Friday, August 19, 2022

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் வழிகாட்டுதலுடன் ISR 5 நிமிட குறும்படப் போட்டி

 

மற்றும் ஒரு பெருமை! ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியுடன் இணைகிறோம். இது ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு கிடைத்திருக்கும் மற்றும் ஒரு சிறப்பான அங்கீகாரம்.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் சமூக சேவைக்கென்றே ஒரு பாடப்பிரிவு உள்ளது. (Department of Social Work). சமூக அக்கறையுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஒரு நேர்மறையான சமூகத்தை உருவாக்கும் பாடப் பிரிவு இது.
எனவே குழந்தைகள் உரிமை - CHILD RIGHT பற்றிய குறும்படப் போட்டியின் நல் நோக்கத்தை ஏற்று அதற்கு அங்கீகாரம் தந்து சிறப்பாக நடத்த உற்சாகம் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக் கழகத்துடன் (Department of Journalism and New Media Studies) இணைந்து செயல்பட ஒப்புதல் பெற்றிருக்கிறோம்.
இவ்விரு பெரும் கல்வி நிலையங்கள் தந்திருக்கும் ஆதரவுடன் ISR 5 நிமிட குறும்படப் போட்டி ஆகஸ்டு 22, 2022 முதல் துவங்குகிறது. முதலில் கலந்து கொள்ள விரும்புபவர்களின் விபரங்களை பதிவு செய்து கொள்வோம். அடுத்தது அவர்களுக்கு குழந்தைகள் உரிமை என்றால் என்ன என்பதை இவ்விரு கல்வி நிலையங்களின் உதவியுடன் தெளிவாக எடுத்துச் சொல்வோம். எனவே இப்போட்டியின் நோக்கம் சிறப்பாக நிறைவேறும் என்று உறுதி கூறுகிறோம்.
இப்போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வுக்குழுவில் யார் யார் இருப்பார்கள்? பரிசுகள் என்ன? என்பது உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்து தெரிவிக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி (Department of Social Work) பிரிவுக்கும், எங்களுக்கு சிறப்பான அறிமுகம் தந்த நண்பர் தேவநேயனுக்கும் நன்றி!
மேல் விபரங்களுக்கு வாட்சப் எண் - 9962295636

Thursday, August 18, 2022

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ISR 5 நிமிட குறும்படப் போட்டி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தைகள் உரிமை - Child Right பற்றி வலியுறுத்தும் படங்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும் என்பதால் போட்டியின் நல் நோக்கத்தை கருத்தில் எடுத்துக் கொண்டு இதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.

ஆகஸ்டு 22ம் தேதி முதல் துவங்கவுள்ள ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு இதன் மூலம் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
எந்தக் கட்டணமும் இல்லாமல் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் TNOU - School of Journalism and New Media Studies சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த படங்களுக்கான 3 பரிசுகளுடன் பல்வேறு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் சில முன்னணி கல்வி மற்றும் மீடியா நிறுவனங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் யார் யார் என்பதை தொடர்ச்சியாக அறிவிப்போம். அவர்களுடன் இணைந்து போட்டியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை என்றால் என்ன என்பதை புரிய வைத்து தரமான படங்களையும், படைப்பாளிகளையும் உருவாக்குதுதான் இப்போட்டியின் நோக்கம்.
இப்போட்டி செப்டம்பர் மாத இறுதியில் நிறைவுக்கு வரும். போட்டியின் இறுதியில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் குறைந்தபட்ச பங்களிப்பாக, இது பற்றி நன்கு அறிந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகம் செய்த திருப்தி எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9962295636 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு எப்படி பங்கேற்பது போன்ற விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கு நன்றி!

Monday, August 15, 2022

ஆகஸ்டு 16, 1947 படத்தில் சித்தப்பா சோலை

Happy to see my chithappa actor Solai in August 16, 1947 trailer.

அவர் இந்தப் படத்துக்காக 6 மாதங்களுக்கு மேல் தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். இப்போதும் அந்த தாடி சற்று மட்டுப்பட்டு நீளம் குறைந்து இருக்கிறது. ஒருவேளை தேவைப்படலாம் என்று விட்டுவைத்திருக்கிறார். அவரை இந்த கெட்டப்பில் பார்த்தபின் குஷியாகிவிட்டேன்.

அவர் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே நடித்து வந்தார். நான்தான் அவரை முதன் முதலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். யாதுமானவள் என்கிற குறும்படத்தில் நெகிழ வைக்கும்படி நடித்திருந்தார். தற்போது நான் இயக்கியுள்ள யாதெனக்கேட்டேன் படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் அவர் நடிப்பை பாராட்டியுள்ளார்கள். இந்த நிலையில் ஆகஸ்டு 16, 1947 பட டிரையலர் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்தவுடன் எனக்கு மட்டுமல்ல, சித்தப்பாவை அறிந்த எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி!

அவரால் மிக மிகக் கனமான கதாபாத்திரங்களைக் கூட அனாயசமாக நடிக்க முடியும் என்பது என் கருத்து. பார்க்கலாம். காலம் அவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகளை வைத்திருக்கிறது என்று!

