Saturday, May 2, 2009

சங்கராச்சாரியார் அரெஸ்ட்டில் இழந்ததை ஈழ பிரச்சனையில் ஈடுகட்டப் பார்க்கிறார் ஜெ!

சில வருடங்களுக்கு முன், மக்களுக்கு விளங்காத ஒரு மர்மப்பிரச்சனையில் சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையிலடைத்தார் ஜெயலலிதா. பொம்பளை நரேந்திர மோடி என்று ஜெயலலிதாவை ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையும் கூட. பாபர் மசூதியில் இராமர் கோவிலைக் கட்டாவிட்டால் வேறு எங்கே கட்டுவதாம் என்கிற அவருடைய பிரபலமான பஞ்ச் டயலாக், அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ஹிந்து தீவிரவாத முகத்தின் ஒரு பக்கம். சான்ஸ் கிடைத்தால் இவரும் நரேந்திர மோடி அளவிற்கு கோர தாண்டவம் ஆடக் கூடியவர் என்பது என் எண்ணம்.

ஆனால் அவருடைய சங்கராச்சாரியார் அரெஸ்ட், கொஞ்சம் மென்மையான ஹிந்து ஆதரவாளர்களை அசைத்துவிட்டது. உதாரணத்திற்கு எஸ்.வி.சேகரின் புலம்பல்கள். அந்தப் புலம்பல்கள் ஜெவிற்கு எதிரான வாக்குகளாக மாறுகின்ற அபாயம் வந்தபோது, அதை ஈடுகட்ட ஈழப்பிரச்சனை அவருக்கு வாய்த்துவிட்டது.

ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் எவரும் மனம் மாறி கருணாநிதிக்கு வாக்களிக்கப்போவதில்லை.
அதே போல தனி ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் மனம் மாறி ஜெவிற்கு வாக்களிக்கப்போவதில்லை (உதாரணத்திற்கு கருணாநிதியை சூழ்நிலைக் கைதி என்று வர்ணித்துவிட்டு காங்கிரஸை மட்டும் எதிர்க்கக் கிளம்பியிருக்கும் தமிழ்திரையுலகம்).

ஆனாலும் அங்கே சங்கராச்சாரியார் அரெஸ்டால் சிதறிய வாக்குகளை, இங்கே ஈழ ஆதரவாளர்களின் கருணாநிதி எதிர்ப்பு வாக்குகளை வைத்து சரி கட்டிக் கொள்ளலாம் என்று ஜெ கணக்கு போட்டிருக்கிறார்.

அவர் கணக்கு தவறாமலிருக்க வை.கோ, இராமதாசு மற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள் துணை போயிருக்கிறார்கள்.
அந்தக் கணக்கு பொய்க்க வேண்டுமென்று கருணாநிதி (உண்ணாவிரதம் உட்பட) என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் இந்த கணக்கை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிந்தவுடன் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அனைவரும், வாக்காளர்கள் உட்பட அனைவரும் ஆளுக்கொரு திசைக்கு பறந்துவிடுவார்கள்.

ஈழப்பிரச்சனையும், சங்கராச்சாரியார் மர்மமும் அப்படியேதான் இருக்கப் போகிறது.

அழகிரியின் 5000ம் ரூபாயும் - அம்மாவின் 50 நாள் ஈழ ஆதரவும்

தமிழக வாக்காளர்களைப் பொறுத்தவரையில் . . .
50 ரூபாய் பிரியாணிக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
ஜெயலலிதாவின் 50 நாட்கள் ஈழ ஆதரவிற்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
அழகிரியின் 5000ம் ரூபாய்க்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
கருணாநிதியின் வீல் சேர் முதுமைக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
நேரு குடும்பத்து வாரிசுகளுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
திருமாவின் தலித் முழக்கத்திற்கு  விலை போகிறவர்கள் ஒரு வகை
சிறுபான்மை ஆதரவு கோஷங்களுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை


மொத்தத்தில் ஏதாவது ஒன்றிற்கு விலை போவதில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் ஒரே வகை.

