'இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் ’ எனும் தலைப்பில், சிறுபான்மைத் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சூரிச் நகரில் ஒன்று கூடி ஆராய்ந்தனர். இலங்கைத் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பு, எந்தவித அரசியல் முடிவும் எடுக்கப்படாமலே முடிவுக்கு வந்ததாக அறியப்படுகிறது..
//எந்த முடிவும் எட்டப்படாமல் குழப்பமான கூட்டங்கள் கூடுவது இனி நிறுத்தப்படவேண்டும். நிச்சயம் அனைவரும் ஒன்று கூட வேண்டும். கூடினால் அது ஒரு முடிவை அறிவிக்க வேண்டும்//
வரவேண்டிய செய்திகள்
நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்... இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
//களங்களில் போராடும்போது எதிரணியின் குழப்பங்கள்தான் முதல் வெற்றி. இராமாயண கதைகளில் இருந்து ஈழப் போராட்டம் வரை இதில் மாற்றம் ஏதும் இல்லை. கருணாவை ராஜபக்ஷே பயன்படுத்தியது போல, ராஜபக்ஷே,பொன்சேகா குழப்பங்களை அணையாமல் விரிவடைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்//
விசித்திரமான செய்திகள்
தமிழக அரசியலின் பிரதான எதிரிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இன்றைக்கு ஈழ ஆதரவு விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழனத் தலைவர்(?) பதவிக்கு போட்டியிடுவோம் என்று ஜெவும் நினைத்திருக்கமாட்டார், கருணாநிதியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இந்திய அரசியல் விசித்திரங்களால், ஜெயலலிதாவும் இன்று தனி ஈழத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார். எதிரெதிர் அணியில் இருந்தாலும், கருத்து வேறுபாடு இருந்தாலும் நெடுமாறன், வை.கோ., மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், கி.வீரமணி உட்பட அனைவருமே தனி ஈழ ஆதரவாளர்களே!
//கருணாநிதி உட்பட எவருக்கும் இந்தியாவை இலங்கைக்கு எதிராக போர் செய்ய நிர்பந்திக்க முடியாது என்பதை இப்போதாவது உலகத் தமிழர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் இந்த தமிழக அரசியல்வாதிகள் நினைத்தால் இலங்கைத் தமிழ்அரசியல் கட்சிகளை ஒரு குறுகிய காலத்திற்காகவாவது ஒன்றிணைக்க முடியும். குறைந்தபட்சம் ஜனவரி 26 அன்று நடைபெறப்போகும், இலங்கைத் தேர்தல் வரை அவர்களால் ஒன்றிணைக்க முடியும்//
சாதகமான உலகச் செய்திகள்
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் 2010ல் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என்று பகிரங்கமாக பிரிட்டன் குரல்கொடுத்துள்ளது.
அமெரிக்கா சரத்பொன்சேகாவை போர் குற்றங்களுக்காக விசாரிப்போம் என்று அறிவித்தது.
ஆசிய அரங்கில் இந்தியாவிற்கு வெளிப்படையாக நெருக்கடி கொடுக்கும் சீனா. சீனாவின் இலங்கை ஆதரவு. அதன் காரணமாக மட்டுமே இலங்கையின் மேல் கடுமையை கூட்டியிருக்கும் இந்திய நிலை.
ராஜபக்ஷே வழியாக இந்தியாவிற்கு செக் வைக்க நினைக்கும் சீனா - சரத்பொன்சேகாவை மிரட்டி முன்நிறுத்தி ஆசியாவில் நுழைந்து சீனாவையும், இந்தியாவையும் தொலைவில் நிறுத்தப்பார்க்கும் அமெரிக்கா!
மாவீரர் தினம் முதன் முறையாக, ஈழத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் தமிழர் வசிக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்!
//இவையெல்லாம் ஈழப் பிரச்சனை வெவ்வேறு வடிவில் உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள்//
தமிழர்களைப் பொறுத்தவரை ராஜபக்ஷே, பொன்சேகா இருவருமே எதிரிகள்தான்.பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் ராஜபக்ஷேவுக்கு மட்டுமல்லாமல், தமிழர்களும் எதிர்பாராததுதான். ஆனால் பொன்சேகாவின் ராஜபக்ஷே எதிர்ப்பால் இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ஒரு சிறிய அரசியல் இடைவெளி கிடைத்துள்ளது. அதாவது பொன்சேகா வெற்றிபெற்றால், ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆவார் என்று செய்திகள் கசியத் துவங்கியுள்ளன. ராஜபக்ஷே-கருணாவை வென்று, பொன்சேகர்-ரணில் கூட்டணி வெற்றி பெற்றால், அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழ் கட்சிகள் முன் எப்போதையும் விட வலுவாக செயல்பட முடியும். ஏனென்றால் ரணில் ஏற்கனவே பிரபாகரன் இருந்தபோதே, ஈழத் தமிழர்களின் விஷயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடித்தவர். ஈழத் தமிழர்களை ஒழிப்பதை விட, அவர்களை அரசியல் ரீதியாக இணைப்பது என்பதில் ஆர்வம் காட்டியவர்.
எனவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, ஜனவரி 26 தேர்தலின் போது இலங்கை தமிழ் கட்சிகள் தேர்தல்களை புறக்கணிக்காமல், தமக்குள் சண்டையிடாமல், சிதறிவிடாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு முனைப்பு காட்ட வேண்டும்.
இதுவே அரசியல் தந்திரங்களுக்கான சரியாண தருணம்.