Thursday, July 19, 2012

அனுராதா நிகேத் - முத்திரைகள்!

அனுராதா நிகேத்
கல்லூரி காலங்களில் எனக்கு வாய்த்த ஜோல்னா பை ஜிப்பா நண்பர்கள், எக்மோர் மியூசியம் தியேட்டரில் அற்புதமான கூட்டமே இல்லாத நாடகங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு பை டூ டீயில் பாதல்சர்க்காரின் நாடக உத்திகளை கலந்து தருவார்கள்.

பிற்பாடு அது கொஞ்சம் அலுத்து, காதிபவன் காட்டன் ஜிப்பாவுடன் Cobol, Pascal என சிலிக்கன் உலகத்தில் நெட்வொர்கிங், ஆப்ஜக்ட் ஓரியண்டட் என குழப்பமாக பைனரித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் அதே பை டூ டீயுடன், லலித்கலா அகாடமியில் அமானுஷ்ய நீலம் மற்றும் சிவப்பு வர்ணங்களுக்கு இடையே சர்ரியல் பற்றி எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அப்புறம் அதிலிருந்து நான் வெளிவர பல வருடங்களாயிற்று. ஆனால் இன்னமும் ஆழ்மனத்தில் டாலியின் நழுவும் காலத்தைக் குறிக்கும் கடிகார ஓவியங்கள், டிக் டிக் என ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

அதனால்தானோ என்னவோ, அனுராதா நிகேத்தின் Expressions and Impressions ஓவியகண்காட்சிக்கு சென்றிருந்தபோது அந்தசர்ரியல் கடிகார சத்தம் சற்று அதிகமாகவே எனக்கு கேட்க ஆரம்பித்தது.

நான் அனுவின் ஓவியக் கண்காட்சிக்கு செல்வது, இது இரண்டாம் முறை. இந்த முறை அடர்த்தியான நீலம் மற்றும் சிவப்பு வண்ணக் கலவைகளில் தியானங்களின் போது பின்பற்றப்படும் முத்திரைகளை ஓவியமாக்கி வைத்திருந்தார். நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களையும் குறிப்பதுதான் நமது கைவிரல்கள். அவற்றை குறிப்பிட்ட விதிகளின்படி நீட்டி மடக்கி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைவதன் மூலம் நமது உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியும் என்று சில இஸங்கள் சொல்கின்றன. சமகால காசு பார்க்கும் கார்ப்பரேட் சாமியானந்தாக்களும் இதை்தான் சொல்கிறார்கள்.

எனக்கு ஒரே ஆச்சரியம், அனு அந்த முத்திரைகளை ஓவியங்களாக வடித்திருந்ததுதான். இந்த தீமில் ஒரு ஓவியக் கண்காட்சியை தற்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்து வரைந்தாரோ தெரியாது. ஆனால் Kaleeswara Mudra, Shank Mudra, Chin Mudra, Yondi Mudra மற்றும் Shakti Mudra என பெயரிடப்பட்ட ஓவியங்களைப் பார்த்ததும் நான் சர்ரியல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டேன் என்பது மட்டும் உண்மை.


அவர் அளித்த கையேடு, ஓவியங்களை அழகாக விவரித்தது. நான் விளக்கட்டுமா என்ற புன்னகையுடன் அவர் சில முத்திரைகளை செய்தும் காட்டினார். நானும் சக்தி முத்திராவை அவர் முன்னிலையிலேயே முயற்சித்துப் பார்த்தேன்.

பார்வையாளனுக்குள் சில உணர்வுகளைக் கிளறுவதே ஒரு படைப்பின் வெற்றி. அந்த உணர்வு அந்த படைப்பு சொல்லாததாகவும் இருக்கலாம். நான் என் விரல்களை மட்டுமல்ல, மனதின் ஆழங்களையும் ஒன்றோடு ஒன்று முடுக்கி ஏதோ செய்ய முயற்சித்துவிட்டேன் என்ற வகையில் அனுவின் Expressions and Impressions is a SuXus! அம்பாசடர் பல்லவாவில் இந்த வார இறுதி வரை அவருடைய ஓவியங்களை இரசிக்கலாம்!புகைப்படங்கள் : ஜெயராஜ் பாண்டியன்!

இந்தியாவின் முதல் ரொமாண்டிக் சூப்பர்ஸ்டார் விடை பெற்றார்!

ராஜேஷ் கண்ணா! இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

சின்ன தலையசைப்பிலும், நளினமான கையசைப்பிலும், மெல்லிய புன்சிரிப்பிலும் இந்தியாவின் இளமையை எழுபதுகளில் கொள்ளையடித்தவர்.