ஆனால் தற்போது வாக்காளர்களின் பேராதரவுடன் முன்னணியில் இருப்பது . .
அழகிரியின் 5000ம் ரூபாயும்
அம்மாவின் 50 நாள் ஈழ ஆதரவும்
இரண்டுமே தேர்தல் முடிந்தவுடன் நின்று போகும்.

Friday, May 1, 2009

ஜெயலலிதாவின் அருகில் பெட்டைகளாக, பேடிகளாக கம்யுனிஸ்டுகளும், வை.கோவும் - சுதர்சனம்

இன்றைக்கு திருச்சியில் தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முதன் முறையாக காங்கிரஸ் கட்சியின் சுதர்சனம் மேடையில் பேசியதைப் பார்த்தேன். நறுக்கென்று பேசாமல் கொஞ்சம் வழ வழா கொழ கொழாவாகத்தான் பேசினார். ஆனால் அவர் பேசிய ஒரு பாயிண்ட் எனக்குப் பிடித்திருந்தது.

”சேது சமுத்திரம் திட்டம் துவங்கிய போது அது என்னால்தான் நடந்தது என்றார் வை.கோ. எங்களால்தான் நடந்தது என்றார்கள் கம்யுனிஸ்டு தோழர்கள். ஆனால் அவர்களை அருகில் வைத்துக் கொண்டே சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்பதை வலியுறுத்தி ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அதை எதிர்த்துப் பேச முடியாமல் பெட்டைகளாகவும், பேடிகளாகவும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்” என்றார்.

உண்மைதான்! நான் ஒரு காலத்தில் மிகவும் மதித்த வை.கோ.வும், இந்த தேர்தலுக்கு முன்பு வரை என்னை வசீகரித்த கம்யுனிஸ்டுகளும் ஜெயலலிதாவின் முன் பேடிகளாகவும் பெட்டைகளாகவும்தான் அமர்ந்திருந்தார்கள்.

Thursday, April 30, 2009

ஜெயலலிதா நினைப்பது போல இலங்கைப் பிரச்சனை ஓட்டு வாங்கித் தருமா?

கருணாநிதியின் முதல் பிரச்சாரக் கூட்டம் நமுத்துப் போன பட்டாசு. ஆனால் அவருடைய உண்ணாவிரதத்திற்குப் பிறகு தொண்டர்கள் கொஞ்சம் தெம்பாக நடப்பது போல ஒரு பிரமை. ஆனாலும் கருணாநிதி அவருடைய அடுத்த கட்டப் பிரச்சாரத்தில் இலங்கைப் பிரச்சனையை கொஞ்சம் அமுக்கியே வாசிப்பார் என்று நினைக்கிறேன். இலங்கைப் பிரச்சனையை விட ஒரு ரூபாய் அரிசியும், கலர் டிவியும் தனக்கு அதிக வாக்கு பெற்றுத் தருமென இன்னமும் அவர் நினைப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் ஜெயலலிதாவும், அவருடைய மீடியா மேனேஜர்களும் இலங்கைப் பிரச்சனையை பெரிய ஓட்டு வங்கியாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இலங்கைப் பிரச்சனை நிச்சயமாக ஜெயலலிதாவிற்கு ஓட்டு வாங்கித் தராது என்றுதான் நான் எண்ணுகிறேன். ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு பிரியாணியில் சர்க்கரை போட்டு சாப்பிடுவது போல, ஒட்டவே மாட்டேன்கிறது. கருணாநிதியால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைக்கும் பல தீவிர ஈழ ஆதரவு வாக்காளர்களைத் தவிர மற்றவர்களை ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு எந்த வகையிலும் பாதிக்கவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களை ஜெவின் ஈழ ஆதரவு வசனங்கள் ஈர்க்கவில்லை. ஜெவின் பிரச்சார மீட்டிங்குகளில் தொண்டர்களின் ரியாக்ஷனைக் கவனித்தால் புரியும். ஜெ கருணாநிதியை திட்டினால் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இலங்கைப் பிரச்சனையில் உண்ணாவிரதம் உட்பட கருணாநிதியைப் பற்றிய எந்தக் கிண்டலையும் கூட்டம் இரசிக்கிறது. ஆனால் அனல் பறக்க ஈழ ஆதரவு வசனம் பேசும் போது ஸ்..ஸ்..யம்மா என்று வெயில் தாங்காமல் வெறுமனே விசிறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குள் ஈழ உணர்வு என்பது துளியும் கிடையாது. அ.தி.மு.க தொண்டர்களைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் தான் தலைவர், ஜெயலலிதா அவருடைய வாரிசு, கருணாநிதி இவர்களின் எதிரி, என்று மிக சிம்பிளான மசாலாப்பட பாணியில் கொள்கை படைத்தவர்கள். அவர்களுக்கு ஜெயலலிதாவின் திடீர் பல்டியும் ஈழ ஆதரவும் இன்னமும் அஜீரணமாகவே இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

