Saturday, March 15, 2014

இரட்டை இலையை மக்களிடம் சேர்க்க குள்ளநரித் தந்திரங்கள் தேவையா?


மதுபான விளம்பரங்களுக்கு மீடியாக்களில் தடை உண்டு. இந்த தடையை மதுபான நிறுவனங்கள் தந்திரமாக மீறுகின்றன. மதுபானங்களின் பெயரிலேயே தண்ணீர் பாட்டில்கள் அல்லது சோடாக்களை விளம்பரங்கள் செய்கிறார்கள். இவை மார்கெட்டில் கிடைக்கவே கிடைக்காது. ஆனாலும் விளம்பரம் செய்வார்கள். இந்த விளம்பரங்கள் மதுபானங்களைத்தான் குறிக்கின்றன என்பது சட்டத்திற்கும், நீதிமன்றத்திற்கும் தெரியும். ஆனாலும் இந்த குள்ள நரித்தந்திரத்தை  உடைக்க முடியவில்லை.

ஜெயலலிதா தற்போது இதே தந்திரத்தை கையாள்கிறார்.  மினிபஸ்களில் இரட்டைஇலையுடன் இன்னும் இரண்டு இலைகளை வரைந்துவிட்டு கவுண்டமணி-செந்தில் ஸ்டைலில் இது அதுவல்ல என்று வாழைப்பழக்கதை சொல்கிறார். இதனை அவரது ஆதரவாளர்களே இரசிக்கவில்லை. இப்படியெல்லாம் அடம்பிடித்து இரட்டை இலையை புரொமோட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெயலலிதாவே முயன்றாலும் அது தமிழக மக்களால் மறக்க முடியாத ஒரு சின்னம்.

எம்.ஜி.ஆர் சமாதியின் முன் உள்ளதும், மினிபஸ்களில் வரையப்பட்டிருப்பதும் இரட்டை இலைதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை உணர்ந்து, நேர்மையாக தேர்தல் முடியும்வரை மறைப்பதற்கு ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச மரியாதையாவது மிஞ்சும்.

எதைச் சொன்னாலும் நம்பித் தலையாட்டும் கட்சிக்காரர்களைப் போலவே மக்களையும் கருதினால் என்ன ஆகும் என்பது பற்றிய முன் அனுபவம் அவருக்கே உண்டு. உண்மையை மறுத்து தொடர்ந்து அடாவடி செய்பவர்கள் எப்போதும் வென்றதில்லை.
#தோணுச்சு

Friday, March 14, 2014

என் தமிழ் கையெழுத்தை மொழி பெயர்க்கும் கூகுள் டிரான்ஸ்லேட்


என்னுடைய பள்ளிப்பருவத்தில் மூன்றாவது தெரு கொண்டை போட்ட ஆன்டி மிகப் பிரபலம். என்னைப்போன்ற சிறார்களை ஆன்டி ஈர்த்ததன் காரணம் அவருடைய இரட்டை ஜடை மகள். இது தெரியாத மற்றவர்களை ஆண்டி ஈர்த்ததன் காரணம் அவருடைய இந்தியும், இங்கிலீஷிம். அதனால் அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்ற பிரம்மையில் எங்கள் காலனியே இருந்தது. பிரெஞ்சில் சந்தேகம் வந்தால் கூட ஆன்டியைப் போய் கேள் என்பார்கள். சந்தோஷமாக நாங்கள் இரட்டை ஜடையை பார்த்துவிட்டு விழிகளால் மொழி பெயர்த்துவிட்டு வந்துவிடுவோம்.

கூகுள் டிரான்ஸ்லேட்டர் கிட்டத்தட்ட அந்த ஆன்டியைப் போலவே பெயரெடுத்திருக்கிறது. கூகுள் டிரான்ஸ்லேட்டருக்கு எல்லா மொழிகளும் தெரிந்திருப்பதாக ஒரு பிரம்மை நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. நாம் ஆந்திராவுக்கு ஒரு வாரம் டூர் போய்விட்டு வந்து ஒக்கட்டி, எரடு என்பது போல, கூகுள் டிரான்ஸ்லேட்டர் கொஞ்சம் கொஞ்சமாக பல மொழிகளை பயின்று வருகிறது.

