Tuesday, October 7, 2014

போலாம் ரைட்டு! கடவுள் நேரில் வர வேண்டாம்.

என் தம்பியைக் காணோம். அப்போது நான் ஆறாம் வகுப்பு சிறுவன். சென்னை பாரிமுனையில் உள்ள ஆர்மீனியன் தெரு. அங்கிருந்த சர்ச்சில் நானும், என் தம்பியும் நீண்டிருந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். எதற்காக சர்சுக்கு சென்றோம் என்று நினைவில் இல்லை. யார் எங்களை அழைத்து சென்றது என்பதும் பிசிறாகக் கூட ஞாபகம் இல்லை. ஆனால் கையில் பனை ஓலைச் சிலுவை மறு கையில் தம்பி என நின்று கொண்டிருந்தபோது அவன் காணாமல் போய்விட்டான்.

அச்சச்சோ தம்பியை தொலைத்துவிட்டோமே என்று பயந்துவிட்டேன். எங்கே தேடுவது? எப்படித் தேடுவது எனத் தெரியவில்லை. பயமும் பதற்றமும் பெருகி திக்குத் தெரியாமல் திரிய ஆரம்பித்துவிட்டேன். பொம்மைக் கடை, ஐஸ் வண்டி, பயாஸ்கோப் கூட்டம் என எங்கெங்கோ நுழைந்து வந்தேன். கை, காலெல்லாம் நடுங்க பொல பொலவென பெருகிய கண்ணீர் என் கன்னங்களைச் சுட்டது.

யார் யாரோ என்னை விசாரிக்கிறார்கள். என் தம்பி எப்படி இருப்பான் என்கிறார்கள். யாரோ ஒரு வயதான பாட்டி என்னை திட்டினார். இப்படியா அஜாக்கிரதையா இருப்பாய் என்றார். வேறொருவர் என் வீட்டு பெரியவர்களை எல்லாம் வைதார். இப்படியா பொறுப்பில்லாம சின்னப்பசங்களை அனுப்பி வைப்பாங்க என்றார்.

எல்லாம் கொஞ்ச நேரம்தான். அதற்கப்புறம் யார் என்ன சொன்னார்கள் என்பதே என் காதில் விழவில்லை. யார் என் கண் முன் நின்றார்கள் என்பதும் தெரியவில்லை.

கிட்டத்தட்ட அதே மன நிலையை என் நண்பர் கடந்தவாரம் விவரித்தார். ”யார் என் முன்னாடி நிக்கறாங்கன்னே தெரியல. அவங்க ஏதேதோ சொன்னாங்க. ஆனா எதுவும் என் காதுல விழல”, என்றார். வீட்டில் ஒரு திருமணம் நிச்சயமாகி இருந்த நேரம். பத்திரிகை கொடுக்க புறப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அம்மா மயங்கிவிட்டார். ஃபோனை வைத்துவிட்டு ஆட்டோ பிடிக்கச் சென்ற மனைவி அருகில் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆபீசுக்கு போய்விட்டார்கள். வழக்கமான வருகிற காய்கறிக்காரம்மாவையும் காணோம். ஃபோன் அடித்தால் நண்பன் வெளியூரில் இருப்பதாகச் சொல்கிறான். அம்மாவின் கண்கள் செருகிக் கொண்டன. அவரை தூக்கிக் கொண்டு மாடிப் படியிறங்குகிற அளவுக்கு உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை. கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவரை உலுக்கிக்கொண்டே ஏதேதோ சொல்லி கத்த ஆரம்பித்துவிட்டேன். யாரோ ஒருவர் உள்ளே வந்தார். அவர் யார் என்று தெரியவில்லை. சட்டென அவர் கை கொடுக்க மேலும் பலர் வந்துவிட்டார்கள். எனக்கு ஒருவரையும் அடையாளம் தெரியவில்லை.

சிறுவனாக தம்பியை தொலைத்துவிட்டு நான் அதே மனநிலையில்தான் இருந்தேன். கண்களை மூடிக்கொண்டு ”சாமி என் தம்பியை கண்டுபிடிச்சுத்தா” என்று பிரார்த்தித்தேன்.

நண்பரும் அதையே சொன்னார். யார் வந்தாங்க, என்னை சுத்தி என்ன நடந்ததுன்னு தெரியல. ”பெருமாளே எங்கம்மாவை எப்படியாவது காப்பாத்திடு” அப்படின்னு பிரே பண்ண ஆரம்பிச்சுட்டேன் என்றார்.