கருணாநிதி இம்சையால், தமிழக காங்கிரஸ் அவ்வப்போது தங்களுக்கும் இலங்கைப் பிரச்சனையில் அக்கறை இருப்பதாக அறிக்கை விட்டாலும், காங்கிரஸைப் பொறுத்தவரை பிரபாகரன் என்பவர் ராஜீவ் கொலையாளி. எனவே எந்தக் காலத்திலும் காங்கிரஸ்காரர்கள் ஈழப்பிரச்சனையை முன்னிறுத்தி அதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கருணாநிதியும் இதை புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறார், ஜெயலலிதாவின் குடைச்சல் காரணமாக அவ்வப்போது பட்டும்படாமல் இலங்கைப் பிரச்சனைகளை பேசுகிறார்.

அம்மா முதலில் சாதாரணமாக ஈழ ஆதரவு என்றார். தற்போது வழக்கம் போல அதிரடியாக ”படையெடுத்துப் போய் தனி ஈழம்“ என்று முழங்குகிற அளவுக்கு வந்துவிட்டார். கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையில் கருணாநிதியை தாக்குவதை மட்டும் முன்னிலைப் படுத்தி பிரச்சாரம் துவங்கியபோது கூட்டமும், ஆர்ப்பரிப்பும் இணைந்தே இருந்தது. ஆனால் லட்டு போன்ற மின்சாரப் பிரச்சனை, அழகிரி பிரச்சனை, விலைவாசிப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு ஈழப் பிரச்சனையை மட்டும் முன்னிலைப் படுத்தியபின் . . . கூட்டமிருக்கிறது, ஆனால் உற்சாகம் மைனஸ்.

ஜெயலலிதாவின் தனி ஈழத்திற்கு யார் தலைவர்? பிரபாகரனா? எஸ்.எஸ்.சந்திரனா?

திடீர் உண்ணாவிரதம், திடீர் பஸ் கட்டணக் குறைப்பு என கருணாநிதி திடீர் நாயகனாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் திடீர் என ஒரு விசிடியைப் பார்த்து திடீர் என தனி ஈழத்துக்காக முழங்கிக் கொண்டிருக்கிற ஜெயலலிதா. நேற்று ஏதோ ஒரு மண்டையைப் பிளக்கிற மத்தியான வெயிலில் நாங்கள் ஜெயித்தால் இலங்கையின் மேல் படையெடுத்துப் போய் தனி ஈழம் அமைப்பேன் என்று கத்திக் கொண்டிருந்தார்.

அவருக்கு சில கேள்விகள்.
உங்களுக்கு வாக்களித்தால் யார் பிரதமர் என்பதை சொல்லமுடியுமா?
நீங்கள் இதுவரையிலும் அடையாளம் காட்டாத பிரதமரை மிரட்டி, இலங்கையின் மேல் படையெடுத்துப் போய் தனி ஈழம் அமைப்பேன் என்கிறீர்களே. அப்படி அமைத்தால் அந்த தனி ஈழத்திற்கு யார் தலைவர்? எஸ்.எஸ் சந்திரனா? பிரபாகரனா?
(எதற்கு கேட்கிறேன் என்றால், எஸ்.எஸ்.சந்திரனை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிவிடலாம். ஆனால் பிரபாகரனை அப்படி நினைத்த மாத்திரத்தில் நீங்கள் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற முடியாது)

Tuesday, April 28, 2009

தா.பா அவர்களே! நீங்களும் ஜெ, கருணாநிதி, ராமதாசு போல வாங்கிய சொத்தை மறைக்கிறவரா?