ஆனால் இரட்டை ஜடைப் பெண்ணைப் போல அது நம்மை ஈர்க்கக் காரணம் என்வென்றால், டைப்பிங்கையும் கையெழுத்தையும் புரிந்து கொள்ளும் லாவகம். லேட்டஸ்ட் என்னவென்றால் பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் உட்பட மேலும் 13 மொழிகளில் எழுதும் வசதியும், அதனை புரிந்து கொண்டு மொழி பெயர்க்கும் வசதியும் வந்திருக்கிறது. எழுத முடியாவிட்டால் டைப் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால் படமாகத் தரலாம். அதுவும் கடினம் என்றால் பேசலாம். எப்படிக் கொடுத்தாலும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு நாம் கேட்கும் மொழிகளில் மொழிபெயர்த்துத் தருகிறது.

ஏனோ தெரியவில்லை இன்று என்னுடைய ஆன்ட்ராயிட் ஃபோன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க ஒத்துழைக்கவில்லை. அதனால் நான் மொழிபெயர்த்த சந்தோஷங்களை படமாக பிரசுரிக்க முடியவில்லை.

நமோ டீ கடை, அம்மா உணவகம், கலைஞர் காப்பீடு என்று லிஸ்ட் வைத்திருக்கிறேன். Google Translate App எப்படி மொழிபெயர்த்து தருகிறது எனப்பார்க்கலாம்.

Thursday, March 13, 2014

மலேசிய விமானம் மாயம் - அமெரிக்க மாணவரின் அதிர வைக்கும் தியரி

டம்ளர் என்ற வலைத்திரட்டியில் ஆண்ட்ரூ என்கிற அமெரிக்க மாணவர் எழுதியுள்ள கட்டுரை பரபரப்பாகியிருக்கிறது. ஆண்ட்ரூவின் அப்பா ஒரு புரொபஷனல் பைலட். அதனால் சிறுவயதிலிருந்தே விமானம் பற்றி ஆர்வம். அதனால் மலேசிய விமானம் மாயமானதும் அது தொடர்பாக நிறைய வாசித்து அம்மாணவர் எழுதியுள்ள கட்டுரை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் அக்கட்டுரையில் உள்ள நம்பகத்தன்மை.

சில விமானங்களில் சில கோளாறுகள் ரெகுலர். அது போல போயிங் 777 விமானங்களின் முதுகில் துருப்பிடிக்கக்கூடிய கோளாறுகள் ரெகுலர்.

போயிங் 777 விமானங்களின் முதுகுப்பகுதியில் சாட்டிலைட்டை தொடர்பு கொள்ள உதவும் SATCOM Adapterகள் உள்ளன. அவை பொருத்தப்பட்டுள்ள இடங்கள் அடிக்கடி துருவேறி பிளந்து கொள்ள வாய்ப்பு உண்டாம்.

"cracking in the fuselage skin underneath the satellite communication (satcom) antenna adapter"

விமானத்தின் முதுகுப்பகுதியில் பிளவு ஏற்பட்டால் என்ன ஆகும்? விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே போய், மயக்கம் ஏற்பட்டு, இறுதியில் சுவாசமே நின்று போகும்.

கிட்டத்தட்ட 120 விமானங்களில் இந்தக் கோளாறுகள் இருப்பதாக செப்டம்பர் 26, 2013ம் தேதி வெளியான FAA அறிக்கை கூறியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு போயிங் 777 வகை விமானத்தில் 40.6 செ.மீ அளவுக்கு ஒரு பிளவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக FAA ரிப்போர்ட் ஒன்று கூறுகிறது.

மலேசிய விமானம் MH370க்கும் இதே கதி ஏற்பட்டிருக்கலாம். திடீரென பிளவு ஏற்பட்டதும் முதலில் சாட்டிலைட் தொடர்புகள் அனைத்தும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்திருக்கும். அதைப்பற்றி உணர்வதற்குள் பைலட்டுகளும், பயணிகளும் தாங்களே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்துக்கும், மயக்கத்துக்கும் உள்ளாகியிருப்பார்கள்.

ஆனாலும் ஆட்டோ பைலட் நிலையில் இருந்த விமானம் தொடர்ந்து அதே உயரத்தில் பறந்திருக்கலாம். பின்னர் விமானத்துக்குள் அழுத்தம் குறைவு மற்றும் எரிபொருள் காலியானது காரணமாக கிழக்கு சைனா அல்லது பசிபிக் கடலில் விழுந்திருக்கலாம்.

PPRUNE - Professional Pilots Rumour Network என்ற ஆன்லைன் குழுத்தளம் ஒன்று உள்ளது. அங்கிருந்துதான் இந்த சிந்தனைக்கான இழையைப் பிடித்ததாக ஆண்ட்ரூ கூறியுள்ளார்.