Thursday, December 15, 2011

செர்ரி முத்தம்!



செர்ரி புளிப்பை - அவள் 
விழிகள் சுருக்கி ருசிக்கையில், 
சிலிர்த்து மூடும் உதடு கவ்வி,
இனிப்பைத் தேடி சுவைக்கப் பிடிக்கும்.

Wednesday, December 14, 2011

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி!

Supreme court asked Tamil Nadu and Keral not to arouse people’s feelings and create a fear psychosis.


Justice Lodha regretted that both parties, instead of dousing the fire, were adding fuel to it.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தவறு யார் பக்கம்? இதன் முடிவு என்ன என்பதை நாம் தமிழராக அல்ல, மலையாளிகளை எதிர்க்கிறவராக யோசிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கேரள அரசும் இதே தந்திரத்தை பயன்படுத்துகிறது. இது மிகவும் மோசமான, குள்ளநரித்தனமான அரசு தந்திரம்.

கடந்த ஒரு வாரமாக கேள்விப்படும் செய்திகள் எதுவுமே நல்லதற்கல்ல. தமிழக கேரள எல்லைகளில் சர்வசாதாரணமாக மாற்று மாநிலத்தாரின் உடமைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படுகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன. போக்குவரத்து முடங்குகிறது. ரயில் மறிக்கப்படுகிறது. 25,000ம் பேர் ஒன்றாக அணி திரள்கிறார்கள். அவர்களை போர்வையாக வைத்துக்கொண்டு ஒரு கும்பல் மாற்று மாநிலத்தவர் மீது கல்லெறிகிறது, அடித்து நொறுக்குகிறது.

இதை தட்டிக் கேட்க வேண்டிய போலீசார் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நான்காவது தூண் என்று வர்ணித்துக் கொள்ளும் மீடியாக்களோ, இந்த ரௌடிகளின் அட்டகாசத்தை மொழி உணர்வாகவும், மாநில உணர்வாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன.

இதன் பின்னணி என்ன? எங்கே இருந்து வந்தது இந்த திடீர் விரோதம்? பிரச்சனையை தீர்க்க திராணியில்லாத அரசுகள் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தங்களது இயலாமையை மறைக்க மக்களை மோதிக் கொள்ள வைக்கின்றன. மக்களும் ஆட்டு மந்தைகளைப் போல, அரசின் இந்த விபரீத தந்திரங்கள் புரியாமல் அணி திரள்கிறார்கள். உடனே எதிர்கட்சிகள் பதறிவிட்டன. மக்கள் விலைவாசி பிரச்சனை, அடிப்படை வசதிக் குறைவு பிரச்சனைகளை மறந்து அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில், தாங்களும் உண்ணாவிரதம், போராட்டம், அணிவகுப்பு என்று தங்கள் பங்குக்கு மக்களை தூண்டிவிடுகிறார்கள்.

இதைச் செய்யாதே என்று கண்டிப்பாகச் சொல்ல இந்த அரசாங்கங்களுக்கு நாதி இல்லை (ஏனென்றால் மறைமுகமாக தூண்டிவிடுவதே அரசும், அரசியல்கட்சிகளும்தான்). நான் இதைச் செய்ய மாட்டேன், என்று சிந்தித்து முடிவெடுக்கும் அறிவும் அந்த கும்பலுக்கு இல்லை. (ஏனென்றால் அரசாங்கமே அனுமதிக்கிற ஒரு அராஜகத்தை அனுபவிக்கும் ஆசை)

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி. மனிதாபிமானங்களையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைத்துவிட்டு, விரோதங்கள், கோரமாக இளிக்கும்போது, நீங்கள் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள்?

நீங்கள் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையை தீர்ப்பது இருக்கட்டும். ஓவ்வொரு கேரள தமிழனும், தமிழக மலையாளியும், பயமின்றி இரவில் தூங்க நினைக்கின்றான். உங்களால் அதற்கு உத்திரவாதம் தர முடியுமா? முடியாது என்றால், பதவியை விட்டு ஓடுங்கள்.

