Saturday, August 23, 2008

இந்த வார ஓ பக்கங்களில் ஞாநி கேட்க மறந்த பல கேள்விகள்

சீனாவுக்கு எதிராக இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா 1960களில் இமயமலையில் ஆபத்தான உளவு வேலை பார்த்தது என இந்த வார 'ஓ' பக்கங்களில் ஞாநி எழுதியிருக்கிறார் - அவர் திறமைசாலி
அதையே நமது இட்லி வடை மறு பிரசுரம் செய்திருக்கிறார் - இவர் பொறுமைசாலி. எனவே பாதிக்கு பாதி டைப் செய்கிற வேலை எனக்கு மிச்சம். அதற்க்காக இட்லி வடைக்கு நன்றி. இனி ஓ பக்கங்களுக்கு வருவோம்.

1964-ல் சீனா அணுகுண்டு சோதனை நடத்தியது. இது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து சீனா என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று உளவு பார்க்க ஒரு திட்டம் வகுத்தது. அப்போது அமெரிக்காவின் செயற்கைக் கோள் திட்டங்கள் ஆரம்ப நிலையில் இருந்தன. சீனாவை வானிலிருந்து வேவு பார்க்கும் வசதி இல்லை.

இமயமலை உச்சியிலிருந்து வேவு பார்க்கலாம் என்று அமெரிக்கர்கள் திட்டம் போட்டார்கள். மலை உச்சியிலிருந்து திபெத்தும், சீனாவின் ஏவுகணை சோதனைகள் நடக்கும் சின்சியாங் மாவட்டமும் தெரியும். இதற்கு ஏற்ற இடம் இந்தியப் பகுதியில் இருக்கும் இரண்டாவது உயரமான மலையான நந்தாதேவிதான். 25 ஆயிரம் அடி உயரம். உலகத்தின் மிக உயரமான 25 சிகரங்களில் இது ஒன்று. இந்தப் பனிமலையில் இருந்துதான் ரிஷி கங்கை என்ற ஓடை தொடங்குகிறது இது அடுத்த மலையான நந்தாகோட்டில் ஓடும் தவுளிகங்கையில் சேர்ந்து பிரும்மாண்டமான கங்கை நதியாகிறது. நந்தாதேவி சிகரத்தின் மீது சீனாவை வேவு பார்ப்பதற்கான கருவியைப் பொருத்துவதுதான் அமெரிக்காவின் திட்டம். இமயமலையில் ஏறுவது சாதாரண விஷயம் அல்ல. கடும் பனிப் புயல்கள் வீசும் பனிப் பொட்டல் அது. 1936 வரை யாருமே நந்தாதேவி மீது ஏறியதே இல்லை.

இதற்கு இந்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி.யின் உதவியை சி.ஐ.ஏ பெற்றுக் கொண்டது.
அறுபதுகளில் இந்தியாவின் நண்பன் சோவியத் என்பது உலகறிந்த உண்மை. அப்படி இருக்க எந்த தைரியத்தில் அமெரிக்கா இந்தியாவை அணுகியது. இந்தியாவை அணுகினால் அது சோவியத்துக்கும் தெரிய வரலாம், எதிரியான சோவியத்துக்கு தெரிந்தால் அது உலகத்துக்கே தெரிந்த மாதிரி ஆகிவிடுமே என்று ஏன் அமெரிக்கா யோசிக்கவில்லை.

கடற்படை கேப்டனாக இருந்து ஐ.பி. அதிகாரியாக இருந்த எம்.எஸ்.கோலி என்பவர் மலையேறுவதில் ஆர்வமுடையவர். இமயமலைப் பகுதியில் பல முறை சிகரங்களுக்குச் சென்றவர். 1965-ல் ஒரே சமயத்தில் ஒன்பது பேரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வைத்த பெருமைக்குரியவர் கோலி.

சோவியத்தை நண்பனாக வைத்துக் கொண்டு, ஐ.பி எப்படி அமெரிக்காவின் சி.ஐ.ஏவுக்கு இரகசியமாக ஒத்துழைக்க ஒப்புக்கொண்டது. இதற்கு அதிகாரபூர்வமாக ஒப்பதல் தந்தது யார்? ஐ.பி.அதிகாரியாக இருந்த கோலி யாருடைய கட்டளையை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு ஒத்துழைத்தார். இந்தியப் பிரதமரா? ஜனாதிபதியா? கடற்படை தளபதியா?

இவர் தலைமையில் சில உளவு அதிகாரிகளும், சி.ஐ.ஏ. அனுப்பிய சிலருமாகச் சேர்ந்து நந்தாதேவி சிகரத்துக்குச் சென்று உளவுக் கருவியை வைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள்.

இவர் தலைமையில் சென்ற மற்ற சில உளவு அதிகாரிகள் யார்? அமெரிக்க சி.ஐ.ஏ அனுப்பிய அந்த சிலர் யார்? அவர்களைப் பற்றிய தகவல் உண்டா?

அந்த அமெரிக்கர்களில் முக்கியமானவர் டாக்டர் ராபர்ட் ஸ்காலர். சியாட்டில் பகுதியில் பிரபலமான குழந்தைகள் சர்ஜன் ராபர்ட். மலையேறுவதில் பெரு விருப்பம் உடையவர். இவரை சி.ஐ.ஏ. ஏஜெண்ட் சந்தித்து தேச நலனுக்காக அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டார். இது தவிர மாதம் ஆயிரம் டாலர்கள் (1965-ல்) பணமும் கிடைக்கும் என்றார்.

ராபர்ட் ஸ்காலர் ஒப்புக் கொண்டார். அவரை அடிக்கடி ரகசியமான இடங்களுக்குக் கண்ணைக் கட்டி அழைத்துப் போய் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. எங்கே போய் வருகிறார் என்று மருத்துவமனைக்கும் மனைவிக்கும் சொல்லக் கூடாது. இதன் விளைவாக ராபர்ட்டின் மனைவி அவருடன் கசப்படைந்து விவாகரத்தே வாங்கிப் போய்விட்டார்.

இது போன்ற இராணுவ இரகசிய வேலைகளில் ஈடுபடும்போது எதற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு குழந்தைகள் சர்ஜனை, ராபர்ட்டை, சி.ஐ.ஏ தேர்ந்தெடுத்தது. 1936 வரையில் யாருமே ஏற முடியாத பனிப்புயல்கள் வீசும் நந்தாதேவிக்கு, மலை ஏறிப் பழக்கம் உள்ளவர்களை துணைக்கு கூப்பிடாமல், மலை ஏற விருப்பம் மட்டுமே உள்ள, அனுபவம் இல்லாத ஒருவரை ஏன் சி.ஐ.ஏ அழைத்தது?

மலையேறுவதற்கு விருப்பம் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக தனது தொழிலை விட்டுவிட்டு ராபர்ட் சி.ஐ.ஏவுடன் சேர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டாரா? நம்ப முடியவில்லை. ராபர்ட்டின் உண்மையான பிண்ணனி என்ன?

