Thursday, August 8, 2024

தினம் ஒரு ஏ.ஐ - 16 : இசையமைக்கலாம் வாங்க!


பெயருக்காகவே கூகுளின் ஏ.ஐ டெஸ்ட் கிச்சன் எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்த கூகுள் கிச்சனில் MusicFx, VideoFx, ImageFx, TextFx இந்த நான்குவகை ஏ.ஐகள் உள்ளன. அமெரிக்கர்கள் மட்டும் ருசித்துக் கொண்டிருந்த இந்த ஏ.ஐ கிச்சனை தற்போது இந்தியாவிலும் பயன்படுத்த முடியும்.

நான் அடிக்க MusicFx பயன்படுத்தி இசையை உருவாக்கிக் கொள்கிறேன்.
நீங்களும் கூகுள் கிச்சனுக்குள் நுழையுங்கள். பாட்டு, வீடியோ, படங்கள், கதைகள் என அமர்க்களம் செய்யுங்கள்.
- ISR Selvakumar
https://aitestkitchen.withgoogle.com/tools/music-fx

Wednesday, August 7, 2024

தினம் ஒரு ஏ.ஐ - 15 : இலவசமாக ஒரு புராஜக்ட் மேனேஜர்


தலைக்குமேல வேலை எனப் புலம்புவோம். ஆனால் உதவிக்கு ஆள் கொடுத்தாலும் வேலை முடியாது. எது உடனே? எது அப்புறம் என்ற தெளிவு இல்லாததுதான் அதற்குக் காரணம். ஒரு நல்ல புராஜக்ட் மேனேஜர் இருந்தால் வழிகாட்டுவார். வேலைகளை பிரித்துக் கொடுப்பார். இலக்குகள் நிர்ணயிப்பார். அதை நோக்கி சரியாக நகர்கிறோமா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்.

இதற்குத்தான் tulsk io உதவுகிறது. வீட்டில் கல்யாணம், காது குத்தாக இருந்தாலும், அலுவலகத்தில் மாதாந்திர டார்கெட்டாக இருந்தாலும் சரி, tulsk io திறமையான புராஜக்ட் மானேஜராக செயல்பட்டு நம்மை பிசகில்லாமல் வேலை நடக்க உதவும்.
Note : Link in the first comment
- ISR Selvakumar

தினம் ஒரு ஏ.ஐ - 14 : பாடங்களை வினாடி வினா விடையாக மாற்றும் ஏ.ஐ

 

எட்டாம் வகுப்பு டீச்சர் நாற்பது மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தார். எனது குழுவில் ஹேமமாலினி என்ற பெயர் கொண்ட மாணவியுடன் நான் செட்டு சேர்ந்தேன். கூச்சமாகவும், பரவசமாகவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். டீச்சர் சொன்னது கொஞ்சமாகத்தான் காதில் விழுந்தது. ஒவ்வொரு குழுவும் கேள்வி-பதில்கள் தயாரிக்க வேண்டும். பிறகு சுழற்சி முறையில் மற்ற குழுக்களிடம் அந்தக் கேள்விகளை கேட்க வேண்டும். பதில் வந்தால் அவர்களுக்கு ஒரு மதிப்பெண். சொதப்பினால் நமது குழுவுக்கு ஒரு மதிப்பெண்.
இப்படித்தான் பூகோளம் சொல்லித்தந்தார் எட்டாப்பு டீச்சர். நாங்களே கேள்வியும் பதிலும் தயாரித்ததால், அருகிலிருந்த ஹேமமாலினி என்னை மயக்கினாலும் பாடம் மறக்கவில்லை.
எங்க எட்டாப்பு டீச்சர் பாணியில் கேள்வி பதில்களை தயாரித்து, நமக்கு நாமே டெஸ்ட் வைத்துக் கொள்ள ஏ.ஐகள் வந்துவிட்டன. இதனால் பாடங்களை எளிதாக மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.
https://quizlet.com/en-gb (30 நாட்கள் மட்டும் இலவசம்)
- ISR Selvakumar

தினம் ஒரு ஏ.ஐ - 13 : 1000 வாடிக்கையாளரும் ஆயிரம் வீடியோவும்!

