Thursday, January 13, 2011

தூசி தட்டப்பட்ட மனது - சிறு கதை

என்னப்பா எல்லாம் சுத்தமா க்ளீன் பண்ணியாச்சா?
”ஆச்சு சார்... ரெண்டு ஆள் வேலை.. நான் ஒருத்தனே பார்த்துட்டேன்”
”வேலையே இல்லன்னாலும் இப்படித்தான் சொல்லுவீங்க. ஒரு நிமிஷம் நில்லு”, அவனை காக்க வைத்துவிட்டு, வீடு முழுக்க வலம் வந்தேன்.

குறிப்பாக எனது படுக்கை அறை. மேசையில் நான்கு 100 ரூபாய் தாள்கள் இருந்தன. திடீரென சின்ன சந்தேகம், 500 ரூபாய் வைத்திருந்தேனா, 400 ரூபாய் வைத்திருந்தேனா..? 100 ரூபாயை எடுத்திருப்பானோ.. புதிதாக முளைத்த சந்தேகத்துடன் வெளியே வந்தேன்.


”சார் ரெண்டு பஸ் பிடிச்சு பெரம்பூர் போகணும்”
”இருப்பா அவசரப்படுத்தினா எப்படி.. இந்தா”, கொடுக்கும்போது வேண்டும் என்றே 100 ரூபாயை பிடித்துக் கொண்டு கொடுத்தேன்.

”ரொம்ப தாங்ஸ் சார்... ”,என்றவன் எண்ணிப் பார்த்துவிட்டு, ”சார் 100 ரூபாய் குறையுது சார்”, என்றான்.

”குறையுதா..”, என்றபடி போலி ஆச்சரியம் காட்டி, ”கரெக்டா எண்ணி வைச்சேனே..எப்படி குறையும்?”, என்றபடியே அவன் முகத்தை கவனித்தேன்.

”நல்லா தேடிப் பாருங்க சார்.. பாக்கெட் உள்ளேயே இருக்கும்”
”நான் பாக்கெட்லயே வைக்கலயே.. உள்ள டேபிள்லதான் வைச்சிருந்தேன்”
”டேபிள்லயா?” சட்டென அவன் குரலில் ஒரு பதற்றம் தொற்றியது.
”ஆமாம்.. நீ பணத்தை பார்த்தியா?”, அவன் திருடியிருப்பான் என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டேன்.
”பார்த்தேன் சார்.. ஆனா எவ்வளவு ரூபா இருந்ததுன்னு தெரியாது சார்.. ”
”நிஜமா உனக்கு எவ்வளவு இருந்ததுன்னு தெரியாது..?”
”நெசமாவே தெரியாது சார்..ஆனா..”
”என்ன ஆனா..”
”அது வந்து ...”, என்றபடி தலையை சொறிந்தான்.
”என்னப்பா தலையை சொறியற? ஏதாவது தப்பு செய்துட்டியா?”, என் குரலில் கடுமை ஏறியது.
”ஆமா சார்.. தப்புதான் செய்துட்டேன் சார்.”

சுள்ளென்று கோபம் தலைக்கு ஏற, போலீசுக்கு போன் போட்டுவிடலாமா என்று கை பரபரத்தது. பொறு பொறு என்று என்னை நானே அடக்கிக் கொண்டேன்.
”என்னை தப்பா நினைக்காதீங்க சார். டேபிள்ல அந்த பணத்துக்குப் பக்கத்துல ஒரு பைபிள் இருந்தது சார். புதுசா ஜிப் எல்லாம் போட்டு ரொம்ப அழகா இருந்தது. உங்கள கேட்காமலேயே ஒரு தடவை அதை எடுத்து வாசிச்சுட்டேன்.”

எதிர்பாராத இந்த பதிலால், ஒரே வினாடியில் கோபம் என்னவென்று தெரியாத ஒரு உணர்வாக மாறியது.

”சார் நீங்க எனக்கு மீதி 100 ரூபாய் தர வேண்டாம் சார். அதுக்குப் பதிலாக அந்த பைபிளை தருவீங்களா சார்”
அவன் குரலில் இருந்த பணிவும், நேர்மையும், மளுக் என்று என் கண்களில் கண்ணீர் வரவைத்தது.
”சே... இவனைப் போய் சந்தேகப் பட்டுவிட்டோமே..”

என் கண்ணீரை அவன் கவனிப்பதற்குள், மளமளவென்று உள்ளே சென்று பைபிளுடன் திரும்பி வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்பு கிறிஸ்துமஸ் திருநாளில் ஒரு நண்பர் பரிசளித்த பைபிள் அது. நான் கிறித்தவனாக இல்லாவிட்டாலும், பைபிளை வாசிப்பேனாக்கும் என்று ஜம்பமாக வாங்கி வைத்த பைபிள். கடவுளின் வார்த்தைகளை எல்லோராலும் வாசித்துவிட முடியாது என்று யாரோ சொன்னது ஞாபகத்தில் வந்தது. இந்த பைபிள் என்னிடம் இருப்பதை விட அவனிடம் இருப்பதே நியாயம் என்று தோன்றியது.

”இந்தாப்பா.. நீ விரும்பிக் கேட்ட பைபிள்”
”ரொம்ப தாங்ஸ் சார்”, என்றபடி பைபிளை திறந்து பார்த்துவிட்டு, ”சார் இதுக்குள்ள 400 ரூபாய்  இருக்கு சார்” என்றான்.
”வைச்சுக்கோப்பா, நான் தான் வைச்சேன். அது உனக்குத்தான். உன்னுடைய வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால நீ கேட்டதுக்கும் மேல தரணும்னு ஆசைப்படறேன்” என்றேன்.
”அடடா... எனக்கு வேண்டாம் சார். வேணாம்னு சொல்றேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க சார். எனக்கு என் கூலியை கொடுங்க சார் அது போதும்”, என்றபடி மீதி 100 ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டான்.

”நான் கேட்டவுடனே இந்த பைபிளை குடுத்துட்டீங்களே.. பெரிய மனசு சார் உங்களுக்கு. ரெண்டு நாளாவே இந்த மாதிரி ஜிப் வைச்ச பைபிள் கிடைச்சா நல்லா இருக்கும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். கர்த்தர் உங்க மூலமா எனக்கு கொடுத்துட்டார். நீங்க நல்லா இருக்கணும் சார்.”

இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்.
யோவான் - 11வது அதிகாரம்.

பைபிளில் இருந்து அவன் வாசித்து முடிக்கும்போது, அவன் எனக்குள் இருக்கும் மனிதனையும், நான் அவனுக்குள் இருக்கும் மனிதனையும் உணர்ந்து, இருவருமே நெகிழ்ந்து போயிருந்தோம்.