மலை உச்சியில் வைக்க வேண்டிய உளவு சாதனம் சீனாவில் சோதனைகள் நடந்தால் பதிவு செய்யும். 40 பவுன்ட் எடையுள்ளது. இதை இயக்கும் அணுசக்தி புளுட்டோனியம் 238,239 கொண்ட செல்களிலிருந்து கிடைக்கும். இதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தில், மலையேறுபவர்கள் இரவு நேரங்களில் குளிர் காய்ந்தார்களாம். சிகரத்தை அடைவதற்கு முந்தைய ஓய்விடத்தில் எல்லாரும் இருந்தபோது கடுமையான பனிப் புயல் வீசியது. இனி ஒரு அடி கூட மேலே போக முடியாது என்ற நிலை. கீழே திரும்பியாவது போவோமா என்ற கவலையான நிலை. உளவுக் கருவியை அருகே ஒரு பாறைப் பகுதியில் வீசி எறிந்தார்கள். சில மாதங்கள் கழித்து புயல்கள் வீசாத பருவத்தில் வந்து திரும்ப எடுத்துச் சென்று உச்சியில் வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால், சில மாதங்கள் கழித்து அதே இடத்துக்கு வந்து பார்த்தபோது கருவியைக் காணோம். தொடர்ந்து வீசிய பனிப்புயல்களில் மலைக்குள் எங்கேயோ போய் புதைந்துவிட்டது.

யாருமே போக முடியாத பனிப்புயல் வீசும் நந்தாதேவிக்கு ஏதோ பிக்னிக் போவது போல இரண்டாவது முறையும் போய் வந்திருக்கிறார்கள் என்பது நம்ப முடியவில்லை. அதுவும் ராபர்ட் போன்ற ஒரு குழந்தைகள் சர்ஜன் வழிகாட்டியிருக்கிறார், உதவியிருக்கிறார். அவர் மலையேற விருப்பமுள்ளவரே தவிர, மலைஏறி அனுபவமுள்ளவர் என்று கட்டுரையில் குறிப்பிடப்படவில்லையே ஏன்?

சரி போகட்டும். இந்த இரண்டாவது இரகசிய பயணம் எப்போது நடந்தது? உடனேயா? சில மாதங்கள் கழித்தா? சில வருடங்கள் கழித்தா?

இரண்டாவது பயணத்தின்போது சென்றவர்கள் யார்? அந்தப் பயணம் பற்றி ஐ.பி.க்கு தெரியுமா? இந்திய அரசாங்கத்தில் யாருக்காவது தெரியுமா?

சி.ஐ.ஏ.வும் ஐ.பி.யுமாக அடுத்த இரண்டு வருடங்களில் பல முறை விமானங்களில் ஹெலிகாப்டர்களில் வந்து தேடித் தேடிப் பார்த்தார்கள். கருவி போன இடம் தெரியவில்லை. இதற்குள் பக்கத்து மலையான நந்தாகோட்டில் இதே போன்ற அணுசக்தியில் இயங்கும் ஒரு கருவியைப் பொருத்தினார்கள்.


யார் பொருத்தினார்கள்? மீண்டும் சி.ஐ.ஏ - ஐ.பி இரகசியக் கூட்டணியுடன் ராபர்ட் ஸ்காலர், கோலி சென்றார்களா? அல்லது வேறு யாராவதா? இந்தக் கட்டுரையில் அதற்கு பதில் இல்லை.

அது சில வருடங்கள் இயங்கி சீனா பற்றிய தகவல்கள் கிடைத்த பிறகு, அமெரிக்கா அதை அகற்றி விட்டது.

சீனா பற்றி தகவல்கள் கிடைத்த பிறகு... என்று ஒரே வரியில் சொன்னால் எப்படி? என்ன தகவல் கிடைத்தது. அந்த தகவலை இந்தியா எடுத்து அமெரிக்காவிற்கு கொடுத்ததா? அமெரிக்கா எடுத்து இந்தியாவிற்கு கொடுத்ததா?

ஆனால் நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனிய சக்தியில் இயங்கும் கருவி என்ன ஆயிற்று? யாருக்கும் தெரியாது. அதிலிருந்த புளுட்டோனியம் கசிந்தால், கங்கைக்கு வரும் ஓடை நீரில் கலந்தால்? மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும், நீரைப் பயன்படுத்துவோருக்கும் பல சிக்கலான விளைவுகள் ஏற்படும்.

புளுட்டோனியத்தின் கதிர் இயக்கம் அடங்குவதற்கு எத்தனை வருடம் ஆகும் தெரியுமா? 24 ஆயிரம் வருடங்கள்! ராபர்ட் ஸ்கெல்லருக்கு இப்போது 74 வயது. அமெரிக்காவுக்கு அவர் ஆற்றிய தேசத் தொண்டுக்காக அவருக்கு சி.ஐ.ஏ.விலிருந்து வீட்டுக்கே வந்து ஒரு மெடல் அணிவித்துப் பாராட்டிவிட்டு, பிறகு அதைக் கழற்றி எடுத்துக் கொண்டும் போய்விட்டார்கள். இப்படி ஒரு விஷயம் நடந்தது வெளியில் தெரியக்கூடாது என்பதே காரணம்.

நந்தா தேவிக்கு ராபர்ட் சென்றபோது எடுத்த படங்கள், டயரிக்குறிப்புகள் எல்லாம் சி.ஐ.ஏ.விடம் உள்ளன. அவற்றைத் திருப்பித் தரக் கோரி 40 வருடமாக மன்றாடி வருகிறார் ராபர்ட். நந்தாதேவியில் தன்னந்தனியே ஏறிய முதல் அமெரிக்கர் என்ற அவருடைய சாதனைக்கு அவரிடம் எந்த ரிக்கார்டும் இல்லை. எல்லாம் சி.ஐ.ஏ.விடம் உள்ளன. அவர்களோ தர மறுக்கிறார்கள்.
இமயமலைக்கு பல முறை சென்று வந்த பின், புகழ் பெற்ற குழந்தை மருத்துவராக 40 வருடங்கள் செயல்பட்ட ராபர்ட் இப்போது மனக் கசப்புடன் எல்லா உண்மைகளையும் பகிரங்கமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால், அமெரிக்க அரசு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.

1978-ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவையில் இனி இப்படிப்பட்ட ஆபத்தான சோதனைகளில் இந்தியா ஒத்துழைக்காது என்று அறிவித்தார்.


இந்த வரியைப் படித்தால் என்னமோ மொரார்ஜி தேசாய்தான் 1965ல் இருந்து 78 வரைக்கும் இதற்கெல்லாம் துணையாக இருந்துவிட்டு, இனிமேல் இந்த ஆபத்தில் ஈடுபடப்போவதில்லை என்று சொல்வது போல இருக்கிறது. நிச்சயம் அப்படி இருக்க முடியாது.