அந்த நாலு பேருக்கு நன்றி - எங்கள் நகரில் சுதந்திர தினம்!

 நாங்கள் வசிக்கும் திருநகரில் சுதந்திரதினம். 150 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் நகரில் கடந்த 20 வருடங்களாக அதிகபட்சம் 15 பேர்தான் கலந்து கொள்வார்கள். அதில் ஏழு முதல் எட்டு பேர் எங்கள் பகுதியை சாராத வழிப்போக்கர்கள் மற்றும் நடைப் பயிற்சிக்கு வந்தவர்களாத்தான் இருப்பார்கள். இன்று வாக்கிங் வந்த அடுத்த காலனி தம்பதிகள் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கு பெற்ற ஏர் கமாண்டர்களில் ஒருவர் திரு.சண்முகம். எங்கள் நகரில் வசிக்கிறார். நடைப் பயிற்சிக்கு வந்த அவர்தான் இம்முறை துவக்க உரை. எங்களுடன் தன் போர் அனுபவங்களில் ஒன்றை பகிர்ந்து கொண்டார். எனக்கு ஒரு கொடி தருவீங்களா எனக் கேட்டு வந்த ராமச்சந்திரன் என்பவர்தான் இம்முறை கொடியேற்றினார். அவர் 30 வருடங்களாக எங்கள் நகரில் வசிக்கிறார்.

சுகாதாரப் பணியாளர்கள் அன்று மட்டும் எங்களுடன் சற்று அருகில் தயக்கமாக நின்று கொள்வார்கள். அதற்கே சிறு வற்புறுத்தல் தேவைப்படும். இந்த வருடம் கொடி ஏற்றிவிட்டு நாங்கள் புறப்படும்போது வந்த பெண்மணிக்கு இன்று பிறந்தநாளாம். வாழ்த்து சொல்லிவிட்டு சாக்லெட் கொடுத்தோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

கடைசியாக நன்றி உரையில் அடுத்த வருடம் எப்படியும் 50 பேரை வரவைத்துவிட வேண்டும் என்று யாராவது ஒருவர் பேசுவோம். அசோஷியேசன் சார்பில் ஸ்போர்ட்ஸ் டே நடத்துவோம். நல்ல கூட்டம் வரும் என்று ஒருவரும், முப்பது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று இன்னொருவரும் கூறுவார்கள். இம்முறை எவரும் இந்த சப்ஜெக்டுகளை பேசவில்லை என்பது ஒரு மாற்றம்.
ஃபோட்டோக்களை எங்கள் காலனி வாட்சப் க்ரூப்பில் பகிர்ந்த போது 2 பேர் வாழ்த்தினார்கள். குறிப்பாக எவருக்காகவும் காத்திருக்காமல் கொடிக் கம்பத்துக்கு பெயிண்ட் அடித்து, சாக்லெட் வாங்கி அனைவருக்கும் அழைப்பு தரும் எபினேசரை இருவரும் வாழ்த்தியிருந்தார்கள். அவர் முயற்சி எடுக்காவிட்டால் இது நடக்காது, எல்லோரும் வீட்டுக்குள் டிவியுடன் அமர்ந்துவிடுவோம் என்று எங்கள் எல்லோருக்குமே தெரியும்.
இம்முறை கொடியை இறக்கி பத்திரப்படுத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து ஜனவரி 26க்கும் இதே போல கூடுவோம், என்ற தகவலுடன் அனைவருக்கும் சுதந்திர தின
வாழ்த்துகள்
!

யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் படம் - விமர்சனம்

 யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் மூவி!