எங்களுக்கு எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளத் தெரியும். அவர்கள் மலையாளியாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும்.

Tuesday, December 13, 2011

தாவணிதேச முத்தம்




தாவணி மறைத்த
இடைப் பிரதேசத்தில்

விரல்களை போராட அனுப்பிவிட்டு,
இதழோடு இதழ்களால்
உறவாடினேன்.

செல்நம்பர் முத்தம்



பேனா கேட்டேன்
இல்லையென்றாள்!
தாள் கேட்டேன்
இல்லையென்றாள்!
அதனால் இதழோடு இதழ் பதித்து
முத்தங்களின் எண்ணிக்கையால்
என் தொலை பேசி எண்களை குறித்து வைத்தேன்.

ஒத்திகை முத்தம்




மல்லிகை உலவிய தோள்களிலும்,
என் விரல்கள் உலவிய கன்னங்களிலும் 
ஒத்திகை பார்த்து,
அவள் இதழ்களில் என் இதழ்களின் 
நடன அரங்கேற்றம் செய்தேன்.

Monday, December 12, 2011

ரஜினி - (அனைவருக்கும் பிடித்த) முரண்பாடுகளின் மூட்டை!

எனக்கு குளிர் பிடிக்கும், இசை பிடிக்கும், நீலம் பிடிக்கும், பறவைகள் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும் என்பது போல, இரஜினியையும் பிடிக்கும்.

30 வருடங்களாக, இந்த மனிதன் நடித்த படங்களும், செய்திகளும் எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சில நேரம் சே.. இதென்ன தனி மனித நேசிப்பு என்று அறிவு ஒதுக்கித் தள்ள முயற்சித்தாலும், மீண்டும் ரஜினி என்ற பெயர் காந்தமாக ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

 டிவி, ரேடியோ, பத்திரிகைகள் என ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மிகை பிம்பம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு பிம்பம் அப்படியே நிலைத்து நிற்பதும், மேலும் விசுவரூபம் எடுப்பதும், ஒதுக்கித் தள்ள நினைப்பவர்களையும், அது பற்றி தொடர்ந்து பேச வைக்கிறது.

ரஜினி நல்ல நடிகரா? ரஜினி மோசமான நடிகரா? ரஜினி நல்ல மனிதனா? ரஜினி கெட்ட மனிதனா? ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லையா? ரஜனி பழைய தலைமுறையா? ரஜினி புதிய தலைமுறையா? ரஜினி லேட்டா? ரஜினி லேட்டஸ்டா?

நீங்கள் இதில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் என் பதில் ஆம் என்பதுதான். ரஜினி என்கிற பலமான பிரமாண்ட பிம்பத்தை இரசிக்கிறவர்கள், அவருடைய முரண்பாடுகள் மிக்க நிஜ வாழ்வையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் விசித்திரம்.

பாபாவின் தோல்வியும், எந்திரனின் வெற்றியும் ஒரே அளவு பரபரப்பாகிறது. புகை, குடி என்ற அவரின் குறையும், ஆன்மீகம், யோகா என்ற ஒழுக்கமும், ஒரே விகிதத்தில் ஏற்கப்படுகிறது.

பலமும் பலவீனமும் கலந்த அவர், முரண்பாடுகளின் மூட்டை. ஆனாலும் அவரைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுட்டி டிவி குழந்தைகள் முதல் என்டிடிவி பெரிசுகள் வரை, எல்லோரையும் ஈர்க்கிறார்.

ஏன் என்று காரணம் தேடுவதை விட, இரசிப்பது எளிதாக இருக்கிறது. அதனால் தான் நான் ரஜினி இரசிகனாக இருக்கிறேன்.

ஹேப்பி பர்த்டே தலைவா... உங்க அடுத்த படம் எப்போ?
(இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே கேள்விதான்)