ஆனால் மொரார்ஜி தேசாய் மக்களவையில் இதை அறிவிக்கிறார் என்றால் இதில் இரகசியம் எதுவும் இல்லை என்றாகிறது. அதாவது அமெரிக்காவுடன் இணைந்து நாம் சீனாவை வேவுபார்த்தோம். இனி அதுபோல செய்யப்போவது இல்லை என்று அதிகாரப்பூர்வமாக உலகுக்கு அறிவிப்பது போல இருக்கிறது.

இந்தியா தனது நண்பன் சோவியத் யூனியனுக்கு தெரியாமல், அமெரிக்க உதவியுடன் சைனாவை உளவு பார்த்தது என்பதை நம்ப முடியவில்லை.

மொரார்ஜி தேசாய் மக்களவையில் அறிவிக்கிறார் என்றால் அவருக்கு முந்தைய மற்ற இந்தியப் பிரதமர்களுக்கும், ஐனாதிபதிகளுக்கும் தெரிந்துதான் இது நடந்தது போல ஒரு தோற்றமளிக்கிறது. இது உண்மையா?

எம்.எஸ்.கோலி ஓய்வு பெற்ற பின் எல்லா உண்மைகளையும் தன் சாகச அனுபவப் புத்தகமாக எழுதிவிட்டார்.

இமயமலையில் கங்கை தோன்றும் இடத்தில் காணாமற்போன புளுட்டோனியக் கருவி பற்றி இப்போது மறுபடியும் ஒரு தகவல் வந்திருக்கிறது. மலையேறும் வீரரான தகேதா என்பவர் 2005-ல் நந்தாதேவிக்கு அதே இடத்துக்குச் செல்ல முயற்சித்தார். இப்போது இந்திய அரசு யாரையும் அங்கே செல்ல அனுமதிப்பதில்லை. அருகில் உள்ள நந்தாகோட்டுக்குச் சென்ற தகேதா, அங்கே ரிஷி கங்கை நதிக்கருகிலிருந்து மண் சேம்பிளை எடுத்து வந்து பரிசோதனைக்கு அனுப்பினார். பாஸ்டனில் ஓர் ஆய்வுக்கூடம், அதைச் சோதித்து முடிவுகளைத் தெரிவித்தது. மண்ணில் புளுட்டோனியம் கலந்திருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது!

தகேதா எந்த நாட்டுக்காரர்?


இந்தியா யாரையும் அனுமதிப்பதில்லை என்று தெரிந்தும், ஏன் மலையேறும் வீரர் தகேதா நந்தாதேவிக்கு செல்ல முயற்சித்தார்?

அனுமதி கிடைக்கவில்லை என்றதும் ஏன் நந்தாகோட்டுக்குச் சென்றார்?

அவருக்கு இந்த இரகசிய பரிசோதனை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்திருந்ததா?

மலையேறிவிட்டு மற்ற வீரர்களைப் போல திரும்பாமல் அவர் ஏன் மண் பரிசோதனை செய்தார்?


மண் பரிசோதனையை இந்தியாவில் செய்யாமல் ஏன் பாஸ்டனில் உள்ள ஆய்வுக்சகூடத்தில் செய்தார்?

பாஸ்டனில் பரிசோதிக்கப்பட்ட மண் நந்தாகோட்டில் எடுக்கப்பட்ட மண்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

பரிசோதனையின் முடிவு, அதிகாரப்பூர்வமானதா அல்லது தனியார் தகவலா?

இமயமலையில் மண் எடுக்கப்பட்ட ஆற்றுப் பகுதியில் புளுட்டோனியம் கலப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை, 1965-ல் காணாமல் போன அமெரிக்க உளவுக் கருவி உடைந்து போயிருக்கலாம் என்பதைத் தவிர.

1965-ல் இந்தியா அணி சேரா கொள்கையைப் பின்பற்றியதாக சொல்லிக் கொண்ட காலத்தில், அமெரிக்காவுடன் சீனாவுக்கெதிராக ரகசிய உளவு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. இப்போது மன்மோகன் ஆட்சியில் அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் பகிரங்கமாகவே கூட்டுப் பயிற்சிகளுக்கு உடன்பாடுகள் போடப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் அணுசக்தி முதல் ராணுவ ஒப்பந்தம் வரை எல்லாமே எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனியம் மட்டும் சாட்சியம் அல்ல. ஆஸ்திரேலியாவின் சாட்சியமும் இருக்கிறது. 90_களில் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அமெரிக்கா சில கணினி மென்பொருட்களை அளித்தது. அந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் போதெல்லாம் கடற்படையின் தகவல்கள், அமெரிக்காவுக்கும் ஒரு பிரதி போய்ச் சேருவது போல மென்பொருட்களில் திட்டம் எழுதி வைக்கப்பட்டிருந்ததை ஆஸ்திரேலியா கண்டுபிடித்தது. நன்றி என்று சொல்லி மென்பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டது!

நந்தாகோட் சிகரத்தில் வைக்கப்பட்டிருந்த உளவுக் கருவிகள் சீனாவை மட்டுமல்ல, இந்தியாவையும் உளவு பார்த்திருக்கக்கூடியவைதான்!
நமக்கு அறிவு வருவது எப்போது?.


மேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துவிட்டால் நமக்கு அறிவு வருவது எப்போது என்பது தெரியக்கூடும்.

( நன்றி: குமுதம் )

(நன்றி:இட்லி வடை)




எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் நள்ளிரவு கைதுக்கும் தொடர்பு உண்டா?


எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சைவ - வைணவ மோதலில் கடலுக்குள் போன பெருமாள் விக்ரகத்துக்கும், இந்த நூற்றாண்டில் உலகை உலுக்கிய சுனாமிப் பேரழிவுக்கும் சம்பந்தம் உண்டா?

உண்டு - அப்படி இருக்க சாத்தியமுண்டு என அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து கமல் தசாவதாரத்தில் அசாத்திய திறமை காட்டியிருந்தார். கேயோஸ் - பட்டாம்பூச்சி தியரிக்கு செல்லுலாயிடில் உரை எழுதியிருந்தார்.

அது போல எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் மிட் நைட் அரெஸ்டிற்கும் சம்பந்தம் இருக்க முடியுமா என்றால்? முடியும் என்பது என் பதில்.

கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஃபோட்டோ

எம்.ஜி.ஆருக்கும் - எம்.ஆர்.ராதாவுக்கும் என்ன பிரச்சனையோ? எதனால் சுட்டுக்கொண்டார்களோ? அதைப் பற்றியெல்லாம் தற்போது விவாதிக்க வேண்டாம். அது அவர்களுடைய Personal பிரச்சனை. ஆனால் அதுதான் தமிழக அரசியலை புரட்டிப் போட்டது என்பது உண்மை.
கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த அந்த ஒரு ஃபோட்டோ, மற்ற அனைவைரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு எம்.ஜி.ஆரை தி.மு.வில் முன்னிலைப் படுத்தியது. தி.மு.க ஜெயிக்க உதவியது.

