறெங்கெல்லாம் பயன்படுத்த முடியும்?
குழந்தைகளை பள்ளிக்கும்,கல்லூரிக்கும் அனுப்பிவிட்டு கவலைப் படவேண்டாம். அவர்களுடைய ஐடி கார்டில் GPS வசதி இருப்பின், அவர்கள் கல்லூரிக்குள் இருக்கிறார்களா? ஐநாக்ஸில் படம் பார்க்கிறார்களா? கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் பறக்கிறார்களா? என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும்.

கல்லூரியிலும் GPS வசதி உள்ள ஐடி கார்டு கொடுத்துவிட்டால், மாணவர்கள் எப்போது கல்லூரிக்குள் வந்தார்கள், எந்த வகுப்பில் இருந்தார்கள், பிசிக்ஸ் லேபில் இருந்தார்களா? காண்டீனில் மெதுவடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களா? உட்பட அனைத்தையும் கண்காணிக்கலாம்.

தற்போது BPO நிறுவனங்களில், பணியாளர்களை வீட்டில் இறக்கிவிடும் கார்களில் GPS பொறுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், கார் பாதை மாறி சென்றாலோ, ஒரே இடத்தில் நின்றாலோ, எளிதில் தெரிந்துவிடும். எனவே குற்றங்கள் தடுக்கப்படும், பணியாளர்கள் தைரியமாக சென்று வரலாம்.

GPS - மக்கள் ஒழுங்காகப் பயன்படுத்துகிறார்களா?
இது கிட்டத்தட்ட கடவுள் விளையாட்டு, எந்த இடத்திற்குச் சென்றாலும், அதன் வரைபடம், அஙகிருக்கும் நபர்களின் விருப்பு, வெறுப்புகள், தற்போது அங்கிருப்பது யார் போன்ற விபரங்கள், எந்த மெனக்கெடலும் இன்றி, நமது ஸ்மார்ட் போன்களிலேயே கிடைக்கிறது. இத்தனை வலிமையான இந்த நுட்பத்தை மக்கள் தற்போது ஒரு வழிகாட்டி அல்லது உணவகங்கள்-தியேட்டர்களை கண்டுபிடிக்க உதவும் கைடு போல சிம்பிளாகத்தான் பயன்படுத்த துவஙகியிருக்கிறார்கள். இதன் மூலம் பெருமளவில் இலாபமடைந்திருப்பதும், இலாபம் அடையப் போவதும் வியாபார நிறுவனங்களே.