Friday, January 9, 2009

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி? ஒரு அலசல்

கோடிகளில் படிக்கும்போது தலை சுற்றுகிறது. இப்படி கூட நடக்க முடியமா என்று மனம் மலைக்கிறது. இது பொய்யா மெய்யா என்று குழப்பம் வருகிறது. அதனால் நமது சக பதிவர்களின் பதிவுகளின் 'அச்சச்சோக்கள்', தினமும் ஷேர் மார்க்கெட் பற்றி அலட்டும் நண்பர்களின் 'I know that'கள், பத்திரிகைகளின் 'கோடிகள் மாயம்' அலறல்கள், தொலைக் காட்சி செய்திகளில் பங்கேற்ற வல்லுனர்களின் 'It won't affect Indian Corporate Sector'கள் இவற்றைப் பார்த்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் . . .

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி?
நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் இரண்டையும் சேர்த்து தற்போது கம்பெனியில் இரண்டு இலட்சம் உள்ளது.

ஆக கையிலிருக்கும் ஒரு இலட்சத்தை இரண்டு இலட்சமாக உலகத்துக்கு அறிவிக்கிறீர்கள். இதைப் பார்த்து மேலும் பலர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் வழக்கம் போல 5 இலட்சம் வந்தால் அதை 10 இலட்சம் என்றீர்கள். 20 இலட்சம் வந்தால் அதை 40 இலட்சம் என்றீர்கள். முதலீடு செய்தவர்கள் உங்களை சந்தேகப் படவில்லை. ஏனென்றால் நீங்கள் காண்பித்தது இலாபக் கணக்கு. உங்களை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஷேர் மார்கெட்டும் நம்புகிறது. அரசாங்கமும் நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. அல்லது அவர்களை நம்ப வைக்க நீங்கள் ஒரு 'இலாப நாடகம்' ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள்.

ஒரு கட்டத்தில் கம்பெனியின் வங்கியிருப்பு 5400 கோடி ரூபாயாகிறது. நீங்கள் 8000ம் கோடி ரூபாய் என்று அறிவித்தால் உங்கள் கம்பெனி என்ன ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாகும். சத்யம் நிறுவனம் அப்படித்தான் பொய்க் கணக்குகளால் விசுவரூபமெடுத்தது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திறமையாக வழிநடத்தியவர் திருவாளர் ராமலிங்க ராஜீ. அவருடைய சரித்திரம் 'சத்யம் என்ற பெயரில் பொய்யை மெய்யாக்கிய சரித்திரம்'.

சத்யம் பொய்யென அம்பலமாது எப்படி?
Wine-Women-Wealth இந்த மூன்றும் அதிகமாகிவிட்டால் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் நிலை தடுமாறிவிடும். ராமலிங்க ராஜீ முதல் இரண்டு 'W'க்களில் எப்படி எனத் தெரியாது. ஆனால் மூன்றாவது 'W'வில் ஆள் படு வீக். குறிப்பாக நிலத்தை வளைத்துப்போட்டு மேல் விலைக்கு விற்பதில் பயங்கர கில்லாடி. இதெற்கென்றே ஒரு மெகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு ஆந்திராவிலுள்ள மிக முக்கியமான நிலங்களும், நில ஆவணங்கள் எல்லாம் இவருடைய குடும்பத்தாரின் பெயரில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? MAYTAS. SATYAM இந்த பெயரை அப்படியே ஒவ்வொரு எழுத்தாக பின்னோக்கி எழுதினால் அதுதான் MAYTAS. விதியின் விளையாட்டைப் பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ சத்யம் ரிவர்ஸ் கியரில் பயணிக்க MAYTAS நிறுவனம்தான் காரணம்.

MAYTAS நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது?
திருவாளர் ராஜீ, நினைத்தபோதெல்லாம் தப்பான இலாப கணக்கு காட்டி பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் விலை உயரும்படி பார்த்துக் கொண்டார். காரணம் SATYAM நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜீவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் இருந்தன. அதனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கொள்ளை இலாபம். இலாபத்தை என்ன செய்வது? MAYTAS நிறுவனத்தில் முதலீடு செய்தார். MAYTAS நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆந்திராவிலிருந்த நிலங்களை எல்லாம் வளைக்கத் தொடங்கியது.

