Monday, December 22, 2008

அபினவ் - கமாண்டோக்கள் - ஒரு SMS

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வாங்கிய அபினவிற்கு (abhinav bindra) 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அரசாங்கம்..
இத்தனைக்கும் அவர் ஏற்கனவே பணக்காரர்..

ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எங்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 5 லட்சம்.. பாதுகாப்புக்கு படை வீரர்களின் மதிப்பு அவ்வளவு தானா?

பாதுகாப்பு படை வீரரின் உயிரின் மதிப்பு 5 இலட்சம்.. ஆனால் ஒலிம்பிக் தங்கத்தின் மதிப்பு 6 கோடியா???....

மேலே காணப்படும் இந்த வரிகள், கடந்த சில வாரங்களாக எஸ்.எம்.எஸ், வலைப்பூ, இமெயில் என பல உருவங்களில் உலவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் நான் இதே கேள்வியை உங்களை நோக்கி கேட்க விரும்புகிறேன்.
  • ஏ.சியில் சுகமாக அமர்ந்து கொண்டு வேலை செய்யும் உங்களில் பல பேருக்கு, இறந்து போன அந்த வீரர்களை விட மாதச் சம்பளம் அதிகம். யார் உசத்தி? நீங்களா? இறந்து போன அந்த வீரர்களா? 
  • யாருக்கு சொகுசு தேவை? உங்களுக்கா? எப்போதும் மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்த வீரர்களுக்கா?


என்ன செய்வது மை டியர் பிரண்ட்ஸ். தாஜ், டிரைடண்ட் போன்ற ஸ்டார் ஹோட்டலில் வடை சுடுபவருக்கு, எல்லையில் துப்பாக்கி சுடுகின்ற ஜவானை விட சம்பளம் அதிகம்தான். அதே போல இந்த எஸ்.எம்.எஸ்ஸை முதன் முதலில் எழுதியவருக்கும், இதை பரப்பிய பலருக்கும், இதை எழுதிக்கொண்டிருக்கின்ற எனக்கும் கிடைக்கின்ற மாதச் சம்பளம் நமது பாதுகாப்பு படை வீரர்களின் மாதச் சம்பளத்தை விட நிச்சயம் அதிகம்தான். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். வாசிக்கின்ற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

அந்த வீரர்களைவிட கிட்டத் தட்ட நாம் எல்லோரும் அதிக மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை என்றைக்காவது நாம் உணர்ந்திருக்கிறோமா?

எல்லையில் காவல் சாமிகளாக வெயிலிலும், மழையிலும், பனியிலும் உயிரை உருக்கிக் கொண்டிருக்கும் அந்த ஜவான்களை விட, நாளை முதல் உங்களுக்கு சம்பளம் கம்மியாகத்தான் தருவேன் என்று அரசாங்கமோ, உங்கள் நிறுவனமோ சொன்னால் தியாக மனப்பான்மையுடன் ஒப்புக்கொள்வீர்களா?

ஒன்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே. யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கேலி பேசலாம். ஆனால் அதே கேள்வி நம்மை நோக்கித் திரும்பும்போது, நம்முடைய பதில் என்ன?

என்னைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையும் பணத்தால் அளந்து பார்க்கிற பழக்கம் ஒழிய வேண்டும். பணம் என்பது இடைவெளியை நிரப்புகிற பாலம் அல்ல. மேலும் பெரிதாக்குகிற கோடாலி. பணம் எப்போதுமே சரியான அளவுகோல் அல்ல.

மனிதர்களை பணத்தால் அலங்கரிக்காதீர்கள். நல்ல மனதால் தொடுங்கள் போதும்.