Thursday, March 11, 2010

மருதாணிச் செடியுடன் கொஞ்ச நேரம்


இரவு! பின்னிரவு!
மருதாணிச் செடியிடம் கொஞ்ச நேரம்,
பேசிக் கொண்டிருந்தேன்.
ஆமாம்! அப்படித்தான் நினைக்கிறேன்.
பேசிக் கொண்டிருந்தேன், மௌன மொழியில்!

மருதாணி இலைகளில் பொதிந்திருக்கும் சிவப்பை
நான் உணர்நதது போல,
எனக்குள் பொதிந்திருக்கும் அன்பை
மருதாணிச் செடி உணர்ந்திருந்தது.

நாளை யார் கையிலாவது மருதாணி சிவக்கும்.
அந்தச் சிவப்பில் நான் இருப்பேன்.

இனிய பொழுதுகள் தொடரட்டும்!

Wednesday, March 10, 2010

சுவாமி சரியானந்தா - நான் எப்பவுமே ரைட்டு

அந்த சாமியாரின் பெயர் சுவாமி சரியானந்தா. அவரிடம் எப்போதும் கூட்டம் அலைமோதும். அவர் சொன்னால் அது பலிக்கும். அவர் சொல்லி எதுவுமே நடக்காமல் போனதில்லை. அதனாலேயே அவருக்கு சுவாமி சரியானந்தா என்ற பெயர் வந்துவிட்டது. மேட்டுக்குப்பம் பக்தர்களிலிருந்து நியுஜெர்சி பக்தர்கள் வரை எல்லோருக்கும் அவர் ஒரு மகான். அவர் கேட்கும் தொகையை செலுத்திவிட்டு அருள்வாக்கு வாங்கிச் செல்வார்கள்.

”சாமி”
”உனக்கென்னம்மா தெரியவேண்டும்”
”எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா?”
”என்னைப் போலவே உனக்கொரு மாயக் கண்ணன் வந்து பிறப்பான் மகளே”
ஆயிரம் ரூபாய் தட்சணை வைத்துவிட்டு, பக்தை அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவுடன் அடுத்த பக்தர் பரவசத்துடன் நுழைகிறார்.

”சுவாமி”
”சொல் குழந்தாய்”
”எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா?”
”நிச்சயம் கிடைக்கும், மகிழ்ச்சியுடன் போ”
தட்டில் சில நூறுகளை வைத்துவிட்டு அவர் நகர அடுத்த பக்தர் வருகிறார்.

”குருஜி”
”எனக்கு இந்த டென்டர் கிடைக்குமா?”
”நமது ஆசிரமத்திற்கு 10 இலட்சம் கொடுத்தால் அந்த 100 கோடி டென்டர் உனக்குதான்?”
”இதை நான் எப்படி நம்புவது?”
”ஹா..ஹா..ஹா..சந்தேகப் பதரே.. என் மேலேயே சந்தேகமா... இருக்கட்டும்... சிஷ்யா?”
”சொல்லுங்கள் குருவே”
”டென்டர் கிடைக்கும் என்று நான் சொன்னதை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு பத்து லட்சம் வாங்கியபின், இந்த சநதேகபுத்தி அற்பனை அனுப்பி வை”
”உத்தரவு குருவே”

தட்சணையை வாங்கி உண்டியலில் போட்டபடி ”டென்டர் கிடைக்காது” என்று நோட்டுப் புத்தகத்தில் சிஷய்ர் எழுதுகிறார். பிறகு . . .

”குருவே எனக்கொரு சந்தேகம்”
”கேள் சிஷ்யா”
”ஆண் பிறக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் பெண் என்று எழுதச் சொல்கிறீர்கள். வேலை கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் வேலை கிடைக்காது என்று எழுதச் சொல்கிறீர்கள். டென்டர் கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் டென்டர் கிடைக்காது என்று நோட்டுப்புத்தகத்தில் எழுதச் சொல்கிறீர்கள். ஏன் இப்படி?”

”சிஷ்யா !!! இது இந்த முட்டாள் பக்தர்களை ஏமாற்றும் எளிய வழி. யாருக்காவது நான் சொன்னது நடக்காமல் போனால் உடனே என்னிடம் தான் மீண்டும் வருவார்கள். அப்போது இந்த நோட்டுப் புத்தகம்தான் நம்மை காப்பாற்றும்”
”எப்படி?”, என்று சிஷ்யர் கேட்க, அடுத்து ஒரு பெண் பக்தை உள்ளே வருகிறார். முகத்தில் பதற்றம், ஏமாற்றம்.

