Saturday, September 3, 2011

ஆப்பிள் வெளியிட்ட (போலி) விண்டோஸ்?

அடுத்த வரிக்குச் செல்வதற்கு முன் ஒரு வார்த்தை. இந்தப் பதிவு முழுவதும் பின்வரும் தளத்தில் வெளியான ஒரு கற்பனைச் செய்தியை உண்மை என நினைத்து எழுதப்பட்ட தவறான பதிவு
http://www.it-reporter.com/news-flash/849_apple-admits-providing-fake-windows-8-beta-downloads/

இதை வாசித்து முடித்தபின் கோபித்துக் கொள்ளப் போகும் ஆப்பிள் நிறுவனத்தார் மற்றும் ஆப்பிள் பயனாளர்களிடம் முன் கூட்டியே என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்! எதற்க்காக இதை குறிப்பிடுகின்றேன் என்றால் இன்று மீடியாக்களை விட வேகமாக சுவையாக, பிளாக்ஸ், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற alternate mediaக்கள் செயல்படுகின்றன. அவற்றில் உறுதி செய்யப்படாத தகவல்களின் அடிப்படையில் பல விவாதங்களும், செய்திகளும் வெளியாகிவிடுகின்றன. அவ்வாறு நிகழ்ந்த தவறுகளில் ஒன்றுதான் இந்தப் பதிவு.

எதற்க்காக பகிரங்கமாக இங்கு ஒப்புக் கொள்கிறேன் என்றால், இன்று பல வலைப்பூக்களுக்கு வாசகர்களிடமும், பத்திரிகைகளிடமும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த நம்பகத் தன்மை தொடர வேண்டும் என்றால், நாம் மேலும் ஜாக்கிரதையாக, பொறுப்புடன் செயல்பட வேண்டும். கற்பனைச் செய்தியை உண்மை என நம்பி பதிவு எழுதியதற்க்காக மீண்டும் ஒரு முறை வருந்துகிறேன்.என் தவறை சுட்டிக் காட்டிய நண்பர் ஸ்ரீஜிக்கு நன்றி!

முன்னொரு காலத்தில் 24 வரி கருப்புத் திரையில் A> என்ற இரண்டே எழுத்துக்கள் மட்டும் தான் கம்ப்யூட்டர் திரையில் இருக்கும். அதைப் பார்த்து குழம்பி, என்ன செய்வது என சாதரண மக்கள் மிரண்டு கொண்டிருந்த காலத்தில் விண்டோஸ் வந்தது.

கிளிக், டிராக், டிராப் என்ற கான்செப்டுடன் முதன் முதலில் விண்டோஸை அறிமுகப்படுத்தியது பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல மைக்ரோசாஃப்ட் அல்ல, ஆப்பிள்.

வறண்ட கமாண்ட் பிராம்ப்டுகள் மட்டும் இருந்த காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் மக்களுக்கு அலர்ஜியாகத்தான் இருந்தது. ஆனால் விஷிவலாக விண்டோஸ் கான்செப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியபின், அதுவரையில் ஒதுங்கிய பலரும், படத்துடன் காமிக்ஸ் புக் படிக்கிற குதூகலத்துடன் கம்ப்யூட்டரை பயன்படுத்தத் துவங்கினார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தது ஆப்பிள் கம்ப்யூட்டர்களைத்தான். மைக்ரோசாஃப்டின் டாஸ் அடிப்படையிலான கம்ப்யூட்டர்கள் தங்களது மவுஸை இழக்கத் துவங்கின. அப்போதுதான் பில்கேட்ஸின் விளம்பர மூளை அபாரமாக வேலை செய்தது. கொஞ்சமும் தயங்காமல், ஆப்பிளின் விண்டோஸ் கான்செப்டை திருடி, மாற்றி அதை விட மலிவான விலையில் சந்தையில் இறக்கினார். வியாபாரம் சூடு பிடித்ததும், தொடர்ச்சியான அடுத்தடுத்த பதிப்புகளை(Version) இறக்கினார். நான் படித்த காலத்தில் விண்டோஸ்-98 மிகப் பிரபலம். அதற்குப் பின் விண்டோஸ்-XP நன்றாக இருந்தது எனச் சொல்லலாம். விண்டோஸ் ME, Vista இவையெல்லாம் சொதப்பல். விண்டோஸ்-7 பரவாயில்லை. தற்போது விண்டோஸ் 8 பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது.

