மலேசியவிமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் பெரிய அண்ணன்களான அமெரிக்க, ரஷ்ய சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது.
33,000ம் அடி உயரத்தில் பறக்கிற விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமானால் வலிமையுள்ள ஏவுகணை வேண்டும். அதை துல்லியமாக இயக்க நன்றாக பயிற்சி பெற்றவர்கள் வேண்டும். அப்படிப்பட்ட ஏவுகணையும், இயக்கும் பயிற்சியும் உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டு.
உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து பயிற்சியும் ஆதரவும் கொடுத்துவருகிறார்கள். ஏவுகணை கிளர்ச்சியாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலிருந்துதான் ஏவப்பட்டுள்ளது. எனவே ஏவுகணை இயக்கப்பட்ட விதத்தையும், ஏவப்பட்ட பகுதியையும் கவனிக்கும்போது எல்லா சந்தேகங்களும் உக்ரைன் கிளர்ச்சியாளர்களை நோக்கி குவிகிறது.
விமானத்தை சுட்டு வீழ்த்த உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகவே குற்றம் சுமத்துகிறார்.
சமீபகாலமாக ரஷ்யா மீண்டும் தலையெடுக்க முயல்வதும், அமெரிக்கா எரிச்சலுடன் கவனிப்பதும் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பதை கணிப்பது கடினம்.
உக்ரைன் அதிபர் படு கோபத்தில் இருக்கிறார். மது குடித்த கொரில்லாக்களால் இதைச் செய்ய முடியாது. நிச்சயம் ரஷ்யாவின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்கிறார் காட்டமாக.
விமானம் வீழ்ந்து கிடக்கும் பகுதி தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பயணிகளின் உடல்களை அவர்கள் தான் கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்கள். இதனை கண்காணிக்க யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. தைரியமாக நெருங்கிய பத்திரிகையாளர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்திருக்கிறார்கள். அப்பாவி பயணிகளின் உடல்கள் கொடுமையான வெப்பத்தில் கிடக்கின்றன. எனவே அவற்றை விரைவில் குலைந்து போகாமல் தடுக்க நாங்கள் பத்திரப்படுத்தி வருகிறோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தடயங்களை அழிக்கிறார்கள் என்று ஒபாமாவும், உக்ரைன் அதிபரும் குற்றம்சாட்டுகிறார்கள். சர்வ தேச மனித உரிமை ஆர்வலர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அனுமதித்துவிட்டு, அந்தப் பகுதி மக்கள் எவருடனும் பேசக்கூடாது எனச் சொல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால் முக்கியமான சில கேள்விகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் மலேசிய விமானத்தை ஏன் சுட்டு வீழ்த்தவேண்டும்? அதனால் அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் ஆதாயம் என்ன? ரஷ்யாவின் உத்தரவை ஏற்று இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கன் எனச் சொல்வது உண்மையாக இருந்தால், ரஷ்யாவிற்கு இதனால் என்ன இலாபம் என்பது தெளிவாகத்தெரியவேண்டும்.
இந்தக் கேள்விகளுக்கு ரஷ்யா வாய் திறக்கப்போவதில்லை. ஆனால் அமெரிக்காவோ, உக்ரைன் அதிபரோ பதில் சொல்வார்கள் என்றால், மர்ம முடிச்சுகள் அவிழக்கூடும்.