எம்.ஜி.ஆர் அதன்பின்னர் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்தது முதல்வரானது அனைவரும் அறிந்த வரலாறு. அவருடைய திரைப்பட கதாநாயகியாக இருந்த ஜெயலலிதா அவருடைய அரசியல் நாயகியாகவும் உருவெடுப்பார் என்பது அப்போது யாரும் யோசித்துப்பார்க்காத விஷயம்.

ஜெயலலிதாவை இழுத்து தள்ளிய காட்சி
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவருடைய மனைவி வி.என்.ஜானகியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். கடுப்பான எம்.ஜி.ஆரின் உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை ஊர்வல வண்டியில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். அது ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம், வி.என்.ஜானகியின் துரதிருஷ்டம். அந்த காட்சி தூர்தர்ஷனில் நேரடிக் காட்சியாக ஒளிபரப்பானது. பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பாமரர்களும் உச்சுக்கொட்டினார்கள். அவ்வளவுதான். ஜெயலலிதா மற்ற அனைவரையும் (அப்போது பவர்ஃபுல்லாக இருந்த ஆர்.எம்.வீரப்பனையும்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, அ.தி.மு.கவில் முன்னுக்கு வந்துவிட்டார்.

அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், கட் அவுட் வைத்ததும், பதவி இழந்ததும் மீண்டும் பதவியைப் பிடித்தார் என்பதும் இன்னொரு வரலாறு. அந்த வரலாற்றில் ஒரு பக்கம்தான் கருணாநிதியின் நள்ளிரவுக் கைது.

அன்று எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டிருக்காவிட்டால் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிற அளவுக்கு பிரபலமாகியிருக்க மாட்டார்.
எம்.ஜி.ஆரின் திரைப்பட நாயகி அரசியல் நாயகி ஆகியிருக்க மாட்டார்.
அவர் கருணாநிதியை கைது செய்திருக்க மாட்டார்.

இது கேயோஸ் தியரியை வைத்து, தமிழக அரசியலை நான் பார்க்கும் பார்வை.

Friday, August 22, 2008

ஸ்மைல் ப்ளீஸ்

புது வேலை, புது அலுவலகம்.  நம்ப ஆள் எப்பவுமே கொஞ்சம் உடனடியா சூடாகிற ஆள்.

முதல் நாளே கேண்டினுக்கு ஃபோனைப் போட்டார்.
"முட்டாளே காபி குடுத்து அனுப்பியிருக்கியே, அது ஏண்டா சூடா இல்ல?"

மறுமுனையில் இருந்தவர் நம்ப ஆளை விட டபுள் சூடாக கொதித்தார்.
"டேய் என்னையே மிரட்டறியா? நான் யார் தெரியுமா?"

"யாருடா நீ ?"

"நான்தான்டா இந்த கம்பனியோட முதலாளி".  நம்ப ஆள், டக்கென்று 'ஜெர்க்'கானாலும் அசரவில்லை.

"டேய் நீ இந்த கம்பெனியோட முதலாளியா இருக்கலாம்.  ஆனா நான் யாரு தெரியுமா?"

"யாரா? யாருன்னா கேட்கற? போன்ல பேசற உன்னை எனக்கெப்படிடா தெரியும்?"

நம்ப ஆள் டபக்கென்று ஃபோனை வைத்துவிட்டு "அப்பாடா" என்று பெரு மூச்சுவிட்டார்.
============
டீச்சர் :
"எட்டை ஒன்பதால பெருக்கி, விடையை எண்பத்தொன்பதால பெருக்கினா என்ன வரும்?"
மாணவன்:
"தப்பான விடை வரும் டீச்சர்"
============
ஒரு நல்ல மனைவி எப்போதுமே கணவனை மன்னித்துவிடுவாள், தான் தப்பு செய்யும்போது
============
சிக்கனத்திற்கு சொல்லப்படும் மிகச் சிறந்த யோசனைக்கு ஒரு இலட்சம் தருவதாக நிர்வாகம் அறிவித்தது. ஒரு இலட்சம் வேண்டாம், 50 ஆயிரம் கொடுங்கள் போதும் என்றவருக்கு, ஒரு இலட்சம் கிடைத்தது.

நானும் அவளும் . . . சில பழக்கங்களும்.


"சார்... நான் ஒரு ஆச்சாரமான பிராமிண். இந்த Resortல நான் வெஜ் சமைக்கறாங்க, அதனால கண்டிப்பா பூண்டு யூஸ் பண்ணுவாங்க. எனக்கு மட்டுமில்ல எந்த பிராமிணுக்கும் பூண்டு வாசனையே கூடாது. அபச்சாரம். அதனால தயவு செய்து நாம வேற ஹோட்டலுக்குப் போயிடலாம்."

இந்த வரிகளை படிக்கும்போது சிரிப்பு வருதா? வரும். அடுத்த வரிகளையும் படிங்க.

நான் அந்தப் பெண்ணை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். யாரோ ஒருவனுடன் பைக்கில் வந்து இறங்கி எங்களுடன் காரில் வந்து அமர்ந்து கொண்டாள். அவள் முதன்முதலில் அறிமுகமான சினிமாக் காட்சிஎதுவெனத் தெரிந்தால் சட்டென்று அவளா என்று என்னைப் போலவே வியப்பீர்கள். ஆனால் அது எந்தக் காட்சியென்று நான் சொல்லப் போவதில்லை. அவள் 'மெட்டிஒலியில்' நடித்திருக்கிறாள். முடிந்தால் யாரென்று யூகியுங்கள், ஏனென்றால் கடைசிவரை அவள் யாரென்று நான் சொல்லப்போதில்லை.

வழியில் டிபன் சாப்பிட்டுவிட்டு, கார் ஒரு திருப்பத்தில் திருவான்மியூருக்குள் நுழையும்போது, அதுதான் என் ஹஸ்பெண்ட் என்று கைகாட்டினாள். சிறிது நேரத்திற்கு முன் அவளை பைக்கில் வந்து இறக்கிவிட்ட அந்தக் கணவன், பான்பராக் மென்றுகொண்டிருந்தான்.

நான் நடத்தப்போகும் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கத்தான் அவள் வந்திருந்தாள்.

"நைட்டே திரும்பிடலாமா?", என்றாள்

"மிட் நைட் ஆகும்."

மொபைல் போனை எடுத்து "ஏங்க நான் வற்ரதுக்கு நாளைக்கு மத்தியானம் ஆகும்", என்றாள் எங்கோ தொலைவில் பான்பராக்கை மென்று கொண்டிருந்தவனிடம்.