எப்போதும் சீராகத் தலைவாரப்பட்டு, மடிப்பு கலையாத உடைகளுடன் ஒரு ஒழுக்கமான பையன் தோற்றம். ஆங்ரி யங் மேனாக, அமிதாப் தனித்து தெரிந்ததற்கு ராஜேஷ்கண்ணாவின் இந்த தோற்றமும் ஒரு காரணம்.

அவருடன் அமிதாப் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இரண்டும் ஜெம். அதுவும் ஆனந்த்... என்ற படம்... கிளாசிக்!

ஹிந்தி தெரியாத மாநிலங்களிலும் ராஜேஷின் திரை ஆளுமை ஊடுருவி இருந்தது. மேல் பட்டன் போடாத சட்டையுடன், கன்னக்குழியழகி ஷர்மிளா டாகூருடன் அவர் தோன்றிய படங்கள், அவரை ஒரு ரொமான்ஸ் கிங்காக உயர்த்தின.

அவர் உச்சத்தில் இருந்தபோது, கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 15 படங்கள் சூப்பர் ஹிட்!டியர் ராஜேஷ் கண்ணா,
உங்கள் நினைவாக அமர் பிரேம் படத்திலுள்ள இந்தப் பாடலில் மூழ்கிக் கொள்கிறேன். பாடலுக்கு அர்த்தம் கேட்காதீர்கள். எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் உங்களைத் தெரியும். உங்கள் முகம் சொல்லும் பாவனை தெரியும். இந்தப் பாடல் யாரையோ வழியனுப்பும் முடிவில்லா உணர்வைத் தருகிறது. அதே உணர்வுடன் உங்களையும் அனுப்பி வைக்கிறேன். 

Bye Rajesh! I miss you

Monday, July 16, 2012

இன் & அவுட் சென்னை - மாடு தின்னாத போஸ்டர்கள்!


நண்பா உனக்கொரு வெண்பா
------------------------------------------
நண்பா உனக்கு வெண்பா தெரியுமா என்றது ஒரு மின்னஞ்சல். தெரியாதுபா என்றேன் பதிலில். பரவால்ல இதைப் படிப்பா என்றது அடுத்த அஞ்சல்.

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் –திருமலையர்
மல்லர் பரிப்பெருமால் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்!

நாக்கு முக்க பாட்டு புரிகிற நமக்கு இதுவும் புரிந்துவிடும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள் தொடர்ந்து வரும் பாராவுக்கு அடுத்த பாராவுக்கு வந்து விளக்கம் கேட்கலாம். வரும்போது க்ரீன் டீயுடன் வாருங்கள். மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு அல்லவா. பருகிக் கொண்டே வெண்பாவுக்குள் டைவ் அடிக்கலாம்.

சில போஸ்டர்களை மாடு தின்பதில்லையே ஏன்?
-----------------------------------------------------------------------
போஸ்டர் பார்க்கிற கிக் சிறு வயதில் இருந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது. இன்னமும் வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும்போது சிலர் சந்து முனை பிள்ளையார்களுக்கு கன்னத்தில் போட்டுக் கொள்வது போல, நான் போஸ்டர் அமலாபால்களை ஒரு முறை கண்ணோடு கண் நோக்கிவிடுகிறேன். சமீபத்தில் கண்ணில் பட்டது வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புத்தக வெளியீடு. ஆனந்தவிகடனில் தொடராக வந்த கதை (வந்து கொண்டிருக்கிற கதை) புத்தகமாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

செல்ஃபோன் நிறுவனங்கள், புடவைக் கடல் பேனர்கள் மற்றும் சினிமா போஸ்டர்களுக்கு இடையே வைரமுத்துவும் அவர் படைப்புகளும் போஸ்டர்களாக பளபளப்பது எனக்கு சந்தோஷமே. சென்னையில் கண்ட கண்ட இடத்தில் போஸ்டர் ஒட்ட தடை வந்துவிட்டது. அதனால் போஸ்டர்களும் அதைத் தின்னும் மாடுகளும் சென்னையில் அரிதாகிவிட்டன. மூலம், எய்ட்ஸ் போன்ற ரகசிய வியாதிகளுக்கு உடனடி நிவாரணம் தரும் பழுப்பு மஞ்சள் போஸ்டர்கள் கட்டணக் கழிப்பிடம் அல்லது இலவச வெளியிடம் எங்கும் காணப்படும்.

எல்லாவற்றையும் தின்கிற மாடுகள் இவற்றை தின்பதே இல்லை. எய்ட்ஸ் தொற்றும் என்ற பயமா? டேஸ்ட் சரியிருக்காதா? மாடுகளிடம் பேசும் பழக்கம் உள்ளவர்கள் கேட்டுச் சொல்லுங்கள். சமீபத்தில் அருகருகே ஒட்டியிருந்த இரு போஸ்டர்களை இரசித்தேன். வீடு வாங்க விற்க என்னை அணுகுங்கள் என்றது முதல் போஸ்டர். அருகிலேயே இன்னொரு போஸ்டர், இங்கு போஸ்டர் ஒட்டினால் தண்டிப்பேன் என்றது. இரண்டிலும் ஒரே நபர், ஒரே எண்.

