Wednesday, January 5, 2011

ஒரு மனிதன் எப்போது மாமனிதனாகிறான்?

ஒரு மாபெரும் பாடகரின் வாழ்க்கையில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்.
(எப்போதோ ஒரு பழைய புத்தகத்தில் வாசித்தது)

மிகப் பெரிய நடிகர் நடிக்கவிருந்த படத்தின் பாடல் பதிவிற்க்காக ஒரு இரவுப் பயணம்!  சீர்காழியிலிருந்து திருச்சி வழியாக காலையில் சென்னை அடைந்த அந்தப் பாடகருக்கு ஒரு அதிர்ச்சி. பாடலின் ஒலிப்பதிவு குறிப்புகள் உட்பட, அவரின் உடமைகள் அனைத்தும் காணவில்லை.

உடமைகளை விட பாடல் குறிப்புகள் காணாமல் போனதில் அவருக்கு மிகவும் வருத்தம். குறிப்புகளின் உதவியின்றி இன்று ஒலிப்பதிவு சிக்கலாகப் போகுமே என்று வருந்தியபடியே ஒலிப்பதிவுக் கூடம் வந்தார்.

அங்கு அவருக்கு இரண்டாவது அதிர்ச்சி. இம்முறை இன்ப அதிர்ச்சி.
அங்கு ஒரு நடுத்தர வயதுடைய நபர், தொலைந்து போன அனைத்தையும் கைகளில் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.

மகிழ்ச்சி தாங்கவில்லை பாடகருக்கு! நேரே அவரிடம் சென்று,
”இந்த பை உன்னிடம் எப்படி வந்தது?” என்றார்
”ஐயா நான் ஒரு திருட்டுப் பய. நேற்று ராத்திரி திருச்சியில உங்க கிட்ட இருந்து நான்தான் இதுகள திருடினேன். திருடுனத பார்த்துக்கிட்டிருக்கும் போது தற்செயலா இந்த நோட்டு புத்தகத்தை கவனிச்சேன். இதிலதான் இந்த விலாசம், பாட்டு குறிப்பெல்லாம் இருந்துச்சு. இவ்வளவு பெரிய பாடகர்கிட்ட இருந்து திருடிட்டோமேன்னு வருத்தமாகிடுச்சு. என்னால் உங்களுக்கு எந்த சிரமமும் வரக்கூடாதுன்னு மனசு அடிச்சிக்கிச்சு.  உடனே சென்னை பஸ் பிடித்து வந்துவிட்டேன். எனனை மன்னிச்சுடுங்க ஐயா”

அதைக் கேட்டதும் பாடகருக்கு உள்ளம் நெகிழ்ந்துவிட்டது.
”ஏம்ப்பா.. இவ்வளவு நல்லவனா இருந்துகிட்டு ஏன் திருடிப் பிழைக்கிற?  உழைத்து சம்பாதிக்கலாமே...”
”ஐயா, நானா மாட்டேன் என்கிறேன். சின்னவயசுல மூளைகாய்ச்சல் ஏற்பட்டு ஒரு கை சூப்பிவிட்டது. இதை காரணமா வச்சே யாரும் எனக்கு வேலை தரவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தேன். பட்டினிதான் மிச்சம். அதனால் குடும்பத்தைக் காப்பாத்த, வேற வழி இல்லாம திருட ஆரம்பிச்சுட்டேன். நல்ல வேலை கிடைச்சா உடனே திருட்டை விட்டுவிடுவேன்”.
”அவ்வளவுதான.. இதோ உனக்கு வேலை ரெடி”

அடுத்த சில நிமிடங்களில் ஒலிப்புதிவுக் கூடத்தின் எதிரிலேயே இருந்த ஒரு  டீக்கடையில் அந்த திருடனை வேலைக்கு சேர்த்துவிட்டார் பாடகர்.

அன்றிலிருந்து சென்னை வரும்போதெல்லாம், அந்த டீக்கடையில் மனம் திருந்தியவரை நலம் விசாரித்துவிட்டுதான் பாடகர் தன் ஊர் திரும்புவார். இப்படியே சில வருடங்கள் சென்றன.

திடீரென ஒரு முறை அந்த நபரை பார்க்க முடியவில்லை. பாடகருக்கு ஏனோ தெரியவில்லை, மனது பதறியது. விசாரித்ததில் ஒரு வாரமாகவே அந்த நபர் வேலைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. அவ்வளவுதான், தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே அவரைத் தேடி, வேலூருக்கு பஸ் பிடித்துவிட்டார். வழியெல்லாம் அந்த நபர் மீண்டும் திருட்டு தொழிலில் இறங்கியிருப்பாரோ என்ற பதற்றத்துடனேயே, மளமளவென்று விசாரித்து அந்த நபரின் வீட்டுக்கும் சென்றுவிட்டார்.

பாடகர் தன் வீட்டுக்கு வந்ததைக் கண்டதும் அந்த நபருக்கு பதறிவிட்டது. எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரு மாபெரும் மனிதர் தனது வீட்டுக்கு வந்திருப்பதைக் பார்த்ததும் அந்த நபர் கண் கலங்கிவிட்டார்.