SATYAM - MAYTAS பொய்யும் மெய்யும்
ஒரு புறம் பொய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் SATYAM.
மறுபுறம் பொய்பணத்தால் சம்பாதித்த மெய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் MAYTAS.
ராமலிங்க ராஜீ ஆந்திர மக்களின் கனவு நாயகாக உயர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வளையத்திற்குள் வந்தார். பொய் மூட்டையான சத்யம் நிறுவனத்தின் செல்வாக்கை வைத்து பில் கிளிண்டனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அப்போதைய லேப்டாப் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரானார். கேட்கவே ஆளில்லை. SATYAM செல்வாக்கை தந்தது. MAYTAS நிலங்களைக் குவித்தது.

ஆட்சி மாற்றம் - சத்யத்திற்கு வந்த சோதனை
ஆட்சி மாறியது. சந்திரபாபு நாயுடுவிற்குப் பதில் ராஜசேகர ரெட்டி வந்தார். இந்திய அரசியல் வழக்கப்படி, முந்தைய அரசின் செல்வாக்கான நபர்கள் எல்லாம் தற்போதைய அரசின் சந்தேக வலைக்குள் வந்தார். முதலில் சிக்கியவர் ராமலிங்க ராஜீ. ஆனால் நீண்ட காலம் அவரை ஒதுக்க முடியவில்லை. சத்யம் ஏற்படுத்திய ஒளிவட்டமும், MAYTAS நிறுவனத்தின் பண வட்டமும் தற்போதைய முதல்வரையும் மசிய வைத்தது. வலையை விரித்தவரே வலையில் வீழ்ந்தார். மீண்டும் அரசுக்கு நெருக்கமானார் ராஜீ.

நக்ஸலைட்டுகள் வழியாக முதல் புகைச்சல்
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வளர்ச்சி பற்றிய சந்தேகங்கள் புகைய ஆரம்பித்தன. முதலில் பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஆந்திர நக்ஸலைட்டுகள். பணத்தால் ஏழை நிலங்களை வளைக்கிறார் என்று போராடினார்கள். ஆனால் கொடி பிடித்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்பதால் மக்களின் கவனம் பெறவில்லை. பணக்கார மீடியாக்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.

மெட்ரோ ரயில் வடிவில் அடுத்த புகைச்சல்
அடுத்து வந்தது மெட்ரோ ரயில் புராஜக்ட். இந்த புராஜக்டுக்கு ஆலோசகராக திரு. Sridhar நியமிக்கப்பட்டார். Sridhar கடந்த ஆண்டின் 'மிகச் சிறந்த இந்தியராக' என்.டி.டிவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மெட்ரோ ரயிலை தனி மனிதனாக போராடி டெல்லி மக்களுக்கு பெற்றுத் தந்த சாதனையாளர், நேர்மையாளர், அரசியல் மற்றும் பண சூழ்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்காதவர். ஆனால் அவரை வளைக்க நினைத்தார் ராஜீ. காரணம் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலங்களை வைத்திருந்தவர் ராஜீ, அதாவது அவருடைய நிறுவனமான MAYTAS. சாதா நிலங்களை விலை உயர்த்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வாங்குமாறு திரு. Sridharஐ நிர்பந்தித்தார். அவர் இந்த ஊழலுக்கு உடன்பட மறுத்து கண்டனக்குரல் எழுப்பினார். எப்போதுமே நேர்மையின் குரல் அமுக்கப்படும். அதன்படியே ராஜீவைக் கண்டிக்க வேண்டிய அரசு திரு. Sridhar அவர்களை தேவையில்லை என திருப்பி அனுப்பியது. வழக்கம்போல பணக்கார மீடியாக்கள் இதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் பணம் செய்யும் மாயம்.

கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் - உஷாரான ராஜீ
கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்ததும் ராஜீ உஷாரானார். இங்கேதான் அவருடைய கிரிமினல் மூளை உச்சத்திற்கு வந்தது. அவருடைய முன்னேற்பாட்டின்படி மீண்டும் பொய்யான தகவல்களை வைத்து சத்யம் ஷேர் மார்கெட்டில் எகிறியது. அப்போது பெரும்பாலான ஷேர்களை வைத்திருந்த ராஜீவும், அவருடைய குடும்பத்தாரும், அவருடைய பணக்கார கிரிமினல் நண்பர்களும் தங்களுடைய ஷேர்களை விற்று பெரும் பணம் பார்த்தார்கள். அதாவது சத்யம் நிறுவனத்தின் மதிப்பு 8000ம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டப்பட்டபோது, சத்யம் நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகள் வெறும் 5% மட்டுமே. அதாவது இனிமேல் சத்யம் திவால் ஆனால் கூட ராஜீவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் நயா பைசா கூட கையை விட்டுப் போகாது. நம்மைப் போன்ற அப்பாவிகளுக்குத்தான் பட்டை நாமம்.

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - பொய்யின் முதல் வீழ்ச்சி
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுடன், அமைஞ்ச கரையில் நிலங்களின் விலை குறைந்தது. ஆந்திராவில் குறையாமலிருக்குமா? அங்கேயும் மளமளவென விலை சரிய ஆரம்பித்தது. கிளைமாக்ஸில் வில்லன் எதிர்பாராமல் ஏமாறுவது போல, ராஜீ எதிர்பாராத இந்த சரிவு அவருடைய ரியல் எஸ்டேட் பொக்கிஷமான MAYTAS நிறுவனத்தை பாதித்தது. என்ன செய்வது என யோசித்தார். அவருடைய கிரிமினல் மூளை மீண்டும் அபாரமாக வேலை செய்தது.

ஒரே கல்லில் பல மாங்காய் - MAYTAS, SATYAM-மாக மாற முயற்சித்தபோது
ஒரு புறம் 5400 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் 8000 கோடி ரூபாயாக பொய் விசுவரூபம்.
மறு புறம் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள MAYTAS அதளபாதாளத்தில் விழப் போகும் அபாயம்.
சத்யத்தில் பணமில்லை, ஆனால் இருப்பதாக கணக்கு. MAYTASல் பணம் உண்டு, ஆனால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் கரைந்து கொண்டிருக்கிறது. தடுப்பது எப்படி? அப்போது உதயமான ஐடியாதான் SATYAM நிறுவனத்தின் (இல்லாத) பணத்தால் MAYTASஐ வாங்குவது.

அப்படி வாங்கிவிட்டால் சத்யம் நிறுவனத்திலிருந்து 7000ம் கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தினருக்கு வந்துவிடும். அதெப்படி...சத்யத்தில் இருப்பதே 5400 கோடி ரூபாய்தானே? பிறகெப்படி ஏழாயிரம் கோடி கிடைக்கும்? மீதி 1600 கோடிக்கு எங்கே போவது? நாமாக இருந்தால் இப்படித்தான் கவலைப்படுவோம். ஆனால் ராமலிங்க ராஜீவிற்கு இது ஒரே கல்லில் பல மாங்காய்கள். அக்கவுண்ட்சில் ஒரே ஒரு வரி எழுதுவது மூலம் 7000ம் கோடி ரூபாய் SATYAM நிறுவனத்திலிருந்து அவருடைய மனைவிக்கும் மக்களுக்கும் வந்துவிடும். ஆக MAYTAS நிறுவனம் Safe. இது முதல் மாங்காய்.

உண்மையில் கைமாறியது வெறும்(?) 5400 கோடி ரூபாய்தான். மீதி 1600 கோடி ரூபாய் பற்றி ராஜீ வாய் திறக்கமாட்டார். ஏனென்றால் இப்படி கை மாறியதன் மூலம் சத்யம் நிறுவனத்தில் 7000 கோடி ரூபாய் இருந்ததாக கணக்கில் வந்துவிடும். அதாவது இத்தனை நாள் வெளியில் சொல்லாமல் காப்பாற்றி வந்த பொய் உண்மையாகிவிடும். இதனால் SATYAM நிறுவனம் Safe. இது இரண்டாவது மாங்காய்.

