Saturday, April 13, 2024

காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல . . .

 

Istigfar !!!

முதன்முதலாக இந்தப் பாடலைக் கேட்டபோது, முற்றிலும் பரிட்சயமில்லாத வடிவம் என்னை திகைக்க வைத்தது. ஆனாலும் அறிமுகமில்லாத மொழியில் பாடலை நகர்த்திய தாள வாத்தியக் கருவியின் ஒலியைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பாடலுக்குள் நுழைந்தேன். பிரமாண்டமான சமுத்திரத்தின் கரையிலிருந்து ஆழத்தை அறியும் உணர்வுடன் பாடலை உள்வாங்கத் துவங்கினேன்.
காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல மனதை ஒருமுகப்படுத்தியது பாடல். அதே நேரம் அடுக்கடுக்கான குரல்களின் கீழ் அடுக்கில் பூமி புரள்வதுபோன்ற ஒரு அடியிசை மனதைப்பிசைந்தது. கரையிலிருந்த நான் திடீரென கடலின் ஆழத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டது போல உணர்ந்தேன்.
இனம் புரியாத பதற்றம், பதறாதே என ஒரு குரல், நீரில் முங்கும்போது கேட்கும் நசுங்கிய ஒலிகள், கூடவே நானிருக்கிறேன் என நம்மைக்காக்கும் ஒருவரின் கரம், கனத்த நிமிடங்களைக் கடந்த பின் நிகழும் ஆசுவாசம், இதழில் மறைந்து நிறையும் புன்னகை என்பது போன்ற கலவையான அனுபவம்.
ஒலி ஏற்படுத்தாத மணல் துகள் ஒன்று உருளுவது போல பாடல் அமைதியாக முடிவடைகிறது. அந்தக் கணத்தில் இசையும், இசைப்பவரும், அதை இரசிப்பவரும் என அனைவரும் ஒன்றுதான் என்கிற உணர்வு.
அன்பைக் கோருபவனுக்கு திரும்பவும் அன்பு கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் அன்பைச் செலுத்துபவனின் மேல் அனைவரும் அன்பைப் பொழிவார்கள். உங்களுக்கு யார்மேலாவது கோபமிருந்தால் மன்னித்துவிடுங்கள். உங்களை இந்தப்பிரபஞ்சம் மன்னிக்கும்.
இன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டேன். அப்போது ஒலிக்கத் துவங்கிய பாடல் இன்னும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எங்கிருந்து ஒலிக்கிறது என்றுதான் தெரியவில்லை. அதுதான் இந்தப் பாடலின் மகத்துவம்.
Istigfar என்றால் . . . உங்கள் அனுபவத்தைக் கொண்டு நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.

Tuesday, April 9, 2024

அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக உணர வைக்கும் இயக்குநர் பிளெஸ்ஸி!

 

ஆடுஜீவிதம் கற்றுத்தரும் பறவைப்பார்வை!

நஜீபின் குடும்பம், மனைவி, காதல், பிரிவு என சாதாரண வணிகப்படத்துக்கான அத்தனையும் ஆடுஜீவிதம் படத்தில் உண்டு. நிஜக்கதை என்பதால் அவற்றை தவிர்க்கவும் இயலாது.
ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நீர் அருந்தும் கைவிடப்பட்ட மனிதனாகத்தான் நஜீப் அறிமுகமாகிறான். அவனுடைய துயரங்களுக்கு இடையில் அவனுடைய பழைய வாழ்வை நினைத்து ஆறுதல் கொள்வதாக கதை சிறிதுநேரம் நகர்கிறது. அது அப்படியே தொடராமல் ஒரு கட்டத்திற்குமேல் திரைக்கதையின் தன்மை மாறுகிறது. குறிப்பாக மினுக்கும் விண்வெளியை பிரதிபலிக்கும் ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நஜீப் நீர் அருந்தும் துவக்கக் காட்சி மீண்டும் ஒருமுறை வந்ததும், திரைக்கதை விண்ணிலிருந்து பார்க்கும் பார்வையாக மாறிவிடுகிறது.
அவதிப்படும் ஒரு ஜீவராசியாக நஜீபை காட்டத் துவங்குகிறது. தவிக்கும் நஜீப், பாதியில் வந்து சேரும் நண்பன், அவர்கள் இருவரும் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீம், என அனைவருமே கொதிக்கும் அகண்ட பாலைவனத்தின் ஒரு அங்கமாக மட்டுமே காட்டப்படுகிறார்கள். இரக்கமற்ற மணல் புயல் வீசும் பாலையில், பிணங்களைத் தின்னும் கழுகுகளைப் போல, கொத்தும் பாம்புகளைப் போல, அவர்கள் அனைவருமே மற்றும் ஒரு ஜீவராசியாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.
மாபெரும் இயற்கையின் முன் ஒரு தூசிபோல அலைபாயும் அவர்கள் ஒருவரை ஒருவர், நம்பி, தூற்றி, கைவிட்டு, அணைத்து எப்படி மீண்டுவர முயல்கிறார்கள் என்று காட்சிகள் விரிகின்றன.
இதுதான் ஆடுஜீவிதம் திரைக்கதையின் முக்கிய அம்சம். திரும்பத் திரும்ப குடும்பத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் அது வழக்கமான கதை சொல்லும் பாணியாக மாறியிருக்கும்.
இன்டர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் மனிதர்கள் மற்றும் ஒரு ஜீவராசியைப் போலத்தான் காட்டப்படுவார்கள்.
பறவைப் பார்வையில் மண்ணில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டிவிடலாம். மண்ணில் ஒரு தூசு போலத் தவிக்கும் ஒரு மனிதனின் மனதில் என்ன நடக்கிறது என்பதையும் பறவைப்பார்வையில் காட்டுவதற்கு அசாத்திய நுண் கற்பனை வேண்டும்.
படம்பார்த்துவிட்டு வெளியே வரும்போது நாம் நம்மை தப்பி வந்த நஜீபாக உணர்கிறோம். படம் பார்த்து ஓரிரு தினங்களாவது அந்தப் பிரம்மாண்ட பாலையின் ஒரு மணல் துளியாகவும் நம்மை உணர்கிறோம்.
அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக இந்த உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்தியதில் இயக்குநர் பிளெஸ்ஸி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

