Thursday, December 10, 2009

தமிழ் உரையை தமிழ் குரலாக மாற்றி ஒலிக்க . . .

உரையை குரலாக மாற்றும் டெக்னிக் பழசு. Acrobat readerல் எது இருந்தாலும் அதை அப்படியாக ஒரு குரல் படித்துக் காண்பித்துவிடும். ஆனால் இந்த Text to Voice டெக்னிக் தமிழில் செல்லாது. போன வருடம் வரை இப்படித்தான். ஆனால் இனி தமிழில் நீங்கள் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு குரல் ஒரு நொடியில் வாசிக்க ஆரம்பித்துவிடும்.


பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடம் முனைவர் A G Ramakrishnan தலைமையில் இந்த செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதனை சோதித்துப்பார்க்க http://tinyurl.com/tamiltovoice இங்கே சொடுக்குங்கள்.

அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டெக்ஸ்ட் பெட்டியில் தமிழில் டைப் செய்யுங்கள். செய்தபின் submit கொடுத்த அடுத்த வினாடி ஒரு ஆண் குரல் உங்கள் உரையை வாசிக்கும். அசத்தல்

Wednesday, December 9, 2009

TED Sixthsense : கண்ணில்படுவதெல்லாம் டேட்டா, விரல் தொடுவதெல்லாம் திரை


யுத்த களத்தில், விமானங்கள் குண்டு வீச ஆரம்பித்தபின் எதிரியின் தூரத்தையும், வேகத்தையும், நகர்தலையும் அளந்து தர ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. பச்சைநிறத்தில் ஒளிர்ந்த இந்த டேட்டாக்கள் (அ) புள்ளி விபரங்களை வீடியோ கேம் பிரியர்கள் பார்த்திருப்பார்கள். இடம்-வலம் திரும்பும் நேர விரயத்தை தவிர்த்து துல்லியத்தைக் கூட்ட, நமது கண் முன்னே இது ஒளிரும். இவற்றைத்தான் HUD - Head Up Display என்று சொன்னார்கள். 1952ல் இராணுவத்தின் உதவிக்காக வந்த இந்த சமாச்சாரம், 2000த்தின் துவக்கத்தில் கார்களில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.


டிரைவர்களுக்கு வழி தேடித்தரும் ஜிபிஎஸ் வரைபடங்கள், டிரைவரின் கண் முன்னே விண்ட் ஷீல்டில் விரியும். அதாவது காற்றுதான் டிஸ்பிளே மானிட்டர். கண்களை மறைக்காதா? என்றால் மறைக்காது, சாலை ஓர வெளிச்சங்கள் கண்ணாடியில் பட்டுத் தெறிப்பதைப் போல மிதமான உறுத்தாத ஒளிப்படமாகத் தெரியும். டிரைவரின் தேவைக்கேற்ப அதை மேலும் பளிச் அல்லது டல்லடிக்க வைக்கலாம்.


HUDயை கூகுள் போன்ற டிஜிட்டல் டேட்டாக்களுடன் இணைக்கும்  அடுத்தகட்டமாக விண்டோஸ் சர்ஃபேஸ் அசத்தலாக உருவானது. நாம் உட்காரும் டைனிங் டேபிள், சாய்ந்து நிற்கும் சுவர் உட்பட அனைத்து தளங்களையும் ஒரு டிஸ்பிளே யுனிட்டாக மாற்றும் வல்லமை பொருந்தியது Windows Surface. அதுவும் தொடுதிரை Touch Screen வசதியுடன். தற்போது Windows 7 இவற்றின் மெல்லிய தொடுதிரை அடையாளத்துடன் வெளியாகியிருக்கிறது.

ஆனால் விண்டோஸ் சர்ஃபேஸ் தலை தூக்குவதற்கு முன்பே ஒரு மாஜிக் போல TED Sixth Sense உருவாகியிருக்கிறது. நமது பார்வையையும், கூகுள் போன்ற டிஜிட்டல் டேட்டாக்களையும்  இணைக்கும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த டிஜிட்டல் நுட்பம்.


கழுத்தில் நமது கண்களுக்கு பதிலாக ஒரு வெப் காமிரா. அந்தக் காமிரா எதைப் பார்க்கிறதோ அதைப் பற்றி தகவல் தருவதற்கு ஒரு தந்தியில்லா பாக்கெட் இன்டர்நெட் மொபைல். நீங்கள் என்னைப் பார்த்தால் என்னுடைய Blogger, Facebook, Orkut, Twitter, Linkedin உட்பட அனைத்து தகவல்களும் படக்கென தோன்றும். எங்கே தோன்றும் நீங்கள் என் சட்டையைப் பார்த்தால் சட்டையிலும், நீங்கள் சுவரைப் பார்த்தால் சுவரிலும். அதாவது கழுத்தில் தொங்கும் வெப் காமிரா இரு வழி கருவி. என்னை படமெடுத்து உள்ளே விஷிவல்களை அனுப்பி டேட்டா சேகரித்து, ஒரு புரொஜக்டராக மாறி அதை வெளியே அனுப்புகிறது.


இதன் இன்னொரு பரிமாணம் படு இன்டரஸ்டிங்.  ஒரு புத்தகத்தை புரட்டுகிறீர்கள். வாங்கலாமா? வேண்டாமா? என்று குழப்பம். நெட்டில் இதைப்பற்றி வாசகர் கமெண்டுகளை படிக்கலாம் என்று தோன்றுகிறதா?  தொடு உணர்வுடன் கூடிய வளையங்கள் கிடைக்கின்றன. அவற்றை விரல்களில் மாட்டிக் கொண்டு அந்தப் புத்தகத்தை தொடுங்கள் போதும். அந்தப் புத்தகத்திலேயே கூகுள் அல்லது அமேசான் தரும் விபரங்கள் டிஸ்பிளே ஆகும்.


சுருக்கமாகச் சொன்னால் கழுத்தில் ஒரு HUD இருந்தால் ஒரு பார்வையில் இந்த உலகை அளக்கலாம். அதை தரையிலும் சுவற்றிலும் சமர்பிக்கலாம். இந்த கற்பனைக்கும் எட்டாத ஐடியாவின் எளிமையான சொந்தக்காரர் பிரணவ் மிஸ்த்ரி என்கிற இந்திய இளைஞர். உலகின் அத்தனை ஐடி நிறுவனங்களும் இந்த ஐடியாவை வாங்கி அவரை டாலரில் குளிப்பாட்ட அப்ளிகேஷன் போட்டிருக்கின்றன. ஆனால் அவர் சின்னப் புன்னகையுடன் இதை நான் இலவசமாக இந்த உலகுக்கு வழங்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.


எத்தனை பிரமாண்ட தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதையும் மிஞ்சும் ஒன்று வரும் என்பதற்கு பிரணவ் மிஸ்த்ரியின் அறிவு சாட்சி. எந்த தொழில் நுட்பமும் மனித மனதின் ஆழத்தை அளக்க முடியாது என்பதற்கு பிரணவ் மிஸ்த்ரியின் பணத்தாசையை ஒதுக்கிய குணம் சாட்சி.