எந்த பிரச்சனை வந்தாலும் உலகப் பொருளாதார பிரச்சனையால் ரியல் எஸ்டேட் அவுட், ஐ.டியும் அவுட். அதனால் சத்யம் நிறுவனமும் அவுட் என்று ஒற்றை வரியில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் . இது மூன்றாவது மாங்காய்.

புகைச்சல் கொளுந்துவிட்டு எரிந்த கதை - உலக வங்கி தடை மற்றும் போர்டு மெம்பர்கள் ராஜினாமா
சுருட்டுவதையெல்லாம் சுருட்டிக்கொண்டு, பட்சி பறக்கப் பார்க்கிறது என்று சிலர் மோப்பம் பிடித்துவிட்டார்கள். சில போர்டு மெம்பர்களுக்கு இது துளியும் பிடிக்கவில்லை. விஷயம் போர்டுக்கு வெளியே கசிந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் எதற்காக MAYTASஐ வாங்கி நஷ்டப் படவேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இது ராமலிங்க ராஜீவிற்கு வந்த முதல் தோல்வி.

இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது.

கிளைமாக்ஸ் - பொய்யை மெய்யாக்க நினைத்தபோது . . .
உலக வங்கியே தடை விதித்த போதும் ராஜீ தளரவில்லை. நான் நேர்மையாளன், என்னை சந்தேகப் படாதீர்கள் என்று தைரிய முகம் காட்டினார். உலக வங்கியை எதிர்த்து நோட்டீஸ் விட்டார். ஆந்திர மாநில அரசு அவருக்கு ஆதரவளித்தது. எனவே மீண்டும் இரு கம்பெனிகளையும் எதிர்ப்புகளையம் மீறி இணைக்க முயற்சித்தார். ஆனால் விஷயம் திடீரென பெரிதாகி தெருக்கோடி வரைக்கும் வந்தவுடன், இணைப்பு இல்லை என்று பின்வாங்கினார். இந்த நெருக்கடியில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் அலசப்பட்டன. ஊதிப் பெருசாக்கப்பட்ட ஊழல் விசுவரூபமெடுத்து. 5400 கோடி ரூபாய் 8000 கோடி ரூபாயாக போலியாக உயர்த்திக் காட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன? பூஜ்யம்.
5040 கோடி ரூபாயை 7000 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன் என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு அவர் தலை மறைவாகிவிட்டார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்டது என்ன தெரியுமா? சத்யம் நிறுவனத்திற்கு இருக்கும் 1000 கோடி ரூபாய் கடன். பிரச்சனை முற்றியவுடன் 140 ரூபாய்க்க விற்ற சத்யம் நிறுவனப் பங்கு பல்டி அடித்து 30 ரூபாய்க்கு வந்து விட்டது.

அதாவது சுருக்கமாகச் சொன்னால் சத்யம் நிறுவனம் இன்று ஒரு பூஜ்யம்.

யார் குற்றவாளி?
முதல் குற்றவாளி திருவாளர் ராமலிங்க ராஜீ.
அடுத்தது அவருக்குத் (கணக்கை திரித்து எழுத) துணைபோன ஆடிட்டர் கும்பல்கள்.
தப்பு செய்ய தைரியம் கொடுத்து, துணைபோன அரசியல்வாதிகள், அரசுகள்
எந்தக் கேள்வியும் கேட்காத வங்கிகள்.

கடைசியாக . . .
நமது சமூகம்தான் . . . நாம்தான் . . . குற்றவாளி. '50 பைசா சில்லறை இல்ல, இறங்கும்போது வாங்கிக்கோ' என்று சொல்கிற கண்டக்டரை சட்டையைப்பிடித்து மிரட்டுகிறது சமூகம். அதே சமயம் மினிமம் பேலன்ஸ் இல்ல, அதனால 500 ரூபாய் பிடிச்சிட்டோம் என்று சொல்கிற வங்கிக்கு இதே சமூகம் சலாம் போடுகிறது. பணக்காரனும், அதிகாரத்தில் இருப்பவனும் செய்வதெல்லாம் சரி. ஒரு வேளை அது தவறென்றாலும் அதை தட்டிக்கேட்க பயம். இது தான் இன்றைய நிலை.