 

டியர் என்தற்குப் பதிலாக டியர் செல்வகுமார் என்று துவங்கும் கடிதங்கள் எனக்குப்பிடிக்கிறது. உங்கள் பெயரைச் சொன்னால் உங்களுக்கும் பிடிக்கும். இது மனித உளவியல். அதனால்தான் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய பெயர் போட்டு விளம்பரங்களையும், மின்னஞ்சல்களையும் அனுப்புகிறார்கள்.
வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும்போது டியர் என்பதுடன் பெயர் சேர்த்து அனுப்பினால் இன்னும் நெருக்கமாக உணர்வோம்.
இதற்காகவே வந்திருக்கிறது இந்த ஏ.ஐ செயலி. கடிங்களுக்குப் பதிலாக வீடியோ உருவாக்கலாம் என்பதுதான் சிறப்பு. ஒரு முறை உங்கள் குரலை பதிவு செய்து கொள்ளும். பிறகு உங்கள் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் பெயர் உள்ள பட்டியலை வாங்கிக் கொள்ளும். அடுத்து ஒரே கிளிக்கில் உங்கள் குரலில் அனைவருக்கும் அவரவர் பெயர் சொல்லி வீடியோ அனுப்பிவிடும்.
திருமண அழைப்பிதழ் அனுப்புவோர் இதனை முயற்சிக்கலாம். ஒவ்வொரு உறவினருக்கும் அவரவர் பெயர் சொல்லி ஒரு (Personalized) வீடியோ அழைப்பிதழ் தயாரித்து அவர்களை அசத்தலாம்.
- ISR Selvakumar

தினம் ஒரு ஏ.ஐ - 12 : நீங்களே உங்களுடன் பேச (Ai Twin)

 நான் திரும்பத்திரும்ப மல்லிகைக்கிழமை, ப்ரியம் என்பது, முத்தகம் என்று ஒரு சிறிய வட்டத்துக்குள்தான் (கவிதைகள் என்று) எழுதிக் கொண்டிருப்பேன்.

திரைக்கதைகள் என எடுத்துக் கொண்டால் சயின்ஸ் பிக்சன், வரலாற்றுப் புனைவு, மிடில்கிளாஸ் குடும்பப் பிரச்சனை, காதல், இசை என இன்னொரு வட்டத்துக்குள் சுற்றுவேன்.
எதில் அதிக ஆர்வம் என்று கேட்டால் சினிமா, டிவி, இப்போது ஏ.ஐ என்கிறேன்.
இப்படி என்னைப் பற்றி நானே அவ்வப்போது குறித்து வைத்தால் இந்த சப்ஜெக்டுகளுக்குள் என்னை அலசிவிடலாம்.
இந்தத் தகவல்களை ஒரு டெக்ஸ் (.txt ) ஃபைலாகக் கொடுத்தால் அது தான் நீங்கள்! இரண்டு நிமிடத்துக்கு உங்கள் குரலை பதிவு செய்தால் அதுதான் உங்கள் குரல். ஓரிரு நிமிடங்களில் உங்களின் நகல் அதாவது இரட்டையர் (Twin) ரெடி.
உங்கள் இரட்டையருடன் நீங்கள் பேசிக் கொண்டே இருக்கலாம். அது நீங்கள் கொடுத்த ஃபைலுக்குள்ளிருக்கும் தகவல்களை தனது அறிவாக சேமித்துக் கொண்டு உங்களுக்கு பதில் தரும்.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், தங்கள் பாடங்களை இது போல டெக்ஸ்ட் ஃபைலாகத் தந்துவிடலாம். பிறகு அதனிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லிக் கொண்டே இருக்கும். பாடமும் மனப்பாடமாகிவிடும்.

தினம் ஒரு ஏ.ஐ - 11 : 3 செல்ஃபியிலிருந்து 30 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ


பத்திரிகைகளுக்கு எழுதும்போது ஒரு ஃபோட்டோ கொடுங்கள் என்பார்கள். பள்ளி கல்லூரிகளில் பயிற்சிகொடுக்கச் செல்லும்போதும் இதேதான். ஆனால் பிரசுரிக்கும் தரத்திற்கு என்னிடம் புகைப்படங்களே இல்லை. எத்தனை கிளறினாலும் 3 ஃபோட்டோக்கள்தான் தேறும். நாளைக்கே ஃபோட்டோ ஸ்டுடியோ போகணும் என்று அச்சமயங்களில் முடிவெடுத்து அடுத்த டீ குடித்தபின் மறப்பேன்.
என்னைப்போன்றவர்களுக்கு உதவுவதற்காகவே BetterPic என்றொரு ஏ.ஐ இருக்கிறது.
நம்முடைய 3 செல்ஃபி புகைப்படங்களை திணித்தால் போதும். என்ன உடை, பின்னணி எப்படி, மாநிறமா, பளபளப்பா எனக்கேட்டு புத்தம் புதிய புகைப்படங்களை உருவாக்கித் தந்துவிடும்.
அதாவது காமிரா இல்லாமலே ஃபோட்டோ ஷுட் நடத்திவிடலாம். உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றால், அவர்களை ஆளுக்கு 3 செல்ஃபி அனுப்பச் சொன்னால் போதும். புகைப்படங்கள் தயாராகிவிடும்.

