Tuesday, January 27, 2009

குரங்குகளா? மனிதர்களா? யார் இந்த ராம் சேனா?

மங்களுரில் குடியரசு தினத்தன்று 'குடித்துக் கொண்டிருந்த' சில இளம் பெண்களை ராம் சேனா என்கிற அமைப்பின் தொண்டர்கள் கண் மூடித் தனமாக காமிராக்களின் முன்னிலையிலேயே தாக்கினார்கள்.

பெண்கள் குடிப்பது தவறு என்பது அவர்களுடைய வாதம். பாராட்டுக்கள், அவர்களுடைய எண்ணம், நல்ல எண்ணம்தான். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் காட்டுமிராண்டித்தனம். குறிப்பிட்ட மது விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த குடிமகள்களையும், தடுக்க வந்த குடிமகன்களையும் கன்னாபின்னாவென்று தாக்கி அத்து மீறினார்கள்.

வழக்கம்போல குடியரசு தினத்தன்று கூட தவறாமல் குடிக்க வந்த குடிமகள்களுக்கு நல்ல தங்காள் சர்டிபிகேட் கொடுத்துவிட்டு, குரங்குகளைப்போல அட்டகாசம் செய்த ராம் சேனா குண்டர்களை மட்டும் வடநாட்டு டெலிவிஷன்கள் சிவப்பு வட்டம் போட்டு, Moral Policing செய்ய யார் இவர்கள் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன.

கூடவே மகளிர் ஆணையம், அப்புறம் ஏதேதோ உரிமை மீறல் ஆணையங்கள் எல்லாம் அந்த ராம் சேனா குரங்குளை கைது செய்ய குரல் கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. கர்நாடகத்தில் நடப்பது காவிக் கட்சியின் ஆட்சி. தவறு செய்திருப்பதும் காவிக் கட்சியின் அடங்காப் பிடாரி தோஸ்துதான். அதனால் முதலில் தயங்கிய பி.ஜே.பி அரசு ஒரு வழியாக இன்று ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்கை கைது செய்திருக்கிறது.

யார் இந்த ராம் சேனா?
ஒக்கனேக்கல் பிரச்சனை சூடுபிடித்த போது, பெங்களுருவில் நமது தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டில் கல்லெறிந்தவர்கள் இவர்கள் தான். எம் எஃப் ஹீசைன் சித்திரம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள். கடந்த வருடம் ஹீப்ளியில் நடந்த ஒரு (வெடிக்காத) குண்டுவீச்சில் சந்தேகிக்கப்படுபவர்கள். சில சர்ச்சுகளை தாக்கி கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு கிலி ஏற்படுத்தியவர்கள். மெலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 'இளம் பெண் துறவி' சாத்வி பிராக்யா தாக்கூருக்கு ஆதரவாக கொடி பிடித்தவர்கள்.

யார் இந்த பிரமோத் முத்தலிக்?
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மற்றும் முன்னாள் பஜ்ரங்தள் தலைவர். கர்நாடக சிவசேனையின் தலைவராகவும் சில காலங்கள் பதவியில் இருந்திருக்கிறார்.

ஆனால் வீட்டுக்கு அடங்காத பிள்ளை போல பிரமோத் முத்தலிக் அடிக்கடி தலைகளிடத்தில் முறுக்கிக் கொள்வார். 'சமுதாயத்தைக் காக்கவும், தவறு நடக்காமல் தடுக்கவும்' அவர் ஆரம்பித்துள்ள இந்த ராம் சேனாவுக்கு காவி ஆதரவாளர்களின் மறைமுக ஆசி உண்டு.

இவருடைய இந்த காவிப் பிண்ணனியால்தான் பி.ஜே.பி அரசு ரொம்ப யோசித்து, தயங்கி அவரை கைது செய்திருக்கிறது.

"அந்த பெண்களின் மீதான இந்த தாக்குதலை யார் செய்திருந்தாலும் அவர்களை நான் பாராட்டுகிறேன். யாரும் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம். இது மிகச் சிறிய விஷயம்" என்கிற அவருடைய அறிக்கையே அவர் எப்படிப் பட்டவர் என்பதற்கு சான்று.

தற்போது கூட அவருடைய கைது, குடிமகள்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடையது அல்லவாம். ஏற்கனவே தாவனகிரியில் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மேல் ஒரு வழக்கு உள்ளதாம். அந்த வழக்கில்தான் அவர் கைது செய்யப் பட்டிருக்கிறாராம்.

எது எப்படியோ? ராம சேனாவைச் சேர்ந்தவர்கள் குரங்குகளைப் போல நடந்து கொண்டார்கள் என்பது மறுக்க முடியாது.

அதே சமயம் குடியரசு தினத்தன்று கூட பகலிலேயே குடிக்க கிளம்பிவிட்ட அந்த குடிமகள்களை மன்னிக்க முடியாது.

ஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.இரகுமான், சுக்வீந்தர் சிங் - Live

சற்று முன் என்.டி.டி.வி செய்தி பார்த்தேன். கிட்டத்தட்ட இரகுமான் ஆஸ்கர் வென்றது போல ஒரு செய்தி. ஏ.ஆர்.இரகுமான் 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் லைவ்வாக இசைத்து பாடுவதற்கேற்ப வடிவமைத்துக் கொண்டிருக்கிறாராம். எந்த மேடையில் தெரியுமா? ஆஸ்கர் விருதுகள் மேடையில். உடன் பாடப் போவது சுக்வீந்தர் சிங். ஜெய்ஹோ பாடலை எழுதிய 'குல்சார்' அன்று இரகுமான் குழுவினருடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் முதன் முதலாக ஆஸ்கர் மேடையில் ஒரு இந்தியனின் இசை, குறிப்பாக தமிழனின் இசை!

மேடையில் ஒலிக்கப் போகும் அந்த இசை, விருதையும் வெல்லுமா?
வெல்லும் என நம்புவோம்.
ஜெய்ஹோ!