Tuesday, July 1, 2014

புகைப்படங்களால் மூளைச்சலவை செய்யும் மோடியும், ஜெயலலிதாவும்

இமெயில் கண்டுபிடித்த தமிழர் சிவா அய்யாதுரை! சகஜமாக பிரதமரின் தோளில் கை போட்டபடி போஸ். சூப்பர்! 

தோளில் கை போட அனுமதித்தது பெருந்தன்மை என்றால் அதனை பிரசுரிக்க அனுமதித்தது அதனினும் பெருந்தன்மை. இந்த ஃபோட்டோ இது போன்ற எண்ணத்தைதான் உண்டாக்குகிறது. மோடியின் மேல் ஒரு இணக்கமான எண்ணத்தை உருவாக்குகிறது. மோடி என்றாலே டெர்ரர் என்ற பிம்பத்தை இது போன்ற ஃபோட்டோக்கள் நிச்சயம் குறைக்கும். ஒரு புகைப்படமோ, வீடியோவோ எந்த வகையான பிம்பத்தை உருவாக்கும் என்கிற சைக்காலஜியை, மற்ற எவரையும் விட மிக நன்றாக உணர்ந்தவர் மோடி. பிரதமர் ஆனபின் அவர் தற்போது ஒரு சாஃப்ட் இமேஜை உருவாக்க விரும்புகிறார் போலிருக்கிறது. எனது யூகம் சரியாக இருக்குமானால் இனி தொடர்ச்சியாக இது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகும்.

மீடியாக்களின் வழியாக தன்னைப்பற்றிய பிம்பத்தை பரப்புவதில் மோடியை விட ஜெயலலிதா செம ஷார்ப். எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின்போது அவரை இழுத்துத்தள்ளிய புகைப்படமும் வீடியோவும் அவருக்கு அரசில் களம் அமைத்துத்தந்தது. அவருடைய இன்றைய நிலைக்கு அது ஒரு அடித்தளம். அதை உணர்ந்து மீடியாக்களின் வழியாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் மிக அருமையாக திட்டமிடுகிறார். பிரச்சார மேடைகளில் அவர் நிற்பதும், பேசுவதும், ஆவேசமாக சவால்விடுவதும் டிவியிலும், புகைப்படத்திலும் தான் எப்படித் தோன்றுவோம் என்பதை உணர்ந்து வெளிப்படுத்தும் கச்சிதமான உடல் மொழிகள். 


அரசு நிமித்தமாக அவர் பலரை சந்திக்கிறார். அந்த புகைப்படங்களில் எல்லாம் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை கவனிக்கலாம். தொடர்ச்சியாக எல்லா ஃபோட்டோக்களையும் கவனித்துப் பார்த்தால் இது புரியும். எல்லா ஃபோட்டோக்களிலும் ஜெயலலிதா நிமிர்ந்து நிற்பார். அவரை சந்திக்கிறவர்கள் வணக்கம் சொல்லும்போதோ, பூங்கொத்தோ ஏதோ கொடுக்கும்போதோ இயல்பாக குனிகிற தருணத்தில் க்ளிக் செய்யப்படுகிற புகைப்படங்களை மட்டுமே பிரசுரிப்பார்கள். அருகில் இருப்பவர் நிமிர்ந்து நிற்பது போன்ற புகைப்படங்களை மறந்தும் பிரசுரிக்க மாட்டார்கள். அப்படி வந்திருந்தால் அவை வெகு அபூர்வம். 

இந்த வகை ஃபோட்டோக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பிரசுரிப்பதில் முதல்வர் விளம்பரப் பிரிவு கவனம் பிசகியதே இல்லை. இது ஒரு திட்டமிட்ட பிரெயின் வாஷ். யாராக இருந்தாலும் ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லும்போதே தலைகுனிந்துதான் செல்ல முடியும் என்ற ஒரு பிம்பத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள். 

சரியாகச் சொல்வதாக இருந்தால், கே.கே.எஸ்.எஸ்.ஆர் தன் மனைவியுடன் ஜெயலலிதாவின் காலில் விழுவதாக ஒரு புகைப்படம் பலவருடங்களுக்கு முன் பிரசுரமானது. அதுதான் ஜெயலலிதாவின் காலில் விழும் கலாச்சாரத்திற்கும், மண்டியிடும் புகைப்பட கேலரிகளுக்கும் அச்சாரம். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஒரு முரட்டு அரசியல்வாதி. அவரே ஜெயலலிதாவின் காலில் மண்டியிடுகிறாரே. அப்படியானால் ஜெயலலிதாவால் யாரைவேண்டுமானாலும் வீழ்த்தமுடியும், தன் முன் மண்டியிடவைக்க முடியும் என்ற எண்ணத்தை அந்த புகைப்படம் ஏற்படுத்தியது. அந்த புகைப்படம் ஏற்படுத்திய ஃபியர் ஃபேக்டரை ஜெயலலிதா இன்று வரை துல்லியமாக கையாளுகிறார். 

அமெரிக்க பிரதமர்கள் மற்றவர்களை சந்திக்கும்போது இது போல திட்டமிட்டு புகைப்படங்களை பிரசுரிப்பதாகச் சொல்வார்கள். ஜெயலலிதா அதே ஸ்டைலைத்தான் பின்பற்றுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் அவரை சந்திப்பவர்கள் தொடர்பான புகைப்படங்களில் பணிவும் பயமும் வெளிப்படவேண்டும் என்பதில் மிகக் கவனமாக உள்ளார். அதில் வெற்றியும் பெறுகிறார் என்பது என் அனுமானம்.

மீடியாக்கள் வழியாக பிம்பங்களை உருவாக்கி போர் புரியும் வித்தையை இன்னும் பல அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் கற்பார்கள். அப்போது அரசியல் களம் மிகவும் க்ரியேட்டிவாக இருக்கும்.