Friday, December 21, 2012

நேரடி மானியம் - Direct Cash Transfer - ஜாக்கிரதை மக்களே!

இதுவரை
கேஸ் சிலிண்டர்களின் அசல் விலை 900 சொச்சம் ரூபாய். ஆனால் மத்திய அரசு மானிய விலையில் (Subsidy) நமக்கு 450 சொச்ச ரூபாய்க்கு தருகிறது. மீதி பணத்தை சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தந்துவிடுகிறது.

இனி
நாம் கேஸ் சிலிண்டர்களை முழு விலையான 900 கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். மீதி மானிய பணத்தை அரசு நமது பாங்க் அக்கவுண்டில் போட்டுவிடும்.

தற்போது இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா?
சோதனை முறையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பென்ஷன், பி.எஃப் உள்ளிட்டவை கூட இத்திட்டத்தில் இருப்பதால் மக்கள் இதை வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் என்ன இலாபம்?
 ரேஷன் அரிசி, சர்க்கரை, கெரஸின் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் வருவதால், ரேஷன் அரிசி இனி மானிய விலையில் கிடைக்காது. எனவே ரேஷன் பொருட்களின் கடத்தல் நீங்கும். போலி ரேஷன் பெறுநர்களுக்கு இடமிருக்காது.  மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதால் பதவியில் இருப்பவர்களின் ஓட்டு வங்கி காப்பாற்றப்படுகிறது.

யார் யாரெல்லாம் இந்த திட்டத்தை அனுபவிக்க முடியும்?
மத்திய அரசு வழங்கி வரும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை பெற முடியும். எனவே இந்தியர்கள் அனைவரும் ஆதார் அட்டை வாங்க வேண்டிய கட்டாயம் வரும். ஒவ்வொரு குடும்பத்தலைவரும் பரம ஏழையாக இருந்தாலும் கட்டாயம் வங்கிக் கணக்கு துவங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும்.

இதனால் என்ன நஷ்டம்?
அரசாங்கத்துக்கு இதனால் பெரிய நஷ்டம் ஏதுமில்லை. ஆனால் மக்கள் பாடு திண்டாட்டமாக பெருமளவு வாய்ப்பு உள்ளது. முதலாவதாக மக்கள் கையில் பணம் புழங்க ஆரம்பித்துவிடுவதால், வருமானம் அதிகரித்துவிட்டதாக மாயையான எண்ணம் ஏற்படும். அதனால் விலைவாசி எகிறினாலும், கவலையே இன்றி எந்த விலையாக இருந்தாலும் பணம் கொடுத்து வாங்குகிற மனப்பக்குவம் வந்துவிடும். அதே சமயம் மானியமாக நமது வங்கிக்கு வருகிற பணத்தை நாம் நமது தேவைக்கு பயன்படுத்தாமல் வீண் செலவு செய்யும் வாய்ப்புதான் அதிகம். இந்தப் பணத்தை கவர்வதற்காகவே டாஸ்மாக்குகளும், ஷாப்பிங் மால்களும் காத்திருக்கின்றன. எனவே வங்கி வழியாக நேரடியாக பணம் வந்தாலும், பணம் மீண்டும் அரசாங்கத்துக்கும், தனியார் வியாபாரிகளுக்கும் சென்றுவிடும்.

Wednesday, October 10, 2012

சொல்லக் கேட்டதும், நெஞ்சைத் தொட்டதும்சேத்துப்பட்டு பாலம்!
கூடியிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனானேன்!
மற்றவர்கள் மேல் இடிக்காமல் கூட்டத்தின் மையத்தை எட்டிப்பார்த்தபோது . . .

”பழவால்ல ழான் போழ்ய்டுவேன்” என்றபடி மோட்டர் சைக்கிளில் ஒருவன்.
அவனுக்கு முன்னும் பின்னும் இரு குழந்தைகள். ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து முன் இருக்கையில் இருந்த பெண் குழந்தை அழ ஆரம்பித்தாள்.

”யோவ் இறங்குய்யா.. குழந்தைகளை வைச்சுக்கிட்டு எப்படிய்யா வண்டியை ஓட்டிக்கிட்டு போவ?”
”எழக்கு தெரியும். ழான் போழ்ய்டுவேன்”
குழந்தைகள் அழ அழ கூட்டம் கையைப் பிசைந்தது.
அதற்குள் ஆபீஸில் இருந்து அழைப்பு. ”உடனே வாருங்கள்”
உடனே ஆபீஸ் வந்துவிட்டேன். என் மனம் இன்னமும் சேத்துப்பட்டு பாலத்தில் இருக்கிறது.
அந்தக் குழந்தைகள் பத்திரமாக வீடு சேர்ந்திருப்பார்களா?

- (நண்பர்) சொல்லக் கேட்டதும், நெஞ்சைத் தொட்டதும்

Tuesday, September 18, 2012

விகடனுக்கும், குமுதத்துக்கும் பணிவான வேண்டுகோள்

யோசித்துப் பார்த்தால், சிறுவயதிலிருந்தே இத்தனை வருடங்களாக நான் தெரிந்து கொண்டது, அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது என அனைத்துமே ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் வழியாக மட்டுமே.

பெரும்பாலும் இப்பத்திரிகைகள் நடிகர் நடிகர்களின் தனிப்பட்ட சந்தோஷங்களையும், துயரங்களையுமே கட்டுரைகளாக, கவர்ஸ்டோரிகளாக என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் தவறில்லை. நானும் இவற்றையே விரும்பிப் படித்திருக்கிறேன்.

ஆனால
் கூடங்குளம் போன்ற ஒரு மக்கள் பிரச்சனையை ஒரு ஊறுகாய் விளம்பரம் அளவிற்கு கூட இப்பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை என்பது என் கருத்து. கடந்த 25 வருடங்களில் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்து மொத்தமே 10 கட்டுரைகள் கூட வந்திருக்காது என நினைக்கிறேன்.

கூடங்குளம் பிரச்சனையைப் பற்றிய அடிப்படை தகவலும், புரிதலும் எனக்கு இல்லாமல் போனதற்கு 50 வருடப் பாரம்பரியம்மிக்க இப்பத்திரிகைகளின் பொறுப்பற்றதன்மையே காரணம்.

இதற்கு பிரயாசித்தமாக கடந்தவாரம் கூடங்குளம் பிரச்சனை பற்றி ஆனந்த விகடன் ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டுள்ளது. சந்தோஷம்!

இப் பிரச்சனையில் மக்களுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும்படி ஆனந்தவிகடன், குமுதம் நிர்வாகத்தாரை கேட்டுக் கொள்கிறேன்.

Friday, August 31, 2012

சொந்தநாட்டிலேயே அகதிகளான இந்தியவடமாநிலத் தொழிலாளர்கள்


1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச சந்தை இந்தியாவிற்குள் நுழைந்ததும், விளை நிலங்கள் கட்டிடங்களாகின. பறவைகளும், மரங்களும் நிறைந்த வனங்கள், வாகனங்களும், சாலைகளும் நிறைந்த கான்க்ரீட் ஜங்கிள்கள் ஆகின. ஐடி என்கிற புதிய துறை பணத்தை வாரி இறைத்தது. இந்திய இளைஞர்கள் அலட்சியமாக செலவு செய்யத் துவங்கினார்கள். 25 பைசாவுக்கு விற்றுக் கொண்டிருந்த டீ, இன்று 7 ரூபாய் ஆகிவிட்டது. 50 பைசாவுக்கு கிடைத்த ஒரு இட்லி இன்று 12 ரூபாய் ஆகிவிட்டது. கிராம் 600க்கு விற்றுக் கொண்டிருந்த தங்கம் இன்று 3000ம் ரூபாயை தொட்டுவிட்டது. சில ஆயிரங்களுக்கு கிடைத்த நிலங்கள் இன்று கோடிகளைத் தொட்டுவிட்டன. சுருக்கமாகச் சொன்னால் வளர்ச்சி என்று நினைத்தால் அது வீக்கமாக உயர்ந்து நின்றுவிட்டது. விளை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டு தொழிற்சாலைக்கும், நெடுஞ்சாலைக்கும் முதலீடு செய்த பெரும்பணக்காரர்களிடம் சென்று விட்டது. இந்த கால மாற்றத்தை ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள் தென்னிந்தியர்கள். அவர்களுடைய ஆங்கில அறிவும், கற்கும் திறனும் தந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மளமளவென்று இந்த ஓட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டார்கள். சுதாரிக்காத வட இந்தியர்கள் பின் தங்கிப்போனார்கள்.

பணத்தின் மினுமினுப்பு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குடிபுகுந்ததும், 2000ம் ஆண்டின் பின்பகுதியில் உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலைகளை நிராகரிக்கத் துவங்கினார்கள் தென் இந்தியர்கள். இதனால் ஹோட்டல்கள், கட்டுமானப் பணிகள், காவல் பணிகள் போன்றவற்றில் ஆள் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. அதே நேரத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் இந்த பற்றாக்குறையை நிரப்ப ஆரம்பித்தார்கள். தென் இந்தியா முழுவதும் குறிப்பாக ஐ.டியால் முன்னேறிய கர்நாடகா, ஹைதராபாத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இவர்களின் குடியேற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. வாய்ப்பும், வறுமையும் துரத்த தமிழக கட்டிடத் தொழிலாளிக்கு கொடுப்பதில் பாதியைக் கொடுத்தால் கூடப்போதும் என்று அவர்கள் இறங்கி வரவே, சுரண்டல் முதலாளிகள் மீன்களை கொத்து கொத்தாக வலை வீசி பிடிப்பது போல, அவர்களை கூட்டம் கூட்டமாக இங்கு குடியமர்த்தினார்கள். கடன் வாங்கி, அதில் முன் பணம் கொடுத்து வேலை தேடி, வட்டி கட்டியபடியே கடின வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு. ஒரு காலத்தில் துபாய் போன்ற அரவு நாடுகளில் நிறைய மலையாளிகளும், கணிசமான தமிழர்களும் இப்படித்தான் குறைந்த சம்பளத்திற்கு தங்கள் வாழ்க்கையை உறிஞ்சிய முதலாளிகளிடம் அடிமைப்பட்டுக்கிடந்தார்கள். தற்போது இந்தியர்கள் சுதாரித்துக்கொள்ள, பிலிப்பினோக்களும், இலங்கை தமிழர்களும் அதே போன்ற அடிமை வாழ்வை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலைதான் தென் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும்.

நெருங்கி பேசிப்பார்த்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலியில் பாதிதான் அவர்களை சேருகிறது. பாதியை புரோக்கர்கள் அபகரிக்கிறார்கள். குறிப்பாக கட்டிடத் தொழிலாளர்களின் நிலை இதுதான். சுரண்டும் முதலாளிகள், வட இந்தியர்கள் என ஒதுக்கும் தென் இந்தியர்கள், வறுமை, கடன், ஆரோக்கியமற்ற சூழல் போன்றவற்றால் எப்போதுமே ஒரு அபத்திர சூழலில்தான் வாழ்கிறார்கள். இந்த அவநம்பிக்கை மேலோங்கியிருக்கும் வாழ்க்கை அவர்களை எப்போதும் இனம் புரியாத பயத்தில்தான் வைத்திருக்கிறது போலும். அதனால்தான் ஒரு வதந்தி SMS-ஐ படித்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக, கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு தாங்கள் பிறந்து வளர்ந்த ஊருக்கே புறப்பட்டு ஓடினார்கள்.

நதிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும்தான் சமூகங்கள் குடியேறியதாகச் சொல்கிறது உலக வரலாறு. பருவம் பொய்க்கும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக நகர்ந்திருக்கிறார்கள், புதுப்புது நாகரீகங்கள் உருவாகியுள்ளன. ஆனால் இலங்கையும், அஸ்ஸாமும் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் இயற்கை அல்ல, அரசியல். இலங்கைத் தமிழர்களை பார்த்து சிங்களர்கள் வெறுப்பை உமிழ்ந்ததைப் போல, தற்போது இங்கு வந்து குடியேறும் வட இந்தியர்களை வேண்டா வெறுப்பாக அனுமதிக்கும் தென் இந்தியர்களைப் போல, அஸ்ஸாம் மாநிலம் வங்கதேச முஸ்லிம்களை ஒருகாலத்தில் அனுமதித்தது. போடோ இன மக்கள்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்கள். ஆனால் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்கள், எண்ணிக்கையில் அதிகமாகி, அந்தஸ்திலும், அதிகாரத்திலும் உயரத்துவங்கியதும், எத்தனையோ வருடங்களாக சிறிய நெருடலாக இருந்த உணர்வுகள், கடந்த மாதம் பெரும் கலவரமாக உருவெடுத்துவிட்டது.

தென் இந்திய முஸ்லிம்கள், அஸ்ஸாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, தென் இந்தியாவில் குடியேறியிருக்கும் வடமாநிலத்தவரை அடித்து உதைத்து ஊரை விட்டே துரத்துகிறார்கள் என்ற ஒரு பொய் வதந்தீயாக, SMS மூலம் பரவியது. பயந்து போன அவர்கள் ஒரே இரவில் கூட்டம் கூட்டமாக ஒடிசா, அஸ்ஸாம், உ.பி, பீகார் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விரையத் துவங்கினார்கள். பஸ் நிலையங்களும், இரயில் நிலையங்களும் நிரம்பி வழிந்தன. அரசாங்கம் சுதாரிப்பதற்குள் வதந்தீ காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்துவிட்டது. கர்நாடகாவில் பரவத் துவங்கிய இந்த பதற்றம், தமிழகத்தையும் தொற்றிக் கொண்டுவிட்டது. பயப்படாதீர்கள் என்று கர்நாடக, கேரள, தமிழக அரசுகள் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தன. ஆனால் அவர்களின் பதற்றம் தணியவில்லை. அச்சம் குறையவில்லை. ஒருவர் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் சொற்ப உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

உளவியல் ரீதியாக இதை பார்த்தோம் என்றால், உலகம் முழுவதும் மக்கள் தனித் தனி குழுவாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு குழுவை நண்பனாகத்தான் ஏற்றுக் கொள்கிறார்களே தவிர, உடன் வாழ்பவர்களாக ஏற்க மறுக்கிறார்கள். இந்த மறுக்கும் உணர்வுக்கு காரணமாக எப்போதுமே பணமும், அந்தஸ்தும், அதிகாரமும் சார்ந்த அரசியல்தான் காரணமாக இருந்து வந்திருக்கிறது. தங்களிடமிருந்த இவை பறிபோய்விடும், குடியேற வந்தவர்கள் கவர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் வந்ததும், நெருடல் அதிகமாகிறது.

கேரளத்திலும், கர்நாடகத்திலும் எப்படியோ? ஆனால் தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்களின் மேல் இரக்கமே இல்லாமல் திட்டமிட்ட வெறுப்பை வளர்த்தது தமிழக அரசு. இந்த அரசு பதவி ஏற்றதும், தொடர்ந்து நடந்த கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் காரணம் தன் கையாலாகாத்தனம் என்பதை மறைக்க, இதற்கெல்லாம் காரணம் வட மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான் என்று அரசு மக்களிடையே எண்ணத்தை விதைத்தது. வடமாநிலத்தவர் ஒவ்வொருவரும் தங்கள் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை போலீஸ் ஸ்டேஷனில் பதிய வேண்டும் என்று மிரட்டியது. வடமாநிலத்தவர் மட்டுமல்ல, யாரை வாடகைக்கு வைத்தாலும், அவர்கள் பற்றிய தகவலை காவல் நியைலத்துக்கு தர வேண்டும். இல்லையேல் சிறை தண்டனை என்று தமிழக மக்களையும் பதற்றத்துக்கு உள்ளாக்கியது.

சமீபகாலமாக அரசுக்கு பயந்தோ ஆதரவாகவோ, பூசிமெழுகி எழுதிக் கொண்டிருக்கும் ஆனந்தவிகடன் கூட தைரியமாக ஒரு கருத்தை சென்ற வார இதழில் பதிவு செய்துள்ளது.

‘வேளச்சேரி ஐந்து பேர் என்கவுன்டருக்குப் பிறகு, வட மாநிலத்தவர்கள் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி, அரசே இவர்கள் மீது வெறுப்பைக் கட்டமைத்ததையும் நாம் மறந்துவிட முடியாது.‘, என்று குறிப்பிட்டுள்ளது விகடன். இந்த ஒரே ஒரு வரிக்காக ஆனந்தவிகடனின் (அவதூறு வழக்குக்கு பயப்படாத) தைரியத்தை மெச்சுகிறேன்.

வடமாநில மக்கள் இரு வாரங்களுக்குப் பின் பயம் தெளிந்து மீண்டும் தென் மாநிலங்களுக்கு பணிசெய்ய வந்துவிட்டார்கள். ஆனாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதலாலும், அதற்கு பலியாகும் மக்களாலும் மீண்டும் மீண்டும் அகதிகள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் - Exodus - அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சமீபத்திய உதாரணம், நம்மை பாதித்திருக்கும் உதாரணம், நம் கையாலாகாத்தனத்திற்கு உதாரணம், நம்மிடம் தீர்வு இல்லாத உதாரணம் . . . ஈழ தமிழ் மக்கள்!

அகதிகள் இல்லாத உலகே என் கனவு!

சொந்தநாட்டிலேயே அகதிகளான அமெரிக்க விவசாயிகள்!


1931 - டெக்ஸாஸ், கொலராடோ, ஓக்லஹோமா, புதிய மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் மழை தன் வரவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்ட வருடம். விவசாயிகள் வானத்தை அண்ணாந்து பார்த்து மழை ஏக்கங்களுடன் ஏழ்மையை தழுவிக்கொண்டிருந்தபோது, வானத்தை நிறைத்தன கரும்பூதங்கள். அவை கருத்த மழை மேகக் கூட்டங்களாக இருக்கும் என நினைத்த விவசாயிகளை, அலறி அடித்துக்கொண்டு ஓட வைத்தன புழுதிப்படலங்கள். ஒரு சில நிமிடங்கள்தான்... எத்தனையோ நூற்றாண்டுகளாக, விளை நிலங்களாக பரந்திருந்த பூமியை கரும்புழுதிகள் விழுங்கின.

‘புழுதிக் கோப்பை‘ (Dust Bowl) - புழுதிக்குள் புதைந்த அப்பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்ற ஒரு பத்திரிகையாளர்  இப்படித்தான் குறிப்பிட்டார். குடிநீர், உணவு, காற்று என எதிலும் புழுதி. காற்றை சுவாசிப்பதே மரணத்தை சுவாசிப்பது போல ஆகிவிட்டது. வயிற்றுக்குள்ளும், சுவாசக் குழாயிலும் தேங்கிவிட்ட புழுதிப்படலத்தால், பறவைகளும் விலங்குகளும் கூட்டம் கூட்டமாக மாண்டு போயின. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களையும் தின்னத் துவங்கியபோது, வங்கிகள் முடங்கின. கடைகள் சாத்தப்பட்டன. சாலைகள் புதைந்தன. அரசு மட்டுமல்ல, அப்பிரதேசம் முழுவதுமே இயக்கமற்று நின்றது. ஆனாலும் புழுதிபுயலின் தாக்கம் நிற்கவில்லை. தூசிக்கு தப்பிக்க ஈரத்துணிகளை வாசலில் கட்டி வைத்தார்கள். வீட்டின் அனைத்து துவாரங்களையும் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு அடைத்தார்கள். ஆனாலும் தொடர்ந்து நுண்துகள் தூசிகள் நாசி துவாரத்தை அடைக்க ஆரம்பித்தபோது, மூச்சுவிடவே திணறிய மக்கள் சிறு சிறு கூட்டங்களாக உயிர் தப்பி கலிஃபோர்னியாவுக்கு செல்லத்துவங்கினார்கள். 1940ம் வருடத்துக்குள் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் தாங்கள் வசித்தபகுதியை அப்படியே விட்டுவிட்டு, கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு அகதிகளாக அப்படியே புலம் பெயர்ந்திருந்தார்கள்.

முதலில் பரிதாபத்துடனும், பதைபதைப்புடனும் அவர்களை வரவேற்று அடைக்கலம் தந்தது கலிஃபோர்னியா. ஆனால் எண்ணிக்கை அதிகமானதும் திணற ஆரம்பித்தது. திணறல் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சலாக உருமாறி, பிறகு கோபமாக நிலைகொண்டது. மக்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டார்கள். உள்ளே வராதீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள். மீறி வந்தவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்த செய்தி பரவியதும், ஏற்கனவே கலிஃபோர்னியாவுக்குள் வந்து தங்கியவர்களுக்கும் சிக்கல் ஆரம்பித்தது. அவர்களையும் வெளியே போ என துரத்தியது கலிஃபோர்னியா! வாழ்க்கை தேடி வந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் துரத்தியடிப்படிப்பதற்காக, எல்லைகளில் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.

சொந்த மண்ணில் இயற்கையும், வந்த மண்ணில் இரக்கமற்ற சமூகமும் திரும்பத் திரும்ப துரத்தினாலும், வேறு வழியின்றி அங்கேயே தங்கியவர்களின் உழைப்பை பணக்கார சுரண்டல்காரர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். சொற்ப தொகைக்கு நாள் முழுவதும் உழைக்கும் அடிமைகளாக அவர்கள் மாற்றப்பட்டார்கள். பசியின் கொடுமை... வெறும் 75 சென்ட் முதல் 1.5 டாலர் வரை மட்டுமே பெற்றுக்கொண்டு உயிர்பிழைக்க போராடினார்கள். இந்த சொற்ப தொகையிலும் 25 சென்டுகளை அவர்கள் வீட்டு வாடகையாக தரவேண்டியதிருந்தது. வீடு என்றவுடன் ஏதோ பெரிதாக நினைத்துவிடாதீர்கள். கிழிந்த பாலிதீன் பேப்பர்களால் போர்த்தப்பட்ட கதவுகளற்ற குடிசைகள்தான் வீடு. சுகாதாரமற்ற சூழலால், அவர்கள் வசித்த பகுதி சேரிகளாக மாறி, காலரா, டிபி, மலேரியா, அம்மை உள்ளிட்ட நோய்கள் அவர்கை வாட்டி வதைத்தது.

யாருக்காகவோ தங்கள் உயிரையும், உழைப்பையும் இழந்து கொண்டிருப்பதை உணர்ந்த சிலர் முதுகு நிமிர்ந்து ஏன் என்று தட்டிக்கேட்டபோது, பண முதலைகளும், அரசாங்கமும் கை கோர்த்து அவர்களை தாக்கினார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடும் கம்யூனிஸ்டுகள் என முத்திரை குத்தி தண்டிக்கப்பட்டார்கள். மனிதர்கள் மேன்மேலும் அரக்கர்களாகி தண்டிக்கத் துவங்கியபோது, இயற்கை மென்மையாகியிருந்தது. மக்கள் அண்ட வந்த பூமியை விட்டு, பிறந்த பூமியை நோக்கி மீண்டும் புலம் பெயர்ந்தார்கள்.