”சாமி..ஏன் என்னை கைவிட்டுட்டீங்க?”
”அழாமல் விஷயத்தை சொல் பக்தையே”
”எனக்கு ஆண் பிறக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்துவிட்டதே”
”பக்தையே நீ தவறாகச் சொல்கிறாய். நான் சரியாகத்தான் சொன்னேன். சிஷ்யா அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் காட்டு”
”அட ஆம் குருவே, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அம்மா நீங்களும் பாருங்கள்”, என்று சிஷ்யர் நோட்டுப்புத்தகத்தை நீட்ட அந்தப் பெண் அதைப் படித்துவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள்.

”ஐயோ சாமி..நான் தான் உங்களை தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”, புலம்பிக் கொண்டே வெளியே சென்ற பின் குருஜி புன்னகைக்கிறார்.
”சிஷ்யா, இப்போது புரிகிறதா நான் ஏன் உன்னை மாற்றி எழுதச் சொல்கிறேன் என்று?”
”புரிகிறது குருவே..இந்த உலகில் உங்களை வெல்ல யாரும் இல்லை”

சுவாமி சரியானந்தா வாழ்க.. சுவாமி சரியானந்தா வாழ்க..
பக்தர்களின் வாழ்த்து கோஷம் டிவியில் லைவ்வாக 75 நாடுகளில் ஒலிக்கிறது.

Tuesday, March 9, 2010

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி

இரு வார்த்தைகளின் முதல் எழுத்து இடம் மாறி, வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் அமைந்தால் ஸ்பூனரிசம் (Spoonerism) என்று பெயர்.

Come and wook out of the lindow என்பது ஒரு உதாரணம்.
இந்த வாக்கியத்தில், look - window ஆகிய இரு வார்த்தைகளிலும் முதல் எழுத்து இடம் மாறியிருப்பதை கவனியுங்கள்.

Reverend William Archibald Spooner அப்படின்னு ஒருத்தர் அந்தக் காலத்துல இந்த மாதிரி சொதப்புறதுல மன்னராம். அதனால இந்த வகை சொதப்பல்களுக்கு spoonerism என்று பெயர் வந்துவிட்டது.

இப்போ இன்னும் சில உதாரணங்கள்.
  • fighting a liar - lighting a fire
  • you hissed my mystery lecture - you missed my history lecture
  • cattle ships and bruisers - battle ships and cruisers
  • nosey little cook - cosy little nook
  • a blushing crow - a crushing blow
தமிழில் இந்த மாதிரி முயற்சிக்கலாமா என்று மூளையைக் கசக்கியதில் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி.

இத மாதிரி நீங்க தமிழ் ஸ்பூனரிசம் சொல்ல முடியுமா?

Sunday, March 7, 2010

மகளிர் தினம் - ஸ்பெஷல் இசை (”அவர்” திரைப்படக் குழு சார்பாக)

நான் நானாக இருப்பதற்கு என் வாழ்வில் நான் சந்திக்கும் பெண்களே காரணம். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, ஆசிரியையாக, மாணவியாக, பக்கத்து வீட்டுப் பெண்ணாக, தோழியாக என் வாழ்வில் வந்த அத்தனை பெண்களும், தான் அன்பால் உருவான ஒரு சக்தி என்று எனக்கு நிரூபித்திருக்கின்றார்கள்.

அவர்கள் அனைவருக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு இசையை சமர்ப்பிக்கின்றேன்.

நான் கேட்டுக் கொண்டதற்க்காகவே, வலையுலகில் இன்று அக்கா என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதிய பாடல் இது.

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!
- இந்த இரு வரிகளை மட்டும் (ரெக்கார்டிங்கின் போது உண்டான உடனடி தேவையால்) நான் எழுதியிருக்கின்றேன்.

இசையமைத்தது வழக்கம்போல என் நண்பன் விவேக் நாராயண். நான் எவ்வளவு நெருக்கடியில் கேட்டாலும், சட்டென ஸ்வரங்களைக் கோர்க்கும் அவரின் திறமைக்கு இந்தப் பாடல் இன்னொரு சான்று. இந்தப் பாடலைப் பாடியவரும் அவர்தான்.

நேற்று மாலை எழுதப்பட்டு, இன்று மாலை இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை ”அவர்” திரைப்படக் குழுவினரின் சார்பாக வலையுலகத்தில் எழுதிவரும் அத்தனை பெண்களுக்கும் மகளிர் தினப் பரிசாக அறிவிக்கின்றேன்.



பாடலை இங்கே கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அன்பென்னும் ஊஞ்சலில்  அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!
அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!

அன்னப்  பறவையாய்  நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

காந்தம் நீ கருணை நீ எரிமலைநெருப்பும் நீ
பனிஉருச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே  ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே!