Thursday, November 12, 2009

2012ல் கிளி ஜோசியமும் மாயன் காலண்டரும்



கிளி ஜோசியக்காரர்கள், குறி சொல்பவர்கள், குடுகுடுப்பாண்டிகள், கைரேகை பார்ப்போர், ஜாதகம் கணிப்போர், ஜோஸ்யம் சொல்பவர்கள் - இவர்களை எல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவற்றிற்கெல்லாம் நம்பிக்கை இருப்பது ஓர் அழகாக இருக்கிறது. - ஜெயகாந்தன்

திரு.ஜெயகாந்தன் அவர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னால் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். நான் இதை என்னுடைய கருத்தாகவும் ஏற்றுக்கொள்கிறேன். காரணம் என்ன என்பதையும் அவருடைய எழுத்தே விளக்கட்டும்.

”ஒரு நவீன சமுதாயத்தில் சைக்கியாட்ரிஸ்டுகளும், சைக்கோ தெரப்பிஸ்டுகளும் செய்கிற பணியை அவர்களை விடவும் இவர்கள் வெற்றிகரமாக ஒரு புராதான சமுதாயத்தில் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள்.”

ஆமாம். ஒரு குடுகுடுப்பைக்காரன் நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது என்றுதான் நம்பிக்கை கொடுத்து எழுப்புகிறான். சாட்சாத் ராமனே தம்பதி சமேதரா வந்திருக்காரு. இனிமே குடும்பத்துல பிரச்சனையே இல்ல என்றுதான் கிளி ஜோசியக்காரன் நம்பிக்கை தருகிறான். அப்படியே கண்ணபரமாத்மா நட்சத்திரம், இனிமே அமோகம்தான் என்று ஜாதகம் கணிப்பவர் சொல்கிறார். இதைக் கேட்கும்போது துவண்டுபோயிருப்பவனின் தலை தானாக நிமிர்கிறது. புதிய நம்பிக்கை பிறந்து நடை சீராகிறது.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? மாயன் காலண்டர் என்கிற ஒரு சமாச்சாரத்தைச் சொல்லி உலகையே ஒரு கும்பல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலண்டரின் பிரகாரம் உலகம் 2012ல் அழிந்துவிடுமாம். இதுவரை எந்த டெலஸ்கோப்பிலும் சிக்காத, நிபிரு(Nibiru) என்கிற கோள் நமது பூமியின் மேல் மோதி பூமியே அழிந்துவிடுமாம். சுமேரியர்கள் காலத்திலேயே அந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டதாக மிரட்டல்பேர்வழிகள் சொல்லிக் கொண்டிருக்க, அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் மக்களில் கணிசமான ஒரு பகுதியினர் இதை நம்பி பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால்தான் எதற்கும் அசராத நாசா விண்வெளி மையம் கடந்த வாரத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. மாயன் பயமுறுத்தல்கள் விஸ்வரூபம் எடுப்பதை தடுக்கவே மாயா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ”மாயன் காலண்டரை நம்பாதீர்கள். மாயன்காலண்டர் சொல்வது போல நிபிரு என்ற ஒரு கோளே இல்லை” என்று அந்த அறிக்கை சொல்கிறது.

சந்தடிசாக்கில் சோனி நிறுவனம் கிராபிக்ஸ் உபயத்துடன், 2012 என்று படம் எடுத்து உலகம் அழிவதாக DTSல் மிரட்டி பணம் சம்பாதித்துக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  சென்னையிலும் நாளை ரிலீஸ்.

ஆன்லைன் நைஜீரியன் லாட்டரி, ஆன்லைன் செக்ஸ் வீடியோக்களைப் போல, இந்த 2012 மாயன் சமாச்சாரமும் ஒரு ஆன்லைன் மோசடி வியாபாரம்தான். சந்தேகம் இருந்தால் இது தொடர்பான பல இணைய தளங்களைப் பாருங்கள். உலகம் அழியும்போது தப்பித்துக்கொள்ள வழி சொல்லித்தருகிறார்களாம். உலகமே அழிந்த பின்னும் நீங்கள் அழியாமலிருக்க, சில டாலர்களை தட்சணையாகத் தாருங்கள் என்று சில தளங்கள் அழைக்கின்றன. ஏமாறாதீர்கள்!

அதோ குடுகுடுப்பைக்காரன் வருகிறான்! 2012ல் இருந்து நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!