
அதே ஸ்டைலில் 'சிந்தாமணி கொல கேஸ்' என்று மலையாளத்தில் வந்த படம் தமிழில் 'எல்லாம் அவன் செயல்' ஆகியிருக்கிறது. விஜயகுமார், ரகுவரன், விசு, தலைவாசல் விஜய், சுகன்யா, ரோஜா, வடிவேலு, மணிவண்ணன், சங்கிலி முருகன் என்று பல பெருந்தலைகள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆளுக்கு இரண்டு சீன்தான்.
மற்ற காட்சிகளை ஆர்.கே என்ற (புரொடியுசர்)புதுமுகம் ஜே.கே.ரித்திஷ் ஸ்டைலில் ஆக்கிரமிக்கிறார். சில நேரம் கையில் கருப்பு கிளவுஸிம், சில நேரம் வக்கில் கோட்டும் போட்டுக் கொண்டு, கேரக்டர்களை மறந்துவிட்டு முக்கால்வாசி நேரம் இரசிகர்களைப் பார்த்தே டயலாக் பேசுகிறார், அல்லது டயலாக் வாசிக்கிறார். இவருடைய பாதிப்பில் சுகன்யாவும் விசுவும் கூட எப்போதுமே விரைத்துக் கொண்டு அடித்தொண்டையில் பேசுகிறார்கள்.
கடமை தவறாத போலீஸ் அப்பாவை, சிறுவர்களான மகன் மற்றும் மகளின் கண்ணெதிரில் போட்டுத் தள்ளுகிறான் ஒரு கொலைகாரன். வெகுண்டெழும் மகன் வளர்ந்து பெரியவனாகி அந்த கொலைகாரனை பழிவாங்குவது பழைய ஸ்டைல். பெரியவனாகி வக்கீலாகி, கிரிமினல்களுக்காக வாதாடி, ஜெயித்து, விடுதலை வாங்கித் தந்து, அடுத்தநாளே அவர்களை கொலை செய்வதுதான் எல்லாம் அவன் ஸ்டைல்.
வழக்கமாக தமிழ்பட மசாலாக்களில் இது போல கொலை செய்யும் ஹீரோ, கடைசி காட்சியில் மட்டும் கையில் விலங்கோடு உள்ளே போவார். இதில் வழக்கத்திற்கு மாறாக, உங்களைப் போல இன்னும் பல பேர் வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி ஆபீசர் கொலைகாரனை வாழ்த்தி சல்யூட் அடிப்பது போல படம் முடிகிறது.
எல்லா குற்றங்களுக்கும் தீர்வு, கொலைதான் என்று தவறாகச் சொல்லித்தரும் படம். மெடிக்கல் காலேஜ் ஊழல், ராக்கிங் என சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை இனிப்பு போல தடவி, மக்களை கொலைகாரனாக மாற கொம்பு சீவும் படம். அதை மேலும் நியாயப் படுத்த ஆங்காங்கே ஏதேதோ ஸ்லோகங்கள்.
இந்தப் படத்தின் ஹீரோவும் புரொடியுசருமான ஆர்.கே எனப்படும் ராதாகிருஷ்ணன், வி-கேன், ஸ்கைவேஸ் 2000, காந்தப் படுக்கை என விதவிதமாக மல்டி லெவல் மார்கெட்டிங் செய்து (உள்ளே போய் வெளியே வந்து) பிரபலமானவர். எதை விற்கிறோம், எதை வாங்குகிறோம் என்பதைப் பற்றி கவலை இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதுமட்டுமே நமது குறிக்கோள் என்று மல்டி லெவல் மார்கெட்டிங்கில் பிரெயின் வாஷ் செய்வார்கள். இந்தப் படம் அது போல, எல்லா குற்றங்களுக்கும் தண்டனையாக கொலையை சிபாரிசு செய்கிறது.
கடவுளே! இது போன்ற தவறான போதனைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்று!