அங்குதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர்கள் பிறந்து, வாழ்ந்து, கொண்டாடி, போராடி விளைநிலங்களாக வைத்திருந்த பூமி அபகரிக்கப்பட்டிருந்தது. இயற்கையின் தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள் அண்டைய பிரதேசங்களுக்கு தப்பிச் சென்று திரும்பி வந்த சில வருடங்களுக்குள், கார்ப்பரேட் பண முதலலைகள் அந்த ஏழை விவசாயிகளின் பூமியை தங்கள் வசமாக்கி கட்டிடங்களாக மாற்றிவிட்டிருந்தார்கள். அவர்கள் சொந்த மண்ணிலேயே வந்தேறிகளானார்கள். தாங்கள் உழுது பண்படுத்தி தன் வசம் வைத்திருந்த பூமியை இழந்து, அங்கு கால்பதிப்பதற்கே வாடகை தந்தார்கள். மண்ணின் சொந்தக்காரர்கள் சொந்த மண்ணிலேயே அடிமைகளாகிப்போனார்கள். இன்று அவர்களில் எவ்வளவோ பேர் படித்து, தெளிந்து, முன்னேறிவிட்டார்கள். ஆனாலும் அவர்களை Okies, Arkies என்று அடிமை முத்திரைகளால்தான் குறிப்பிடுகிறது, அமெரிக்க வரலாறு!

Friday, August 24, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - Song of this Century!

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...‘

சற்று முன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜீனியர் நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒரு சிறுவன் பாடிக் கொண்டிருந்தான். அற்புதமான அனுபவம். 

ஆன்மாவில் தோய்ந்த அச்சிறுவனின் குரலில், கண்ணதாசன் வரிகள் கொஞ்சம் கொ
ஞ்சமாக இதயத்தை பிழிய ஆரம்பித்தபோது, பாடகி அருணா சாய்ராமின் விழியோரத்தில் கண்ணீர். உணர்வுகளை அடக்க முடியாமல், ராஜேஷ் வைத்தியா வீணை மீட்டுவதை நிறுத்திவிட்டு, கண்களின் ஈரத்தை துடைத்துக் கொண்டார்.

அரங்கத்திலிருந்த ஒவ்வொரு இதயமும் விவரிக்க முடியாத உணர்வுகளால், கசிந்துருகியபோது, உயிரற்ற காமிரா கூட உணர்வு பெற்று அழுதது போலத் தோன்றியது.

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், குடும்பத்தினருடன் அமர்ந்து இந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் ஓரங்களிலும் நீர். தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் எழவில்லை.

அந்தப் பாடலின் மகத்துவம் அப்படி. கர்ணன் போன்று தூய உள்ளம் கொண்டிருந்தாலும், வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் அனைவருக்கும் பொது. நல்லவர்களால் ஒப்புக் கொள்ள முடியாத இந்த சித்தாந்தத்தை, கடவுள் கண்ணனே விளக்கிப் பாடுவது போன்ற இந்த பாடல் மிக மிக அபூர்வம்.

இதற்கு முன்பும், பின்பும் இந்தச் சூழல் எந்தப் படத்திலும் வந்ததில்லை. அப்படி ஒரு பாடல் இனிமேல் வந்தாலும் இந்தப் பாடல் போல் வருமா எனத் தெரியவில்லை.

இந்தப் பாடலைக் கவனியுங்கள்! மேதைகளின் சங்கமம்! பி.ஆர்.பந்துலு, சக்தி கிருஷ்ணசாமி, சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், சீர்காழி கோவிந்தராஜன், கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி!

இன்று வரை, இந்தப் பாடல் எல்லா போட்டி மேடைகளிலும் தொடர்ந்து பாடப்படுகிறது. ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும், உள்ளங்கள் உருகுவதையும், கண்ணீர் பெருகுவதையும் பார்க்க முடிகிறது. எனக்குத் தெரிந்து வேறெந்த பாடலும் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம், இசையும், வரியும், குரலும் ஆன்மாவை உலுக்கி எடுக்கிறது. எத்துணை கொடிய ஆன்மாவாக இருந்தாலும், மரிக்கும்போது இப்பாடலைக் கேட்டால், தூய்மையாக மாறிப்போகும்.

என் உள்ளத்தின் சலனமற்ற ஆழத்தில் இந்தப் பாடல் எப்போதும் இருக்கிறதென நினைக்கிறேன். எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டாலும், கண்கள் கசிகின்றன. இதயம் கங்கையில் குளித்து எழுவது போல இனம் புரியா புனித உணர்வை அடைகிறது.

என்னைக் கேட்டால், கடந்த 50 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த தமிழ் திரை இசைப் பாடல்களில் முதல் இடம், உள்ளத்தில் நல்ல உள்ளம்‘ என்ற இந்தப் பாடலுக்குத்தான். Song of this Century!

என் உள்ளத்தை சுத்திகரிக்கும், இந்த அற்புத பாடலைத் தந்த மேதைகளை சந்திக்க நேர்ந்தால், அவர்களின் பாதம் தொட்டு வணங்குவேன்.

குறிப்பாக தன் இசையின் மேன்மையால் காலத்தின் தோள்களில் ஏறி, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இசையால் உருகும் உள்ளங்களின் உள்ளும், வெளியும் பயணித்துக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னர் ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு என் இதயத்தின் ஒலிகளை சமர்ப்பிக்கிறேன்.

இன்று விஜய் டிவியில் பாடிய அச்சிறுவனின் பெயரை குறித்துக் கொள்ள மறந்துவிட்டேன். நான் மறந்தால் என்ன . . . எத்தனையோ மேதைகளின் பெயர்களுடன் சேர்ந்து, இனி அவன் பெயரும் ஒலிக்கும். இதை விட வேறென்ன பேறு வேண்டும்.

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது,
வல்லவன் வகுத்ததடா..‘

Tuesday, August 21, 2012

கற்றதும் கற்பதும் : நெருப்பு நரியின் சைலண்ட் தந்திரம்


FireFox எனப்படும் நெருப்பு நரி பிரவுசர், சத்தமே இல்லாமல் ஒரு புரட்சி செய்திருக்கிறது. தற்போது FireFox 14 புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. வெளியான ஒரே வாரத்தில் முந்தைய பதிப்பிலிருந்து புதியபதிப்பிற்கு 46% சதவிகிதம் பயனார்கள் நகர்ந்துவிட்டார்கள். எப்படி இது சாத்தியமானது?

Silent Update Serivce என்றொரு புதிய நுட்பத்தை மோசில்லா பயன்படுத்தியுள்ளது. பயனாளர்கள் ஆன்லைனில் இருக்கும்போது, அவர்களை தொந்திரவு செய்யாமல், இணைய வேகத்தையும் பாதிக்காமல், நாம் வேலை செய்யும்போது காதில் விழும் பாட்டுபோல, சுளுவாக புதியபதிப்பை ஏற்றிவிட்டது.

விண்டோஸில் User Account Control என்றொரு பாதுகாப்பு அம்சம் உள்ளது. இதற்குத் தெரியாமல் எந்த ஒரு புதிய பதிப்பும், தானியங்கியாக நமது கணிணியில் உள்ளிறங்க முடியாது. ஆனால் அதற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, நெருப்பு நரி-14 உள்ளே வந்துவிட்டது என்பதுதான் சூப்பர் செய்தி.

நீங்கள் நெருப்பு நரி பயன்படுத்துபவரா? அப்படியானல் உங்கள் கணிணியில் நெருப்பு நரி-14 இறங்கிவிட்டதா? செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

கற்றதும் கற்பதும் : சிவப்பு ஆப்பிளும் கருப்பு தொப்பியும்


Black Hat என்பது உலகில் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனம். ஐடி துறையில் உள்ள அரசுகள், நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒரே ஒரு முறையாவது இந்த நிறுவனத்துடன் கைகுலுக்காமல் இனி செயல்பட முடியாது என்கிற அளவுக்கு பிரபலம். அப்படி என்னதான் செய்கிறது கருப்பு தொப்பி நிறுவனம். மென்பொருளோ, இயங்குதளமோ எதுவாக இருந்தாலும் முதலில் அதை தனது புத்திசாலி வல்லுனர்களிடம் தருகிறது. அவர்கள் அதை கச்சிதமாக பிரித்து, ஓட்டைகளை கண்டுபிடித்து, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம்போடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு ரஷ்ய மென்பொருள் உளவாளி, ஆப்பிளின் iOS இயங்குதளத்துக்குள் புகுந்துவிட்டார். புகுந்தது மட்டுமல்லாமல், காசு கொடுத்தால்தான் வாங்க முடியும் என்றிருந்த சில மென்பொருள்களை ஆன்லைன் வழியாக நூறு சதவிகிதம் ஆடித்தள்ளுபடியில் இலவசமாக வாங்கமுடியும் என்று மாற்றிவிட்டார். அதே போல சில தினங்களுக்கு முன்பு, அதே இயங்குதளத்தை, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போல, இஷ்டத்துக்கு தகவல்கள் பதியும் தளமாக ஒரு வைரஸ் மாற்றிவிட்டது.

பாதுகாப்பு உளவாளிகளும், வைரஸ்களும் எங்களை நெருங்கவே முடியாது. நாங்கள் இரும்புக் கோட்டை என்று தெம்புடன் இருந்த ஆப்பிள் நிறுவனம், இதனால் அதிர்ச்சியடைந்தது. எனவே இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பை தயார் செய்திருக்கிறது. ஆனால் சந்தைக்கு வருவதற்கு முன், தயங்கித் தயங்கி Black Hat நிறுவனத்திற்குள் காலடி வைத்திருக்கிறது. இனி பிளாக் ஹாட் நிறுவனத்தின் பிஸ்தாக்கள் மீண்டும் ஒருமுறை iOSல் உள்ள ஓட்டைகளை தேடித் துப்பறிந்து, குறைகளைக் களைவார்கள்.

Black Hat நடத்தப்போகும் சமீபத்திய மாநாட்டில், ஆப்பிள் பங்கு கொள்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சுடு செய்தி.

கற்றதும் கற்பதும் : ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்


ஒரே ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்.

எகிப்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்ட போது அவர்களுக்கு உதவியாக இருந்தது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களும், ஸ்கைப் போன்ற குரல் தொடர்பு தளங்களும்தான். எனவே எகிப்திய அரசாங்கத்தின் கணிணி வல்லுனர்கள் தற்போது, ஸ்கைப் வழியாக நடைபெறும் சந்தேக உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கைப் வழியாக நடைபெறும் குரல் உரையாடல்கள் அனைத்தையும் அவ்வளவு எளிதாக ஒலிப்பதிவு செய்துவிடமுடியாது.

ஸ்கைப் 2003ல் பிரபலமாகத் துவங்கியதிலிருந்தே, அதன் கட்டமைப்பை உடைத்து, அதை செயலிழக்கச் செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஸ்கைப் நிறுவனத்தின் சாமர்த்திய பூட்டுகளால் (Encryption) இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் எகிப்து அரசாங்கம் இந்த பூட்டுகளை திறந்து உள்ளே புகுந்திருப்பதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால், ஸ்கைப்பின் நம்பகத் தன்மையின் மேல் சந்தேகம் வருகிறது. எனவே நமது அந்தரங்கத்துக்குள் வெளியார் நுழைவதை தவிர்க்க விரும்புபவர்கள், ஸ்கைப்பை தவிர்த்துவிட்டு வேறு குரல் தளங்களுக்கு மாறலாம் என்கிறார்கள் சர்வதேச வல்லுனர்கள்.

ஸ்கைப் கட்டமைப்பை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. ஆனால் தற்போது அதன் மேல் சந்தேகம் எழுந்துள்ளதற்கு காரணம், ஸ்கைப்பின் புதிய பங்குதாரரான மைக்ரோசாஃப்ட்தான் என்று சிலர் சொல்லத் துவங்கியுள்ளனர். சர்வதேச நாடுகளில் தனது சந்தை சரியாமல் இருக்க, அந்தந்த நாடுகளின் சொல்பேச்சுக்கு ஏற்ப, ஸ்கைப் கட்டமைப்பை மைக்ரோசாஃப்ட் தளர்த்தியிருக்கலாம் என்கிறார்கள் அதன் போட்டியாளர்கள்.

உலகம் முழுவதும் தேச நலனுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்க ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருக்கிறது. எனவே அந்த நாடுகளுக்கு ஸ்கைப் போன்ற குரல் தளங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஸ்கைப்பை தன்வசம் தற்போது வைத்துள்ள மைக்ரோசாஃப்டுக்கு சட்ட ரீதியாகவே வேறு வழியில்லை. ஆனால் இதை வெளிப்படையாகச் சொன்னால், தனது வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்பதால், அது பூசி மெழுகுகிறது என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள்.

இந்த யூகம் சரியாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதன் செய்தித் தொடர்பாளரை நோக்கி வீசப்பட்ட கேள்வி இதுதான். ஸ்கைப் குரல் தளம் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொந்தம். ஆனாலும் அதன் கட்டமைப்புகளை தளர்த்தி குரல் உரையாடல்களை பதிவு செய்யும் நிபுணத்துவம் மைக்ரோசாஃப்டிடம் உண்டா?
இதற்கு ஒரே பதில்தான். ஆமாம் (அ) இல்லை.

ஆனால் இன்னமும் இந்த ஒற்றை வார்த்தைகளை உதிர்க்க தயங்கிக் கொண்டிருக்கிறது.

மியாவ் என்றால் என்ன?


கிட்டத்தட்ட நள்ளிரவு!
சன்னமாக ஒரு ஆணின் அழுகுரல்!

சில வீடுகளின் உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்குகளைத் தவிர, தெருவில் வேறெந்த வெளிச்சமும் இல்லை.

குரல் வந்த திசை மேலும் இருட்டானதாக இருந்தது. அந்த இருட்டை அடையாளம் காட்டும்விதமாக ஒரு மொபைல் ஃபோனின் ஒளி.

நிழலாக ஒரு சைக்கிளும், முகம் தெரியாத அந்த ஆளையும் அவர்களை கடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு என்னால் பார்க்க முடிந்தது.

‘என் குழந்தையை என்கிட்ட தரப்போறியா இல்லையாடி... ‘
அவனைக் கடக்கும்போது என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை.

அந்த ‘டி‘ அவனுடைய மனைவியாக இருக்கக் கூடும்... அல்லது...
என்னுடைய யூகங்கள் புதுப்புது வடிவமெடுப்பதற்குள் வீடு வந்துவிட்டது.

வாசலில் ஒரு குட்டிப் பூனை. அதற்கு அம்மாவோ அப்பாவோ கிடையாது. என்னைப் பார்த்ததும் மரத்தில் தொற்றிக் கொண்டது.

அந்தப் பூனை குட்டியைப் போல எங்கோ ஒரு குழந்தை... அந்த மரத்தடி ஆணுக்கும், அவன் கெஞ்சிக் கொண்டிருந்த ‘டி‘க்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கிறதோ...

அவர்கள் இருவரையும் விடுங்கள். அந்தக் குழந்தை தன் உணர்வுகளை யாரிடம், எப்படிச் சொல்லும்.

மியாவ் என்றது குட்டிப் பூனை, எங்கோ வெறித்தபடி!

மியாவ் என்றால் என்ன? உங்களில் யாருக்காவது அர்த்தம் தெரியுமா?

Friday, August 17, 2012

In & Out Chennai - நீதானே என் பொன்வசந்தம்


Illayaraja is .... 

கோடிட்ட இடத்தை நான் நிரப்ப விரும்பவில்லை. உணர்வின் மிகுதியில் இளையராஜாவே தன்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் இவை. ஜெயா டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக இயக்குனர் கௌதம் மேனன் அவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இருவரும் மிகச் சாதாரணமாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்த அந்த பேட்டியில், சட்டென ஏதோ ஒரு கணத்தில், இளையராஜா அந்த வார்த்தைகளை உச்சரித்தார். அவர் அப்படி சொன்ன பின், அவரே ஒரு கணம் மௌனித்தார். அவருடைய இசையின் இடையில் நிகழும் மௌனங்களைப் போல, ஓராயிரம் ஸ்வரக்கோர்வைகளை உள்ளடக்கிய அடர்த்தியான மௌனம். இதை எதிர்பாராத கௌதம் மேனன், நிலைத்த பார்வையுடன் என்ன பதில்சொல்வது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார். உலகம் ஒரு நொடி நின்றது போல அதைப் பார்த்துக் கொண்டிருந்த நானும் உறைந்து போனேன். சில நொடிகள்தான்...இளையராஜாவே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

'தவறுக்காக ஒருவன் பெருமைப்படுவானா? இந்த பிறப்பே ஒரு தவறு. இந்த பிறப்புக்காக நான் பெருமைபட்டுக் கொள்ள என்ன இருக்கிறது?' எதற்காக நான் பிறந்தேன். எதற்காக இந்த வாழ்க்கை, இந்த இசை, இந்த பாராட்டு?'

இளையராஜாவின் இந்த வார்த்தைகளை எத்துனை பேர் புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. பின்வரும் கவிதையை சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கவிதை இளையராஜா கூறிய வார்த்தைகளின் ஆழத்தை விளக்கக்கூடும்.

பசித்தவாயை பூமியின் இனிய மார்பில் பதிந்திருக்கும் மரம்.
தினம் முழுதும் கடவுளை நோக்கி
இலைநிறை கைகளை உயர்த்தி பிரார்த்திக்கும் மரம்.
கோடையில் கூந்தலில் பறவைக் கூடுகள் அணிந்து
குளிரில் மார்பில் பனிக்கட்டி படிந்து
மழையுடன் நெருக்கமாய் வாழும் மரம்.

இந்தக் கவிதை இத்துடன் முடிந்திருந்தால், அது மிகச் சாதாரணம். அதற்கடுத்த இரு வரிகள்தான் உணர்வுகளின் ஆழத்தில் ஆச்சரிய வளையங்களை எழுப்பக்கூடியவை.

கவிதைகள் செய்வது என் போன்ற முட்டாள்கள்.
கடவுள் ஒருவர்தான் மரம் செய்யத் தெரிந்தவர்!

இளையராஜா இதைத்தான் சொன்னார். 

பாடல்கள் சமைப்பது என் போன்ற சாதாரணர்கள், 
கடவுள் ஒருவர்தான் இசையை செய்யத் தெரிந்தவர்! 

எதிலும் உச்சம் தொட்டவர்கள் தங்களைத் தாங்களே கடவுளின் தேசத்தில் துச்சமாகத்தான் நினைக்கிறார்கள். சமுத்திரம் ஆரவாரம் செய்யும். நான் சமுத்திரத்தின் ஒரு துளி எனும்போது கரையின் ஆரவாரமோ, ஆழத்தின் அமைதியோ, எதுவுமே எனக்கு சொந்தமில்லை. எல்லாம் சமுத்திரத்திற்கே சொந்தம். நிறைய சாதித்தவர்கள் இப்படி ஒரு நிலைக்கு தங்களை தாங்களே இழுத்துச் செல்ல முயல்கிறார்கள். இசையில் உன்னதம் தொட்டிருக்கும் இளையராஜா தன்னை இசைச் சமுத்திரத்தில் கரைந்து போன ஒரு ஒலித்துளியாக நினைத்துக் கொண்டு உச்சரித்த வார்த்தைகள், அவருடைய இசையைப் போலவே என் ஆன்மாவை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர் நீச்சலும், எதிர்நீட்டலும்!
ICE AGE - 3D இந்தப் படம் சென்னையில் வெளியாகிவிட்டதா? வெளியாகியுள்ளதா? எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் வியாபாரத் தொடர்புடைய ஒருவர் டிவிட்டரில் படம் வெற்றி என அறிவித்திருந்தார். படம் நன்றாக உள்ளதா? இல்லையா? என இரசிகர்கள் பார்த்து உணரும் முன்பே, படத்தின் வசூல் பற்றிய கணக்குகளை தீர்மானிக்கும் வியாபார உத்திகள் கோடம்பாக்க சினிமாவுக்குள் வந்துவிட்டது. தற்போது ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி‘ திரைப்படம் 3Dயில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் தியேட்டர்களைத் தொடும் என செய்திகள் கசிகின்றன. இதைக் கேள்விப்பட்டதும், சிவாஜிக்கு பதில் எந்திரனை 3Dயில் மாற்றலாம் என சில இரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய சினிமாவுக்கு மை டியர் குட்டிச் சாத்தான்தான் முதல் 3D. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் அத்தகைய முயற்சி ஒரு எதிர் நீச்சல். அந்த வகையில் குட்டிச் சாத்தானுக்கு ஒரு சபாஷ்! எந்திரனை இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று வர்ணித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எம்.ஜி.ஆர் நடித்து ஜெனோவா என்றொரு சயின்ஸ் பிக்ஷன் படம் அந்தக் கால தூர்தர்ஷனிலேயே பார்த்திருக்கிறேன். 

முதலாவதாக வந்ததோ, அடுத்ததோ எதுவாக இருந்தாலும் சயின்ஸ் பிக்ஷன் என்பதற்கு கதையில் ஒரு எதிர்நீட்டல் (Extra Polation) இருக்க வேண்டும். அதாவது இன்றைய கண்டுபிடிப்புகள், இன்றைய நடை முறை வாழ்விலும், நாளைய வாழ்விலும் எத்தகைய மாற்றங்களைத் தரும் என்பது பற்றி, ஒரு நிஜம் தாண்டிய கற்பனை வேண்டும். உதாரணமாக இன்றைய மனிதர்கள் ஆன்லைன் வழியாக ரேஷனரிசி வாங்குகிறார்கள். நாளைய மனிதர்கள் கை, கால்களை ஸ்பேர்பார்ட்ஸ் கடைகளில் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இது போன்ற கற்பனை எதுவும் எந்திரனில் கிடையாது, சிட்டி ஒரு ரோபோ என்பதைத் தவிர. எனவே அது முழு சயின்ஸ் பிக்ஷன் அல்ல. ஆனாலும் எந்திரனை எனக்குப் பிடித்தது. அதற்கு காரணம் திரைக்கதையோ, இசையோ, நடிப்போ, டெக்னாலஜியோ அல்ல. எந்திரனைப் பொறுத்தவரை ரஜினி தன்னை முழுமையாக இயக்குனர் ஷங்கரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த ஒப்படைப்பு எனக்கு பிடித்தது. படம் உருவான கதை பற்றிய காட்சிகள், சில ரஜனி பேட்டிகள் போன்றவற்றை பார்த்தபோது, ஷங்கரை பரிபூரணமாக நம்பி ஒத்துழைத்த ரஜினி, ரஜினிக்கே புதுசு.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பரிபூரண ஒத்துழைப்பை இளையராஜா-கௌதம் மேனன் இணையில் கண்டேன்.  கௌதம் மேனனின் பாடி லாங்வேஜ், பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், லண்டன் நகரில் அவர்கள் நடந்து சென்ற புகைப்படங்கள், இளையராஜாவின் நிறைவான புன்னகை, எனக்கு அப்படி ஒரு எண்ணத்தையே தோற்றுவித்தது. ஜெயா டிவி பேட்டியை பார்த்தபின், என்னுடைய எண்ணம் சரி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இளையராஜாவின் வார்த்தைகளே அதற்கு அத்தாட்சி தந்தன.