எங்கிருந்தோ என் தம்பியை ஒருவர் அழைத்து வந்தார். இருவரும் கதறியபடி ஒருவரையொருவர் கட்டிக்கொண்டோம். எப்படி வீடு வந்தோம், யார் அழைத்து வந்தார்கள் என்பது இன்னமும் ஞாபகம் இல்லை.

யார் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தாங்க தெரியல. எப்படியோ கரெக்ட்டான சமயத்துல எங்கம்மாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டோம். எங்கம்மா மீண்டு வந்துட்டாங்க என்றார்.

சுருக்கமாகச் சொன்னால் கடவுளை நம்புவதற்கு கடவுள் கடவுள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. கடவுளைத் தவிர வேறு துணையில்லை என்கிற சூழ்நிலை வந்தால் போதும்.

இதான் இன்னைக்கு பாயிண்டு! போலாம் ரைட்டு!

Sunday, October 5, 2014

பள்ளிக் குழந்தைகளின் மனதில் திணிக்கப்படும் ஊழல் அரசியல்

ஜாமீன் போராட்டத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையாம். யார்? யாரைக் கேட்டு எடுத்த முடிவு இது?
என்ன நடந்தாலும் சரி, சாராயக் கடைகளை மூடமாட்டோம். ஆனால் பள்ளிக்கூடத்தை மூடுவோம் என்கிற இந்த அத்துமீறலைச் செய்வது யார்?
ஊழலை ஆதரிப்பது, எதிர்ப்பது போன்று நடிப்பது போன்ற அபத்தங்களுக்கும், அசிங்கங்களுக்கும் நாம் அனைவரும் பழகிவிட்டோம். ஆனால் அதை அடுத்த தலைமுறை குழந்தைகளின் மனதில் திணிக்க முயற்சிக்கும் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நம் வீட்டுக் குழந்தைகளின் படிப்பில் தலையிட்டு, அவர்களை தங்கள் அநாகரீக அரசியல் விளையாட்டுக்கு உட்படுத்தும் இந்தச் செயல் சர்வாதிகாரமானது. இந்த அசிங்கத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்வது யார்? யாரோவா? அதிமுக என்ற கட்சியா? தமிழக அரசா?
ஜெயலலிதாவுடைய கைதும், அதைத் தொடர்ந்து நடக்கின்ற கலவரங்களும், ஊழல்களை நியாயப்படுத்திப் பேசுகிற ஒரு பரவலான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே அசிங்கம். இப்போது இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கள்ளம் கபடமில்லாத பள்ளிக் குழந்தைகளின் படிப்பையும், மனதையும் கெடுக்கிற அபாயத்தை நோக்கி ஏவப்பட்டிருக்கிறது. இதனை அனுமதிக்கவே கூடாது.
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.
ஜெயலலிதாவுக்கு தெரியாமல்தான் இந்த அத்துமீறல் நடைபெறுகிறது என்று நம்புகிறேன். அவருக்குத் தெரிந்தால் நிச்சயம் இதனை அனுமதிக்க மாட்டார் என்பது என் திடமான நம்பிக்கை. நிச்சயம் அவர் இந்த அளவுக்கு மோசமான முடிவுகளை ஆதரிக்கிற பெண் அல்ல.
ஒருவேளை இது ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்றால், இது கடுமையான குற்றம். அதுவும் சாதாரணக் குற்றமல்ல. அவர் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை விட மாபெரும் குற்றம். சொத்துக்குவிப்பை விட இந்த அராஜக அதிகாரக் குவிப்பு மிக மிக தவறானது, உடனே தண்டிக்கபடக் கூடியது.
நாம் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பள்ளிகளை மூடச் சொல்லும் இந்த அராஜக முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நம் குழந்தைகளை அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து பாதுகாக்க நாம் உடனே ஒன்றுபட வேண்டும். வரும் 7ம் தேதி எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் பள்ளிகள் இயங்க வேண்டும்.
பள்ளிகளில் அரசியல் பாடமாக இருக்கலாம். ஆனால் அரசியல் மேடைகளில் பள்ளிகளை நடத்த அனுமதிக்கவே கூடாது.
டியர் மிஸ்டர் பன்னீர்செல்வம்! குனிந்தது போதும். கொஞ்சம் நிமிருங்கள். நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர் என்பதை உணர்ந்து இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்துங்கள்.
உங்களுக்கு உங்கள் தலைவியின் விடுதலை எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட எங்களுக்கு எங்கள் குழந்தைகளின் கல்வி முக்கியம்.