வெண்பா எதற்கு? சுவாரசிய விளக்கம்.
ஒரு ஆப்பிளை பிடித்திருப்பது போல கையை வைத்துக் கொண்டு, இதுபோல கட்ச்சிக்கோன்னு சொல்ற மாதிரி வளைவாக இருக்கற இடத்துக்குப் பெயர்தான் கட்ச் வளைகுடா என்றார் ஆசிரியர். 35 வருடங்களுக்கு முன் அவர் சொன்னதை இன்னமும் மறக்க முடியவில்லை. இந்திய மேப்பில் கன்னியாகுமரியை தேடுவேன். ஆனால் கட்ச் வளைகுடாவை அவர் தந்த விஷீவல் விளக்கத்தால் மறக்காமல் சுட்டிக் காட்டுவேன்.

ஆனால் எனக்கு வந்த தமிழ் வாத்தியார்கள் சரியான கட்ச்சர்கள். இலக்கணம் எதுக்கு சார் என்றேன். காதை கடித்தாரா? திருகினாரா? என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் சிவப்பு விளக்குபோல பளீரென காது ஒளிர்ந்தது. சில ஆசிரியர்கள் அப்படித்தான். கேள்வி கேட்பதை விரும்புவதில்லை. ஆனால் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் அவர்கள் இருக்கிறார்கள். என் நண்பர் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டத்துறையில் அரசுப் பணியில் இருக்கிறார். அவர் ஒரு நாள் வெண்பா எதற்கு என்று விளக்கம் சொன்னார். எளிமை மற்றும் சுவாரசியம்.

நண்பர்களின் பெயர்களையும், எண்களையும் மொபைல் போனில் சேமிப்பது போல, வரிசையாக சில பெயர்கள் அல்லது பொருள்களை தொகுத்து வைக்க வெண்பா பயன்படுகிறது என்றார்.

இப்போது முதல் பாராவில் இருக்கும் வெண்பாவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சில பெயர்கள் வரிசையாக தொகுக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்வீர்கள்.

அட போங்க சார் என அலுப்பவர்கள் அடுத்த பாராவுக்கும், மற்றவர்கள் முதல் பாராவுக்கும் எகிறிக் குதிக்கலாம்.

டைனோசரை விடப் பிரமாண்டமான ஈ
------------------------------------------------------
முதன் முதலில் டைனோசரை திரையில் பார்த்த வியந்த நான், ஒரு சிறிய ஈயைப் பார்த்தும் வியந்தேன். இயக்குனர் ராஜமௌலி ‘நான் ஈ‘ படத்தில் இதை சாதித்திருக்கிறார். பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற சங்கர் இது வரை மல்டிபிளை உத்தியைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். 100 தொப்பைகளில் ரஜனி படம். மேம்பால டிராபிக் நெரிசலில் 1000 வாகனங்கள். என பார்த்து சலித்திருந்த நம்மை இதற்கு முந்தைய படமான மகதீராவிலேயே நிமிர்ந்து உட்கார வைத்தார். இதில் ஒரு ஈயை வைத்து அசத்திவிட்டார். ஒரு சிறிய ஈ கொடிய மனிதன் ஒருவனை வெல்ல முடியும் என்று நம்ப வைத்திருக்கிறார்.

அவருக்கு ஒரு சபாஷ் என்றால், அசுர உழைப்பை தந்திருக்கும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாருக்கு சபாஷ் சபாஷ்! பெரிய பங்களா. ஆங்காங்கே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. துளியூண்டு ஈ உயிருக்கு பயந்து ஓட, இரண்டு பருந்துகள் அதை விழுங்க துரத்துகின்றன. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பர பர சேஸ். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், துரத்தப்படும் ஈ, துரத்தும் பறவைகள், எரிக்கும் நெருப்பு எல்லாமே கிராபிக்ஸ். சேஸ் நடக்கும் கட்டிடம் மட்டும் உண்மை. எல்லாவற்றையும் கற்பனையில் வைத்துக் கொண்டு காமிராவை நகர்த்த வேண்டும். முதலில் தப்பி ஓடும் ஈயின் பார்வையில், பிறகு துரத்தும் பறவைகளின் பார்வையில், அதன்பின் இவற்றை கவனிக்கும் பார்வையாளர்களின் பார்வையில். ஆங்காங்கே அசத்தும் ஸ்லோமோஷன்களுடன் அரங்கம் அதிர்கிறது.

