Monday, January 5, 2015

பி.கே - திரை விமர்சனம்

PK‬கடவுள் மறுப்பு படமல்ல. கடவுள் ஏஜென்டுகளை மறுக்கும் படம். கடவுள் பிசினஸை ஒரு ஏலியன் மூலம் செம்மையாக நக்கலடித்திருக்கிறார்கள்.

கொஞ்சம் உற்று நோக்கினால் இது ஒரு ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். நவீன பராசக்தி. கடவுள் பெயரால் மோசடியில் ஈடுபடுபவர்களை கூண்டில் ஏற்றும் படம். ஆனால் இதில் ஃபேன்டஸி கலந்து ஹீரோவை வேற்றுக்கிரகவாசியாக்கியதை சூப்பர் நழுவல் அல்லது அபார புத்திசாலித்தனம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அனல் பறக்கும் வசனங்களுக்கு பதிலாக காமெடி தேன் கலந்து நறுக்கென்று கே...ள்வி கேட்கிறார்கள். நகைச்சுவையாக அணுகியிருப்பதால் சிலகாட்சிகளில் கவுண்டமணியும், விவேக்கும் நடித்த சில காட்சிகள் ஞாபகத்துக்கு வந்து செல்கின்றன.


படம் கடவுளை ஒப்புக்கொள்கிறது. அதனால் கடவுள் பக்தர்கள் நெர்வஸ் ஆக வேண்டியதில்லை. ஆனால் கடவுள்களின் ஏஜென்டுகளை இந்தப்படம் நையாண்டி செய்கிறது. எனவே ஏஜென்டுகளை பூஜிப்பவர்கள் நிறைய நெளியவேண்டியிருக்கும்.


ஆனால் இதை விட தைரியமான படம் பராசக்தி. அதில் ஏலியனுக்கு பதிலாக சாமானியன். மனிதனை மனிதனை கேள்வி கேட்பான். பிகேவில் மனிதனாக வலம் வரும் ஏலியன் கேள்வி கேட்கிறான். பராசக்தியில் சாமியார்களை சாமானியன் நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவான். பிகேவில் ஒரு லைவ் ஷோவில் உட்கார வைத்து ஒரு ஏலியன் கேள்வி கேட்கிறான்.


நிறைய ஒப்பிடலாம். அனுஷ்கா சர்மாவைத் தவிர. மினிஷார்ட்ஸ் அணிந்தால் கூட அள்ளிக்கொள்ளும் அழகுடன் வசீகரிக்கிறார். படத்தில் இந்தியா-பாகிஸ்தான் நட்பு பற்றி பேசுவதற்கு இவரை வைத்து ஒரு ஸ்வீட்காதல் இருக்கிறது.


நாம் நல்லவராகவும் இருக்கலாம். கெட்டவராகவும் இருக்கலாம். கடவுளை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் மனிதனாக வாழ வேண்டும் என்றால் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிறது பிகே.


பி.கே என்னைப் பொறுத்தவரையில் டபுள் ஓகே!

Sunday, January 4, 2015

நான் ஸ்டாப் தொந்தி

கடந்த ஆண்டின் அசுரத்தனமான வளர்ச்சியாக என்னுடைய தொந்தியைத்தான் சொல்வேன். இளம்தொந்தியாக அவ்வப்போது ஓடிஒளிந்து கொண்டிருந்துவிட்டு தற்போது சற்று தளர்ந்து நகரமுடியாமல் என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுவிட்டது.


டிசைன் டிசைனாக உணவுகளை மாற்றினேன். உடற்பயிற்சி என்ற பெயரில் மூச்சைப்பிடித்து உத்தரத்திலிருந்து தொங்கி தரையில் உருண்டு என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். ஆனாலும் எப்போதும் அன்லிமிடெட் மீல்ஸ் அடைக்கப்பட்டது போல பரங்கிமலையின் மினியேச்சர் சைஸில் காணப்படுகிறது. இதனால் சட்டையின்... கீழ்பாதி மட்டும் டைட்டாகி புது ஃபேஷனுடன் வலம் வருகிறேன்.


எனவே 2015ம் ஆண்டில் தொந்தியை இளைக்க வைக்கும் மாபெரும் புராஜக்டில் ஈடுபடவுள்ளேன். முதல் ஸ்டெப்பாக ஐ படத்தில் விக்ரம் எப்படி உடலை ஏற்றி இறக்கியிருக்கிறார் என்பதை பொங்கலன்னு முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து தெரிந்து கொள்ளப்போகிறேன்.
தற்போது சென்னா மசாலாவுடன் சுடச்சுட பூரி வரவேற்பதால் தொந்திபுராஜக்ட் புது ஜீன்ஸ் இடுப்பில் ஏறத்தடுமாறும்வரை ஒத்திவைக்கப்படுகிறது.