தா.பாண்டியன் தான் வாங்கிய சில சொத்துக்களை மறைத்து வேட்பு மனு தாக்குதல் செய்திருக்கிறார், என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த புகார் மனுவை நிராகரித்து தா.பாண்டியனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டுவிட்டது.

அந்தப் புகார் உண்மைதான் என்றும் நரேஷ்குப்தாவின் தலைமையில் உள்ள தேர்தல் ஆணையம் சரியாக விசாரிக்கவில்லை என்றும் இடித்துக்கூறி, கருணாநிதி இன்று ஒரு பேட்டி அளித்தார். பேட்டியின் போது (அம்மாவிடமிருந்து தாவி ஐயனிடம் தஞ்சமடைந்திருக்கும்) வழக்கறிஞர் ஜோதி ஏதேதோ சட்ட விதிகளைக் கூறி தா.பாண்டியன் சொத்து வாங்கியதற்க்கான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களை காண்பித்தார்.

பேட்டி முடியும் போது அருகிலிருந்த வீராச்சாமி அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபாலின் மேல் ஒரு புகார் பட்டியல் வாசித்தார். வேணுகோபால் தற்போது குடியிருக்கும் ஒரு வீட்டிற்கு பல வருடங்களாக கார்ப்பரேஷன் டாக்ஸ் கட்டவில்லை, அது மட்டுமல்லாமல் சென்ற முறை ஒரு தேர்தலில் போட்டியிட்டு இன்னமும் அதற்க்கான செலவுக் கணக்கை காட்டவில்லை. விதிப்படி ஒருவர் தேர்தல் செலவுக் கணக்கை காட்டாவிட்டால் அடுத்த 6 ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது. ஆனால் தேர்தல் ஆணையம் வேணுகோபாலின் மீதுள்ள புகாரை தள்ளுபடி செய்து அவருடைய மனுவையும் ஏற்றுக் கொண்டுவிட்டது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் காட்டினார்.

இதற்கு தேர்தல் என்ன பதில் கூறப் போகிறது? அ.தி.மு.க, தா.பாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம், இன்றைய தேர்தல் மேடை பாப்கார்ன்கள்.

ஒன்று மட்டும் உறுதி! இன்று எல்லா அரசியல்வாதிகளும் சொத்து சேர்க்கிறார்கள். ஞாநி அடிக்கடி எழுதுவது போல வழக்கறிஞர் ஜோதி போன்ற படித்த, சட்டம் தெரிந்தவர்களை வைத்துக்கொண்டு அனைத்தையும் மறைக்கிறார்கள்.

அவர்களை வேறு எந்த சமயத்திலும் சாதாரண பொது ஜனங்களால் கேள்வி கேட்க முடிவதில்லை. தேர்தல் நேரத்தில் பொது ஜனங்களின் கோபங்களை அரசியல்வாதிகள் குண்டர்களைக் கொண்டு அடக்குவதில்லை. எனவேதான் தற்போது தலைவர்களின் மேல் ஷீக்களும் செருப்புக்களும் பறக்கின்றன.

Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தமும் - கருணாநிதியின் உண்ணாவிரத நிறுத்தமும்

The following is the text issued by the Presidential Secretariat, Colombo

Statement by the Sri Lankan Government on the Security situation

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

April 27, 2009

Presidential Secretariat

Colombo

எல்.டி.டி.யிக்கு எதிரான தாக்குதல் முடிவுக்கு வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இன்று காலையில் திடீரென காலை 10 மணி அளவில் இலங்கை உயர் மட்டக் குழு அவசரமாகக் கூடி விவாதித்த பின் இந்த முடிவு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கருணாநிதியும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

அப்பாவித் தமிழர்களின் மேல் அநியாயமான தாக்குதல் நடக்காது, விமானங்கள் குண்டு மழை பொழியாது என்பது நிம்மதி தரும் விஷயம்.