டிஜிட்டல் காமிரா பிரியர்களுக்காக சில தகவல்கள். Arri, Canon 5D மற்றும் Go-Pro காமிராக்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வினாடியில் 2000 ஃபிரேம்களை விழுங்க வேண்டிய படுஸ்லோ மோஷன் காட்சிகளுக்கு Phantom காமிராக்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

டிஜிட்டலில் படம் எடுத்தால் பார்க்க நன்றாக இருக்காது என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நான் ஈ பார்த்துவிட்டு தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவும் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஓகேப்பா... மீண்டும் வெண்பா
------------------------------------------
வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசுணை
கத்தரி பீன்ஸ்பாகற் காய்!

இந்த வெண்பாவில், ஏதோ ஒரு ரெசிப்பி இருக்கிறது. அதற்கு தேவையான காய்கறிகளை தொகுத்திருக்கிறார்கள்.

இப்போது முதல் பாரா வெண்பாவை படியுங்கள். திருக்குறளுக்கு யார் யார் உரை எழுதியுள்ளார்கள் என்ற வரிசை அதில் உள்ளது.

இதை சொல்லிக் கொடுத்த நண்பரிடம் கேட்டேன். வெண்பா வழியாக பெயர்களை அடுக்க சொல்லித் தந்த நீ, உங்கள் அலுவலகத்தில் ஃபைல்களை அடுக்கி வைக்காமல் தேடிக் கொண்டிருப்பது ஏன் என்றேன். அவர் கிர்ர்ர்ர்ர்ர்... என்றார் நான் சர்ர்ர்ர் என புறப்பட்டேன்.

இதே பாணியில் நீங்களும் முயற்சிக்கலாம்.
தலைப்பு - நண்பன்
கடைசி வரி - ஃபேஸ்புக் நண்பனே தெம்பு!


Sunday, July 15, 2012

குண்டலினிச் சித்தரே நீவீர் எங்கே?

மிளகாய்பொடி, உப்பு தடவி பிஞ்சு வெள்ளரிக்காயை வாங்கும்போது,
காளி முரசு என்றொரு ஆன்மீக மாத இதழ் கண்ணில் பட்டது.

குண்டலினிச் சித்தர் தவயோகி என்ற பட்டத்துடன் அட்டையிலேயே பெரிதாக இருந்த ஆசிரியரின் பெயரை வாசிக்க முடியாமல், உப்பு ஈரம் கிழித்துவிட்டிருந்தது.

உள்ளேதான் எதிர்பாராத சுவாரசியம். குழந்தைப் பாட்டு!மெல்லிய பூக்களை வண்டு - அக்கா
மிதி மதியென்று மிதிக்கிறதே.
பூக்களை மிதிக்கும் வண்டை -அக்கா
கொஞ்சமும் எனக்குப் பிடிக்கலையே.

பூக்களை மிதித்தே வண்டு - பாப்பா
புதுப்புது தேனை எடுக்கிறதே.
புதுப்புது தேனை எடுத்தே - பாப்பா
புசித்திட நமக்கும் கொடுக்கிறதே.

குண்டலினி, யோகா, சக்தி பீடம் அது இது என்று சில பக்கங்கள் நிறைந்திருந்தாலும், கைகால் கழுவுவது எப்படி? கோலம் போடலாமா? உட்பட இந்த பாப்பா பாட்டும் எனக்கு எக்கச்சக்க ஆச்சரியம்.

புதுப்புது என்ற வார்த்தைக்குப் பதில் தித்திக்கும் என்பதை பயன்படுத்தலாமோ?

காளி முரசு ஆசிரியர் குண்டலினிச் சித்தரே... நீவிர் எங்கே இருக்கிறீர்? உமது முழுப்பெயர் என்ன ஐயா?

ஒலிம்பிக் நேற்று-இன்று-நாளை :01


ஒலிம்பிக் நேற்று
கொடி டிசைன்


தில்லு முல்லு படத்தில் உங்களுக்கு மீசை இருந்துச்சு என்பார் மாதவி. க்ளீன் ஷேவில் தில்லுமுல்லு பண்ணும் ரஜினி, டபக்கென்று மாதவியின் கையைப்பிடித்து வாட்சை மறைத்து இப்போ டைம் என்ன சொல்லுங்க என்பார். மாதவி திரு திருவென முழிப்பார். உடனே என்னங்க இது. உங்க கையி, உங்க வாட்சு, ஆனா உங்களுக்கு டைம் தெரியில, அப்படி இருக்கும்போது எனக்கு மீசை இருந்ததுன்னு எப்படி உங்களால சொல்ல முடியும் என்று சமாளிப்பார்.

அதே போல டபக்கென்று உங்க கன்னத்தை கிள்ளி, காதைத் திருகி ஒரு கேள்வி. ஒலிம்பிக் கொடியில் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் ஐந்து வளையங்களில் என்னென்ன வண்ணங்கள் உள்ளன?