‘எனக்கே இந்த அனுபவம் புதிது. வேறு எந்த இயக்குனரிடம் எனக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை‘ என்று திரும்பத் திரும்ப, வெவ்வேறு வார்த்தைகளில் இளையராஜா, தான் கௌதம் மேனனின் மேல் கொண்ட ஈர்ப்பை வெளிப்படுத்தினார். என் ஞாபகம் சரி என்றால், இதற்கு முன்பு, எந்த இயக்குனருடனும் இளையராஜா இத்தனை ஈடுபாடுகாட்டியதில்லை, அவர்களுடன் அமர்ந்து பேட்டியளித்ததும் இல்லை.

சங்கமம் திரைப்படத்தில் ‘மழைத் துளி மழைத் துளி மண்ணில் சங்கமம்‘ என ஒரு பாடல் வரும். அதில் மெல்லிசை மன்னர் ‘மகனே‘ என்றொரு வார்த்தையை உருகி உருகி உச்சரிக்கும்போது, ஏ.ஆர்.இரகுமானை அவர் ஆசிர்வதிப்பது போலவே எனக்கு கேட்கும். அது போல எளிதில் அணுக முடியாத மேதமை பொருந்திய தந்தையை, புத்திசாலி மகன் தன் சாமர்த்தியத்தால் ஈர்த்து அவருடன் இணைந்து, கம்பீர வெட்கத்துடன் ஒரு காலை வாக்கிங் சென்றது போல இருந்தது அன்றைய இளையராஜா-கௌதம்மேனன் பேட்டி. ‘ஹோய் பாத்தியா எங்கப்பாவை.. யார் தெரியுமா அவரு.. ராஜாடா..‘ என்று பெருமையும், நம்பிக்கையும், பணிவும் பொங்க சொன்னது போல இருந்தது, கௌதம்மேனனின் ஒவ்வொரு வார்த்தையும்.

இந்த விதை நான் போட்டது, இதை ஆண்டு அனுபவிச்சு அடுத்த தலைமுறைக்கும் நீதான் எடுத்துட்டுப் போகணும், என்று தேவர் மகனில் சிவாஜி, தன் பட்டணத்து மகன் கமலுக்கு அறிவுறுத்துவார். கௌதம் மேனன் நீதானே பொன்வசந்தம் படத்தின் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறார். நேற்று தான் கேட்டு வளர்ந்த இளையராஜா இசையை இன்றைய தலைமுறைக்கும் அதே வீச்சுடன் அறிமுகப்படுத்த முன்வந்திருக்கிறார். கர்ணன் திரைப்படம் டிஜிட்டலில் உயிர் பெற்று, இன்றைய தலைமுறையின் சில நூறு பேர்களையாவது தொட்டதில் எனக்கு பலத்த சந்தோஷம். அதே போல ஒரு செய்தியாக, ஒரு தகவலாக, ஒரு பழைய பாடலாக மட்டுமல்லாமல், இளையராஜா, இளைஞர்களின் ராஜாவாகவே அறிமுகப்போகிறார் என்பது எனக்கு புத்துணைர்வை தருகிறது. இளையராஜாவுக்கும் ஒரு உற்சாகம் திரும்பி வந்திருப்பதாக உணர்கிறேன். 


ஓவியர் ஜீவாவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஜீவ்ஸ் என்று அவரை செல்லமாக அழைப்பேன். ஓவியர் என்றாலும், திரைச்சீலைகள் என்ற திரைப்படம் பற்றிய புத்தகம் எழுதி அதற்காக தேசிய விருது பெற்றவர். கடந்த வாரம் கோவை சென்றிருந்த போது, மரக்கடை வீதியில் இருந்த அவருடைய அலுவலகத்தில் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் சென்றபோது, இன்னமும் கண்கள் வரையப்படாத ஒரு புத்தர் ஓவியமும், கண்களில் தன் உணர்வுகள் கொப்பளிக்க உற்றுப் பார்த்த ஒரு ஓவியமும் அவருடைய மேஜையில் இருந்தன. சினிமாவுக்கு பேனர் வரைந்த காலத்தில் இருந்த திருப்தி, ஃபோட்டோஷாப்பில் தயாராகும் பிளக்ஸ் பேனர்களில் இல்லை. அந்த அலுப்பும் சலிப்பும் என்னை ஆக்கிரமிக்கும்போதெல்லாம், இது போல வரைந்து வரைந்து குவிப்பேன் என்றார். 

இதுதானே வாழ்க்கை!
அணுவுக்குள் அணுவாகி
அப்பாலுக்குள் அப்பாலாகி
ஒரு புள்ளியில் தோன்றி
புள்ளியில் மறையும்
ஒரு புள்ளி!
இதுதானே வாழ்க்கை!

இது தற்போது தயாரிப்பில் இருக்கும் நான் இயக்கும் திரைப்படத்தில் வெளிவரப்போகும் பாடல் வரிகள். இவற்றை அவரிடம் காண்பித்து, அந்தப் பாடல்களுக்கான ஓவியத் தேவைகள் பற்றி கேட்டேன்.  மேதைகள் அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஜீவாவும் பிடிகொடுத்து பேசவில்லை. கௌதம் மேனன், இளையராஜாவை ஈர்த்தது போல, நானும் அவரை ஈர்ப்பேன். இசையமைக்கப்பட்டிருக்கும் அந்த பாடல் வரிகளுக்கு அவரையே ஓவியம் வரையச் செய்வேன்.

இளையராஜாவின் மேதைமையை கௌதம் மேனன் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறார். இதே போல, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் தேவகானங்களையும் அடுத்த தலைமுறைக்கு, இன்றைய தலைமுறை இயக்குனர் யாராவது இட்டுச் செல்ல வேண்டும். 

இது என் ஆசை மட்டுமல்ல, தீராத வேட்கை என்றும் சொல்லலாம்.

 அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த மேதைகளின் இசை கேட்டு வளர வேண்டும் என்பது ஆவல்.
‘என்னோடு வா..வா.. என்று சொல்ல மாட்டேன். 
உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன்‘

நீங்கள் எனக்காக எழுதிய வரிகள் என்று அந்த பேட்டியில், இளையராஜாவிடமே கௌதம்மேனன் பெருமைபட்டுக் கொண்டார்.
எனக்கென்னமோ இளையராஜாவின் இசையுடன் உலவும் காற்று, நம் எல்லோரையுமே பார்த்து இப்படிப் பாடுவதாகத் தோன்றுகிறது.

ஐ லவ் மியூசிக்! ஐ லவ் இளையராஜா!
கட்டுரையின் முதல் வரியில் உள்ள கோடிட்ட இடத்தை Music என்று நிரப்பிக் கொள்ளுங்கள்!

Thursday, August 16, 2012

ஃபேஸ்புக் நண்பர் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதம்

வணக்கம் கலைஞர் அவர்களே, 

பல தலைமுறைகள் கண்ட நீங்கள், இன்றைய இணைய தலைமுறையையும் நேரடியாக சந்திக்க வந்ததை பலத்த கைதட்டல்களுடன் வரவேற்கிறோம்.

சரியோ, தவறோ இயன்றவரை பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உங்கள் கருத்துகளை எங்களிடம் கூறிவருகி
றீர்கள்.

அரசியல் களம் பல கண்டது உங்கள் பேனா! நாட்டின் தலையெழுத்தை புரட்டிப் போட்ட பல விவாதங்களை துவக்கியும், நடத்தியும் வைத்திருக்கிறது உங்கள் பேனா! உங்களுடைய அனுபவம் வாய்ந்த பேனா, இனி எங்களுடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லும் என்பது இனிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

உங்கள் மீதும், உங்கள் இயக்கம் மீதும் இங்கே எத்தனையோ விமர்சனங்கள் உண்டு, ஆதரவுக் குரல்களும் உண்டு. இவற்றையெல்லாம் சமாளிக்கத்தான் நீங்கள் இணையம் வந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

உங்களை நாங்கள் கேள்வி கேட்க முடியுமா? என தயக்கமும், எங்கள் விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? என அச்சமும் எங்களில் சிலருக்கு இருக்கிறது. அவற்றை களைவீர்கள், எங்களுடன் கலந்து உரையாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதுகிறேன்.

வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வையும் உங்கள் பேனா நுனியில் வைத்திருப்பவர் நீங்கள். கட்டற்ற சுதந்திரம் தந்திருக்கும் இணையம், உங்களைப் போன்ற மாபெரும் தலைவர்களையும் சந்திக்க, உரையாட வாய்ப்பு தந்திருக்கிறது. இதனை நாங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்வோம்.

உங்களைத் தொடர்ந்து, உங்களைப் போன்ற இதர தலைவர்களும் இணையத்திற்கு வர வேண்டும். விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும். மக்களுக்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் இதனால் குறையும்.

அப்படி ஒரு நிலையை நீங்கள் விரைவில் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் ஒரு முறை உங்களை இணைய உலகிற்கு அன்புடனும், ஆரவாரத்துடனும் வரவேற்கிறேன்.

இப்படிக்கு உங்கள் ஃபேஸ்புக் நண்பன்.
(ஃபேஸ்புக் எல்லோரையும் இப்படித்தான் அறிமுகம் செய்து வைக்கிறது)

Tuesday, August 14, 2012

அங்கும் இங்கும் - கனவுகள்


சித்த மருத்துவக் கனவு

‘ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமாக கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக் குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல, பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது.‘

மருத்துவர் சிவராமன்
(வலது முதல் நபர் )
டாக்டர் கு. சிவராமன் எழுதியுள்ள ‘மருந்தென வேண்டாவாம் . . .‘ என்ற புத்தகத்தின் இந்த அறிமுக வார்த்தைகளை படித்து அசந்து போனேன். பொதுவாக உணவுப் பழக்கம் பற்றிய புத்தகங்கள், திகட்டிப் போன திருமண விருந்து போல இருக்கும். ஆனால் இந்த நூலின் பின் அட்டையில் இதைப் படித்ததும், முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.

முதல் அத்தியாயமே அருமை! அன்னைக்கான உணவு! பொதுவாக நமக்கு உணவு ஊட்டுபவள் அன்னை. அவளுக்கு உணவு ஊட்டுவது எப்படி? எந்த வகையான உணவு ஊட்ட வேண்டும் என்று முதல் அத்தியாயமே வித்தியாசமாக இருக்கிறது.

