Friday, June 20, 2014

கேபிள்! உங்களைப் போலவே உங்க பாட்டும் செம கூல் பாசு.

”நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரா கலந்துக்கணும்.”
”எத்தனை மணிக்கு தலைவரே? ”
”மாலை 6 மணிக்கு.”
”அடடா கொஞ்சம் கஷ்டம்”
”பிஸியா?”
”ஆமாம் தலைவரே. கடைசி ஷெட்யூல். ஷீட்டிங் போயிட்டிருக்கு. 6 மணிக்கு முடிஞ்சிடும். எட்டு மணிக்குன்னா சொல்லுங்க வந்துடறேன்.”

அதான் கேபிள்!!!

முதல் படம். ஆனால் பேச்சில் அதற்கான டென்ஷன் எதுவும் இல்லை. எனக்கு 6 வரை ஷீட்டிங். அதனால எட்டுக்கு வர்றேன்னு செம லைட். அவருடைய முதல் புத்தகம் வெளியானபோதும் இப்படித்தான். பாராட்டி பேச வந்தவர்கள்தான் கொஞ்சம் நெர்வசாக இருந்தார்கள். ஆனால் கேபிள் ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டிருந்தார். இவர் எப்பவுமே இதே மாதிரிதான் என்று அவருடைய மகன் அவரை கேலி செய்துகொண்டிருந்தான். 

அவருடைய பிரியாணி சிறுகதையை நான் மனசு என்ற பெயரில் குறும்படமாக்கினேன். திரைக்கதையை வாசிக்கும்போதும், ரிகர்சலில் கலந்துகொள்ளும்போதும் செம கலகலப்பு. படப்படிப்பின்போது கடுமையான காய்ச்சல். ஆனாலும் வந்து நடித்துக்கொடுத்தார். சலிக்காமல் படம் பார்ப்பதும், தயங்காமல் விமர்சனம் செய்வதும், நண்பர்களின் அழைப்பை ஏற்று நள்ளிரவாக இருந்தாலும் சந்திப்பதும்... கேபிளின் இன்னொரு பெயர் மிஸ்டர் கூல்.

பாசு..பாசு பாடலில் ஒரு கூலான விமர்சனம் கலந்த தொணி உள்ளது. அதுதான் கேபிளின் குணமும். செம லைட்... பாட்டு இங்கே. கேளுங்கள். இரசிப்பீர்கள். நான் இரசித்தேன்.

இசையமைப்பாளர் பி.சி.சிவனுக்கும், கார்க்கிக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும். இசையமைப்பாளர் பி.சி.சிவனுக்கும், கார்க்கிக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்.

 

கேபிளின் மென்மையான உணர்வுப்பூர்வமான முகத்தையும் சமீபத்தில் அறிந்துகொண்டேன். தந்தையர் தினத்தன்று ஃபேஸ்புக்கில் தன் தந்தையைப்பற்றி எழுதியிருந்தார். கனவுகளைத் துரத்தும் மகனும், அவனை தன் இதயத்தில் தாங்கும் தந்தையும் நேரில் உரையாடியது போல அவ்வளவு நெகிழ்வாய் இருந்தது.

படத்தின் டைட்டில் ”தொட்டால் தொடரும்”. சினிமா சென்டிமெண்டின்படி பாசிட்டிவாக இருக்கிறது. படமும் பாடலைப்போலவே நிச்சயம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துகள் கேபிள். உங்களை வெற்றிகள் தொடரும்.

Tuesday, June 17, 2014

மின்தடைக்கு எதிராக கொந்தளிப்பு! சென்னை ஸ்டைல்!

நேற்று சென்னை மாநகர் முழுவதும் திடீர் திடீர் என மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஃபேனோ ஏசியோ இயங்கவில்லை. இதனைத் தொடர்ந்து தூக்கமிழந்த மக்கள் தமிழக அரசையும், தமிழக மின் துறையையும் எதிர்த்து கொந்தளிப்புடன் ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்தார்கள்.

நுழைந்தவேகத்தில் குஷ்பு திமுகவிலிருந்து விலகியதை கிண்டலடித்து ஸ்டேட்டஸ் போட்டார்கள். மேலும் சிலர் #IsupportKushbu என்று டிவிட்டரில் குஷ்புவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்கள். ஆனாலும் கோபம் அடங்காத சிலர் மானாட மயிலாட புகழ் நமீதாவையும் கேலி செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

மக்களின் எதிர்ப்பைக் கண்டு  அதிர்ச்சியடைந்த தமிழக அரசு அவசரம் அவசரமாக இந்த மாதத்தை மேமாதம் பார்ட் -2 என அறிவித்தது. இந்த  அவசர அறிவிப்பைத் தொடர்ந்து மே மாதம் இன்னும் முடியவில்லை என்றும் அதனால் ஜீன் 1ம் தேதியும் இன்னும் வரவில்லை என்பதையும் சென்னைவாசிகள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் மொபைலிலும் ஐ-பேடிலும் சார்ஜ் தீர்ந்தவுடன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலிருந்து லாக் அவுட் செய்து மின்தடைக்கு எதிரான போராட்டம் வாபஸ் என்று அறிவித்தார்கள்.

மேலும் போராட்டக்காரர்களில் சிலர் மிகவும் திருப்தியுடன் குஷ்பு பிஜேபியில் சேர்ந்துவிட்டாராம் என்று சந்தோஷமாக வதந்திபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் மீண்டும் கொந்தளிக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து போராட்டத்தை சமாளிக்க மேமாதம் பார்ட்-3ஐ அமல்படுத்தி ஜீன்-1ம் தேதியை மேலும் தள்ளிவைக்க ஏற்பாடுகள் நடப்பதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.