Saturday, February 27, 2010

சுஜாதா நினைவாக இசை ரெடி - கேட்டுப்பாருங்கஇந்த முறை டிவிட்டர்கள் சந்திப்பை சுஜாதா நினைவு சந்திப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் முடிவானது. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதாவின் கவிதை எதையாவது இசையமைக்கலாம் என்று முடிவு செய்தேன். முதலில் சுஜாதாவின் குறள் உரையை இசை வடிவில் தரமுடியுமா என்று சிந்தித்தேன். அதை நெட்டில் தேடியபோது முதலில் கண்ணில் சிக்கியது கீழே இருக்கும் கவிதை. சந்தம்-கிந்தம், மீட்டர் - கீட்டர் எல்லாம் பற்றி சிந்திக்கவே இல்லை. கனமான ஒரு சப்ஜெக்ட் படிப்பதற்கு இலகுவானதாக இருக்கவே அதையே இசைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இசை என்றால் உடனே நான் அடுத்து போய் நிற்பது நண்பர் விவேக் நாராயண் இல்லம் தான். அவசரம் கருதி போன் போட்டேன். எந்தக் கவிதை என்று கேட்காமலயே சரி என்றார். நேற்று மதியம் வந்து கவிதையை படித்துவிட்டு எதையோ முணுமுணுத்துவிட்டு டியுன் ரெடி என்றார். எப்போ ரெக்கார்டிங் என்றேன். நாங்கள் எப்போதுமே அப்படித்தான். சட்டென சிந்தித்து, பட்டென முடிக்கப்பார்ப்போம். இரவு வா என்று சொல்லவிட்டு மாலை போனில் அழைத்தார்.

வா !
அப்புறம் வா !
போய்விட்டு அப்புறம் வா !
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சுஜாதாவின் கடைசி வரி தனித்தனி வார்த்தைகளாக படிக்கும்போது எப்படி ஜாலம் காட்டுகிறது பாருங்கள். எனவே அதையே துண்டுப்பல்லவிகளாக பயன்படுத்திக் கொண்டோம்.

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதா பற்றி அல்லது அவருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனங்கள் அல்லது நினைவுகளை பல குரல்களில் பாடலின் இடையே இணைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதற்க்க்காக இணைய நண்பர்களை அணுகியிருந்தேன். பலரும் தயங்க, இருவர் மட்டும் அனுப்பியிருந்தார்கள்.

ஜமால்(adiraijamal@gmail.com) சரியில்லேன்னா சொல்லுங்கண்ணே, திரும்ப அனுப்பறேன் என்று தனது குரலை அனுப்பியிருந்தார். சுந்தரவதனம்(vadanan2006@yahoo.co.in) .mp4 பார்மட்டில் மொபைல் போனில் பதிவு செய்த தனது குரலை அனுப்பியிருந்தார். இன்று காலை 11 மணி வரை வேறு ஏதாவது குரல்கள் வருகிறதா என்று காத்திருந்துவிட்டு, பாடல் பதிவை முடித்துவிட்டோம்.

வீட்டிலேயே எளிமையாக ரெக்கார்டிங் செய்யப்பட்டது. சுஜாதாவின் நினைவாக!

பாடலை கேட்கும்போது வரிகளை இரசிக்க, வரிகள் கீழே தரப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து பாடலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

Thursday, February 25, 2010

சுஜாதா நினைவாக ஒரு இசை - வாங்க குரல் கொடுங்க

சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, சுஜாதா எழுதிய கவிதை இது.

எனது நண்பர் இசையமைப்பாளர் விவேக்நாராயண் உதவியுடன் இதை இசை அமைக்கலாம் என்று திடீர் முடிவு செய்திருக்கின்றேன்.

வாசித்துவிட்டு சுஜாதாவைப் பற்றி, அவருடைய எழுத்தைப் பற்றி, இந்த கவிதையைப் பற்றி என்ன தோணுதோ அதை எனக்கு Voice Mailஆக அனுப்புங்கள். ஒத்திகை எல்லாம் பார்க்காமல் ஜாலியாக, இயல்பாக, சுருக்கமாகப் பேசவும். எதுவும் தோன்றாவிட்டால் இந்தக் கவிதையை உங்கள் குரலில் வாசித்து அனுப்புங்கள். இசைக்குள் செருக முடிகிறதா என்று பார்க்கிறேன்.