‘ஒரு கவள சோற்றை நாம் சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக, எத்தனை மணி நேரம் கால் கடுக்க நின்று, கதை சொல்லி காக்காய் காண்பித்து, இப்போதைய நமது ‘சிக்‘ அல்லது ‘சிக்ஸ் பேக்‘ உடம்பிற்கு அவர்கள் அடித்தளம் போட்டிருப்பார்கள்? அவர்களுக்காக வயோதிக சங்கடங்களை பொறுத்து நம்மோடு இணைத்து வைத்திருப்பதில்தான் அவர்கள் நல்வாழ்வு துவங்கும். காக்கை கதை கேட்கும்போதே, நம்மையறியாமல் உணவு உள்ளே இறங்கிவிடும். அது போல இது போல அழகான பகிர்வுகளுடன் அவர் உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொல்லும்போது, இலகுவாக மனதில்பதிகிறது. சினிமா மால்களுக்கு செல்வதை குறைத்து, மாதத்தில் ஒரு நாள் புத்தகக் கடைகளுக்கு சென்று இது போல புத்தகங்களை வாசிக்கலாம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். Inaguration of 'Society for Integrative Health Research' என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இந்த புத்தகமும், அதை எழுதிய மருத்துவர் கு.சிவராமனும் அறிமுகமானார்கள். ஓரிரு வார்த்தைகள்தான். அதற்குள் அவரை கருத்தரங்கிற்கு வந்தவர்கள் கவர்ந்து கொண்டுவிட்டார்கள். கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயம் இந்த புத்தகத்தைப் போலவே மிக முக்கியமானது. மேற்கத்திய மருந்து நிறுவனங்கள், திட்டமிட்டு எப்படி நமது சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி பேசினார்கள். சித்த மருத்துவத்தில் சாதாரண அரிப்பு முதல் கான்சர் வரை மருந்து உள்ளது என்பதை ஆர்வத்துடனும், ஆதங்கத்துடனும் பகிரந்து கொண்டார்கள்.

ஆதங்கத்துக்கு காரணம், மக்களிடம் சித்த மருத்துவத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைவாக உள்ளது என்பதுதான். ஆனால் குறைபட்டுக் கொள்வதுடன் நின்றுவிடாமல், மக்களிடம் சித்த மருத்துவம் பிரபலமாக என்ன வழி என்றும் பல கருத்துகளை கூறினார்கள். அதில் ஒரு அம்சம் கவனிக்கத்தக்கது. சித்த மருத்துவம், மேற்கத்திய மருந்துகளைப் போல பிராண்டடாக கிடைப்பதில்லை. சைதாப்பேட்டை சித்த மருத்துவரும், கோயமுத்தூர் சித்த மருத்துவரும் மருத்துவத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. சித்த மருந்து சாப்பிடும் ஒரு சைதாப்பேட்டைவாசி கோயமுத்தூர் செல்கிறார் எனக் கொள்வோம். வயிற்று வலி வந்தால் சைதாப்பேட்டை மருத்துவருக்குதான் ஃபோன் செய்வாரே தவிர, கோயமுத்தூர் மருத்துவரை நம்ப மாட்டார். ஆனால் அவரே மேற்கத்திய மருந்து சாப்பிடுபவராக இருந்தால், சைதாப்பேட்டையில் வாங்கிய அதே டோலோபாரை, கோயமுத்தூர் பார்மஸியில் வாங்கிக் கொள்வார். பிராண்ட் பெயர் ஒரு நம்பிக்கையை தருகிறது.

சித்த மருத்துவர்கள் தனித் தனியாக ஒரு தீவு போல இயங்குவதால், மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பிராண்டாக வெளிவருவதில் சாத்தியமே இல்லை. இதுவே அவர்கள் ஒன்றுபட்டு இந்த வியாதிக்கு இதுதான் தீர்வு என்று ஒரு மருந்து பட்டியல் தயாரித்து, மக்கள் எங்கு சென்றாலும் எளிதாக கிடைக்க வழி செய்தால், நம்பகத்தன்மை பெருகும். மேற்கத்திய மருந்துகளைப் போல பணம் பிடுங்காமல், பக்க விளைவுகள் இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் இணைய வேண்டும், அதற்காகத்தான் இந்த அமைப்பு என்று அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் ஒன்றிணையும் அந்த நாள் எப்போது வரும் என்று, மருத்துவர் சிவராமன் போலவே நானும் காத்திருக்கிறேன்.

ஈழக் கனவு
கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி முடித்துவிட்டார். இது வெற்றி-தோல்வி, பலன்-பலனில்லை என பல விவாதங்கள், இணையச் சண்டைகள் அடுத்த பத்து நாட்களை அபகரித்துக்கொள்ளும்.

இந்த மாநாட்டில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்த டெஸோ மாநாடுகளை வட மாநிலங்களிலும் நடத்துங்கள். அப்போதுதான் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியும் என்று பேசினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு இனப்பிரச்சனை தமிழகத்தை தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் உணரப்படவே இல்லை என்பதுதான் இதன் சாராம்சம். இன்று வரை தமிழக அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கிப் பிரச்சனையாக மட்டுமே ஈழப் பிரச்சனை சுருங்கிவிட்டது.

எனவே கருணாநிதி,ஜெயலலிதா,வை.கோ,நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.இந்திய அரசை ஈழத்தமிழர் விஷயத்தில் நிர்ப்பந்திக்க ஒரே வழி, இந்தப் பிரச்சனையை தமிழகம் தாண்டியும், இந்தியா முழுவதும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு அல்லாத பிற மாநில இந்திய தலைவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் விவாதங்களை சர்வதேச அளவில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். ஐ.நா.வில் குரல் எழுப்பக் கூடிய நாடுகளின் நட்பையும், ஆதரவையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் திரட்ட வேண்டும். இறுதியாக ஐ.நா.வின் நிர்பந்தத்துடன் இலங்கை அரசை ஈழம் தொடர்பான நியாயமான அரசியல் முடிவுகள் எடுக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், மிக மிக முக்கியமாக, இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒரு வலுவான அரசியல் தலைவரை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கருணாநிதி, ஜெயலலிதாவையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. தாங்களே முடிவெடுக்கக் கூடிய, தாங்களே தங்களை வழிநடத்திக் கொள்ளக் கூடிய ஒரு ஈழத் தமிழ் தலைவர் காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவரின் கீழ் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரு வேளை தனி ஈழமே கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள வலுவும், ஈர்ப்பும், எதிர்கால திட்டமும் உள்ள ஈழ தமிழ் அரசியல் தலைமையே இப்போதைய தேவை. இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது என்றாலும், இதெல்லாம் நடந்தே ஆக வேண்டும். 

எத்தனை எத்தனை உயிர்கள், விவரிக்க முடியாத தியாகங்கள்! இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசியல் தலைவர்களையே நம்பிக் கொண்டிருக்கும் போக்கை கைவிட்டு, தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ள ஒரு ஈழ அரசியல் தலைமை விரைவில் வடிவமெடுக்க வேண்டும். அப்படி வடிவமெடுக்காவிட்டால், ஈழம் என்கிற நெடும் கனவு, வெறும் கனவாகப் போய்விடும். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது. விரைவில் ஈழத் தமிழர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். இதுவே என் எண்ணம், இதுவே என் பிராத்தனை!

www.aanthaireporter.comல் வெளியான கட்டுரை!

Tuesday, August 7, 2012

இன் & அவுட் சென்னை - கிராஷ்கோர்ஸ்!

மீண்டும் கொடைக்கானல்! இம்முறை இன்னமும் தமிழில் பெயரிடப்படாத Crash Course என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக. எட்டு பேர் கொண்ட மிகச்சுருக்கமான குழு. ஒரு கோடி பங்களா என்று பெயர் பெற்ற பங்களாவில் படப்பிடிப்பு. எனக்கு இணை தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் அவதாரம். அவ்வப்போது குறும்படங்களுக்கு காமிரா பிடித்திருக்கிறேன். (எல்லாம் Canon 7D கொடுத்த தைரியம்). நானே இயக்குனராகவும் இருந்ததால் ஒளிப்பதிவாளராகவும் இருப்பது எளிதாகத்தான் இருந்தது. ஆனால் எனக்குள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டிவிட்டு, வேறொரு இயக்குனரின் ஐடியாக்களை மட்டும் பதிவு செய்யும் ஒளிப்பதிவாளராக மட்டும் களத்தில் நிற்பது, முதலிரு நாட்களுக்கு கடினமாக இருந்தது. நானே இயக்குனராக இருந்தபோது, ஒளிப்பதிவுத் திறமையில் உள்ள எனது பலவீனங்களை தவிர்த்துவிடுவேன். ஆனால் இயக்குனர் முரளியிடம் என் பாச்சா பலிக்கவில்லை.

டி.எஸ்.முரளிதரன் இசையமைப்பாளராக இருந்து இயக்குனராக முதல் முயற்சி செய்யும் படம் இது. சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் என்றால், உங்களில் பலர் அவரை எளிதாக அடையாளம் கண்டு கொள்வீர்கள். சமையல் குறிப்பு படித்து பனியாரம் செய்தால் அதிரசம் வந்து நிற்கும். அதுபோல விரைவாக செய்ய வேண்டும் என்ற துரிதப்படுத்தலால் ஆரம்பத்தில் லைட்டிங் எனக்கு கண்கட்டி வித்தையாக இருந்தது. ஆனால் வாழ்க்கையே ஒரு கிராஷ் கோர்ஸ்தானே. சட்டென்று தயார் ஆகிவிட்டேன். ஒரு டீ குடிக்கும் இடைவெளியில் லைட்டிங்கை இடம் மாற்றி வேறொரு பரிமாணம் தரப் பழகிவிட்டேன். தற்போது எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. குறையும் நிறையும் தெரியவரும். அதை பின்னர் பட்டியலிடுகிறேன்.

கிராஷ் கோர்ஸ் - 1 :
கற்க வேண்டுமென்றால் நாம் நினைத்ததை நாமே செய்யணும்.
பழக வேண்டுமென்றால் மற்றவர் கேட்பதை நாமே செய்யணும்.

பிஸ்மில்லாகானின் ஷெனாயில் ஹிந்தோளத்தை நேடியாக கேட்டிருக்கிறீர்களா? விருகம்பாக்கம் முதல் தரமணி  வரை சைக்கிளிலேயே பயணிக்க ஏதுவாக உடல் தெம்பும், வாகன மிரட்டல் இல்லாத தெருக்களும் இருந்த காலம். ஐஐடியில் அப்போது மார்டிகிராஸ் என்று பெயரிடப்பட்ட ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் பிரபலம். பிரபல இசைஞர்கள் எல்லாம் வருடா வருடம் வருவார்கள். இரவு பனியில் நனைந்து கொண்டு கிளாசிகல் இசை கச்சேரிகளுக்கு மட்டும் நண்பர்களுடன் சைக்கிளிலேயே சென்று வருவேன். கர்நாடக இசை போல அல்லாமல் ஹிந்துஸ்தானி மிகவும் நிதானமானது. பிஸ்மில்லாகானின் ஷெனாய் ஹிந்தோளத்தை பிரசவித்தபோது ஆரோகரணம் அவரோகணத்தில்  குழந்தை வளர்ப்பு போல கொஞ்சம் கொஞ்சமாக தொட்டிலிட்டு, குளிப்பாட்டி, உடை மாற்றி ஜீவஸ்வரங்களை உச்சி முகர்ந்த கணத்தில், கடவுள் அருகே வந்து கன்னத்தில் முத்தமிடுவது போல இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் கேட்ட அந்த லைவ் பிஸ்மில்லாகான் ஷெனாயை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

மோட்டார் சுந்தரம் பிள்ளையில் மனமே முருகனின் மயில்வாகனம் என்று எம்.எஸ்.வி ஹிந்தோளத்தை கையாண்டிருப்பார். இளமைக்காலம் படத்தில் ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா என்று இளையராஜாவும் தூள் கிளப்பியிருப்பார். ஆனால் எனக்குப் பிடித்தது இன்னும் பழைய எவர் க்ரீன் ஹிட். ஹிந்தோளத்தை வைத்து துடிப்பான ‘கண்களும் கவிபாடுதே...‘ என ஒரு மெட்டமைத்திருக்கிறார் ஆதி
நாராயணராவ்.