இரவு நிகழ்ச்சி நடக்க இருந்த Resortல் மதிய உணவுக்கு முன், "ஒரு தடவை ஸ்கிரிப்டை பாத்துடறியா?" என்றேன். அவள் சரி எனச் சொல்லும்போது எனது மடி அருகே இருந்தாள். ஒரு முறை, இரு முறை தொடர்ந்து பல முறை, ஆனாலும் அவளால் அந்த ஸ்கிரிப்டை தன் வசப் படுத்தவே முடியவில்லை.

"சார் சாப்பிட்டுட்டு உட்காரலாமா?" என்றாள். நான் அலுப்புடன் கையை அலம்பிக்கொண்டு டேபிளுக்கு வந்தேன். டேபிளில் இரண்டு கோப்பைகளில் விஸ்கி.

"இது யாருக்கு?"

"நமக்குத்தான்" என்றாள்.

"நான் மது அருந்துவதில்லை."

"ஆச்சரியமா இருக்கே. எப்படி சார் இந்தமாதிரியெல்லாம் இருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே இரண்டு லார்ஜையும் அவளே முடித்துவிட்டாள்.

"எனக்குப் பசிக்கிறது. உணவு அருந்தலாமா?", என்றேன்.

"வேண்டாம் சார்", என்றாள்.

"ஏன்?"

இப்போது முதல்வரியைப் படியுங்கள், சிரியுங்கள்.

Thursday, August 21, 2008

ஒரு வரி கதைகள் - மீண்டும்

ஒரே வாக்கியம். அதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக உருவிக்கொண்டே வந்தால் ஒரு கதை அல்லது சம்பவம் வரவேண்டும். முயற்சி செய்திருக்கிறேன். படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க. அங்க தொடாதீங்க. கூச்சமா இருக்கு. வேண்டாங்க.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க. அங்க தொடாதீங்க. கூச்சமா இருக்கு.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க. அங்க தொடாதீங்க.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ்.
ம்ம்ம்மா... சுரேஷ்
ம்ம்ம்மா...

ஒரு வரி கதைகள்

பேய் கதை
தலைப்பு : இன்று காலை அவனை பார்த்தேன்
கதை : நேற்று அவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன்

நகைச்சுவை
தலைப்பு : ஒரு மாதத்திற்கு முன்னால் விஷம் குடித்தேன்.
கதை : தினம் தினம் மனைவியிடம் செத்து கொண்டிருக்கிறேன்

ரொமான்டிக் நகைச்சுவை
தலைப்பு : நான் கர்ப்பமாக இருக்கிறேன்.
கதை : யார் காரணமா இருக்கும்னு நினைக்கறே?

ஒரு வரியில் கதை எழுதுவது சவால். இது எல்லாமே ஆங்கிலத் தழுவல்தான். ஆனாலும் 10 வினாடி விளம்பர படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது போல மூளையைக் கசக்கி எழுதுகிற இந்த த்ரில் பிடித்திருக்கிறது.

நீங்களும் முயற்சிக்கலாமே?

பொன்வண்டு, குசும்பன், கிரி மற்றும் பலருக்கு . . .

'கம்ப்யூட்டர்ல டவுட்டா?' அண்ணனைக் கேளு, என்று 15 வருடங்களாக என்னை நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நானும் MS DOS காலத்திலேருந்து எடுத்து விட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் ஒரு இன்ஸ்டன்ட் காபி பார்ட்டி. 'ஒக்கார்ந்து யோசிக்கிறது' எனக்கு கொஞ்சம் அலர்ஜி. இன்டர்நெட்டில் கிடைக்கிற Open Source மற்றும் Free Scripts இலவசங்களை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

//மங்களூர் சிவா said...
குசும்பா இது என் வலைப்பூ இல்லை. டெம்ப்ளேட் மட்டும் என்னுடையதை இவருக்கு குடுத்திருக்கேன்.//

என்னய்யா ஏதோ சைக்கிளை வாடகைக்கு கொடுத்து இருக்கிறேன் என்பது போல் சொல்ற!!! எனக்கு என்னமோ மறு அவதாரம் போல் இருக்கு:)))

இதைப் படித்துவிட்டு அடிக்கடி புன்னகைத்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதும் ஒரு புன்னகைக்கு இடையில்தான் இதை எழுதுகிறேன்.

இங்கு நான் ஒரு புது வரவு. பிளாகரில் என்னுடைய டெம்ப்ளட்டை எப்படி மாற்றுவது என்று தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் 'மங்களூர் சிவா' உதவிக்கு வந்தார். வேண்டுமானால் என்னுடைய டெம்பளட்டை upload செய்து கொள்ளுங்கள் என்றார். உடனே என்னுடைய இன்ஸ்டன்ட் புத்தி அதற்கு உடன்பட்டுவிட்டது. அவசரத்தில் அவருடைய போட்டோவை மாற்றத் தோன்றவில்லை.

அதற்குள் கமெண்டுகள், பதில் கமெண்டுகள் எல்லாவற்றிலும் 'மங்களூர் சிவாதான் r.selvakumar'ஆ என்று விசாரிப்புகள் துவங்கிவிட்டது. ஆனாலும் எல்லாம் நன்மைக்கே. இன்று மங்களூர் சிவாவை நான் என்னுடைய நண்பர் என்று சொல்லிக்க முடியும்.

விரைவில் இன்னும் சில நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆமாம், மங்களூர் சிவாவில் இருக்கிற 'ளூ' கீ போர்டில் எங்கே இருக்கிறது? நான் கட்-அண்டு பேஸ்ட் செய்து 'ளூ' வை சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு 'இன்ஸ்டன்ட் பார்ட்டி' என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஓ.ஞாநியின் இடக்கு மடக்கு

ஜெயலலிதாவின் வானளாவிய கட்டவுட்டுகள் சரிந்து கொண்டிருந்த நேரம்.
ஆட்சி மாறி சன் டிவி ஜெயலலிதாவின் வீட்டுக்குள் புகுந்து செருப்புக்களையும், புடவைகளையும் படம் காட்டிய நேரம்.

தினமணியில் திருவாளர் 'சிறு பத்திரிகையாளர்' ஞாநி ஒரு கட்டுரை எழுதினார்.
'ஜெயலலிதா வீட்டுக்குள் மிகப் பெரிய லைப்ரரி இருக்கிறது. சன் டிவி அதைக் காட்டாமல் ஏன் நூற்றுக் கணக்கான செருப்புகளையும், புடவைகளையும் காட்டியது' என புலம்பி இருந்தார்.

சம்பந்தப் பட்ட ஜெயலலிதாவே தன்னுடைய தக தக புடவையை கட்டிக் கொண்டு, கிலோ கணக்கில் நகைகளையும் போட்டுக்கொண்டு, எருமை மாட்டு வயதில் ஒருத்தனை திடீரென வளர்ப்பு மகனென அறிவித்து, போலீஸ் கமிஷனர்களை கல்யாணத்தில் நாயனம் வாசிக்கிறவர் போல துணைக்கு வைத்துக் கொண்டு ஊர்வலம் போவாராம். ஆனால் நாம் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆஹா ஜெயலலிதாவின் லைப்ரரி எவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஆச்சரியப்படவேண்டுமாம்.