எனக்குப் பரிசோதனைகள் பிடிக்கும் என்பதால் இந்த சிங்கிள் ஷாட் பரிசோதனையை ஆர்வத்துடன் பார்த்தேன். படம் எனது ஆர்வத்துக்கு தீனி போட்டது என்பதுதான் உண்மை. பிரிவியூவிற்கு அழைப்பு தந்தது கேபிள் சங்கர்.
நள்ளிரவில் யாரையோ தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் பயணித்து ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைகிறது காமிரா. அந்த நீண்ட நள்ளிரவு சாலைப் பயணம் இது சிங்கிள் ஷாட் படம் என்பதற்கு நம்மை தயார் செய்கிறது.
தன் காதலியைத் தேடும் இளைஞன் எதிர்கொளும் இரவு நேரச் சம்பவங்கள்தான் கதை. ஒன்றிலிருந்து மற்றொன்று என காட்சிகள் தொடர் சங்கிலியாக ஒரு சஸ்பென்சுடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நகர்தலை உணர்த்த சிங்கிள் ஷாட் பயன்பட்டிருக்கிறது. அதாவது சிங்கிள் ஷாட் என்பது தேவையற்ற திணிப்பாக இல்லை.
எண்கவுண்டர், அரசியல் பேரம், சேஸிங், அடிதடி, தேடல், டூயட் என இப்படத்தில் எல்லாம் உள்ளது. நாயகியாக க்ரிஷா நடித்திருக்கிறார். இவரை என் இயக்கத்தில் யாதெனக்கேட்டேன் படத்தில் நடிக்க ஓரிரு முறை பேசியிருக்கிறேன், அதனால் அவரை ஞாபகம் உள்ளது. கோலிசோடா 2வில் நடித்திருக்கிறார். இயக்குநர் ராசி அழகப்பன் எனக்கு அறிமுகம் செய்தார் என்று நினைவு. க்ரிஷா பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்யக் கூடியவர் என்பது என் அனுமானம். இந்தப்படத்தில் அவருக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். கதையே இவரை மையப்படுத்தி இருந்திருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.
போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் அதில் உள்ள பல்வேறு அறைகள் மற்றும் மாடிப்படிகளில் தடுமாறாமல் ஏறி இறங்குகிறது காமிரா. பிறகு மீண்டும் ஸ்டேஷனை விட்டு வெளியேறிவிட்டு, சிறிது நேரம் கழித்து மறுபடியும் உள்ளே வருகிறது. இப்படியே ஸ்டேஷனின் உள்ளேயும், வெளியேயும் காமிரா நகர்ந்து கொண்டே இருக்கிறது. இவை அலுப்பு தராமல் இருக்க லைட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சுரேஷ்மேனனுடன் நடைபெறும் சண்டைக்காட்சியும், இருட்டறைக்குள் நடக்கும் காட்சியும் அக்னிநட்சத்திரம் கிளைமாக்ஸ் சண்டை போல முயற்சி செய்திருந்தார்கள். சுரேஷ்மேனனின் கதாபாத்திரம் பெரிதாக ஏதோ சம்பவம் செய்யப்போகிறது என நினைத்தேன். ஆனால் அந்த பாத்திரத்திரம் பொசுக்கென காணாமல் போய்விட்டது.

ரவுண்ட் டிராலி எஃபக்ட் கூட ஒரு காட்சியில் முயற்சி செய்திருந்தார்கள். ஒரு எண்கவுண்டர் பற்றி பேசிக்கொள்ளும் இந்தக் காட்சியில் இருந்த தீவிரம், எண்கவுண்டர் நடக்கப்போகும்போது இல்லை.
போஸ்வெங்கட் கதை வசனம் எழுதியிருக்கிறார். அதனால் சில கதாபாத்திரங்கள் அவரே நேரடியாக அரசியல் பேசுவது போல இருந்தது. மேக்கிங் பார்க்கும்போது அவர் கிட்டத்தட்ட இயக்குநர் வேலையும் பார்த்திருக்கிறார் எனத் தோன்றியது. படம் நாயகனைச் சுற்றிதான் நடக்கிறது. நாயகன் ஸ்ரீராம் இதை உணர்ந்து இன்னும் முனைப்புடன் நடித்திருக்கலாம்.
டிஜிட்டல் யுகத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட யுத்தகாண்டம் போன்ற நிறைய பரிசோதனைகள் நடந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் டெக்னிக் எதுவாக இருந்தாலும் படத்தின் மையமான கதை என்ன என்பதும், அது எப்படி இரசிகர்களை கவரும் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் யுத்தகாண்டம் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிற வரிசையில் வைக்கலாம்.
மூவிவுட் என்கிற ஓடிடி தளத்தில் ரிலீசாகியிருக்கிறது. நேரமிருக்கும்போது பாருங்கள். யுத்தகாண்டம் படம் வெற்றியடைய படக் குழுவினருக்கு என்
வாழ்த்துகள்
!
இணையதள முகவரி - https://moviewood.io/
#Moviewood ஆண்ட்ராயிட், ஐஓஎஸ் என இரண்டிலும் இயங்கும்.

எனக்கு ஏன் இரகுமான் பாடல்களைப் பிடிக்கிறது?

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு

தேனைத் தந்தா என்னவாகும்?
Rahman for all my moods. I think I'm in time sync with A.R.Rahman's music. I feel vibrations and deep emotions kindled with all his latest compositions.
கிழக்குச் சீமையிலே பாடல் வெளியானபோது, வாக்மேனில் கேசட்டைப் போட்டுவிட்டு வேலி காத்தான் செடிகள் அடர்ந்த கிரிக்கெட் மைதானத்தில் தனியாக அமர்ந்து இரசித்தேன். காற்றில் பறப்பதைப் போலிருந்தது. நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் ”மறக்குமா நெஞ்சம்” பாடல் வெளியானபோதும், மொட்டை மாடியில் தனியனாக அமர்ந்து பாடலுக்குள் அமிழ்ந்தேன். எத்தனை முறை தொடர்ந்து பாடலைக் கேட்டேன் என்று கணக்கே இல்லை.
இதை வாசிக்கும் நீங்கள் தற்போதைய இரகுமான் பாடல்களை எப்படி இரசிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நான் முன்பு எப்போதையும் விட இரகுமானின் இசையுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். அதற்குக் காரணமாக என் தற்போதைய மன ஓட்டம் மற்றும் தற்போதைய தேடல்களுக்கு இரகுமானின் இசை ஒரு வடிகாலாக இருக்கிறது எனக் கருதுகிறேன்.
எங்கு தொடங்கும்
எங்கு முடியும்
ஆற்றின் பயணம்!