நீங்கள் உங்கள் ஞாபகத்தை கசக்கும்போது ஒரு தகவலைச் சொல்லிவிடுகிறேன். பியர் டி கொபர்டின் (Pierre de Coubertin ) என்பவர்தான் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தார். பிரான்ஸ் சாட்டவரான கொபர்டின், சரித்திர ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கியவர் இவரே. இவரால் 1914ல் வடிவமைக்கப்பட்ட கொடி, 1920ல் நடந்த ஒலிம்பிக்கில்தான் பயன்படுத்தப்பட்டது.

இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு. இவைதான் கொடியிலுள்ள ஐந்து வளையங்களின் நிறங்கள். இந்த ஐந்தில் ஏதாவது ஒரு நிறம், நிச்சயமாக ஒவ்வொரு நாட்டுக் கொடியிலும் இருக்குமாம். அதனால்தான் இந்த நிறங்கள் தேர்ந்தெடுத்தார் கொபர்டின்.

ஒலிம்பிக் இன்று
போட்டி துவங்கும் ஸ்டேடியம்

நான் 2008ல் குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் ஒலிம்பிக் லண்டனுக்கே என்ற பேனர்கள். பாரீஸா? லண்டனா? யாருக்கு ஒலிம்பிக் நடத்த வாய்ப்பு என்று தீர்மானிக்கப்படாத நேரம். ஒலிம்பிக் கமிட்டி இரண்டு நகரங்களையும் சஸ்பென்சில் வைத்திருந்தது. லண்டனைச் சுற்றிவட்டு பாரீசும் சென்றேன். அங்கும் இதே வகை பேனர்கள், ஒலிம்பிக் பாரீசுக்கே என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. ஒருவழியாக சஸ்பென்ஸ் முடிந்தபோது லண்டன் வெற்றிக் களிப்பில் மிதந்தது.

ஒலிம்பிக் சரித்திரத்தில் 3 முறை ஒலிம்பிக் நடத்த வாய்ப்பு பெற்ற ஒரே நகரம் லண்டன்தான். முதலில் 1908(வொயிட் சிட்டி ஸ்டேடியம்), அடுத்தது 1948(வெம்பிளி ஸ்டேடியம்) தற்போது 2012(ஒலிம்பிக் ஸ்டேடியம்). ஒரு வேளை அங்கு ஒலிம்பிக் நடக்கலாம் என யூகித்து, நான் வெம்பிளி ஸ்டேடியத்தின் அருகில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். தற்போது அந்த புகைப்படங்களை ஆசை ஆசையாக தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் காணவில்லை. ம்ம்ம்... அப்போதெல்லாம் ஃபேஸ்புக் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் அதிலிருந்து பத்திரமாக மீட்டெடுப்பேன்.

ஒலிம்பிக் நாளை
2016 ரியோ (பிரேசில்)

ஒலிம்பிக் போட்டிகள் ஒரு புறம் ஆரவாரமாக இருக்க, ஒலிம்பிக்கை யார் நடத்துவது என்பதில் பல நாடுகளுக்குள்ளே ஒரு சைலண்ட் போட்டி. 2016 போட்டியை நடத்துவதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிகாகோ, மாட்ரிட், டோக்கியோ, ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே கடும் போட்டி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது சிறப்பு வல்லுனர்களை அந்த நகரங்களுக்கு அனுப்பி, ஒலிம்பிக் நடத்த தேவையான வசதிகளும், பாதுகாப்பும் உள்ளதா என்பதை பரிசோதித்தது. நகரங்களை தேர்ந்தெடுப்பதற்கென்று சர்வேத ஒலிம்பிக் கமிட்டிக்குள் வல்லுனர்களுக்கு தேர்தல்களும் உண்டு. முதல் ரவுண்டிலேயே சிகாகோ அவுட். அதற்கடுத்து டோக்கியோ வெளியேறியது. தொடர்ந்து ஒவ்வொரு நகரமாக வெளியேற, கடைசிச் சுற்றில் ரியோ டி ஜெனிரோவுக்கும், மேட்ரிட்டுக்கும் கடும் போட்டி. 66க்கு 22 என்ற வாக்கு வித்தியாசத்தில் ரியோ வெற்றி பெற்றது. அந்த வகையில் ஒலிம்பிக் நடத்த வாய்ப்பு பெற்ற முதல் தென் அமெரிக்க நகரம் ரியோ.

ஆனால் இதே சூட்டோடு 2020 ஒலிம்பிக் நடத்துவதற்கான போட்டியும் துவங்கிவிட்டது. களத்தில் தோஹா, டோக்யோ மற்றும் மாட்ரிட் உள்ளன.

ரியோவில் யாராவது ஃபேஸ்புக் நண்பர்கள் இருக்கிறீர்களா? உங்களுடன் தங்கி, அந்த ஃபுட்பால் தேசத்தைப் பார்க்க ஆவல்.

குமுதம் ராதாவை சொர்ணாக்கா என்கிறது. நானோ . . .