இப்போது சிறு பத்திரிகையாளர் ஞாநி பெரும்பத்திரிகையாளராகிவிட்டார். ஆனாலும் ஆள் மாறவே இல்லை. இவருக்கு யாரையாவது பிடித்து விட்டால் முழு பூசணிக்காயையும் குமுதத்தை வைத்து மறைப்பார். பிடிக்காவிட்டால் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வென்றால் கூட குமுதத்தில் 'குட்டு வைப்பார்' அல்லது 'பகிரங்கக் கடிதம்' எழுதுவார்.

'வளர்ப்பு மகன் கல்யாணத்தில் தாங்கள் அணிந்த நகைகள் கவரிங் நகைகள்' என்று ஏழை ஜெயலலிதா - சசிகலா அண்டு கோ கோர்ட்டில் சொல்லியிருக்கிறார்கள்.
குமுதத்திலேயே இது வெளியாகி இருக்கிறது. தன்னுடைய ஓ பக்கங்களைத் தவிர வேறு எந்த பக்கங்களையும் படிக்காத ஞாநி இது போன்ற பக்கங்களையும் படித்து, குட்டு வைக்க மனமில்லை என்றாலும், செல்லத் தட்டு வைப்பார் என்று நம்புகிறேன்.

Wednesday, August 20, 2008

ரஜினி ஸ்டைலில் கணக்கும், சயின்சும்

அபினவ்வை விட எளிதாக துப்பாக்கி சுடுவது எப்படி?

ஒளிச் சிதறல் உதறல் என்றால் என்ன?

இரண்டுமே எனக்கு மெயிலில் வந்தது, வந்து கொண்டிருப்பது.

நானே கேள்வி - நானே பதில்

இது ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்டது தான்
பொதுமேடையில் "அடிப்பேன் உதைப்பேன்" என்று பேசலாமா?

யாராக இருந்தாலும், என்ன சரியான காரணங்கள் இருந்தாலும் பொது மேடையில் அப்படி பேசுவது தவறு. சினத்தின் உச்சியில் நின்று கொண்டு இதுபோல உறுமுகிற எவரும், சினத்திற்கு தான் அடிமையாவது மட்டுமல்லாமல், அந்தப் பேச்சைக் கேட்கிறவர்களையும் நிதானம் இழக்க வைக்கிறார்கள். ஒருவன் கோபப்படுவதும், அவன் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் (எதிரிகள் + நண்பர்கள்) கோபப்படுபவதும் உடனடியாக நடந்துவிடும். மலைமேல் இருந்து கீழே விழ நேரமாவதில்லை.

பொதுமேடையில் "மன்னிப்பு" கேட்கலாமா?
யாராக இருந்தாலும், என்ன சரியான காரணங்கள் இருந்தாலும் பொது மேடையில் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு நேர்மை வேண்டும். மனதளவில் மிகவும் தைரியமானவருக்கே இது சாத்தியம். தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்பவரால் மட்டுமே பொது மேடையில் மன்னிப்பு கேட்க முடியும். அவனுடைய மன்னிப்பை தைரியம் என்று உணர்ந்து கொள்ளவும், அதனை பின்பற்றி மற்றவர்கள் (எதிரிகள் + நண்பர்கள்) திருந்தவும் நாட்கள் பிடிக்கும். சிகரங்களைத் தொட எப்போதுமே நிறைய காலம் ஆகும்.

சமோசா சாப்பிடும்போது கண்ணில் பட்ட செய்திகள்


சிறுவயதில் மசால் வடை, பக்கோடா, காரா சேவு, பாம்பே லக்கடி இதெல்லாம் சாயந்திர பலகாரங்கள்.

இப்போது சாண்ட்விச், பஃப், பேல் பூரி மற்றும் சமோசா.

அப்போதெல்லாம் காய்ந்த இலையில் கட்டித் தருவார்கள். தற்போது பேப்பர் பிளேட்ஸ் அல்லது தினசரி தாள்கள்.

எனக்கு பலகாரங்களை விட பலகாரங்களை வைத்துத் தரும் தினசரி தாள்களில் உள்ள சமாச்சாரங்கள் ரொம்ப பிடிக்கும். முந்தைய நாள் மற்றும் நேற்றைய மழை நேரத்தில் சூடான பஃப் சாப்பிட்ட பின் கடைசியாக பேப்பரில் ஒட்டியிருந்த ஒன்றிரண்டு துகள்களை சுரண்டிச் சாப்பிட்போது கண்ணில் பட்ட சுவாரசியங்கள்.

  • ஒலிம்பிக்கில் சானியா மிர்சாவின் டென்னிஸ் கவர்ச்சி படம், படத்தின் மேல் சமோசா எண்ணெய்
  • ரிலீசுக்கு பின் மல்லிப்பூ வைத்து புடவை கட்டிய நயன்தாராவுடன் விஷால் - சத்யம் பட விளம்பரம். ரிலீசுக்கு முன் நயன்தாராவின் உடலில் போனால் போகிறதென்று கொஞசுண்டு துணி இருந்ததாக ஞாபகம்.
  • கச்சத் தீவை மீ ... கலைஞருக்கு துணி... டி.இராஜே . . . ஓரம் கிழிந்திருந்ததால் முழு தலைப்பும் இல்லை.
  • முஷாரஃப் பதவி விலகுவாராவின் மேல் ஒரு எறும்பு ஒட்டியிருந்தது. எத்தனை எறும்பு வயிற்றுக்குள் போச்சோ?

Tuesday, August 19, 2008

காந்தியும், புத்தரும், விஜயகாந்தும் ஒன்றாம் . . .


கூட்டணி இல்லாமல் தனித்து நின்று தனித்து நின்று ஜெயிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
காந்தியும் தனி மனிதர் தான், புத்தரும் தனி மனிதர்தான் அதே போல நானும் தனி மனிதன்தான்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் விஜயகாந்த்தின் சுயதம்பட்டம் இது.

விஜயகாந்த் கூட்டணியோ அல்லது மாற்றணியோ, எதையோ ஒன்றை வைக்கட்டும். அதற்க்காக காந்தியையும், புத்தரையும் தன்னைப் போன்ற முதலமைச்சர் ஆக ஆசைப்படும் சாதாரண அரசியல்வாதியாக தரமிறக்க வேண்டாம்.

காந்தியும், புத்தரும் தங்களைத் தாங்களே வென்றவர்கள். தங்களைப் போன்றே மற்றவர்களும் நடக்க உதாரணமாகத் திகழ்ந்த தத்துவ ஆசான்கள். விஜயகாந்த்தைப் போன்று கருப்பு எம்.ஜி.ஆர், வெளுப்பு எம்.ஜி.ஆர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு மக்களை முட்டாளாக்கியவர்கள் அல்ல.

விஜயகாந்த்துக்கு மனதளவில் தான் காந்திக்கும், புத்தருக்கும் துளியும் ஈடு இல்லை என்று தெரிந்திருக்கும். இருந்தாலும் உதட்டளவில் கூட அவர் அந்த மாதிரி பேச வேண்டாம் என்பதற்க்காகத்தான் இந்த கண்டன வரிகள்.

Monday, August 18, 2008

புரட்சி ஏதும் செய்யாமல் புரட்சி அடைமொழி வைத்துக் கொண்டவர்கள்


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
புரட்சி தலைவி ஜெயலலிதா
புரட்சி நடிகர் கே.பாக்யராஜ்
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
புரட்சி தமிழன் சத்யராஜ்
தற்போது லேட்டஸ்ட்டாக
புரட்சி தளபதி விஷால்

நடுவில் 'ம்' வருமா?, 'த்' வருமா? இப்படி எழுதினால் சந்திப்பிழையா? என்றெல்லாம் யோசித்தேன். புரட்சி என்ற வார்த்தையை முச்சந்தியில் நிறுத்தியவர்கள் இவர்கள். அதனால் சந்திப் பிழை இருந்தால் என்ன? இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்.

பிளாகுகளின் பலம்-பலவீனம் என்ன?


"அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான் கான் எல்லாம் இன்டர்நெட்ல எழுதறாங்களாமே? என்ன எழுதறாங்க சார்?"
"பிளாக்(Blog) எழுதறாங்க"
"அப்படின்னா?"

என்னுடைய நண்பர், ஒரு திரைப்பட இயக்குனர். அவருக்கும் எனக்குமான உரையாடலின் முதல் பகுதி இது.

"பிளாகுகளின் பலம் என்ன சார்?"
"நினைச்ச நேரத்துல, நினைச்ச விஷயத்த, யாரைப் பற்றியும் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காம உடனே பிளாக்ல எழுத முடியும். இதுதான் பிளாகுகளின் பலம்"

அவருக்கும் எனக்குமான உரையாடலின் இடைப்பட்ட பகுதி இது.

"பிளாகுகளின் பலவீனம் என்ன சார்?"
"நினைச்ச நேரத்துல, நினைச்ச விஷயத்த, யாரைப் பற்றியும் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காம உடனே பிளாக்ல எழுத முடியறதுதான் பிளாகுகளின் பலவீனமும்"

அவருக்கும் எனக்குமான உரையாடலின் அடுத்த பகுதி இது.

"ஏன் அப்படி சொல்றீங்க?"
"அமீர்கான் ஷாருக்கானை தன்னுடைய காலை நக்குகிற நாயுடன் ஒப்பிட்டு எழுதினார். சென்சார் செய்யவோ, அனுமதிதரவோ யாரும் இல்லாததால் தான் அவர் அப்படி எழுதினார்"
"அவங்களுக்குள்ள ஏதாவது தொழில் போட்டி இருக்கும் சார். அதான் அப்படி எழுதியிருப்பாரு"

அவருக்கும் எனக்குமான உரையாடலின் இறுதிப் பகுதி இது. கடைசி வரை எல்லையில்லாத சுதந்திரம் தான் பிளாகுகளின் சுதந்திரம் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

poda pokkai vaaya.. ponnunga patthi unaku enna therium?

இது "(இளம்) பெண்கள் ஏன் பிளாகுகளில் தென்படுவதில்லை" என நான் எழுதியிருந்த பிளாகுக்கு வந்த பெயர் போடாத கமெண்ட். என்னை வசை பாடியிருக்கும் இந்த கமெண்டை எழுதியது ஆனா பெண்ணா என்று தெரியவில்லை. அதே போல என்னை வாடா போடா என்று ஏக வசனத்தில் திட்டியிருப்பதற்கும் காரணம் தெரியவில்லை. ஆனாலும் இப்படி இவர் என்னை திட்ட முடிந்ததற்கு காரணம், பிளாகுகளின் எல்லையில்லாத சுதந்திரம்தான். இதுவே பிளாகுகளின் பலவீனம்.

இதை எனது நண்பர் ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன். நீங்களும், அதாவது என்னை திட்டி எழுதியிருக்கும் நீங்கள் உட்பட, அனைவரும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழ் மக்களின் (கை விட முடியாத) டாப்-10 கெட்ட பழக்கங்கள்


  1. திருட்டு வி.சி.டி யில் புது படம் பார்ப்பது
  2. பொது இடங்களில் எச்சில் துப்புவது
  3. கல்யாணங்களில் சாப்பாட்டை வீணாக்குவது
  4. தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணிகளுக்கு வாக்களிப்பது
  5. ரஜினி படங்களுக்கு காத்திருப்பது
  6. அபத்தமான டிவி நிகழ்ச்சிகளுடன் பொழுதைக் கழிப்பது
  7. ஆட்டோகாரனுடன் மீட்டர் சண்டை போட்டுக் கொண்டே பயணம் செய்வது
  8. அட்மிஷனுக்காக நர்சரி பள்ளி வாசல்களில் கியூவில் நிற்பது
  9. டிராபிக் சிக்னலில் நின்று கொண்டு நமீதா போஸ்டரை ஜொள்ளுவிடுவது
  10. லோன் போட்டு டூ வீலர்,கார் வாங்குவது
  11. டாஸ்மாக்குகளில் சரக்கடிப்பது. அப்புறம் . . . மை காட் . . . எது டாப் 10, எது ஸ்டாப் 10 எனத் தெரியாமல் முழிப்பது

Sunday, August 17, 2008

(இளம்)பெண்கள் ஏன் பிளாகுகளில் தென்படுவதில்லை

பெரும்பாலும் பெண்கள் சாட்டிங் செய்கிறார்கள் அல்லது இ-மெயிலுகிறார்கள். ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற கண்ணுக்குத் தெரியாத நண்பர்கள் சந்திப்புகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் (Blogs) வலைப்பூக்களில் அதிகம் காணப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் ரொம்ப சீரியஸ் பா(ர்)ட்டிகளாக இருக்கிறார்கள்.



நான் யூகித்த டாப் 5 காரணங்கள்

  • பிளாகுகளில் ஜொள்ளு கம்மி - லொள்ளு அதிகம்
  • இளசுகளுக்கு பிடிக்காத அரசியல் அதிகம், அழகியல் கம்மி.
  • டீன் ஏஜ் நடமாட்டம் அல்லது கல்லூரிகளின் இளம் வாசனை பிளாகுகளில் கம்மி
  • பிளாகுகளில் காதல் செய்பவர்களை விட, மோதல் செய்பவர்கள் அதிகம்
  • கடைசியாக பிளாகுகளில் சிந்திப்பவர்கள் அதிகம், மற்ற இடங்களில் வெற்று சந்திப்புகள் அதிகம்
நீங்க என்ன சொல்றீங்க?