ஆனால் இது கருணாநிதியின் உண்ணாவிரதத்திற்கு கிடைத்த வெற்றியா என்பதைப் பற்றி விவாதங்களும், கேலிகளும், கிண்டல்களும், மோதல்களும் நடக்கும்.

நடக்கட்டும்!

நமக்கும் பொழுது போகணுமில்லையா?

முதல் வெடி?
Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.
இதற்கு என்ன அர்த்தம்? கனரக துப்பாக்கிகள் மற்றும் வான் தாக்குதல்கள் இருக்காது? ஆனால் . . . இந்த அறிக்கையில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?

கருணாநிதி திடீர் உண்ணாவிரதம்

அண்ணா நினைவிடத்தில் திடீரென இன்று காலை 6 மணி முதல், தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிலவரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஈர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜெயலலிதா அண்டு கோ, புதிய கூட்டாளியான ரவிஷங்கர் துணையுடன் அவற்றை ஓட்டுக்களாக மாற்றும் முயற்சியில் நேற்று முதல் மாங்காய் அடித்தார்கள்.

கலைஞருக்கு வேறு வழியே இல்லை. நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலையைப் போலவே, அரசியல் நிலையும் தேய்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது. இதை விட்டால் வேறு நல்ல தருணம் இல்லை. உடல் நிலையை விட்டுக் கொடுத்தாவது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள உண்ணாவிரதத்தை துவங்கிவிட்டார்.

உணர்வுகளை வெல்லும் விரதமா, மாலையில் ஜீஸ் குடிக்கும் விரதமா என்பது அவருடைய உண்ணாவிரத்தின் தீவிரத்தைப் பொறுத்தது. காலையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் முதல்வரை தொலைபேசியில் அழைத்துப் பேசிவிட்டார். இன்னும் பல தொலைபேசி அழைப்புகளும் நேரில் வந்து நலம் விசாரிப்புகளும் தொடரும். சன் டிவியும், கலைஞர் டிவியும் அவற்றை நேரலைகளாக காட்டிக் கொண்டிருக்கும்.

ஆங்கில செய்திச் சேனல்கள் காலையிலேயே கருணாநிதியின் உண்ணாவிரதத்தை பொலிட்டிக்கல் விரதம் என்று வர்ணிக்க ஆரம்பித்துவிட்டன. இதே போல கேலிகளும் சந்தேகங்களும் பல முனைகளிடமிருந்தும் தொடரும்.

இந்திய-இலங்கை அரசுகளிடமிருந்து எந்த தீர்மானமான முடிவுகளும் தெரிவதற்குமுன் கலைஞரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தால், அவருடைய அரசியல் வாழ்வின் மிக சீரியஸான ஜோக் இதுவாகத்தான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் கருணாநிதி என்பவரின் அரசியல் வாழ்வின் முடிவாக இது மாறிவிடக் கூடும்.

பார்க்கலாம்!

Sunday, April 26, 2009

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜியின் ஓட்டுக் கலைப் பயிற்சி - முதல் மாணவி ஜெயலலிதா

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜி சமீபத்தில் இலங்கை சென்று இடம்பெயர்ந்த மக்களை பார்த்து வந்தாராம். அவர்களின் துயரங்களை ஒரு சிடியில் பதிவு செய்து ஜெயலலிதாவுக்கு போட்டுக் காண்பித்தாராம். உடனே ஜெயலலிதா மனது மாறி, தமிழீழத்துக்கு ஆதரவு தரத் தயாராகிவிட்டாராம்.