”ஐயா என்னை பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க?”
”இல்லையப்பா. நான் உன்னை பார்க்க வரவில்லை, நீ மறுபடியும் திருட்டுத் தொழிலுக்கு போகமாட்டாய் என்று, நான் உன் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையா, பொய்யா என்பதை உறுதி செய்ய வந்திருக்கிறேனப்பா” என்றார்

இதைக் கேட்டதும் அந்த நபரின் குடும்பமே நெகிழந்து போய் கண்ணீர் விட்டது.

”ஐயா என்னுடைய முதல் குழ்ந்தைக்கு திடீர்னு மூளைக்காய்ச்சல் வந்திடுச்சு. மருத்துவம் பார்க்க டீக்கடை முதலாளிகிட்ட பணம் கேட்டு கெஞ்சினேன். ஆனா அவர் ஈவு இரக்கம் இல்லாம மறுத்துட்டார். அந்தக் கோபத்துல தான் நான் ஊருக்கே திரும்பிட்டேன். குழந்தைக்கு வைத்தியம் பார்க்க பணம் போதவில்லை. இப்படியே போனால் நான் மறுபடியும் திருடனாகி, என்னைப் போலவே, எனது குழந்தையும் திருடனா ஆகிடுவானோன்னு எனக்கு பயமா இருக்கு” என அவர் கதறியபடியே சொன்னார். அதைக் கண்டதும் பாடகர் ஒரு வினாடி கூட யோசிக்வில்லை.

”கவலைப் படாதே உனக்கு முருகன் துணை இருக்கிறான்”,என்று சொல்லி அரசு மருத்துவமனையில் உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு தேவையான மருந்துகளை தனது சொந்த செலவிலேயே வாங்கித் தந்தார். அத்துடன் நிற்காமல் திருச்சியிலேயே தனது மைத்துனரின் ஜவுளிக்கடையில்  நல்ல வேலையும் வாங்கித் தந்தார்.

அன்று செத்துப் பிழைத்த அந்தக் குழந்தை பிற்காலத்தில் ஒரு I A S அதிகாரியாக தமிழக கல்வித்துறையின் இயக்குனராக உயர்ந்தார்.
அந்த IAS அதிகாரி தனக்கு பணி நியமனம் கிடைத்தவுடன் தனக்கு வாழ்வளித்த பாடகரிடம்  ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள அவருடைய வீட்டிற்க்குச் சென்றார். அங்கு அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அவருக்கு உப்பிட்டவர் அமரராகியிருந்தார். அவர் வாழ்வில் விளக்கேற்றியவர் ஜோதியில் ஐக்கியமாகியிருந்தார். கண்களில் நீர் வழிய அவருடைய படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, தான் யார் என்பதை கனத்த மனதுடன் பாடகரின் குடும்பத்தினரிடம் சொன்னார்.

அதைக் கேட்டதும் அந்தக் குடும்பத்தினர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
”அப்படியா...! உங்களுக்கு உதவி செய்ததை அவர் இது வரை எங்கள் குடும்பத்தினர் எவரிடமும் சொன்னதே இல்லை. அவரால் முன்னேறியுள்ள உங்களை அவரது ஆன்மா மேலும் வழிநடத்தும்” என்று ஆசிர்வதித்தனர்.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பவனே சிறந்த வள்ளல் என்பார்கள். அது போல...எத்தனை பெரிய உதவி. ஆனால் அதை தனது குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ஒருவர் செய்திருக்கிறார் என்றால், அவர் மனிதரே அல்ல. கடவுளின் தூதர்!

ஒரு மகானைப் போல நம்மிடையே வாழ்ந்து மறைந்த அந்த உன்னத மனிதர், பாடகர் திரு. சீர்காழி கோவிந்தராஜன்.

அவரின் பாடலைக் கேட்கும் போதெல்லாம் உள்ளம் உருகுகிறதே ஏன்? அவரின் உச்சரிப்பில் ஒவ்வொரு வார்த்தையும் உயிர் பெறுகிறதே ஏன்?

அவர் தனது உதடுகளிலிருந்து பாடவில்லை, தனது உள்ளத்திலிருந்து பாடினார். அதனால்தான் இறைவனின் அருளை தமிழமுதமாக உலகமெங்கும் இன்னமும் காற்றில் நிறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் குரல் கேட்காத நாள் என்று எதுவுமில்லை. அவர் குரல் ஒலிக்காத கோவிலென்று ஏதுமில்லை. அதுவே அவரது நிரந்தரப் புகழுக்கும், உன்னத வாழ்வுக்கும் சாட்சி!

"தாயாகி அன்பு பாலுட்டி வளர்த்தாய்,
தந்தையாகி நின்று சிந்தை தெளிர்த்தாய்,
குருவாகி எனக்கு நல்லிசைதந்தாய்,
ஞானகுருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீஎன்றும் என் உள்ளம் நிறைந்தாய்”

வாழ்வை தவமாக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்!