கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன். நான் அப்போதுதான் கல்லூரி முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் துவங்கியிருந்த நேரம். உதவும் கரங்கள் வித்யாகரை சந்தித்தேன்.
”நீங்கள் வாரா வாரம் இங்கிருப்போருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர முன் வந்திருப்பது நல்ல விஷயம். ஆனால், உங்களால் இதை தொடர்ந்து செய்ய முடியும் என்ற உத்திரவாதம் தந்தால் மட்டுமே, நான் உங்கள் உதவியை ஏற்பேன்”, என்றார். அவர் குரலில் இருந்த மெல்லிய கடுமை என்னை கோபம் கொள்ள வைத்தது. உதவி செய்ய வந்திருக்கிற ஒருவனை, உன்னால் தொடர்ந்து செய்ய முடியுமா? என்று கேட்பது என்ன நியாயம் என்று மனதிற்குள் புகைந்த கேள்விகளுடன் விடைபெற்று விட்டேன்.
கடந்த ஞாயிறன்று கிட்டத்தட்ட இதே கேள்வியை இயக்குனர் சேரன் கேட்டார் அல்லது தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். யுத்தம் செய் திரைபடத்திற்க்காக, சென்னை ஐநாக்ஸ் தியேட்டரில் ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து, அதில் கிடைத்த தொகையை கொரட்டூரில் உள்ள ஒரு குழந்தைகள் விடுதிக்கு அளித்துவிட்டு காரில் சன்னமான வேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்தோம். உடன் சகோதரன் அன்பு மற்றும் தங்கை கயல்.
”பணம் கொடுத்தோம், அவர்களும் வாங்கிக் கொண்டார்கள். இது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு அக் குழந்தைகள் சாப்பிட உதவும். அதற்குப் பின் என்ன? இந்த தொகையை கொடுத்ததுடன் நம் பங்களிப்பு முடிந்துவிட்டதா? ஒரே ஒரு நாள் பணம் கொடுப்பதின் மூலம், அக் குழந்தைகளின் எதிர்காலத்தை நம்மால் வளமாக்க முடியுமா?” என்றார்.
கிட்டத்தட்ட வித்யாகர் கேட்ட கேள்வி. ”ஒரே ஒரு நாள் வந்து கம்ப்யூட்டர் பயிற்சி தந்தால் போதுமா?” நியாயமான கேள்வி. ஒரு கல்லூரி மாணவனாக கோபத்துடன் எதிர்கொண்டு, பின் அனுபவத்தில் புரிந்து கொண்ட கேள்வி. உதவி செய்தல் என்பது வெறும் நல்ல குணமாக மட்டும் இருத்தல் போதாது. தொடர்ந்து செய்யக் கூடிய ஒரு குறைந்தபட்ச திட்டமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உதவி முழுமை பெறும்.
காட்சி முடிந்ததும் வீட்டுக்குத் திரும்புகிற சினிமா இரசிகனின் மனநிலை இது போன்ற சமூக சேவைகளுக்கு ஒத்து வராது. எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், தொடர்ந்து அர்ப்பணிக்கின்ற ஒரு குறுகிய கால திட்டமாவது இருக்க வேண்டும்.
இரத்த தானம், பள்ளிகளில் குப்பை தொட்டி வழங்குவது, மெடிக்கல் கேம்ப் என்று சின்னச் சின்னதாக நற்பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், எதையும் தொடர்ச்சியாகச் செய்யவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை. ஒரு செடிக்கு ஒரே ஒரு நாள் நீரூற்றிவிட்டு மறுநாள் அது கருகினால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று விலகிக் கொள்கிற மனப்பான்மை, ஒரே ஒரு நாள் உதவி செய்துவிட்டு விலகிக் கொள்வதிலும் உள்ளது.
சேரன் மனதிலும் இதே எண்ணம் நிச்சயம் தோன்றியிருக்க வேண்டும். நாங்கள் தொகையை வழங்கச் சென்ற நேரத்தில் அங்கு ஒரு பெண் உட்பட சில இளம் கம்ப்யூட்டர் வல்லுனர்களை பார்த்தோம். ஒவ்வொரும் TCS, Ford போன்ற நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிப்பவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து, தற்போது பணிக்கு வந்துவிட்ட நிலையிலும் தொடர்ச்சியாக சமூக நலப் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். குறிபபாக நாங்கள் சென்றிருந்து குழந்தைகள் விடுதிக்கு, ஒரு வருடத்திற்கும் மேல் வருகை தந்து குழந்தைகளின் கல்வி மற்றும் மற்ற திறன்களை வளர்க்க உதவி செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
”இளைஞர்களாகிய நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. என்னுடைய வருகையை விட, உங்கள் வருகை அர்த்தமுள்ளது”, என சேரன் அவர்களை பாராட்டினார்.
நாங்கள் சில ரோஜாக்களுக்கு ஒரு நாள் தண்ணீர் வார்த்துவிட்டு வந்துவிட்டோம். அந்த இளைஞர்கள் அவற்றை தினம் தினம் பாதுகாக்கிறார்கள். அவர்களே இந்தியாவின் ”புதிய தலைமுறை”