பில்கேட்ஸ்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும்பாலும் அடுத்தவர் கான்செப்டை திருடி மாற்றி தனது பெயரில் வெளியிடுவதைத்தான் இத்தனை வருடங்களும் செய்து வந்திருக்கிறது. பில்கேட்ஸின் ஒரே பலம், அசுரத்தனமான மார்க்கெட்டிங் திறமை. அதனால் விண்டோஸ் கான்செஃப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஆப்பிளுக்குரிய பெயர், வியாபாரம் என அனைத்தையும் விண்டோஸ் தட்டிப் பறித்துக் கொண்டுவிட்டது. விண்டோஸ் என்றாலே மைக்ரோசாஃப்டின் பெயர் மட்டுமே ஞாபகம் வருகிற அளவிற்கு செய்துவிட்டது. ஆப்பிளின் பெயரையே மறக்கடிக்க வைத்துவிட்டது. விண்டோஸ்-7ன் வெற்றியைத் தொடர்ந்து விண்டோஸ்-8ஐ செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் போவதாக சில மாதங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.

ஆனால் ஜீன் மாதமே விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு இணையத்தில் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் மைக்ரோசாஃப்டுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் மைக்ரோசாஃப்டுக்கு தெரியாமலேயே இது இணையத்தில் கிடைத்தது என்பதுதான். திருடனுக்கே திருடன் என்பது போல மைக்ரோசாஃப்ட் இதை யார் செய்திருப்பார்கள் என விழித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட திருட்டு விசிடி போன்ற ஒரு சிக்கல். தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குள், பலரும் விண்டோஸ்-8 பீட்டாவை டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்ஸ்டால் ஆகும்போது சிக்கல் ஏதுமில்லை என்றாலும், அதற்குப் பின் செம படுத்தல். விண்டோஸ்-8 சந்தைக்கு வரும் முன்பே அதன் பெயர் கெட ஆரம்பித்தது.

இதை யார் செய்திருப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் துப்புத் துலக்கியதில், முதலில் தெரியவந்த உண்மை என்ன தெரியுமா? இணையத்தில் கிடைத்தது அசல் விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு அல்ல. அது போலவே இருந்த ஒரு போலி. மைக்ரோசாஃப்டின் பெயரைக் கெடுப்பதற்க்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஒரு போலி. விசாரணை அப்படி இப்படி என நீண்டதில், இதைச் செய்தது ஆப்பிள் நிறுவனம்தான் என்ற (உறுதிப்படுத்தப்படாத) தகவல் கிடைத்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தற்போது ஓய்வு பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு ஆப்பிள் மீட்டிங்கில் பின்வருமாறு கூறினாராம்.

“நான் அப்பவே சொன்னேன், வேண்டாம் வேண்டாமென்று. மார்க்கெட்டை பிடிக்க வேறு உத்தியை பயன்படுத்தலாம் என்று எவ்வளவோ சொன்னேன். ஆனால் செவி கொடுக்கவில்லை. இப்போது பெரும் பிரச்சனை வரும் போலிருக்கிறதே”

அவர் பேசியதாக வெளியான இந்தத் தகவலும், விண்டோஸ்-8 போலி பீட்டா பதிப்பை ஆப்பிள்தான் வெளியிட்டது என்பதற்கும் உறுதிபடுத்தப் பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் நிச்சயம் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், இரண்டு ஐடி பூதங்கள் பல வருடங்களாக மோதிக் கொண்டிருக்கின்றன. இத்தனை வருடங்களாக நல்லவனாக இருந்த ஆப்பிள் என்ற பூதம், தற்போது கெட்டவனாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான். இது ஒரு சந்தைப் போர்.  நீங்க விண்டோஸ்-8 பீட்டா பதிப்பை டவுன்லோடு பண்ணிட்டீங்களா?

Monday, August 29, 2011

தங்கை செங்கொடிக்காக
பெண் ஒரு வீட்டின் மகிழ்ச்சி!
இன்றோ ஒரு தேசத்தின் துயராக செந்தழலில்!
மலர்கள் உதிர்வது இயல்பு - ஆனால்
மலர்கள் எரிவது வேதனை!

ஒரு கயிறு சில உயிர்களை முறிக்கும் என்றால்,
ஓர் உயிர் அந்தக் கயிற்றை எரிக்காதா?

விதைகள் மலராகும் -ஆனால்
ஒரு மலரே விதையான தருணமிது!

மலரே,
உன் மரணத்தால்
மரண தண்டனை முற்றாக ஒழியும் நாளன்று
நீ மீண்டும் உயிர்த்தெழுவாய்!

அந்த நாள் வரும் வரையில்
உன் குடும்பத்தில் ஒருவராக,
நானும் இந்த தேசமும்
உன் தியாகத்தின் சுடர் அணையாமல் காத்திருப்போம்!

(சகோதர சகோதரிகளுக்கு வேண்டுகோள்! 
மரணதண்டனை போலவே தீக்குளிப்பதும் கொடுமையானது.
அதை விட்டொழிப்போம்!)