மீடியாக்களின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைந்துவிட்டதா?
  1. ஆம்
  2. இல்லை
இரண்டில் ஒரு பதிலை சொல்லிவிட்டு அடுத்த பாராவுக்குச் செல்லுங்கள்

-----------------------------------------------------------------------------------------------------

லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை நொடித்துப் போயிருந்த சமயம். பெரிய வருமானம் இருக்காது எனத் தெரிந்தும், பிரிட்டிஷ் மீடியா மன்னர் பீவர்புரூக் அதை விலைக்கு வாங்கினார். அனைவருக்கும் ஆச்சரியம். ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டபோது ஒற்றை வார்த்தையில் அவர் சொன்ன பதில் ‘அதிகாரம்‘

ஆம்! இன்று பத்திரிகை என்பது செய்திகளைப் பகிர்வதோடு மட்டும் அல்லாமல், அரசாங்க அளவில் அதிகாரங்களைப் பகிரவும் முற்படுகின்றன. ஒரு பத்திரிகையால் அதிகார மையத்தை ஊடுருவ முடியுமா என்பவர்களுக்கு, நீராகேட் என்று வர்ணிக்கப்பட்ட டெலிஃபோன் உரையாடல்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்று சொல்லிக் கொண்ட நீரா ராடியாவுடன் இணைந்து மீடியா பிரபலங்களான வீர்சிங்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) மற்றும் பர்காதத் (என்டிடிவி) ஆகிய இருவரும் நடத்திய அரசியல் பேரங்கள் இன்னமும் நெட்டில் கிடக்கின்றன. மன்மோகன்சிங் மந்திரி சபை தொடர்பாக, கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோரிடம் அவர்கள் பேரம் பேசுவதை இப்போதும் கேட்கலாம்.

ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக பத்திரிகை துறை வர்ணிக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியா போன்ற ஒரு நாட்டில், அது தூணாக இல்லாமல் ஒரு அரசியல் கடப்பாறையாக பல நேரம் செயல்படுகிறது. ஒரு புதிய அரசு உருவாவதற்கும், இருக்கின்ற அரசை அசைக்கவும் பத்திரிகைகள் தற்போது முனைப்பு காட்டுகின்றன. தங்களுக்குப் பிடித்த தலைவர்களை உயர்த்தி, பிடிக்காதவர்களை எந்த முகாந்திரமும் இன்றி விமர்சிக்கின்றன. எனவே அரசியல்வாதிகள் பத்திரிகைகளை தங்கள் வசப்படுத்த முயல்கிறார்கள். விளைவு... இன்று ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ சார்பு நிலை எடுக்காத மீடியாவே இல்லை. நடுநிலை என்பதெல்லாம் பம்மாத்து.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், எங்கள் கட்சி தொடர்பான செய்திகளை, போராட்டங்களை எந்த பத்திரிகையும் வெளியிடுவதிலலை. தொலைகாட்சிகளும் கண்டு கொள்வதில்லை என்று அடிக்கடி குற்றம் சாட்டுவார். இத்தனைக்கும் அவரிடமே மக்கள் தொலைகாட்சி என்றொரு தொலைகாட்சி நிறுவனம் உண்டு.

சமீபத்தில் ஆனந்தவிகடனுக்கு பேட்டியளித்த திருமாவளவன் கூறியிருப்பதை வாசியுங்கள். ராமதாஸ் போலவே அவருக்கும் ஆதங்கம். மீடியாக்கள் எங்களைப் பற்றிய செய்திகளை புறக்கணிக்கிறார்கள். எனவே நாங்களே சொந்தமாக டெலிவிஷன் சேனல் துவங்குவோம் என்று கூறியுள்ளார். காரணம் என்ன? பீவர் புரூக் குறிப்பிட்டுள்ளது போல, அதிகாரம். கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்கும், நிலைப்பதற்கும் விலக்கப்படுவதற்கும் மீடியாக்களின் துணை தேவைப்படுகிறது.

அதிகார மையங்களில் தாங்கள் அழுத்தமாகப் பதிந்து கொள்ள, பத்திரிகைகள் இரு வகையாக அரசியல் செய்கின்றன. வலிந்து வலிந்து சிலரைப் பற்றி தொடர்ந்து (Paid news) எழுதி, அவரைப் பற்றிய மெகா பிம்பங்களை மக்கள் மனதில் விதைக்கின்றன. அல்லது சிலரைப் பற்றி கண்டு கொள்ளாமல், அவர்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்வது இன்னொரு வகை. எந்த வகையாக இருந்தாலும், வலிமையான மீடியாவை கையில் வைத்திருப்பவர்கள் அனைவருமே தனிக்காட்டு ராஜாக்கள்தான்.