Sunday, April 7, 2024

இது ஆடுஜீவிதம் படத்தின் விமர்சனம் அல்ல!

கடவுள் நம்முடன்தான் இருப்பார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். கடினமான நேரங்களில் உதவி செய்வார் என்று எண்ணுகிறார்கள்.

ஏமாற்றப்பட்டு பாலைவனத்தில் அடிமையாக மாட்டிக்கொள்ளும் நஜீபும் அப்படித்தான் நம்புகிறான். அவனை அடிமைப்படுத்தி சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்தும் கஃபீலும் கடவுளைத்தான் அழைக்கிறான். தாகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காமல் நா வறண்டு மாண்டுபோகும், நஜீபின் நண்பன் ஹக்கீமும் கடவுளைத்தான் தொழுகிறான். நஜீப் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீமும் கடவுளைத்தான் வேண்டுகிறான்.
இந்தக் கோணத்தில் சிந்தித்தால் கடவுள் யாருக்குத்தான் ஆதரவாக இருந்தார் என ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கென ஒரு பதில் இருக்கிறது. நல்லவரோ, கெட்டவரோ, எவராக இருந்தாலும் கடவுள் யாருக்கும் ஆதரவாக இருப்பதில்லை. அவர் வாழ்வதற்கான தருணங்களை அமைத்துத் தருகிறார். அல்லது அந்தத் தருணமாகவே அவர் இருக்கிறார்.
அந்தத் தருணங்களில் ஏமாற்றுகிறோமா? ஏமாறுகிறோமா? நல்லது செய்கிறோமா? தீங்கு செய்கிறோமா என்பது அவரவர் குணங்களைப் பொறுத்து அமைகிறது. கடவுளை எதற்காக நம்புகிறோம் என்பதைப் பொறுத்து அந்தக் குணம் நம்முடனேயே இருக்கிறது. நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது.
ஆடுஜீவிதம் படத்தில் கடவுளை துணைக்கு அழைக்காத ஜீவன்கள் ஆடுகளும், ஒட்டகங்களும்தான். ஆரம்பத்தில் ஆடுகள் கூட நஜீபை முட்டிச் சாய்க்கும். ஆனால் போகப் போக அந்த ஆடுகளுடன் அவன் ஒன்றிப்போய்விடுவான். அந்த ஆட்டு மந்தையில் ஒருவனாக அவனும் மாறிப்போய்விடுவான். உயிர்தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அந்த ஆடுகளைப் பிரிய மனமின்றி அழுது புலம்பியபடியே அந்த ஆடுகளிடமிருந்து விடைபெறுவான். அந்த ஆடுகள் எந்தச் சலனமும் இன்றி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
அந்த ஆடுகளுக்கு நஜீபும் ஒன்றுதான், அவனை அடிமைப்படுத்திய கஃபீலும் ஒன்றுதான். ஒருவேளை எந்தச் சலனமும் இல்லாத அந்த ஆடுகள்தான் கடவுள்களோ!
தப்பி வந்த நிஜ நஜீப் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் கேட்கவேண்டும், யார் கடவுள் என்று.

ஏ.ஐயில் (சிறுவன்) எஸ்.பி முத்துராமன்!

 


ஏ.ஐயில் சிறுவன் எஸ்.பி முத்துராமன்.

எப்போது சந்தித்தாலும் மறைந்த எங்கள் தந்தை #ISR பற்றிய ஞாபகங்களை பகிர்ந்து கொள்வார். குடும்பத்தார் அனைவரையும் பற்றியும் அக்கறையுடன் விசாரிப்பார். குடும்ப விழாவிற்கு அழைத்தால் மறக்காமல் உடனே தனது டைரியில் குறித்துக் கொள்வார். நேரில் வந்து வாழ்த்துவார். இந்த எளிய மனிதரா சூப்பர் ஸ்டாரை வைத்து 25 படங்கள் இயக்கினார் என்று எப்போதும் வியக்க வைப்பார்.
"ஏ.வி.எம் தந்த எஸ்.பி.எம்" என்ற புத்தகத்தில் உள்ள அவரது சிறுவயது புகைப்படத்தை ஏ.ஐயால் உயிர் பெறச் செய்திருக்கிறேன். கடந்த அவருடமே அவருக்கு இதனை அனுப்பிவிட்டேன். ஆர்வத்துடன் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று அவரது 89வது பிறந்தநாள். அவருக்கு எங்கள் குடும்பத்தார் சார்பில் வாழ்த்துக்கள்! வாழ்க எஸ்.பி.எம்!
- ISR Selvakumar