தினம் ஒரு ஏ.ஐ - 9 : ஆசிரியர்களுக்கு உதவும் ஏ.ஐ

வகுப்பெடுப்பது சுலபம். ஆனால் மாதம், வாரம் ஒரு டெஸ்ட் வைத்து, திருத்தி, மாணவர்கள்-பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி, மேனேஜ்மெண்டுக்கு ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, வழக்கம்போல சிலபஸ், அட்டனென்ஸ் என்று தொடர்வதுதான் அழுத்தமாக இருக்கிறது.

ஏ.ஐ வகுப்புகளில் நான் சந்தித்த பெரும்பாலான ஆசிரியர்கள் இதைத்தான் குறிப்பிட்டார்கள். அந்த ஆசிரியர்களுக்கு அவர்களின் வேலை பளுவை குறைக்க சில ஏ.ஐகளை பரிந்துரைத்தேன்.
அதில் பலருக்கும் பிடித்தது Teach Easy.
எல்.கே.ஜி முதல் கல்லூரி இறுதி ஆண்டு வரை ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பத்தாம் வகுப்புக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் டெஸ்ட் எனச் சொன்னால் போதும் பட்டென்று கேள்வித்தாள் தயார். இதுதான் பிளஸ் டு ஆங்கிலப புத்தகம். பாடத்திட்டம் வேண்டும் என்றால், சிலபஸ் பிரித்து வகுப்பு நடத்த திட்டம் தந்துவிடும்.
ஆசிரியர்களுக்கு உதவ இதே போல் 30க்கும் மேற்பட்ட வசதிகள் உள்ளன. ஆசிரியர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.

தினம் ஒரு ஏ.ஐ - 8 : மொழிபெயர்ப்புக்கான AI

अनुवाद के लिए एआई

വിവർത്തനത്തിനുള്ള AI
தமிழில் நீங்கள் எழுதிய காதல் கடிதத்தை, மலையாளம், பிரெஞ்சு, ஹிந்தி, ஸ்வாஹிலி என எந்த மொழிக்கும் உடனே மொழி பெயர்த்துவிட முடியும். இதற்காக எந்த மொழியையும் நாம் கற்க வேண்டியதில்லை. இதை செய்து தருவதற்கென்றே ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு ஏ.ஐ செயலிகள் உள்ளன.
கூகுள் டிரான்ஸ்லேட் (மிகப் பிரபலம்)
மைக்ரோசாஃப்ட் பிங் டிரான்ஸ்லேட்டர் (கூகுள் அளவிற்கு பிரபலமல்ல)
லிங்கோஸிங்க் - வீடியோவின் லிங்க் தந்தால் போதும், நீங்கள் விரும்பும் மொழிக்கு வீடியோ மாறிவிடும்.
டைப் பண்ணும்போதே (அ) வீடியோ ஓடிக் கொண்டிருக்கும்போதே (Real Time) மொழி பெயர்த்து தரும்.

தினம் ஒரு ஏ.ஐ - 7 : பவர்பாயிண்ட் பிரசென்டேஷன்களை உருவாக்கலாம்

ஆ..ஊன்னா ஒரு பவர்பாயிண்டை தூக்கிக்கிட்டு வந்துடறாங்க. காபி, சமோசா கூட தாங்கல. தூக்கம் வருது சார், எங்கள விட்ருங்க என்று மனதுக்குள் கதறிக் கொண்டுதான் ஆபீஸ் மீட்டிங்கில் அமர்ந்திருப்பீர்கள்!

ஆனால் நீங்களே பிரசன்டேஷன் தரக்கூடிய நாளும் வந்திருக்கும். சுவாரசியமான பிரசண்டேஷன்களை தயாரிப்பது எவ்வளவு கடினம் என்று அப்போதுதான் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
உங்களுக்கு உதவுவதற்காகவே வந்திருக்கிறது ஏ.ஐ.
Elaborate Ai - முற்றிலும் இலவசம் (Beta stage)
https://tome.app/ - கொஞ்சம் இலவசம், அதற்குப் பின் பணம். மிகப் பிரபலம்
https://glimmerai.tech/ - இலவசம் - படமும் வரைந்து கொள்ளலாம்.
https://streamslide.io/ - யுடியூப் லிங்க் கொடுத்தால், அதனை ஸ்லைடுகளாக மாற்றிவிடுகிறது. ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும்.