மன்மோகன் சிங்கை Under Achiever என வர்ணித்து டைம் பத்திரிகை இந்த வாரம் ஒரு கட்டுரை வடித்துள்ளது. உடனே இங்கே பிரதான கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்துவிட்டன. இதே போல வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார். அப்போதும் இதே டைம் பத்திரிகை வாஜ்பாய் ஆட்சியைப் பற்றி ‘Asleep at the Wheel‘ என்று கேலி செய்தது. அவர்களுடைய கணிப்பு சரியா? தவறா? அது தொடர்பான சர்ச்சைகள் தேவையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். இக்கட்டுரைகள் வெளியாகும் தருணங்கள்தான் கவனிக்கப்படவேண்டியவை. இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்கக்கூடும் என்று மக்கள் யோசிக்கத் துவங்கும்போது, இவர் வேண்டாம், அவர் வேண்டும் என்று மக்கள் மனதில் சில எண்ணங்களை விதைக்கிற வேலையை இக்கட்டுரைகள் கச்சிதமாகச் செய்கின்றன. எதற்கு? வேறெதற்கு? அதிகாரம்தான்.

அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால், அவர்களுக்கே அதிகாரம் கிடைத்தது போலத்தானே.

--------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச அளவில் டைம் பத்திரிகை ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றால், கடந்தவாரம் கோடம்பாக்க அளவில் ஒரு அதிர்ச்சியை குமுதம் உண்டாக்கியது. நடிகை ராதாவை, சொர்ணாக்கா என்று விமர்சித்திருந்தது. தனது மகள் கார்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெரிய பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை எல்லாம் தன் செல்வாக்கால் மடக்குகிறாராம். ஏற்கனவே யாராவது தேர்வாகி இருந்தால், அவர்களை படத்தைவிட்டே தன் செல்வாக்கால் தூக்கிவிட்டு தன் மகளை நடிக்க வைக்கிறாராம்.

இது போன்ற ‘.....றாராம்‘ என எழுதப்படும் யூகச் செய்திகளை நான் பெரும்பாலும் படிப்பதில்லை. ஆனால் அம்பிகா-ராதா சகோதரிகள் எங்கள் குடும்பத்திற்கு ஓரளவுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அந்த கட்டுரையை வாசித்தேன். இந்த நேரத்தில் நான் அம்பிகா-ராதா சகோதரிகள் பற்றி ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1991ம் வருடம். பிப்ரவரி 6. பாரத் பந்த். ஊரே அமைதியாக இருந்தது. விஹெச்எஸ் டேப்பில் நண்பர்களுடன் ஏதோ ஒரு அல்பசினோ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் இனம் புரியாத மனக் குழப்பம். சிறிது நேரத்திலேயே கும்பகோணத்திலிருந்து ஒரு ஃபோன். மோகமுள் திரைப்படக் குழுவிலிருந்து யாரோ பேசினார்கள்.

‘நீங்க ஐ.எஸ்.ஆரின் பையன் தானே?‘
‘ஆமாம்‘
‘உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. உடனே கும்பகோணம் வாருங்கள்.‘ இதுதான் தகவல்.

தகவல் கிடைத்ததும், என் அம்மாவிற்கு அழுகை வந்துவிட்டது.
‘உடனே கும்பகோணம் புறப்படு, நானும் உடன் வருகிறேன்‘ என்று கண்ணீர்.
தங்கைகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். குடும்பத்தில் சகஜநிலை சடுதியில் காணாமல் போனது. வேறுவழியில்லை, உடனே புறப்பட்டாக வேண்டிய கட்டாயம். அன்று பாரத் பந்த் என்பதால் பஸ், இரயில் எதுவும் இல்லை. மோட்டர் பைக்கிலேயே போகலாமா என்கிறான் என் தம்பி ரவி. சில நண்பர்கள் தடுத்துவிட்டார்கள்.

அப்போது ராதாவிடமிருந்து ஃபோன்.
‘ஏன் கவலைப் படறீங்க. எங்க காரை எடுத்துட்டுப் போங்க‘
முற்றிலும் எதிர்பாராத உதவி. கேட்காமலேயே கிடைத்த உதவி. விறுவிறுவென்று புறப்படுகிறோம். தங்கைகளுக்கு துணையாக என் தம்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு என் அம்மா மற்றும் ஒரு நண்பனுடன் நான் புறப்பட்டேன். கார் புறப்படும்போது,
‘சார், பெட்ரோல் பத்தாது‘ என்றார் டிரைவர்.
பெட்ரோலா? பெட்ரோலுக்கு எங்கே போவது. பந்த் காரணமாக பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன. மீண்டும் அம்பிகா-ராதா இல்லத்திலிருந்து உதவி. யாரிடமோ சொல்லி, எங்கிருந்தோ பெட்ரோல் வந்து சேர்ந்தது. ஒருவழியாகப் புறப்படும்போது கிட்டத்தட்ட மாலையாகிவிட்டது. டிரைவர் தயங்கினார்.