இது மாறினால் சத்யம் சத்யமாகவே இருக்கும். இல்லையென்றால் சத்யம் SATYAMஆகத்தான் வலம் வரும்.

Wednesday, January 7, 2009

திருமங்கலம் : வெற்றி யாருக்கு? ஆரூடம்

பொதுவாக இடைத்தேர்தல் என்றால் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அதற்கு ஒரே காரணம் அதிகார துஷ்பிரயோகம். போலீஸ், குண்டர்கள், துட்டர்கள் எல்லாம் ஆளுங்கட்சி பக்கம் நிற்பார்கள். அதனால் எதிர்கட்சிகள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளாது. ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலில் அனல் பறக்கிறது. காரணம், தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தலின் முடிவு, வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகை.

தேர்தல் நடைபெறும் சூழல் மிகவும் வித்தியாசமானது.

ஆரம்பமே அசத்தல். ம.தி.மு.க நிற்க வேண்டிய இடத்தில் அ.தி.மு.க வை நிறுத்தி விட்டு நான் ரெடி நீங்க ரெடியா என்றார், ஜெயலலிதா. துணைக்கு கம்யூனிஸ்டு தோழர்கள் நின்று கொண்டார்கள்.

தி.மு.க முகாம் குழப்பத்தில் கும்மியடித்தது. காரணம் அ.தி.மு.க அல்ல. அண்ணன் அழகிரி. சொல்லாமலேயே பிண்ணனியில் இயங்குகிற அழகிரி, கட்சியே சொன்ன பின்பும் வேட்பாளர் பிடிக்கவில்லை என்பதால் 'கண் வலி' என்று ஜகா வாங்கினார். அப்புறம் ஏதேதோ பூசி மெழுகல்களுக்குப் பிறகு அழகிரி,ஸ்டாலின் மற்றும் பேரன் மாறன் மூவரும் ஒரே வண்டியில் சுற்றிவருகிறார்கள்.

விஜயகாந்த் வழக்கம்போல அண்ணியாருடன் தனி குடும்ப வண்டி ஓட்டுகிறார்.

நாங்களும் இருக்கிறோம் என்று முதல் முறையாக சரத் அரசியுடன் சேர்ந்து களமிறங்கியிருக்கிறார்.

பிரியாணி பொட்டலங்களும், குவார்டர் பாட்டில்களும் திடீரென திருமங்கலவாசிகளுக்கு அன்றாட உணவாகிவிட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு காது குடைந்து கொண்டிருக்கிறார்களாம். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு கட்சியும் கரன்சிகளை வீச, இரண்டு கை போதாமல் எல்லா கட்சிகளிடமும் திருமங்கலம் ஓட்டர்கள் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் மக்களுக்கு கரன்சி அட்டாக் என்றால், இன்னொரு பக்கம் தொண்டர்களுக்கிடையில் அரிவாள் அட்டாக். திருமங்கலத்தில் கரன்சியும், கல்லடியும் சர்வ சாதாரணமாகிவிட்டது. உத்திர பிரதேசத்திலும், பீகாரிலும் கூட இவ்வளவு மோசமில்லை என்று தேர்தல் கமிஷன் அலுத்துக்கொள்கிற அளவுக்கு மோதல்கள் உச்சத்தில் உள்ளன.

பா.ம.க ஆழம் பார்க்க வசதியாக நாங்க ஆட்டத்துக்கு வரவில்லை, நாங்க எந்தப் பக்கமும் இல்லை என்று அறிவித்துவிட்டது. அந்த வகையில் முதல் வெற்றி பா.ம.கவுக்குதான். ராமதாஸின் இந்த நிலைப்பாடு தேர்தலுக்குப்பின் பேரம் பேச வசதியாக இருக்கும்.