நல்ல ஜோக்! ஆண்டாண்டு காலமாகத் தொடரும் போராட்டம். எத்தனை இழப்புகள்! எத்தனை மரணங்கள்! அத்தனையையும் தேர்தல் தேதி அறிவிக்கும் முதல் நாள் வரை “போரில் மக்கள் சாவது சகஜம்” என்று எள்ளி நகையாடிய ஜெயலலிதா, சிடியைப் பார்த்ததும் மனது மாறிவிட்டாராம்.

ரவிஷங்கர் ஜி! ஈழத்தில் விழும் ஒவ்வொரு பிணமும் ஒவ்வொரு ஓட்டு என்பதை “சோவை மீறி” எப்படி ஜெயலலிதாவுக்குப் புரியவைத்தீர்கள்?

இன்றைய தேதியில் ஈழப் பிரச்சனையை வைத்து ஓட்டுக்களை வாங்கும் கலைதான் சிறந்த வாழும் கலை என்று ஜெயலலிதாவுக்கு எப்படிப் புரியவைத்தீர்கள்?

ரவிஷங்கர் ஜி,நீங்கள் இலங்கை சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியது வெளிப்படையான விஷயம். ஆனால் திரும்பி வந்ததும் நேற்று வரை தனி ஈழத்தை அதற்கான போராட்டத்தை அங்கீகரிக்காமல், எதிர்த்து வந்த ஜெயலலிதாவை (தேர்தல் நேரத்தில்) சந்தித்ததில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது.

ஒரு வேளை நாளை அம்மா ஜெயித்து ஈழப் பிரச்சனையை கை கழுவினால் நீங்கள் தமிழ் மக்களிடமிருந்து கருணாநிதியைப் போல “பதுங்கி வாழும் கலையை” கற்க வேண்டியதிருக்கும். சங்கராச்சாரியார் முதல் எஸ்.வி.சேகர் வரை ஜெயலலிதாவை நம்பிய யாரும் சுய மரியாதையோடு வாழ்வதாக சரித்திரம் இல்லை. ஜாக்கிரதை!

கேப்டன், ஜெ, தோழர்கள், வை.கோ, இராமதாசுக்கு கேள்வி

போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கசாப்புக் கடைக்காரனைப் போல இரக்கமே இல்லாமல் பேசிய ஜெயலலிதா.

ஜெயலலிதா லஞ்ச் சாப்பிடாததால், அது பெரும் உண்ணாவிரதப் போராட்டமாகி, உலமே ஈழப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதாகப் பிதற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள்

கிரிக்கெட் மாட்சுகளுக்கு இடையில் டிரிங்ஸ் எடுத்து வரும் பையனைப் போல ஜெயலலிதாவின் டிரிங்ஸ் பையனாக மாறிவிட்ட வை.கோ.

ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவை அன்புச் சகோதரியாக ஏற்று அவர் வீட்டில் விருந்து சாப்பிட்ட அண்ணன் இராமதாசு

கேப்டன் என்று பெயரை வைத்துக் கொண்டு டுவல்த் மேன் போல ஈழ விஷயத்தில் பதுங்கித் திரியும், விஜயகாந்த்.

இவர்கள் அனைவரும், ஈழப் பிரச்சனையில் தமிழின துரோகி, பந்த் பக்தர், தந்தி நாயகர், கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்றும, நாங்கள் பதவிக்கு வந்தால் தனி ஈழம் பெற்றுத் தருவோம் என்று வசை பாடுகிறார்கள்.

இவர்களுக்கு என்னுடைய கேள்வி.

தேர்தலுக்குப் பிறகு நீங்கள் யாரை ஆதரிக்கப் போகிறீர்கள்?
பதவி ஏற்ற மறுநாளே இலங்கையில் போரை நிறுத்துவேன் என்று உறுதி அளிக்கின்ற அரசுக்கா?
மீண்டும் உள்(குத்து)துறை, வெளி(குத்து) உறவுத் துறை அமைச்சர்களை அனுப்பி வெட்டிப் பேச்சு வார்த்தை நடத்துகின்ற அரசுக்கா?
ஒரு வேளை நீங்கள் ஆதரிக்கின்ற அரசு உடனடி போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் அந்த அரசை கவிழ்ப்பீர்களா?