‘சார் எனக்கு கும்பகோணத்துக்கு வழி தெரியாது. அது மட்டுமில்லாம ஹைவேஸில் இரவில் வண்டி ஓட்டி பழக்கமில்லை‘ என்றார்.
மீண்டும் தயக்கமே இல்லாமல் அம்பிகா-ராதா இல்லத்தில் இருந்து உதவி. டிரைவர் மாற்றப்பட்டு புது டிரைவருடன் புறப்பட்டோம். கார் சிறிது தூரம் சென்றவுடனேயே தடால் என்று சத்தம். திடீரென்று துள்ளி நடுரோட்டுக்கு வந்துவிட்ட காளைமாட்டின் மேல் கார் மோதி நின்றுவிட்டது. முற்றிலும் எதிர்பாராமல் காரின் ரேடியேட்டரே பங்ச்சர் ஆகிவிட்டது.

ராதாவுடன் என் தம்பி ரவிகுமார்
‘கார் நகரவே நகராது சார் என்றார் டிரைவர்.
என்னுடைய அம்மா மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார். வீடு திரும்பவும் வழி இல்லை, கும்பகோணம் செல்லவும் வழி இல்லை. என்ன செய்வது? உடைந்த காரில் என் அம்மாவுக்கு நண்பனை துணைக்கு வைத்துவிட்டு, யாருக்கு எப்படி தகவல் தெரிவிப்பது எனப் புரியாமல் ஆளுக்கு ஒரு திசையில் நானும் டிரைவரும் நடந்தோம். ஃபோன் வசதி தேடி எவ்வளவு தூரம் நடந்தேன் எனத் தெரியாது. ஒரு விறகுக் கடையை கண்டுபிடித்தேன். அவர் அருகிலிருந்த ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, யாரையோ எழுப்பி, சம்மதம் வாங்கி, ஃபோன் செய்ய அனுமதி பெற்றுத் தந்தார்.

புதுகார் விபத்துக்குள்ளாகிவிட்டதே, என்று தயங்கித் தயங்கி விஷயத்தை சொன்னேன். மனம் முழுக்க அப்பாவின் உடல் நிலைபற்றிய அபத்திரம், கார் விபத்து பற்றிய அதிர்ச்சி. நான் என்ன பேசினேன் என்பது ஞாபகமில்லை. என்ன ஆச்சரியம், காரைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

‘நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா‘ என்ற விசாரிப்புதான் அதிகமாக இருந்தது.

‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்‘ எனக் கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. விறகுக் கடைக்காரர்தான் ஏதோ அடையாளம் சொன்னார்.
‘அங்கேயே இருங்கள். இன்னொரு காரை அனுப்பி வைக்கிறோம்‘ எனச் சொன்னார்கள்.

என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. அவசரத்துக்கு உதவியாகக் கொடுத்த கார் விபத்துக்குள்ளான பின்னும், அது பற்றிக் கவலை இன்றி, இன்னொரு காரை அனுப்பி உதவிய அந்த நல்ல மனதை இன்னமும் நான் வியக்கிறேன்.

எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர்
அதிர்ச்சி, சோகம், வியப்பு என பல உணர்வுகள் குவியலாக என்னை புரட்டி எடுத்துக் கொண்டிருக்க மறுநாள் என் தந்தையை மருத்துவமனை படுக்கையில் சந்தித்தோம். அதுவே அவருடன் கழித்த இறுதி நாள். ஒரு இரவு முழுக்க மருந்து, மாத்திரை, ஊசி, வலி, மூச்சிறைப்பு என ஒரு உயிரின் இறுதி அவஸ்தைகளை அருகிலிருந்து கவனித்தேன். அதிகாலை எட்டுமணிக்கு எங்கள் தந்தை எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.

‘முடிச்சுட்டியாடா . . . ‘
அவர் இறுதியாக என்னிடம் கேட்ட கேள்வி இதுதான். குட்டி பத்மினி நிறுவனத்துக்காக என்னை ஒரு ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லியிருந்தார். அவர் அதைக் குறித்துதான் என்னைக் கேட்டார். நான் அந்த ஸ்க்ரிப்டை மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ விஷயங்களை முடிக்கவே இல்லை.

அதில் ஒன்று, அம்பிகா-ராதா குடும்பத்தினருக்கு தகுந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும் என்பது.

எங்கள் தந்தையை அவர் மூச்சு நிற்பதற்குள் ஒரே ஒரு முறையாவது சந்திக்க உதவி செய்த அவர்களின் நல்ல உள்ளங்களை, கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கடந்த பின், இந்தக் கட்டுரையின் மூலம் உலகுக்குச் சொல்ல ஒரு வாய்ப்பு.

நன்றி! உள்ளத்தில் நல்ல உள்ளங்களுக்கு!