குசேலன் படத்தின் எடிட்டர் தூங்கிவிட்டாரா? அல்லது கத்துக்குட்டியா?

குசேலன் படத்தை இரண்டாவது முறையாக பார்க்க நேர்நதது. முதல் முறை எனக்காகவும் என் மனைவிக்காகவும். இரண்டாவது முறை எனது மகளுக்காகவும் எனது அம்மாவுக்காகவும். இரண்டு முறையும் இன்டர்வெல்லில் அதே பாப்கார்ன். ஆனால் இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒரு சிறிய மாற்றம். ஆர்.சுந்தர்ராஜன் ஒரு நடிகன் என்கிற மாயையை கேள்விகளால் துளைத்தெடுக்கும் Demystify காட்சியில் 'முக்கியமான சில அரசியல் தொடர்பான கேள்விகளைக் காணோம்'.

இந்தப் படத்தின் எடிட்டர் யார்? மகா மட்டமான எடிட்டிங். எங்கே நீளத்தை கூட்ட வேண்டுமோ அங்கே கத்தரி போட்டிருக்கிறார். எங்கே வெட்டி எறிய வேண்டுமோ அங்கே தூங்கியிருக்கிறார். குறிப்பாக படத்தின் ஒரே உருப்படியான ரஜினியின் மேடைப் பேச்சுக்குப் பின், யாருடைய ரியாக்சனையும் காட்டாமல் நேராக ஆர். சுந்தர்ராஜனை கதவைத் திறந்து வெளியே கொண்டு வந்துவிட்டார். அதனால் கொஞ்சம் பில்ட் அப் ஆன ரியாக்ஷனும் பாதியிலேயே அம்பேல் ஆகிவிட்டது.

அதே போல ரஜினி, ஆர்.சுந்தர் ராஜன் முதல் அல்லது ஒரே சந்திப்பிற்குப் பின் நேரடியாக ரஜனியின் எகிப்து செட்டிங் டான்சுக்கு வந்திருந்தால், ரசிகர்கள் விசிலடித்திருப்பார்கள். ஆனால் நடுவில் மீண்டும பசுபதியை அழவைத்து டெம்போவை காலி பண்ணிவிட்டார். ஆனால் இதற்கு டைரக்டர் தான் காரணமாக இருந்திருப்பார் என்பது என் சந்தேகம்.

அதே போல லிவிங்ஸ்டன் அண்டு லூசு கும்பல் வரும்போதெல்லாம் அவர்களுடைய ஜீப் மறக்காமல் ஒரு என்ட்ரியும் எக்ஸிட்டும் கொடுக்கிறது.

வடிவேலு நயனதாராவை ஜொள்ளுவிடுகிற காட்சிக்கு அப்புறம் நயன்தாரா தனியாக சோலோ பாட்டு பாடுகிறார். வடிவேலுவை அந்த பாடல் காட்சியிலேயே சேர்த்திருந்தால் ஏதோ ஓரளவுக்கு லாஜிக் இருந்திருக்கும்.

படம் முழுக்கவே எமோஷன் ரியாக்ஷன் ஷாட்ஸ் எல்லாம் தப்புத்தப்பாக இருக்கிறது. மக்கள் வெள்ளத்தைக் காட்டும்போது, பிண்ணனியில் மக்கள் கூச்சல், ஆனால் காட்சியில் மரம் போல மக்கள் அசையாமல் நிற்கிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் எல்லா ரியாக்ஷன் ஷாட்டுகளிலும் அனைவரும் குற்றவாளிகளைப் போல தலையை குனிகிற ஷாட்டுகளாகவே இருக்கிறது.

என்னை விட்டால் ஷார்ப்பாக இன்னும் 30 நிமிடத்தை குறைத்து படத்தின் சில காட்சிகளை முன்னே பின்னே போட்டு இன்னும் சுவாரசியமாக்குவேன்.

தற்போது சத்தியம் படத்திலிருந்து 20 நிமிடத்தை நீளம் குறைக்கப் போகிறார்கள் என்று கேள்வி. பார்த்துவிட்டு என்னுடைய கமெண்டுகளை சொல்லுகிறேன்.

பாலைவனத்தில் கருகும் இந்தியர்கள்

நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல துபாயில் வேலை செய்யும் நமது தமிழர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் வசதியாக இல்லை. இந்தியாவுக்கு லீவுக்கு வந்து போகும் வசதியுள்ளவர்கள் பிளாட்டுகளில் பத்துக்கு பத்து அறையில் ஒரு படுக்கையில் (Bed Space) வசிக்கிறார்கள். நமது சேரிகளை விட மோசமான (Labour Camps) லேபர் காம்புகளில் வசிப்பவர்கள் அதைவிட மோசமாக ஏர்கண்டிஷன் கூட வேலை செய்யாத அறைகளில் கும்பல் கும்பலாக துபாய் வெயிலில் இரவிலும் வெந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் மோசமான வாழ்க்கைத் தரம் பற்றி ஒரு செய்தித் தொகுப்பை வெளியிடுவதற்க்காக சில மாதங்களுக்கு முன் மக்கள் தொலைக் காட்சியில் வேலை செய்யும் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அது தொடர்பாக எனது துபாய் நண்பர்கள் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஒருவர் கூட துபாயை குறை கூறி பேச முன் வரவில்லை. அனைவருமே பயந்து ஒதுங்கினார்கள். எதற்கு வம்பு என்று அலறினார்கள். நான் துபாயில் அவர்களை சந்தித்தபோது, கண்ணீர் விட்டு கதறியவர்களும், தொலைபேசியில் கூட நான் இதைப் பற்றி பேச மாட்டேன் என்று மறுத்தார்கள்.

காரணம் பிழைப்பு பற்றிய பயம். தனது குடும்பத்தின் எதிர்காலத்தை பற்றின பயம். தன்னுடைய திறமை வேறு எங்கும் செல்லுபடியாகாது என்ற பயம். அதனால் பாலைவனத்தில் வெந்து செத்தாலும், அதை சகித்துக்கொண்டு நம்மில் சிலர் அங்கேயே இருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களோ, குடும்பத்தினரோ, உறவினர்களோ அரபு நாடுகளில் இருந்தால் கேட்டுப்பாருங்கள். தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின் தங்கள் உண்மை நிலையை ஒப்புக் கொள்ளக்கூடும். என்னுடைய கூற்றில் எந்த மிகைப் படுத்தலும் இல்லை.

அமேரிக்காவிலோ அல்லது சிங்கப்பூரிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் NRIகள் பெருமையாக தனது அப்பா அம்மாவை வருடத்திற்கு ஒரு முறை தாம் வசிக்கும் நாடுகளுக்கு அழைத்துச் சென்று சுற்றி காட்டுவார்கள்.

துபாயில் லேபர் காம்பில் வசிக்கும் யாராவது அப்படி பெருமை பட்டுக்கொண்டதுண்டா?