உங்கள் குரலுடன் இணைத்து பாடலை முழுமையாக்கும் ஐடியா உதித்திருக்கிறது. பாடலின் வடிவம், இசை உத்தி பற்றி எதுவும் இன்னும் தோன்றவில்லை.

ஐடியா வந்தவுடன் உங்களிடம் வந்திருக்கின்றேன். பார்க்கலாம் எப்படி வருகிறதென்று.

நாளை மதியத்திற்குள் குரல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி் r.selvakkumar@gmail.com


இனி கவிதை . . .
கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

Updated on : 27.02.2010
இசையை இங்கே கேட்கலாம்

Sunday, February 21, 2010

அவர்

சென்ற வருடம் டிசம்பர் இறுதியில் நாகர்கோவிலுக்கு ஒரு இரயில் பயணம். அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் தட தட தாலாட்டை மீறி செல்போன் என்னை எழுப்பியது.
”ஹலோ குட்மார்னிங்! சொல்லுங்க என்ன விஷயம்?” என்றது எதிர் முனைக் குரல்.
அழைத்தவர் அவர். (அவர் யார்?) அவர்தானே விஷயத்தை சொல்ல வேண்டும். ஏதாவது ராங்காலாக இருக்குமோ என்று யோசித்தபடி அப்பர் பர்த்தில் தூக்கம் கலைந்தேன்.

”ஹலோ நான் செல்வக்குமார் பேசறேன்”
"ஒரே சத்தமா இருக்கு. என்ன விஷயம் சொல்லுங்க?”
”நீங்கதான் சொல்லணும்”
”கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்க”
”நானா..?” என்று ஆச்சரியப்பட்ட வினாடியில், நடந்தது எனக்குப் புரிந்து போனது.
”அடடா..மன்னிக்கணும். நான் டிரெயின்ல இருக்கேன். தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது, எப்படியோ உங்க நம்பர் டயல் ஆகியிருக்கிறது”
”பரவால்ல, நானும் இப்பதான் ஒரு வேலையை முடிச்சிட்டு படுத்தேன்”, குரலில் கோபமில்லை, எரிச்சல் இல்லை, தூக்கம் கெட்டதே என்ற அலுப்பு இல்லை.
”சரி நீங்க சென்னைக்கு வந்தப்புறம் சந்திக்கலாம்” என்று மிக அமைதியாக, இயல்பாக பேசிய அந்த குரலுக்கு சொந்தக்காரரை இரண்டு மாதங்கள் ஆகியும் நேரில் சந்திக்க முடியவில்லை.

அவ்வப்போது Facebookல் வந்து ”நண்பா எப்படி இருக்கீங்க?” என்பார். பல முறை தேதி குறித்தும் அவரவர் வேலை பளு காரணமாக, அவரை சந்திக்க முடியாமலேயே இந்தப் பதிவில் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

ஏண்டா விடிய காலையில் 3 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தை கெடுத்த என்று நியாயமாக கோபம் வரக் கூடிய நிலையிலும், நிதானித்த அவரை எண்ணி வியக்கிறேன். அவரை இதுவரை சந்திக்கவே இல்லை. ஆனாலும் சின்னச் சின்ன கண்ணியமான facebook உரையாடல்கள் மூலம், எப்போதும் நினைவில் நிற்கும் நண்பர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

தன்னை ஆளத் தெரிந்தவர் தரணி ஆள்வார். விரைவில் அவர் தமிழ் மக்களின் மனதை வெல்வார்.

அவருடைய சிறந்த குணத்திற்கு மேலே நான் எழுதியிருப்பதே சாட்சி. அவருடைய திறமைக்கு சாட்சியாக விரைவில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. அவர் இயக்கியுள்ள ”அவர் பெயர் தமிழரசி” இம்மாதம் திரைக்கு வருகிறது 

நல்ல குணம் படைத்த அவர், நிச்சயம் நல்ல திரைப்படத்தை தருவார்.
அவர் - இயக்குனர் மீரா கதிரவன்.

All the best Meera!