ஒரு ரூபாய் அரிசி மற்றும் இலவச டிவிக்களையும் மீறி விலைவாசியும், காணாமல் போன மின்சாரமும் மிரட்டுவதால் தி.மு.க பலவீனமாகத்தான் களமிறங்கியுள்ளது. போன தேர்தலில் கூட இருந்த பா.ம.க., கம்யூனிஸ்டு தோழர்கள் இம்முறை கூட இல்லை. ஆனாலும் அரசு இயந்திரத்தின் பலம் + அழகிரியின் மிரட்டல் ஆகிய இரண்டையும் வைத்துக்கொண்டு, ஜெயிக்கலாம் என்று கணக்கு போடுகிறது.

தேர்தல் முடிந்த பின் விஜயகாந்த் பெற்ற வாக்குகளும், ராமதாஸின் தந்திரமான நடுநிலையும் அவரவருடைய மவுசு குறையாமல் பார்த்துக் கொள்ளும். அவர்களுடைய மார்க்கெட் ரேட் எகிறும்.

செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி தரும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் அழகிரி பலம், அரசு பலம் மற்றும் தில்லு முல்லுகள் காரணமாக தி.மு.க சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் எப்படியாவது ஜெயிக்கும். தே.மு.தி.க வின் வளர்ச்சி காரணமாக அ.தி.மு.க சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும்.

திருமங்கலம்வாசிகளுக்கு பிரியாணிப் பொட்டலங்கள் மட்டுமே மிஞ்சும்.

Tuesday, January 6, 2009

அபியும் Young அப்பாக்களும் - திரை விமர்சனம்

வீராப்பு - அப்பா, மகன்
தவமாய் தவமிருந்து - அப்பா, மகன்
வாரணம் ஆயிரம் - அப்பா,மகன்
இந்த வரிசையில்
அபியும் நானும்.
ஆனால் இதில் மகனுக்குப் பதில் மகள்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். ஆனால் ஒரு ஒற்றுமை என்னவென்றால் திடீரென குழந்தை வளர்ப்பில் 'அப்பாக்களின்' பங்கைப் பற்றி தமிழ்சினிமா சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும்போது அப்பாக்களும் பிறக்கிறார்கள். ஆனால் (குறிப்பாக பெண்) குழந்தைகள் வளரும்போது அப்பாக்கள், அவர்கள் வேகத்தில் வளர்வதில்லை. இது அனுபவத்தில் நான் கண்ட உண்மை. Young mothers சுலபமாக பெண் குழந்தைகளின் உலகத்தில் நுழைந்துவிடுகிறார்கள். ஆனால் (என்னைப் போன்ற) Young fathers ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள். உறவின் சுகங்களும், வலிகளும் கலந்த அந்த அப்பா - மகள் வளர்ச்சிப் போட்டியை ராதா மோகன் தன்னுடைய பாணியில் மென் சோகம் கலந்து சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்.

ஒரு அதிகாலைப் பூங்காவில் ஒரு புது அப்பாவுக்கு(பிருத்வி ராஜ்), ஒரு பழைய அப்பா(பிரகாஷ்ராஜ்) சொல்கிற சுய அப்பா கதைதான் அபியும் நானும். படம் பார்க்கிற நம்மை பிருத்வி ராஜ் இடத்தில் உட்கார வைத்துவிட்டு, பிரகாஷ்ராஜிடம் கதை கேட்க வைக்கிறார் இயக்குனர்.

'இவர் Beggearஆ இருக்காருப்பா. நம்ம கூடவே இருக்கட்டும்' என்று ஒரு பிச்சைக்காரரை நாய்குட்டியைப் போல நேசித்து தன் வீட்டுக்கு அழைத்துவரும் மகளையும், அந்த பிச்சைக்காரரையும் 'எந்த உறுத்தலும்' இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார் அப்பா பிரகாஷ்ராஜ். ஒரு சாதாரண பிச்சைக்காரனான தன்னை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக மாற்றிய சிறுமியை 'என் அம்மா சார்' என்று
ரவி உருகும்போது, படம் பார்க்கிற அனைவருக்கும் ஒரு கணம் மனதைப் பிசைகிறது. அன்பும், நன்றியும் கலந்த அந்த ஓட்டல் காட்சி், மனிதனை மனிதனாக ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு அற்புதம். அந்தக் காட்சியிலிருந்து நாமும் ரவியை பிச்சைக்காரன் என்பதை மறந்து நமது ஆழ் மன நேசங்களை அடையாளம் காட்டும் ஒரு கண்ணாடியாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.