கிராஷ் கோர்ஸ் - 2:
கடவுளை தரிசிக்க கண் மூடி தியானிக்கலாம் (அ) கண் மூடி பிஸ்மில்லாகானின் ஷெனாயில் லயிக்கலாம்.

விருகம்பாக்கம் பாரத் பெட்ரோலியம் பங்க்கில் காற்று பிடிக்கும் பான்பராக் வாய் பையனுக்கு ஒரு அட்வைஸ். தம்பி பான்பராக் கெடுதி. காலை 6 மணிக்கே பான்பராக் அதனினும் கெடுதி. உன் துவைக்காத யூனிஃபார்மையும் மீறி, நேற்றைய இரவின் டாஸ்மாக் நாற்றத்தையும் சகித்துக் கொண்டுதான் இன்று என் மோட்டர் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டேன். டயருக்கு காற்று இறங்கிவிட்டால் மீண்டும் காற்றடித்துக் கொள்ளலாம். மனிதனுக்கு மூச்சு நின்றுவிட்டால் இதயத்துக்கு காற்றடிக்கும் பம்பு இன்னும் வரவில்லை. சந்தேகம் ஏதுமிருப்பின், பான்பராக்கை துப்பிவிட்டு வந்து என்னிடம் கேள். சட்டையில் பான்பராக் கரை படிந்துவிட்டால் போகாதாம். ஆனால் அந்தப் பழக்கம் விட்டுவிடக் கூடியதே.. சீக்கிரம் விட்டுவிடு.

கிராஷ் கோர்ஸ் - 3:
கெட்டப் பழக்கங்களை கை விட சிறந்த வழி. தன்னிடம் கெட்டப் பழக்கம் இருப்பதை உடனடியாக ஒப்புக் கொள்வதே.

ஒரு வாரகாலமாக எனக்குப் பிடித்த ஒரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடலாமா என்று தமிழக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறதாம். ஒரு வதந்தியை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்பார்கள். அதனால் இந்த வதந்தியை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலம் இந்த வதந்தி உண்மையாகிவிடுமானால் அதை விட சந்தோஷம் வேறெதுவும் இல்லை. சாராயக்கடையை நடத்திதான் இந்த அரசாங்கத்தை நடத்த முடியும் என்ற கொடுமையான நிலையிலிருந்து வெளிவருவது கடினம்தான். ஆனாலும் எத்தனையோ கோடி குடியர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து கொஞ்சமாவது விடுபட டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடிவைப்பது உதவும்.

கிராஷ் கோர்ஸ் - 4 :
அரசு தன் குடிகளை காக்க குடியை ஒழிக்கணும்.

கடவுள் விளையாட்டு பற்றி ஏதாவது தெரியுமா என்றார் நண்பர். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் சில எபிசோடுகள் இருக்கின்றன என்றேன். நண்பர் கோபமாகிவிட்டார். நானும் சளைக்கவில்லை. திருவிளையாடல் தருமி மாதிரி, மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த சில தகவல்கள் என்னிடம் உள்ளன. வேண்டுமானால் அவற்றைத் தருகிறேன். எவ்வளவு சரியோ அவ்வளவு பரிசு கொடுங்கள் என்றேன். நண்பர் நம்பியாராகி பற்களை நறநறத்தபடி ஒலிம்பிக் பார்க்கப் போய்விட்டார். ஒலிம்பிக்கில் கடவுள் விளையாட்டை காட்டுகிறார்களா என்ன?

Playing God is dangerous என்று அவ்வப்போது நமது சமகால நவீன விஞ்ஞானிகளுக்கு செக் வைக்கப்படுகிறது. டெஸ்ட் டியூப் பேபி, குளோனிங் செய்யப்பட்ட டாலி ஆடு, ஒரு மனிதனின் டி.என்.ஏ வரைபடம் என ஒவ்வொரு அறிவியல் சாகசத்திற்குப் பின்னும், பாராட்டுகளை விட அதிகமாக கண்டனங்கள்தான் அதிகம் வந்தன. அறிவியல் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகள் என்பது, ஒரு நோயை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவோ பயன்படவேண்டும். அவனுடைய தினசரி நடவடிக்கைகள் சுலபமானதாக மாற்ற உதவ வேண்டும். ஆனால் டி.என்.ஏ வரைபடங்களை வைத்து ஒரு மனிதனை உருவாக்குகிற சமாச்சாரம் எல்லாம் கடவுளின் வேலை. அவருடைய வேலையை பார்க்க விஞ்ஞானிகளுக்கு அனுமதியில்லை. அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் பல பயங்கரங்கள் உருவாகும், என்று உலகெங்கும் கண்டனக் குரல்கள் வந்தவண்ணம் உள்ளன. கடவுள் விளையாட்டை மனிதன் விளையாடுவது ஒருபுறம் இருக்கட்டும். 27 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள குழாய்களை பூமியில் புதைத்து அதற்குள் சப்-அடாமிக் துகள்களை மோதவிட்டு 99.9சதவிகிதம் கடவுளையே உருவாக்கிவிட்டோம் என்று ஒரு விஞ்ஞான உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன சொல்வது. அதாவது இந்த உலகை உருவாக்கிய மூலத்தை(கடவுளை) கண்டுபிடித்துவிட்டார்களாம். கண்ணதாசன் ஒரு முறை கேட்டார். மூலம் என ஒன்றிருந்தால் ஆதிமூலம் என்று ஒன்றிருக்கும். அது எது? என்றார். ஏ.பி.நாகராஜன் சார். கண்ணதாசனின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது போல ஏதாவது ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருக்கிறாரா என்று யாராவது ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைக் கேட்கலாம்.

கிராஷ் கோர்ஸ் - 5:
கடவுளை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க சிறந்த வழி, கடவுளை சதா சர்வகாலமும் மறுத்துக் கொண்டிருப்பதே.

இளைய காமராசர். இது நான் எழுதியுள்ள ஒரு புத்தகத்தின் தலைப்பு. CSC கம்ப்யூட்டர் நிறுவனத்தின் (மறைந்த) தலைவர் திரு.அய்யம்பெருமாள் பற்றி நான் எழுதிய இந்தப் புத்தகம் கடந்தவாரம் ஒரு நெகிழ்வான விழாவில் வெளியானது. வழக்கமான புத்தக வெளியீடாக இல்லாமல், CSC நிறுவனத்தின் தனியுரிமை(Franchise) கிளை நடத்திவருபவர்கள், அய்யம்பெருமாளுடன் தங்கள் அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுடைய உணர்வுகள் எந்தப் புத்தகத்திலும் அடங்காதவை. பரிசுத்தமான உணர்வுகள் வார்த்தைகளில் சிக்குவதில்லை.

கிராஷ் கோர்ஸ் - 6 :
இறந்த பின்னும் வாழலாம். இருக்கும்போது உடனிருப்பவரை வாழ வைத்தால்.

இந்த வாரக் கேள்வி.
கிராஷ் கோர்ஸ் -  இதற்கு சரியான தமிழாக்கம் என்ன?

மேரி கோம்! - இந்திய பெண்களுக்கு ரோல்மாடல்!

மணிப்பூர் நகரமே குஷியில் துள்ளிக் குதிக்கிறது. அதிரும் டிரம் இசையால் இம்பால் இளைஞர்கள் நகரையே குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒலிம்பிக் சலிப்பில் இருந்த இந்திய நாடு, நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது.

காரணம் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்! 51 கிலோ எடைப் பிரிவில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காலிறுதி வெற்றி, அவருக்கு வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருக்கிறது.

29 வயதான அவர் இரு குழந்தைகளுக்கு தாய்! ஹாயாக பிடித்ததை சமைத்துக் கொண்டு, அபத்த சீரியல்களில் நேரம் கழிக்கலாம். ஆனால் மேரி கோம் அப்படி இருக்கவில்லை. மணிப்பூர் காவல்துறையில் தற்போது ASPயாக பணிபுரிகிறார். ஆனால் சிறுவயதிலிருந்தே குத்துச் சண்டையின் மேல் காதல். அவருடைய கரங்கள், தன் இரட்டைக் குழந்தைகளை கொஞ்சியதை விட, பாக்ஸிங் கையுறைகளை அணிந்திருந்த நேரம்தான் அதிகம்.

முரட்டுத்தனமாக விளையாடாதே. நுணுக்கங்களை பயன்படுத்து என்று மட்டும் என் மனைவிக்கு சொன்னேன். அவள் என்னை மட்டுமல்ல, மணிப்பூரையும், இந்தியாவையும் பெருமைப்படுத்திவிட்டாள் என்று பூரிக்கிறார் கணவர்.

‘அவருக்கு தங்கம் வெல்லும் தகுதியுள்ளது. அவர் வெல்வார் என்று நம்பிக்கையும் இருக்கிறது‘, என்று ஊக்கப்படுத்துகிறார் அவருடைய முதல் கோச் இபம்சா சிங்.

‘அடுத்த இரு போட்டிகளையும் வென்று அவர் தங்கம் வெல்ல கடவுளை பிரார்த்திப்பேன்‘ என்று நெகிழ்கிறார், மணிப்பூர் ஒலிம்பிக் அசோஷியனின் செயலாளர் ரோமன் சிங்!

மேரி கோம், ஏற்கனவே ஐந்து முறை உலக சாம்பியனாக இருந்தவர். இரு தினங்களுக்கு முன் அவருடைய குழந்தைகளுக்கு பிறந்த நாள். இந்த வெற்றி அவருடைய குழந்தைகளுக்கு மட்டும் பிறந்த நாள் பரிசு அல்ல, இந்தியாவுக்கே பரிசுதான்.

இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை மேரி கோம்தான்.

எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக முன்னேறிவரும் இந்தியப் பெண்களுக்கு, புதிய ரோல் மாடல் மேர் கோம்!

Friday, August 3, 2012

மதுபானக் கடை - விமர்சனம்இந்தப் படத்தில் கதை என்று எதுவுமில்லை. கதை இருப்பதாக நினைத்தால் அது உங்கள் கற்பனையே என்ற டைட்டிலுடன் படம் துவங்குகிறது. சரி ஒரு குறும்புக்காக அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்தால்... டாஸ்மாக் மேல் சத்தியமாக படத்தில் கதையே இல்லை.

Sky Walk PVR இரவு காட்சிக்கு, நடிகர்கள், டெக்னீஷியன்கள் என மொத்த மதுபான டீமும் வந்திருந்தது. பின் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நடிகராக திரையில் தோன்றும்போதும் விசிலடித்துக் கொண்டிருந்தார்கள்.

மதுபானக் கடை. இதுதான் படத்தின் டைட்டில். இந்த டைட்டிலுக்கு ஏற்ப சீன் சொல்லு, என்று யாருக்கோ ஒரு குவார்ட்டர் வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் போதையில் அவ்வப்போது துண்டு துண்டாக சொன்ன காட்சிகளை அப்படியே படமாக எடுத்து தள்ளிவிட்டார்கள். நடுநடுவே ஆம்லேட், மீன் வறுவல் எல்லாம் வாங்கித் தந்திருக்கலாம். ஏனென்றால் அவ்வப்போது நடுநடுவே கதை போல சில காட்சிகள் வந்து செல்கின்றன.

இந்தப் படத்தின் காட்சிகளைப் போலவே நானும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் விமர்சனம் செய்ய முயற்சித்திருக்கிறேன்.

PVRல் கார்ன் சூப்பர். ஆனால் ஐஸ்க்ரீம் அளவும் பத்தாது, சுவையும் பத்தாது. வழக்கமாக நான் படம் பார்க்கும்போது நண்பர்கள் ஃபோன் அடிப்பார்கள். இந்த முறை அம்மாதிரி எந்த ரிலீஃபும் இல்லை.  தூக்கமும் வருவது போல வந்து டாஸ்மாக் நெடி தாங்காமல் தியேட்டருக்கு வெளியே ஓடிவிட்டது.

கூட்டமான பஸ் பயணத்தில் நெரிசலில் நசுங்கியபடியே அவ்வப்போது ஸ்டாப்பிங் வந்தாச்சா, என்று தலையை குனிந்து எட்டிப் பார்க்கும்போது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சில காட்சிகள் மனதில் பதியும். குடிகாரர்களின் பேச்சும் அந்தக் காட்சிகள் போல தொடர்பில்லாமல் இருக்கும். இந்தப் படம் திட்டமிட்டே அப்படி எடுக்கப்பட்ட படமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

புறப்படும்போதே, ஐயய்யே இந்தப் படத்துக்கா என்றார் மனைவி. மதுபானக் கடை என்ற பெயர் பெண்களை தியேட்டருக்கு உள்ளேயே வரவிடாது. ஆனாலும் தியேட்டரில் இரு பெண்களைப் பார்த்தேன். அவர்கள் நண்பர்களுக்காக விசிலடித்தவர்களின் அம்மா (அ) அக்கா (அ) தங்கையாக இருக்கலாம். டாஸ்மாக் உள்ளே எப்படி இருக்கும் என்பதை அப்பெண்களுக்கு இந்தப் படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வழக்கமாக தியேட்டரை நெருங்கும்போது, நெரிசல் அதிகமாகி, முதல் பத்து நிமிடங்களை பிடுங்கிக் கொள்வது போல டிராபிக் மிரட்டல்கள் இருக்கும். ஆனால் நெல்சன் மாணிக்கம் சாலை வழக்கத்துக்கு மாறாக இரவு 10 மணிக்கே காலி. அதனால் வேறு வழியின்றி குறிப்பிட்ட நேரத்துக்குள் தியேட்டருக்குள் நுழைந்து, படத்தை முதல் காட்சியிலிருந்தே பார்க்க வேண்டியதாயிற்று.

சாக்கடையில் உழலும் பன்றிகள் கூட மேயத் தகுதியில்லாத டாஸ்மாக்கின் அருவருப்பான உள்பகுதியை இந்தப் படத்தில் குளோசப், வைட் ஆங்கிள் என Zoo, Museum பார்ப்பது போல, விதவிதமாகப் பார்க்கலாம்.

குடிகாரர்கள் வாந்தி எடுக்கும்போது அவ்வப்போது சில இரசிக்கத்தக்க தத்துவங்களையும் உதிர்ப்பார்கள். அதுபோல இப்படத்திலும் சில ஷார்ப் வசனங்கள் உண்டு.

செலவில்லாத கையடக்க டிஜிட்டல் காமிராக்களால் நேரக் கூடிய சில சினிமா அபத்தங்களில் ஒன்றுதான் இந்த மதுபானக்கடை.

அடிக்கடி டாஸ்மாக் செல்பவர்களுக்கு இதில் வந்து போகும் சில கதாபாத்திரங்கள் சுவாரசியம் தரக்கூடும். குடிகார நண்பர்களுடன் சைட் டிஷ்ஷை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு அவர்களின் அர்த்தமற்ற உளறல், இளிப்பு, அழுகை, ஆத்திரம் போன்றவற்றால் தலைவலியுடன் திரும்பி வந்த உணர்வுதான் எனக்கு.

தெரியாமல் உளறுபவர்கள் குடிகாரர்கள். இந்த மதுபானக்கடை குழு தெரிந்தே உளறியிருக்கிறது என்பது என் கருத்து. டாஸ்மாக் மட்டும் இல்லாதிருந்தால் இது போன்ற படங்கள் வந்திருக்காது. இந்த ஒரு காரணத்துக்காகவாவது, தமிழக அரசு டாஸ்மாக்கை உடனே மூட வேண்டும்.

குடியின்றி அமையாது உலகு என்று விளம்பரம் செய்கிறார்கள். இப்படமின்றியும் அமையும் தமிழ் சினிமா உலகு.

எதற்காக ஆனந்தவிகடன் போன்ற முன்னணி பத்திரிகைகள் இந்தப் படத்தை விழுந்து விழுந்து புரமோட் செய்தன எனப் புரியவில்லை.

மேற்கண்ட வரிகளில் விமர்சனம் என்று எதுவுமில்லை. அவற்றை விமர்சனம் என்று நீங்கள் நினைத்தால், இந்தப் படத்தின் கதையைப்போல அதுவும் உங்கள் கற்பனையே.


Thursday, July 19, 2012

அனுராதா நிகேத் - முத்திரைகள்!

அனுராதா நிகேத்
கல்லூரி காலங்களில் எனக்கு வாய்த்த ஜோல்னா பை ஜிப்பா நண்பர்கள், எக்மோர் மியூசியம் தியேட்டரில் அற்புதமான கூட்டமே இல்லாத நாடகங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு பை டூ டீயில் பாதல்சர்க்காரின் நாடக உத்திகளை கலந்து தருவார்கள்.

பிற்பாடு அது கொஞ்சம் அலுத்து, காதிபவன் காட்டன் ஜிப்பாவுடன் Cobol, Pascal என சிலிக்கன் உலகத்தில் நெட்வொர்கிங், ஆப்ஜக்ட் ஓரியண்டட் என குழப்பமாக பைனரித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் அதே பை டூ டீயுடன், லலித்கலா அகாடமியில் அமானுஷ்ய நீலம் மற்றும் சிவப்பு வர்ணங்களுக்கு இடையே சர்ரியல் பற்றி எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அப்புறம் அதிலிருந்து நான் வெளிவர பல வருடங்களாயிற்று. ஆனால் இன்னமும் ஆழ்மனத்தில் டாலியின் நழுவும் காலத்தைக் குறிக்கும் கடிகார ஓவியங்கள், டிக் டிக் என ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

அதனால்தானோ என்னவோ, அனுராதா நிகேத்தின் Expressions and Impressions ஓவியகண்காட்சிக்கு சென்றிருந்தபோது அந்தசர்ரியல் கடிகார சத்தம் சற்று அதிகமாகவே எனக்கு கேட்க ஆரம்பித்தது.

நான் அனுவின் ஓவியக் கண்காட்சிக்கு செல்வது, இது இரண்டாம் முறை. இந்த முறை அடர்த்தியான நீலம் மற்றும் சிவப்பு வண்ணக் கலவைகளில் தியானங்களின் போது பின்பற்றப்படும் முத்திரைகளை ஓவியமாக்கி வைத்திருந்தார். நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களையும் குறிப்பதுதான் நமது கைவிரல்கள். அவற்றை குறிப்பிட்ட விதிகளின்படி நீட்டி மடக்கி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைவதன் மூலம் நமது உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியும் என்று சில இஸங்கள் சொல்கின்றன. சமகால காசு பார்க்கும் கார்ப்பரேட் சாமியானந்தாக்களும் இதை்தான் சொல்கிறார்கள்.

எனக்கு ஒரே ஆச்சரியம், அனு அந்த முத்திரைகளை ஓவியங்களாக வடித்திருந்ததுதான். இந்த தீமில் ஒரு ஓவியக் கண்காட்சியை தற்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்து வரைந்தாரோ தெரியாது. ஆனால் Kaleeswara Mudra, Shank Mudra, Chin Mudra, Yondi Mudra மற்றும் Shakti Mudra என பெயரிடப்பட்ட ஓவியங்களைப் பார்த்ததும் நான் சர்ரியல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டேன் என்பது மட்டும் உண்மை.


அவர் அளித்த கையேடு, ஓவியங்களை அழகாக விவரித்தது. நான் விளக்கட்டுமா என்ற புன்னகையுடன் அவர் சில முத்திரைகளை செய்தும் காட்டினார். நானும் சக்தி முத்திராவை அவர் முன்னிலையிலேயே முயற்சித்துப் பார்த்தேன்.

பார்வையாளனுக்குள் சில உணர்வுகளைக் கிளறுவதே ஒரு படைப்பின் வெற்றி. அந்த உணர்வு அந்த படைப்பு சொல்லாததாகவும் இருக்கலாம். நான் என் விரல்களை மட்டுமல்ல, மனதின் ஆழங்களையும் ஒன்றோடு ஒன்று முடுக்கி ஏதோ செய்ய முயற்சித்துவிட்டேன் என்ற வகையில் அனுவின் Expressions and Impressions is a SuXus! அம்பாசடர் பல்லவாவில் இந்த வார இறுதி வரை அவருடைய ஓவியங்களை இரசிக்கலாம்!புகைப்படங்கள் : ஜெயராஜ் பாண்டியன்!

இந்தியாவின் முதல் ரொமாண்டிக் சூப்பர்ஸ்டார் விடை பெற்றார்!

ராஜேஷ் கண்ணா! இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

சின்ன தலையசைப்பிலும், நளினமான கையசைப்பிலும், மெல்லிய புன்சிரிப்பிலும் இந்தியாவின் இளமையை எழுபதுகளில் கொள்ளையடித்தவர்.

எப்போதும் சீராகத் தலைவாரப்பட்டு, மடிப்பு கலையாத உடைகளுடன் ஒரு ஒழுக்கமான பையன் தோற்றம். ஆங்ரி யங் மேனாக, அமிதாப் தனித்து தெரிந்ததற்கு ராஜேஷ்கண்ணாவின் இந்த தோற்றமும் ஒரு காரணம்.

அவருடன் அமிதாப் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இரண்டும் ஜெம். அதுவும் ஆனந்த்... என்ற படம்... கிளாசிக்!

ஹிந்தி தெரியாத மாநிலங்களிலும் ராஜேஷின் திரை ஆளுமை ஊடுருவி இருந்தது. மேல் பட்டன் போடாத சட்டையுடன், கன்னக்குழியழகி ஷர்மிளா டாகூருடன் அவர் தோன்றிய படங்கள், அவரை ஒரு ரொமான்ஸ் கிங்காக உயர்த்தின.

அவர் உச்சத்தில் இருந்தபோது, கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 15 படங்கள் சூப்பர் ஹிட்!டியர் ராஜேஷ் கண்ணா,
உங்கள் நினைவாக அமர் பிரேம் படத்திலுள்ள இந்தப் பாடலில் மூழ்கிக் கொள்கிறேன். பாடலுக்கு அர்த்தம் கேட்காதீர்கள். எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் உங்களைத் தெரியும். உங்கள் முகம் சொல்லும் பாவனை தெரியும். இந்தப் பாடல் யாரையோ வழியனுப்பும் முடிவில்லா உணர்வைத் தருகிறது. அதே உணர்வுடன் உங்களையும் அனுப்பி வைக்கிறேன். 

Bye Rajesh! I miss you