அதே சிறுமி வளர்ந்து த்ரிஷாவாகி 'டெல்லியில எக்கனாமிஸ்டா இருக்காருப்பா' என்று ஒரு 'சர்தார்ஜியை' தனது எதிர்கால கணவனாக அறிமுகப்படுத்தும்போது இடைவேளை வருகிறது. இடைவேளை வரும்போது, ஆஹா இது இன்னொரு மொழி என்று தோன்றுகிறது. ஆனால் இடைவேளைக்குப் பின் மென் சோகங்களுக்கு இடமில்லை. ஆழமான காட்சிகள் எதுவுமில்லை. திரிஷாவின் சர்தார்ஜி காதலனை பிரகாஷ் ராஜ் மருமகனாக ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை மட்டுமே வெற்று நகைச்சுவையாக (சில காட்சிகளில் கோமாளிச்சுவையாக) சொல்லியிருப்பதால் அதிக இனிப்பை சாப்பிட்டது போல ஒரு திகட்டல் வருகிறது.

'சர்தார்ஜியின் குடும்பத்தார்' பிரகாஷ்ராஜ் வீட்டில் அடிக்கிற லூட்டிதான் இரண்டாவது பாதி. பெரும்பாலான காட்சிகள் சுவாரசியமில்லாத பாப்கார்ன் காட்சிகள்.

"ஒரு பிச்சைக்காரனை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்ட உன்னால், பிரதமரே நேரடியாக பேசக் கூடிய ஒரு சர்தாஜியை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம்", என்று அந்த பிச்சைக்காரரை வைத்தே கேட்க வைத்த காட்சியில் ராதாமோகன் மிளிர்கிறார்.

திரிஷா, ஊட்டியில் வளரும் கான்வென்டுப் பெண் அபியாக கச்சிதம். ஆனாலும் அழுத்தமான நடிப்புக்கு வாய்ப்பு இல்லையென்பதால் பெரிய அளவில் மனதை ஆக்கிரமிக்கவில்லை. பிரகாஷ்ராஜ் படம் முழுக்க வருகிறார். அதிக வாய்ப்பு. நிறைவாக செய்திருக்கிறார். சர்தார்ஜியாக வரும் கணேஷ், பிரகாஷ்ராஜின் நண்பராக வரும் தலைவாசல் விஜய், அம்மா ஐஸ்வர்யா அனைவருமே அளவாக வந்து அளவாக நடித்திருக்கிறார்கள். ஆனால் பிச்சைக்காரராக அறிமுகமாகி படம் பார்க்கிற நம்முடைய மனசாட்சியாக உலாவரும் ரவிதான் (இவருடைய உண்மையான பெயர் என்ன?) ஸ்கோர் பண்ணுகிறார்.

வித்யாசாகர் 'ஒரே ஒரு ஊரிலே' மற்றும் 'வா..வா' பாடலிலும் இடையில் காணாமல் போயிருந்த தன்னுடைய மெலடி டச்சை மீட்டெடுத்திருக்கிறார்.

மாறிவரும் சூழ்நிலையில் அம்மாக்கள் 'சம்பாதிப்பது எப்படி?' என்றும், அப்பாக்கள் 'குழந்தைகளை வளர்ப்பது எப்படி?' என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முழுவதும் Role Swap நடக்கவில்லை. ஆனால் அம்மா அப்பாக்கள் ஒருவரின் வேலையை மற்றவர் கூச்சமின்றி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் இந்த வரிசையில் எதிர்காலத்தில் இன்னும் சில படங்கள் வரக்கூடும்.

கண்றாவி படங்களில் நடித்தாலும், தயாரிக்கிற படங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் பிடிவாதமாக இருக்கிறார். 'அபியும் நானும்' அவருடைய பிடிவாதத்தின் இன்னொரு அடையாளம். இது மொழியைப் போல முத்திரைப் படமா? என்றால் இல்லை. ஆனாலும் நல்ல படம்.